|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே:
எழுதுகிறது என் சொந்தப் பிரச்சனை இல்லை. நான் என் மனைவி, குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் மிகவும் மதிக்கும் ஒரு பெரியவரின் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம். நான் முதன்முதலில் இங்கே எம்.எஸ். படிக்க வந்தபோது என்னை ஆதரித்த குடும்பம். முப்பது வருஷத்துக்குமேல் பழக்கம். நான் அந்தக் குடும்பத்தில் ஒரு பிள்ளைபோலத்தான் இருந்தேன். அவர்கள் பெண்ணுக்கு இந்தியாவில் பையன் பார்த்து கல்யாணம் செய்து கொடுத்தார்கள். இவர்களுக்கு நெருங்கிய சொந்தம். அப்பா சின்ன வயதில் போய்விட்டார் என்று இந்த அங்கிள்தான் பண உதவி செய்து படிக்கவைத்தார். தன் பெண்ணையே கொடுத்து, இங்கே வரவழைத்து உடனே வேலை கிடைக்குமாறு செய்தார். தங்கமான மனிதர். எப்போதும் ராமநாமம் சொல்லிக் கொண்டிருப்பார். யாரையும் ஒரு வார்த்தை கடிந்து பேசமாட்டார். இழிவாகப் பேச மாட்டார். வாழ்க்கையில் நிறைய சோதனைகள் அவருக்கு. நிறைய பேருக்குக் கடனுதவி செய்து, அதில் பலர் ஏமாற்றி விட்டார்கள்.
முதல் பையன் பன்னிரண்டு வயதில் ஒரு விபத்தில் இறந்துவிட்டான். எல்லாம் அந்த ஆன்டிதான் சொல்லிப் புலம்பிக் கொண்டிருப்பார். "உனக்குத்தான் அங்கிள் தெய்வம் மாதிரி. ஆனால் அவர் ஒரு அசடு. பிழைக்கத் தெரியாதவர். அவருடன் சேர்ந்து நானும் கஷ்டப்படுகிறேன்" என்று அவர் எதிரிலேயே சொல்வார் என்னிடம். அதற்கும் பதில் பேசமாட்டார் அவர். அவர் கொஞ்சம் அதிர்ந்து போனது 5 வருடம் முன்னால்தான். அவருடைய பெண் அவரைப் போலவே சாது. இந்த ஊரில் பிறந்து வளர்ந்த முத்திரையே இல்லாமல், அப்பா, அம்மாவின் விருப்பப்படியே திருமணம் செய்து கொண்டவள். அதிர்ந்து பேசமாட்டாள். பத்து வருடம் அவனுடன் வாழ்ந்து இரண்டு குழந்தைகள். அந்தச் சமயத்தில்தான் அவள் கணவன் ஒரு மெக்சிகன் பெண்ணுடன் தொடர்பு கொண்டு விபரீதமாகப் போய், விவாகரத்து ஆனது. அதை எதிர்பார்க்காத அவர் மிகவும் இடிந்து போய்விட்டார்.
அவர் கண்களில் கண்ணீரை அந்தத் தினம் பார்த்தேன். எனக்கு அந்தக் கணவனைப் போய்ப் பார்த்துக் குதறியெடுக்க வேண்டும் என்ற ஆத்திரம்தான் வந்தது. அப்போதுகூட அவனை அவர் எதுவும் சொல்லவில்லை. "என் குழந்தைக்கு இதுபோல ஒரு சோதனை வந்துவிட்டதே. இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படி எதிர்காலத்தைச் சந்திக்கப் போகிறாளோ?" என்றுதான் கலங்கிப் போனார். அந்தப் பெண் தைரியமாக தனியாகவே இருந்து இத்தனை வருடம் கழித்துவிட்டாள். போன வருடம்தான் அங்கிளுக்கும் ஆன்ட்டிக்கும் வயதாகிவிட்டதால், தன்னிடம் கட்டாயப்படுத்தி வந்து இருக்கச் சொன்னாள். நான்தான் இவர்கள் இருந்த வீட்டைக் காலி செய்து விற்க ஏற்பாடு செய்தேன். எனக்கு அவர்களை அனுப்ப இஷ்டமில்லை. இருந்தாலும் எனக்கு அடிக்கடி பயணம் செய்யும் நிர்ப்பந்தம். என் மனைவியும் ஒரு Professional. ஒரு அவசரத்துக்கு எங்களால் உடனே உதவி செய்யமுடியாமல் போனால் என்ன செய்வது? இத்தனை வருடம் இங்கேயே இருந்துவிட்டு, அந்தக் குளிரில் அந்த இடத்தில் அட்ஜஸ்ட் செய்து கொண்டு இப்போதுதான் ஒரு நிலைக்கு வந்து இருக்கிறார்கள்.
போன வாரம் எனக்கு ஒரு ஃபோன் வந்தது. அங்கிள்தான். "கொஞ்சம் இந்த வீக் எண்டில் வந்து விட்டுப் போகிறாயா? என்ன என்னமோ நடந்திண்டிருக்கு. சிரமம் கொடுக்கிறேன்னு நினைக்காதே" என்றார். எனக்கு எதுவுமே புரியவில்லை. அவர் அடிக்கடி உதவி கேட்கமாட்டார். வீக் எண்டிற்குக் கூட வெயிட் பண்ணவில்லை. உடனே ஃப்ளைட்டில் பறந்தேன். அவர் மாப்பிள்ளை இவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தன் பெண்களைப் பார்க்க வருவதாகச் சொல்லி, அவர்களை வெளியே அழைத்துப் போய் அவர்கள் மனதை மாற்றப் பார்த்திருக்கிறான். அந்த மெக்சிகன் பெண் அவனைக் கழற்றிவிட்டு விட்டாள். வேலையும் போய்விட்டது. இப்போது இவர்களிடம் திரும்பிவரப் பார்க்கிறான். அந்தக் குழந்தைகளிடம் அவனுடைய உயிரே அவர்களும் அவன் மனைவியும் தான் என்று பிரெய்ன் வாஷ் செய்திருக்கிறான். அங்கிளிடம் வந்து கெஞ்சியிருக்கிறான், பலதடவை. சத்தியம் செய்து கொடுத்திருக்கிறான். காலில் விழுந்தான். இதில் இடம் கொடுக்காதது அந்த ஆன்ட்டி. அவர்கள் பெண்ணும் அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
என்னிடம் அங்கிள் கேட்டுக் கொண்டது இதுதான் - "எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லையப்பா. இந்தப் பெண் பிடி கொடுக்க மாட்டேன் என்கிறாள். அவன் வந்து வெளியே நின்றாலும் கண்டு கொள்வதில்லை. குழந்தைகள் அவனைப் பார்த்தால் ஓடிக் கட்டிக் கொள்ளுகிறதுகள். இந்த ஐந்து வருஷத்தில் நிறைய சிரமப்பட்டிருக்கிறான். அவனுடைய கர்மா, பாவம். இப்போது திருந்தி, திரும்பி வந்திருக்கிறான். இந்த ஊர்க்காரர்கள் போல், அவள் வேறு யாரையாவது கல்யாணம் பண்ணிக் கொண்டிருந்தால் பரவாயில்லை. அதுவும் இல்லை. அவள், தனியாக இப்போது இருந்து விடலாம். வயது ஆகி, இந்தப் பெண்களும் படிப்பு, காதல் என்று வெளியே போய்விட்டால், நாங்களும் பகவானிடம் போய்விட்டால் இவள் என்ன செய்வாள் என்று யோசிக்கிறேன். நீ ஏதாவது சொல்லிப் பார்க்கிறாயா?" என்று என்னைக் கேட்டுக்கொண்டார்.
இந்த விஷயத்தில்தான் எனக்கு அவர் பேரில் சிறிது கோபம் வந்தது. அந்த மாப்பிள்ளையை நினைத்தாலே எனக்கு மனதில் கொதிப்பு வந்தது. அவரிடம் பொரிந்து தள்ளினேன். அவர் ஒன்றே ஒன்று சொன்னார். "அப்பா, உனக்கு வாலிபம் பேசுகிறது. எனக்கு வயது பேசுகிறது. நான் என் பேத்திகளுக்கு, ஒரு சிதைந்த கூட்டைச் சரியாக்க முடியுமா என்று பார்க்கிறேன். எல்லோரும் சின்னதோ, பெரிதோ வாழ்க்கையில் தப்பு செய்யாமல் இருந்ததில்லை. விவாகரத்து முடிந்து சில நாட்கள் கழித்து என் பெண்ணைக் கேட்டேன். "இதைத் தடுக்க முடியாமல் நீ ஏதும் தப்பு செய்தாயா?" என்று. "ஒன்றுமில்லை அப்பா, ஒருவேளை நான் உத்தியோகம், உத்தியோகம் என்று இருந்துவிட்டு, அவருடைய ஆசைகளை, உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ளத் தவறி விட்டேனோ என்ற குற்ற உணர்ச்சி மட்டும் அவ்வப்போது எட்டிப் பார்க்கும். பரவாயில்லை அப்பா. I can face life" என்றாள். அதனால் உன்னால் முடிந்தால் அவளிடம் பேசிப்பார். இந்தப் பையனை என்ன சொல்லி அனுப்புவது என்று தெரியவில்லை" என்று என்னிடம் கொஞ்சம் மன்றாடுவது போலக் கேட்டுக் கொண்டார்.
அந்தப் பெரிய மனிதரின் உத்தரவை நான் மீற விரும்பவில்லை. அவர் பெண்ணிடம் பேச முயற்சி செய்தேன். அவள் நான் சொன்னதைக் கேட்டுக் கொண்டாள். பதில் ஏதும் சொல்லவில்லை. "உனக்கு டைம் வேண்டுமா?" என்று இரண்டு தடவை கேட்டபின், விரக்தியாகச் சிரித்துத் தலையாட்டினாள். அந்தப் பையனைப் பார்த்து, "இன்னும் இரண்டு மாதம் இந்தப் பக்கம் வராதே! உண்மையிலேயே உனக்கு இந்த உறவு வேண்டுமென்றால், தினம் வந்து தொந்தரவு செய்யாதே" என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டு அவனுக்கு வேறு வேலைக்கு உதவி செய்வதாகச் சொல்லிவிட்டு வந்தேன். அவனை நேரில் பார்த்தபோது, நானே கொஞ்சம் அதிர்ந்துபோய் விட்டேன். எப்போதும் ஸ்மார்ட் ஆக டிரெஸ் பண்ணிக் கொண்டிருப்பவன், இப்போது இளைத்து, ஏதோ கண்றாவியாக டிரெஸ் பண்ணிக்கொண்டு அலைந்து கொண்டிருக்கிறான். Very intelligent Guy.
திரும்பி வீட்டிற்கு வந்துவிட்டேன். எப்படி follow-up செய்வதென்று தெரியவில்லை. Man to Man என்று அவனது செய்கையை மறந்துவிட்டு, இந்தப் பெண்ணை அவனை ஏற்றுக் கொள்வதுபோல கன்வின்ஸ் செய்வதா - அப்படிச் செய்தால் அங்கிளுக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இல்லை, இரண்டு மாதம் வெயிட் செய்துவிட்டு, அந்தப் பெண்ணை முடிவெடுக்க விடுவதா என்று குழப்பமாக இருக்கிறது. என்ன செய்வது? என் மனைவியிடம் கேட்டேன். அவள் எரிமலை போல வெடித்தாள், அவன் செய்த தப்பைச் சுட்டிக்காட்டி. உங்களுக்கு எழுத முடிவு செய்தோம்.
இப்படிக்கு ................... |
|
அன்புள்ள சிநேகிதரே:
நண்பனாய், மகனாய், சகோதரனாய் இந்தக் குடும்பத்துடன் பல ஆண்டுகள் தொடர்பு கொண்டிருக்கிறீர்கள். உங்கள் நல்ல எண்ணம் புரிபடுகிறது. என்னுடைய அலுவலகத்தில் மிகவும் அடக்கமாக, அமெரிக்கையாக, பேசாமல் இருக்கும் பெண்களுக்கு இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படும்போது, அந்த மன வேதனையே தங்களுக்குள்ளேயே assimilate செய்து கொள்ள முயற்சி எடுத்து, "இது உனக்கு இனி இல்லை" என்பதுபோல மனதில் ப்ரோக்ராம் செய்து கொண்டு விடுவார்கள். ஒரு detachment வந்துவிடும். தன் கணவனைப் பார்த்தாலும் ஒரு காலத்தில் இப்படி சந்தோஷமாக இருந்தோமே என்ற பழைய உணர்ச்சிகள் திரும்ப வராது. மனதில் வெறுமைதான் இருக்கும். அவர்களைச் சுற்றி இருப்பவர்களுக்கு, தங்கள்மீது வைத்த பாசத்தால், "திரும்பி வந்த வாழ்க்கையை" திருப்பி அடிக்கிறாளே என்று நினைக்கத் தோன்றும். அந்தப் பெண்ணிற்கு என்ன உணர்ச்சிகள் அலை மோதுகின்றன என்பது பிறருக்குத் தெரியாது. அவள் வழியில் விட்டுவிடுங்கள். தன்னம்பிக்கை நிறைந்த அந்தப் பெண், அந்தப் பழைய கணவனை பரிதாபத்துடன் ஏற்றுக் கொள்ளலாம்; பாசம் மறுபடியும் மனதில் விதைந்து அன்பு மலர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். இல்லை, இந்த உறவில் நான் மறுபடியும் சிக்கிக்கொள்ள மாட்டேன் என்று அதில் உறுதியாகவும் இருக்கலாம். அவள் இரண்டு மாதம் கழித்து எந்த முடிவு எடுத்தாலும், அதற்கு சப்போர்ட் கொடுப்பது நல்லது என்று நினைக்கிறேன்.
அந்தப் பையனுக்கு வேலை திரும்பக் கிடைக்கும். அவனுடைய தன்னம்பிக்கை பெருகும். திரும்பி ஸ்மார்ட்டாக டிரெஸ் செய்துகொள்வான். அப்போதும் அவன் தன் குழந்தைகளிடம், இந்தப் பெண்ணிடம் அன்பாக இருந்தால், அந்த அப்ரோச் வேறு மாதிரியாக இருக்கும். திடமான நம்பிக்கையை எப்படி ஊக்குவிப்பது என்பதுதான் சவால். Let them figure it out. அந்தப் பெரியவரிடம் நீங்கள் வைத்திருக்கும் மரியாதை, அன்பு, அந்தக் குடும்பத்திற்கு ஒரு emotional support அருமையாகக் கொடுக்கிறது.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|