|
|
|
|
எனக்கும் என் அருமைத் தோழிக்கும் ஏற்பட்ட தோழமையைப் பற்றி எழுதுகிறேன். அழகு, அறிவு, பொறுமை, அன்பு, கரிசனம், ஆழ்ந்த தெய்வ பக்தி, அனுசரணை என்று எத்தனை நல்ல வார்த்தைகளை எடுத்துக்கொண்டு ஒருவரை விவரித்தாலும் அத்தனையும் அவளுக்குப் பொருந்தும். என்னுடைய வாழ்க்கைக் கடலில் ஆழமாகச் சென்று நான் கண்டெடுத்த நல்முத்துக்களில் அவள் ஒருத்தி. யோசித்துப் பார்க்கிறேன், இந்த 40 வருட சிநேகிதத்தில் ஒருமுறை கூட எங்களுக்குள் ஒரு சிறு வேற்றுமையோ, மனக்கசப்போ ஏற்பட்டது இல்லை. இத்தனைக்கும் எங்களுக்குள் வாழ்க்கை முறை, பார்வைகள், சிந்திக்கும் விதம் என எல்லாவற்றிலுமே நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆனால், எங்களை இணைத்தது ஒருவருக்கு மற்றவர்மேல் இருந்த நம்பிக்கை; பொய், கலப்படம் இல்லாமல் பகிர்ந்துகொண்ட செய்திகள், கனவுகள், உணர்ச்சிகள்; சுயநலத்தைத் தவிர்த்து ஒரு பிரச்சனையை அலசும் கோணங்கள், எங்களுக்குள் அப்படி ஒரு பிணைப்பு, பாசம்.
மருத்துவப் படிப்பு முடிந்தவுடனேயே திருமணம் முடிந்து எனக்கு பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்க மண்ணிற்குக் குடிபெயர்ந்தவள். என்னுடைய முதல் அமெரிக்கப் பயணத்தில் அவள் வீட்டின் பிரம்மாண்டம், லக்சரி கார்ஸ் எல்லாமே என்னை பிரமிக்க வைத்தன. அருமையாகச் சொன்னாள், "இதெல்லாம் கடவுள் கிருபையால் ஏற்பட்டவை. நானும் பெரிய குடும்பத்தில், சிறிய வீட்டில் இருந்தவள் தானே!" என்று. செல்வமோ, செல்வாக்கோ தலைக்கு ஏறிவிடாமல், மெல்லிய குரலில் அவள் பேசுவதே இன்பமாக இருக்கும். அடிக்கடி பேசிக்கொள்ள மாட்டோம். ஆனால், நட்பின் ஆழம் குறையவே குறையாது. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளும் தருணமெல்லாம் பரவசமாக இருக்கும். ஒருமுறை யேல் பல்கலைக்குக் குடும்பத்துடன் வரும்போது, என்னுடன் தங்கினாள். "என் பெண்ணிற்கு புரிந்துகொள்ள முடியவில்லை, ஒரு ஃப்ரெண்டைப் பார்ப்பதற்கு ஏன் அம்மா இப்படி எக்சைடட் ஆக இருக்கிறாய் என்று. காரில் வரும்போது சொன்னாள். நம்முடைய இத்தனை வருட நட்பு எவ்வளவு வலிமை என்று அவள் பின்னால் புரிந்து கொள்வாள்" என்றாள்.
அவள் மகன் School Valectorian ஆனான். ஹார்வர்டு சென்றான். "ஏன் முன்னால் தெரிவிக்கவில்லை. இது பெருமைக்குரிய விஷயம் ஆகிற்றே" என்று குறைப்பட்டேன். "கண்டிப்பாகப் பெருமைப்படுகிறேன். எல்லா இந்தியக் குழந்தைகளும் நன்றாகத்தானே செயல்படுகிறார்கள். உன் பையனும்தானே இப்படி இருந்திருக்கிறான்" என்று தன்னடக்கத்துடன்தான் பதில் சொல்வாள்.
அவளுக்குப் பொய் சொல்பவர்களைப் பிடிக்காது. நியாயவாதி. பிறரும் அப்படியே இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். அநியாயம், அநீதி என்று அவள் பார்வையில் பட்டால் மிகவும் உணர்ச்சி வசப்படுவாள். குரல் அப்போது உயரும்; பேச்சில் வேகம் இருக்கும். "உன்னால் எப்படிப் பொய் சொல்பவர்களைப் பொறுத்துக்கொள்ள முடிகிறது" என்று என்னைக் கேட்பாள். "முதல்முறைதான் அதிர்ச்சியாக இருக்கும்; அப்புறம் ட்ராக் ரெகார்டைப் புரிந்துகொண்டு விட்டால் மிகவும் சுலபம்" என்றேன். "எப்படி?" என்று ஆச்சரியமாகக் கேட்டேன். "மனதளவில் நம்பாதே. நம்பக்கூடிய விஷயமாக இருந்தால், மனதை நெருடும் விஷயமாக இருந்தால் உன்னைப் பாதிக்கும் விஷயமாக இருந்தால் verify செய்துகொள். தொழில்முறையாக நாம் சந்திக்கும் நண்பர்களையோ, உறவினர்களையோ தினமும் அவர்கள் சொல்வது 'பொய்' என்று தர்க்கம் செய்து நம் நேரத்தை வீணடிக்க முடியாது; உறவையும் முறிக்க முடியாது" என்று சொன்னேன். என்னுடைய சில வாழ்க்கைத் தத்துவங்கள் அவளுக்குக் குழப்பமாக இருக்கும். நியாயம், சத்தியம், நேர்மை எல்லாம் எல்லாருக்கும் இருக்கவேண்டும் என்று தீவீரமாக தர்க்கம் செய்வாள். எல்லோரும் இருக்க மாட்டார்கள்; 'என்' நோக்கிலிருந்துதான் எடுபடுகிறது ஒவ்வொருவர் நீதியும்" என்று பதில் வாதம் செய்வேன்.
எப்போது சந்தித்தாலும் எல்லாவற்றையும் மறந்து மணிக்கணக்கில் மனம் திறந்து பேசிக் கொண்டிருப்போம். அவளை நினைத்தாலே என் மனதில் மத்தாப்பு பூக்கும். சிறுவயதில் ஆத்ம நட்பு என்று கதைகளில் படிப்பேனே, அதுபோல ஏற்பட்ட நட்பு. ஒரு வருடம், இரு வருடம் இல்லை - 40 வருடங்கள் - நட்பு என்ற உறவுக்கு ஒரு முழுமையான அர்த்தத்தைக் கொடுத்து, அதுபோன்ற, அதனால் ஏற்பட்ட ஒரு மனநிறைவு, மகிழ்ச்சி - எவ்வளவோ நினைவுகள், நிகழ்வுகள்.... |
|
போய்விட்டாள் போன மாதம். வலியும், வேதனையும் இனி இல்லை. எனக்குள் ஏற்பட்ட வெறுமையையும், இதயத்தில் ஏற்பட்ட கனத்தையும் எப்படிப் போக்குவது என்பது புரியாமல் தவித்தேன். நேற்றைக்கு ஒரு தெளிவு மனதிற்குக் கிடைத்தது.
"இயற்கையின் சிறகுகளில் அவள் வலியில்லாமல் சந்தோஷமாகப் பறந்து கொண்டிருப்பது முக்கியமா? இல்லை, உன் சுயநலத்திற்காக, மரண வேதனையிலும் உன்னைப் பார்த்துச் சிரிக்க முயல்வது முக்கியமா?" என்று உள்மனம் என்னைத் தாக்கியது.
இதுபோன்ற இழப்புகளைத் தாங்கிக் கொள்ள மனதை எவ்வளவு பக்குவப்படுத்தப் பார்த்தாலும் முரண்டு பிடிக்கிறது. இருந்தாலும் முயற்சி செய்யத் துவங்கியிருக்கிறேன்.
காற்றின் கானமாய், கடலின் அலையாய் மண்ணின் விதையாய், விண்ணின் மீனாய் நெருப்பின் ஒளியாய் கலந்துவிட்டாய். நட்பின் உருவமாய் என் பார்வையில் என்றும் இருப்பாய் நினைவலைகள் காலப்போக்கில் பின்தங்கிப் போனாலும் என் உணர்வுகள் இருக்கும்வரை அவை அழியாது
எனதருமைத் தோழி டாக்டர். ஜானகி பாலகிருஷ்ணனுக்கு இந்தப்பகுதி சமர்ப்பணம்.
இப்படிக்கு, அழியா நினைவலைகளுடன் டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|