|
|
|
|
அன்புள்ள சிநேகிதியே
எனக்கு ரொம்பப் பிரச்சனை. என்னுடைய தோழி ஒருத்தி இந்த பத்திரிகையைப் பற்றிச் சொன்னாள். நீங்கள் நிறைய விவாக ரத்துக்களைத் தீர்த்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்கு தமிழ்ப் புத்தகங்கள் படித்துப் பழக்கமில்லை. தமிழ்க்காரிதான். சமீபத்தில் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கண்வேறு சரியாகத் தெரியவில்லை. இந்தத் தோழியை விட்டு இரண்டு மூன்று பழைய தென்றல் இதழ்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டேன். நன்றாக இருக்கிறது. நல்ல சேவை செய்கிறீர்கள். எனக்கு இருப்பது ஒரே பையன். ரொம்ப சாது. பார்ப்பதற்கு மன்மதன் போல இருப்பான். என் வீட்டுக்காரர் ஃபாரின் சர்வீஸில் நல்ல வேலை. என் பையன் பிஎச்.டி. செய்ய அமெரிக்க வருவதற்கு முன்னாலே ஒரு கல்யாணம் செய்து அனுப்பி வைத்தால் நல்லது என்று அவனிடம் கேட்டேன். நாங்கள் எது சொன்னாலும் கேட்கிற பிள்ளை. எங்க குடும்ப நண்பரின் பெண், அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவள். சரி என்று சொல்லி அமர்க்களமாகக் கல்யாணம் செய்தோம்.
இரண்டு வருடம் நன்றாக இருந்த மாதிரி இருந்தது. அப்புறம் அந்தப் பொண்ணு டிவோர்ஸ் கேட்டுடுச்சு. கேட்டால் உங்கள் பையன் படிப்பிலேயே கவனமா இருக்கார்; என்கூட டைம் ஸ்பெண்ட் செய்வதில்லை; எதற்கெடுத்தாலும் செலவு பற்றியே யோசிக்கிறார்; சரியான கம்யூனிகேஷன் இல்லை. என்னால் அட்ஜஸ்ட் செய்ய முடியாது என்று சொல்லி பரஸ்பரம் ஒப்புக்கொண்டு விவகாரம் முடிந்துவிட்டது. அவன் பிஎச்.டி. செய்து கொண்டிருந்தான், அவனுக்கு என்ன வருமானம் இருக்கும்? படிப்பிலே கான்சென்ட்ரேட் செய்ய வேண்டாமா? எல்லோரிடமும் எல்லோரும் சரளமாகப் பேசிவிடுவார்களா? அவன் கொஞ்சம் கூச்ச சுபாவன். ஏன் இந்தச் சின்னச் சின்ன விஷயங்களுக்கு அவனை உதறித்தள்ள வேண்டும் என்று எங்களுக்குப் புரிபடவில்லை. தலையெழுத்து. சின்ன வயசில் ஏன் இந்தச் சோதனை என்று வருத்தப்பட்டோம்.
அப்புறம் பிஎச்.டி. முடிக்கும் சமயத்தில் இந்தியா வந்தான். என் கணவர் ரிடையர் ஆகி எங்கள் சொந்த ஊரில் வீடு கட்டிக் கொண்டிருந்தோம். மறுபடியும் அவன் இங்கே வந்த சமயத்தில் ஒரு பெண்ணைப் பார்த்தோம். படிப்பு, வசதி, பார்ப்பதற்கு எல்லாமே ரொம்ப சுமார். இரண்டு வாரம் லீவில்தான் வந்திருந்தான். டிவோர்ஸி வேறு. நாங்களும் காம்ப்ரமைஸ் செய்தோம். அமெரிக்கா போக வேண்டும் என்ற ஆசையோ என்னவோ தெரியவில்லை. இந்தப் பெண் மிகவும் ஆசையாக அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். அது முடிந்து ஐந்து வருஷம் ஆகிறது. அவள் அங்கே போய் மேலே படித்து நல்ல வேலை தேடிக்கொண்டாள். ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டு மாதம் ஆகிறது. எங்களால் போக முடியவில்லை. அவர்கள் இந்தியா வருவதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தால் இவன் மட்டும் வந்து நிற்கிறான். அவள், இவனைக் கேவலமாக நடத்தினாளாம். வேறு இடத்தில் பெரிய வேலையைத் தேடிக்கொண்டு ஒருநாள் சொல்லிக் கொள்ளாமல் குழந்தையை எடுத்துக் கொண்டு போய்விட்டாளாம். நான் இந்த ஸ்டேட்டில் இருக்கிறேன் என்று மட்டும்தான் தகவல். அட்ரஸ் சொல்லவில்லை. இவனோ குழந்தையைப் பார்க்கத் துடிக்கிறான். இவன் கொஞ்சம் பயந்த சுபாவம். இவளும் டிவோர்ஸ் பண்ணி விடுவாளோ என்று பயப்படுகிறான். நாங்கள் அவனோடு அமெரிக்கா திரும்பி வந்தோம். மூன்று மாதம் ஆகிறது.
என் கணவர் அந்தப் பெண்ணை எப்படியோ போனில் பிடித்துப் பேசிப் பார்த்தார். குழந்தையைப் பார்க்க வேண்டுமென்று நானும் கெஞ்சிப் பார்த்தேன். அவள் ஏதோ சாக்குப் போக்கு சொல்லி விட்டாள். என் கணவர் வெறுத்துப் போய் இரண்டு வாரத்துக்கு முன்னால் ஊர் திரும்பி விட்டார். என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. என் பையனைப் பார்க்க மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எப்படி அந்தப் பெண்ணின் நெஞ்சம் மாறியது? மாறியது பெண்களா இல்லை பேய்களா? என் மகன் என்று சொல்லவில்லை, அவனிடம் எந்தத் தப்பும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவ்வளவு நல்லவன். மிகவும் நொந்துபோய் இருக்கிறேன். இரண்டு தடவை இப்படி நடந்துபோய் விட்டால் அவனுக்கு இனிமேல் எப்படி வாழ்க்கை திரும்பக் கிடைக்கும்? ஏற்கனவே அதிகம் பேச மாட்டான். இப்போது அதையும் மிகவும் குறைத்துக் கொண்டுவிட்டான். தனியாக இருக்கும்போது ஏதேனும் செய்து கொண்டு விடுவானோ என்றுகூட பயமாக இருக்கிறது. எவ்வளவு நாள் நான் இங்கே இருப்பது? அந்தப் பெண்ணை எப்படி வழிக்குக் கொண்டுவருவது என்று தெரியவில்லை.
இப்படிக்கு -------- |
|
அன்புள்ள சிநேகிதியே,
இன்னும் உள்ளே புகுந்தால்தான் பிரச்சனையின் ஆழம் தெரியும். அதற்கு அவர்களுக்கு (இரண்டு பேர்களுக்கும்) நெருங்கிய தோழனோ அல்லது தோழியோ உதவியாக இருந்தால்தான் முடியும். ஆனால் தாம்பத்திய உறவில் ஏற்படும் சிக்கல்கள் வெளிப்பார்வைக்குத் தெரியாது. மேம்போக்காக நமக்குச் சொல்லப்படும் காரணங்களை வைத்து ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நாம் எடைபோட முடியாது. அவர்களது அந்தரங்கம் தெரிந்த நண்பர்கள் நமக்கும் சொல்ல மாட்டார்கள். டாக்டர், வக்கீல்களுக்குத் தெரிய வாய்ப்புண்டு. ஆனால் பிரச்சனை முற்றும் போதுதான் அவர்களை நாடுவார்கள். எல்லாம் முடிந்து காலம் கடந்த பின்புதான் இலைமறைவு காய்மறைவாகச் சொந்தபந்தங்களுக்குத் தெரிய வரும். அப்புறம் "அடடே, இது முன்னால் தெரியாமல் போய்விட்டதே! வேறு அணுகுமுறையைப் பயன்படுத்தி இருக்கலாமே" என வருத்தப்படுவோம். எனக்கு உங்கள் பிரச்சனையை முழுதாக உங்கள் விருப்பம்போல் தீர்த்து வைக்கும் வழி தெரியுமா என்று தெரியவில்லை. அந்த வழியை நான் எழுதுவதற்கே எனக்கு முதலில் மூன்று நபர்கள் - நீங்கள், உங்கள் மகன், அந்த மருமகள் - கண்ணோட்டம் தேவை.
உங்கள் பார்வையில் நீங்கள் எழுதி விட்டீர்கள். மற்ற இருவருடன் பேசி அறிந்து கொள்வது அவர்களது ஒத்துழைப்பைப் பொறுத்தது. மேரேஜ் கவுன்சலர் யாரையாவது கலந்து ஆலோசித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. நான் ஒரு தாயின் வேதனையைப் புரிந்து கொள்கிறேன். ஒரு மருமகளின் பக்கமாகவும் இருந்து பார்க்கிறேன். உங்கள் பையனின் நிலைமையையும் நினைக்கிறேன். ஆனால் முக்கியமாக அந்த இளங்குருத்து - பிரிந்துவிட்ட கூட்டிலிருந்து வளர்ந்து பறக்க இருக்கும்வரை அனுபவிக்க வேண்டிய தனிமையை நினைத்துத்தான் எனக்கு வேதனையாக இருக்கிறது. குழந்தைகள்மேல் பாசம் வைத்து அவர்களுக்குப் பொருட்கள் வாங்கிக் கொடுத்துப் பயனில்லை. எப்போது ஒரு குழந்தை உருவாவதற்குப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோமோ அப்போது முதலே மிகமிகப் பெரிய காரணமாக இருந்தாலொழிய சின்னச் சின்னக் கருத்து வேற்றுமைகளைப் பெரிதாக வளரவிடக் கூடாது. அவ்வாறு வளர விட்டுவிட்டு, குடும்பக் கூட்டை பிரித்துக் கொண்ட பல இளவயதினரை நான் பார்த்திருக்கிறேன்.
உங்கள் பையன்-மருமகள் விவகாரம் எந்த வகையைச் சேர்ந்தது என்று என்னால் ஆணித்தரமாகச் சொல்ல இயலவில்லை. உங்கள் தாய்ப்பாசமும், உங்கள் பையனின் நல்ல குணமும் அவனது எதிர்காலம் செம்மையாக அமைய வழி வகுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். உங்கள் மருமகள் மனம்மாறித் திரும்பி வரலாம். அல்லது உங்கள் பையன் தனது soul-mateஐச் சந்திக்கும் நேரம் வராமல் இருக்கலாம் - இன்னும் சந்திக்கவில்லை என்றும் இருக்கலாம். விபத்துக்கள் இல்லாமலும் கார் ஓட்டுகிறோம். சிலருக்கு விபத்துக்கள் அடிக்கடியும் நேரலாம். அப்படித்தான் வாழ்க்கை. காரை ஓட்டினாலும் சரி, விபத்தைச் சந்தித்தாலும் சரி நாம் பயணம் செய்வதை நிறுத்திக் கொள்வதில்லை. முக்கியம், நீங்கள் மனமுடைந்து போகாதீர்கள். உங்கள் பையனுக்கு எமோஷனல் செக்யூரிடி சிறுவயதைவிட இப்போது இன்னும் அதிகம் தேவையாக இருக்கிறது. வழி அமையும். வாழ்த்துக்கள்.
அன்புடன் சித்ரா வைத்தீஸ்வரன் |
|
|
|
|
|
|
|