|
சுப்புத்தாத்தா சொன்ன கதைகள்: எல்லாம் நன்மைக்கே |
|
- சுப்புத் தாத்தா|அக்டோபர் 2008| |
|
|
|
|
குழந்தைகளே, நலம்தானே! இந்தக் கதையக் கேளுங்க.
மதுராபுரி என்ற நாட்டை அமரசேனன் ஆட்சி செய்து வந்தார். அவர் மிகவும் இரக்க சுபாவம் உடையவர். ஆனால் கோபக்காரர். கோபம் வந்தால் யாரென்று பார்க்காமல் கடும் தண்டனை கொடுத்துவிடுவார். மதியூகன் என்பவர் அவரது அமைச்சர். பெயருக்கு ஏற்றாற்போல் மிகுந்த புத்திசாலி.
அமைச்சர் மதியூகன் 'அவனின்றி ஓரணுவும் அசையாது' என்ற கொள்கை உடையவர். எது நடந்தாலும் ‘எல்லாம் நன்மைக்கே' என்று சொல்லுவார்.
ஒருமுறை எதிரி நாட்டு மன்னன் திடீரென மதுராபுரியின் மீது படையெடுத்து வந்து விட்டான். நாடே பரபரப்பில் ஆழ்ந்திருந்தது. மன்னனுக்கோ போரில் எதிரியை எப்படி வெல்வது என்று கவலையாகி விட்டது. மந்திரி மதியூகனை அழைத்து ஆலோசனை கேட்டார். அவரோ, ‘மன்னா ஏன் கவலைப்படுகிறீர்கள்,வெற்றி, தோல்வி என எது வந்தாலும் அது நம் நன்மைக்கே! ஆகவே கவலைப்படாமல் போர் செய்யுங்கள்' என்று ஆலோசனை கூறினார். மன்னனுக்கு அதைக்கேட்டு மிகுந்த கோபம் வந்து விட்டது. நாம்தான் வெற்றி பெறுவோம் எனத் தனக்கு ஆதரவாகப் பேசாமல் விட்டேத்தியாகப் பேசுகிறாரே என்று கடும் கோபம் கொண்டார். மந்திரியை உடனடியாகக் கைது செய்து நாடு கடத்துமாறு படைவீரர்களுக்கு உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட போதும் கூட 'மன்னா, இதுவும் நன்மைக்கே' என்று மதியூகன் புன்சிரிப்புடன் கூறிவிட்டுச் சென்றார்.
கடும் போர் நடந்தது. போரில் அமரசேனன் தோற்றுப் போனார். அவரைக் கைது செய்து நாடுகடத்திவிட்டார்கள். அங்கிருந்து தப்பி மற்றொரு நாட்டிலிருந்த காட்டைத் தஞ்சம் அடைந்தார் அமரசேனன். பசிக் கொடுமையால் காட்டில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். உடலில் பலத்த காயங்கள் வேறு இருந்ததால் வேதனை தாங்க முடியாமல் அரற்றிக் கொண்டிருந்தார். 'எல்லாம் நன்மைக்கே' என்று எப்போதும் சொல்லிக் கொண்டிருந்த அமைச்சர்மீது அவருக்கு அளவற்ற கோபம் ஏற்பட்டது. ஒரு மரத்தடியில் அமர்ந்து, தன் நிலை பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கே வந்த காட்டுமிராண்டிக் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டார். மனிதர்களைக் கொன்று தின்னும் அந்தக் கூட்டத்தினர், மன்னரைக் கண்டதும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். தங்கள் தெய்வத்துக்கு பலி கொடுப்பதற்காக அவரைத் தூக்கிக்கொண்டு காட்டுக்குள் ஓடினர். |
|
தன் உயிர் இன்னும் சிறிது நேரத்தில் போகப்போகிறது என்று தெரிந்ததும் மன்னருக்குத் துயரம் அதிகமானது. அவரை பலி கொடுப்பதற்காக அரிவாளை ஓங்கிக் கொண்டு வந்த காட்டுமிராண்டிகளின் தலைவன், அவரது தோளைக் கண்டதும் அப்படியே நின்று விட்டான். மன்னரது தோளில் ஒரு பெரிய வெட்டுக் காயம் இருந்தது. அதில் இருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது. எந்த உடல்குறையும் இல்லாதவர்களைத்தான் தெய்வத்திற்கு பலியாகக் கொடுப்பது அவர்களது வழக்கமாக இருந்தது. காயம்பட்டிருந்ததால் உடல் குறையுள்ளவர் என்று கருதி உடனடியாக மன்னரை விடுவித்தான் தலைவன். பிழைத்தால் போதும் என்று அந்தக் காட்டை விட்டு அருகில் உள்ள நகரப்பகுதிக்கு ஓடினார் மன்னர். ‘நடப்பதெல்லாம் நன்மைக்கே' என்று அடிக்கடி அமைச்சர் கூறியதன் உட்பொருள் அப்பொழுதுதான் அவருக்கு விளங்கிற்று. எப்படியாவது மந்திரியைத் தேடிப் பிடித்து, இழந்த தன் நாட்டை மீட்க வேண்டும், அவரை உரிய முறையில் நடத்த வேண்டும் என்ற நம்பிக்கையுடன் நகரத்தை நோக்கிச் செல்லலானார் மன்னர்.
குழந்தைகளே, அடுத்த மாதம் வேறொரு கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன். பார்க்கலாமா!
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|