Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2023 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | சிறுகதை | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | அலமாரி | கதிரவனை கேளுங்கள் | Events Calendar | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சாதனையாளர் | வாசகர்கடிதம் | அஞ்சலி | பொது
Tamil Unicode / English Search
இளந்தென்றல்
பாலைவனச் சோலை (அத்தியாயம் 10)
- ராஜேஷ்|அக்டோபர் 2023|
Share:
அருணுக்கு ராத்திரி யாரோ வந்து தன் முதுகில் தட்டியது போலத் தோன்றியது. அரைத் தூக்கத்தில் கண் விழித்துப் பார்த்தான். அவன் அப்பா ரமேஷ் அப்போதுதான் அலுவலகத்தில் இருந்து வந்திருந்தார். மணி என்ன என்றுகூடத் தெரியவில்லை.

"அப்பா!" தூக்கம் கலையாமல் கேட்டான். "நான் கண்டு பிடிச்சுடுவேன் அப்பா, விடமாட்டேன்."

ரமேஷுக்கு ஒன்றும்புரியவில்லை. அருண் ஏதோ தூக்கத்தில் உளறுகிறான் என்று நினைத்தார். அலாக்காக அவனைத் தூக்கிக் கொண்டு மாடிப்படி ஏறலாமா என்று யோசித்தார். அருண் பெரியவன் ஆகிவிட்டதால் அவனைத் தூக்குவது அவ்வளவு எளிதல்ல என்று தெரிந்தது.

அவன் காதில் மெதுவாக "அருண், வாப்பா, மாடிக்குப் போய் படுத்துக்க" என்றார்.

அருண் மீண்டும் டைனிங் டேபிள்மீது தலை வைத்துத் தூங்க ஆரம்பித்தான். ரமேஷ் அவனை அங்கேயே விட்டுவிட்டுப் போகலாமா என்று ஒரு கணம் நினைத்தார். அருணின் நோட்புக் கணினி திறந்திருப்பதைப் பார்த்து அதை மூடினார். அருணை எழுப்பி நடக்க வைக்க முயன்றார்.

"அருண்," சத்தமாகக் கூப்பிட்டார். மாடிப்படியில் சத்தம் கேட்டுத் திரும்பினார். கீதா இறங்கி வந்து கொண்டிருந்தார். இருவரும் அருணை இரு பக்கமும் பிடித்து மாடிப்படியில் ஏறவைத்தனர். அருண் இன்னமும் தூக்கத்தில்தான் இருந்தான். ஒரு வழியாக அவனைக் கட்டிலில் படுக்கவைத்துப் போர்த்தி விட்டனர். ரமேஷ் தன் அறைப்பக்கமாகப் போனார். கீதா எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டுத் தூங்கப் போனார்.

காலையில் அலாரம் அடித்தது. அது என்றைக்கும் அடிக்கும் அலாரம்தான். அருண் அன்று முதல்முறை அடித்த உடனேயே சடக்கென்று எழுந்தான். தன் கணினி எங்கே என்று தேடினான். அறையை விட்டு வெளியேறி மாடிப்படிகளில் மடமடவென்று இறங்கினான். வீட்டில் இருந்த நிசப்தத்தைக் கலைத்தான். டைனிங் டேபிள்மீது இருந்த தனது கணினியைத் திறந்தான். அதில் மிஸ் க்ளே அவர்களிடமிருந்து பதில் வந்திருக்கிறதா என்று பார்த்தான். வந்திருந்தது. அதை கிளிக் செய்து படித்தான்.

'அன்புள்ள அருண்,
நம்ம ஊருக்கு வெளியில இருக்கிற அந்த வறண்ட பாலை நிலத்தை நாசப்படுத்துற மாதிரி ஏதும் தெரியலேயே. நானும் எனக்குத் தெரிந்த பல ஆவணங்களைத் தேடிப் பார்த்துட்டேன். நீ சொல்ற மாதிரி ஏதும் இல்லை. இது வீடு கட்டும் திட்டம் போலத்தான் தெரியுது. எல்லாதுக்கும் அனுமதி வாங்கி இருக்காங்க. இருக்கிற வன விலங்குகள பாதிக்காத மாதிரித்தான் பண்ணப் போறாங்க. அதுல ஒரு தில்லுமுல்லும் இருக்கிற மாதிரி தெரியல.

சாரி அருண், எனக்கு இதுக்குமேல விஷயம் தெரியாது. எப்படி இருந்தாலும் இந்த மாதிரி ஆர்வம் உன்ன மாதிரி சின்னப்பசங்க எல்லாருக்கும் தேவைதான்.

நல்லா இரு மிஸ் க்ளே'

அந்தப் பதிலை படித்ததும் அருணுக்குச் சப்பென்று ஆனது. என்னடா இது, நான் நினைத்த மாதிரி ஏதும் இல்லையே என்று ஏமாற்றமாக இருந்தது. மிஸ் க்ளே வெடிகுண்டு போல ஆதாரங்கள் தருவார் என்று எதிர்பார்த்திருந்தான். ஏமாற்றமாகிவிட்டது.

தன் தோளில் யாரோ தட்டியதை உணர்ந்தான். திரும்பிப் பார்த்தான். எரிச்சலோடு அப்பா நின்றிருந்தார்.

"என்ன இது, காலங்காத்தால சத்தம்! மனுஷன் தூங்கறான்னு தெரியல? ராத்திரி லேட்டா வந்தேன். அதுவுமில்லா முக்கி முக்கி உன்னை மாடிக்குத் தூக்கிட்டு வேற போனேன். என்ன நடக்குது இங்க?"

அருண் அப்பாவுக்கு பதில் அளிக்காமல் மும்மரமாக வீட்டுப்பாடம் செய்வதுபோல நடித்தான். விட்ட இடத்தில் தூக்கத்தைத் தொடர ரமேஷ் மாடிப்படி ஏறினார். அப்பாடா என்று இருந்தது அருணுக்கு. அவருக்கு இவன் செய்வது தெரிந்தால் கன்னபின்னாவென்று கத்துவார். அதுவும் விடிகாலையில் தூக்கம் கலைந்தால் அவ்வளவுதான்.

அப்பா மாடிக்குப் போய்விட்டாரா என்று பார்த்தான். வேற யாருக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் என்று யோசித்தான். யாருமே நினைவுக்கு வரவில்லை. அப்படியே விடவும் மனது வரவில்லை. அந்த வீடுகட்டும் திட்டம் மோசடிதான் என்று நிரூபிக்கவேண்டும் என்று வெறி பிடித்த மாதிரி இருந்தான். பிடி எதுவும் கிடைக்காததால் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் முடியவில்லை. கோபத்தோடு அழுகையும் வந்தது.

கீதா அங்கே வந்தார். அவன் விசும்பி அழுவதைப் பார்த்தார். காலையில் என்ன கலாட்டா என்று எரிச்சல் படாமல், மகனைப் புரிந்துகொண்டு பரிவுடன் பேசினார்.

"என்ன கண்ணா, ராத்திரி எல்லாம் இந்த வீடுகட்டும் திட்டம் பத்தியே நினைச்சிட்டு இருந்தியா? என்னாச்சு உன்னோட ஆராய்ச்சி?"

"அம்மா, எதுக்குமே சரியான ஆதாரம் கிடைக்கல."

"மோசடித் திட்டம்னு நிரூபிக்கவா?"

"நான் ஊகிக்கறது கரெக்ட் அம்மா. நீங்கதான் தப்பு."

அருணுக்கு அப்பவும் புசுபுசுவென்று கோபம் வந்தது. கீதா பொறுமையாக கேட்டுக் கொண்டார்.

"என்ன கண்ணா, ஸ்கூலுக்கு நேரம் ஆகலையா? போய் ரெடி ஆகு." பரிவாகத்தான் சொன்னார். ஆனால் அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, கையில் கிடைத்த பழத்தைத் தூக்கி எறிந்தான். அந்தப் பழம் ஒரு கூடையில் இருந்தது. எறிந்த பழம் அருகிலிருந்த சுவரில் பட்டுப் பல பக்கங்களில் பறந்தது. அதில் ஒன்று கீதாவின்மேல் பட்டது. அவருக்குக் கோபம் வந்தது.

"அருண், என்ன இது. வெறி பிடிச்சா மாதிரி? அப்படி என்ன திண்ணக்கம்? ஒரு ஆதாரமும் இல்லையே. விடவேண்டியது தானே? அளவுமீறிப் போகுது இது."

அவர்கள் போட்ட கூச்சலில் ரமேஷ் எழுந்து வந்துவிட்டார். அவருக்குத் தூக்கம் கலைந்த எரிச்சல், ராத்திரி தாமதமாக வந்த களைப்பு. எல்லாம் சேர்ந்து கொண்டது. அவரும் தன் பங்கிற்குச் சத்தம் போட்டார்.

"ஒரு மனுஷனை நிம்மதியாத் தூங்க விடமாட்டீங்களே. இப்படிக் காலைல கூச்சல் போடணுமா? கீதா, நீயும் அவனோட சேர்ந்துகிட்டு..."

"அவன கேளுங்க முதல்ல. விஷயம் தெரியாம பேசாதீங்க."

கீதா எதிர்த்துப் பேசியது ரமேஷுக்கு இன்னும் கோபத்தைக் கிளப்பியது. "கீதா, என்ன நினைச்சிட்டு இருக்க மனசில? எங்கிருந்து வந்தது இதெல்லாம்?"

அப்பாவும் அம்மாவும் தன்னால்தான் சண்டை போடுகிறார்கள் என்று அவனுக்கு வருத்தமாகத்தான் இருந்தது. இருந்தாலும் இதுதான் சாக்கு என்று நழுவப் பார்த்தான்.

"அருண், எங்க ஓடப் பாக்குற? அப்பாகிட்ட விஷயத்தை நீ சொல்லப் போறியா, இல்ல நான் சொல்லட்டுமா?"

அருண் மௌனமாக இருந்தான். கீதா ரமேஷுக்கு விளக்கினார். கீதா சொல்லச் சொல்ல ரமேஷின் வெப்பம் அதிகரித்தது. அருண் மீண்டும் ஒரு வம்பை இழுத்துவரப் போகிறான் என்று பற்றிக்கொண்டு வந்தது.

"அருண், என்ன திரும்பவுமா? எத்தனை தடவை சொல்றது? ஏதாவது கிறுக்கு பிடிச்சிருக்கா?"

"அப்பா, என் ஊகம் கரெக்டாதான் இருக்கும். ஆதாரம் இல்லைன்னா, அது பொய் இல்லை," அருண் பட்டென்று பதில் கொடுத்தான்.

"அதிகப் பிரசங்கி." ரமேஷ் சத்தம் போட்டார். அவனுக்கு ரோஷம் பொத்துக்கொண்டு வந்தது. ஒரு முறை முறைத்துவிட்டு வாசல் கதைவைப் படாரென்று திறந்துகொண்டு வெளியே ஓடினான். ரமேஷ் அவனைப் பிடித்து ஒரு அறை விடலாமா என்று நினைத்தார்.

"அருண், நில்லு. ஓடாத." கத்தினார் ரமேஷ்.

நொடியில் வீட்டைவிட்டு ஓடிவிட்டான் அருண். எப்படியும் திரும்புவான் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டார் ரமேஷ். இது எல்லாம் நடக்கும்போது கீதா ஒரு சினிமா பார்ப்பதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்.

"விடுங்க. எப்படியும் திரும்பி வரத்தான் வேணும்."

வெளியே ஓடியவன் சில நிமிஷத்தில் திரும்பி வந்தான். அவன் கையில் ஒரு தபால் இருந்தது.

"அம்மா, பாத்தீங்களா? நான் சொன்னது சரிதான்." குதூகலத்துடன் தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தைக் கீதாவிடம் காட்டினான்.

(தொடரும்)
ராஜேஷ்
Share: 




© Copyright 2020 Tamilonline