|
பாலைவனச் சோலை (அத்தியாயம் 8) |
|
- ராஜேஷ்|ஆகஸ்டு 2023| |
|
|
|
|
அருண் வகுப்பு நடந்து கொண்டு இருந்தபோது, ஏதோ ஞாபகம் வந்ததில் தனது கணினி நோட்பேடில் செய்து கொண்டிருக்கும் பாலைவனத்தில் வீடு கட்டும் திட்டம் பற்றிக் குறிப்பு ஒன்று எழுதினான். அறிவியல் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அவனது ஆசிரியை மிகவும் பொறுமையானவர். அவர் குழந்தைகளை அனுசரித்துப் பழகுவார். ஆனால், வகுப்பு நடக்கும்போது மாணவர்களின் கவனம் அவர்மீதுதான் இருக்க வேண்டும். அதில் அவர் மிகவும் கண்டிப்பு.
அருண் வகுப்பில் அடிக்கடி ஏதோ குறிப்பு எடுப்பதை ஆசிரியை மிஸ் க்ளே கவனித்தார். அப்படி என்னதான் அருண் எழுதுகிறான் என்று அவருக்கும் கொஞ்சம் ஆர்வமாக இருந்தது. பாடம் நடத்திக்கொண்டே மெதுவாக அருணருகே வந்து, அவன் என்ன செய்கிறான் என்று ஒரு நோட்டம் விட்டார். அதில் அவன் பாடத்திற்குச் சம்பந்தம் இல்லாமல் எதையோ எழுதிக்கொண்டிருப்பதைப் பார்த்தார்.
"அருண், என்னப்பா நோட்ஸ் எடுக்கிற?" அவன் காதில் மட்டும் கேட்கும்படி மெதுவாகக் கேட்டார்.
அருண் தன்னருகில் ஆசிரியை இருப்பதை கொஞ்சம்கூடக் கவனிக்கவில்லை. அவன் ஏதோ ஒரு உலகத்தில் இருந்தான்.
"அருண்…"
அப்போதும் அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டு நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தான். வகுப்பில் எல்லா மாணவர்களும் அவனையே பார்த்தனர். அருண் என்ன செய்யப் போகிறான் என்று குசுகுசுத்தனர்.
"அருண்" மீண்டும் ஆசிரியை அருணை கூப்பிட்டார். இந்த முறை அருண் சட்டென்று தலை நிமிர்ந்து பார்த்தான். தன் பக்கத்தில் ஆசிரியை நிற்பதைப் பார்த்து பயந்து போனான். என்ன தோணியதோ தெரியவில்லை அவனுக்கு, பட்டென்று தனது notebook computer-யை மூடினான்.
"அருண், நீ என்ன எழுதிட்டு இருந்தேன்னு பாக்கலாமா? அப்படியே நம்ம வகுப்புக்கும் தெரியட்டுமே! சரியா?"
அருண் பேசாமல் நின்றான். ஓரக்கண்ணால் தனக்குப் பக்கத்தில் இருந்த மாணவனைப் பார்த்தான். அவன் அருணையே பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆசிரியை கொஞ்சம் பொறுமை இழந்தார். "என்ன அருண், நானே பாக்கவா அப்ப?" அவர் அருணிடம் இருந்து நோட்புக் கணினியைப் பிடுங்க முயற்சித்தார். அருண் முதலில் இறுக்கமாகப் பிடித்தாலும், பின்னர் பிடியைத் தளரவிட்டான்.
"பசங்களா, நம்ம அருண் அப்படி என்ன நோட்ஸ் எடுக்கிறான்னு பாக்கலாமா?" அருணை முறைத்தபடியே அவர் எழுதியதைப் படித்துப் பார்த்தார். அருண், ஆசிரியை தன்னை வகுப்புக்கு முன்னால் திட்டப் போகிறார் என்று பயந்தான். அதுவுமில்லாமல் தன்னைப் பள்ளி முதல்வரின் அறைக்குக் கூட்டிப் போகப்போகிறார் என்றும் நினைத்தான்.
அங்கு ஒருவிதமான நிசப்தம் நிலவியது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. "அருண், இந்த நோட்ஸ் எல்லாம் நீயா எழுதின?" ஆசிரியையின் குரலில் ஒருவித ஆச்சரியம் இருந்தது.
"ஆமாம், டீச்சர். நான்தான்…"
"இது நம்ம ஊர் பக்கத்துல இருக்கற அந்த பாலைநிலம் பத்தியா? எனக்கே இப்பதான் நிறைய விஷயம் புரிஞ்சமாதிரி இருக்கு."
அருணுக்கு உள்ளுர இருந்த பயம் போனது. தனது ஆசிரியைக்குத் தான் எழுதியது பிடித்திருக்கிறது என்று தெரிந்தது. இதைச் சாக்காக வைத்துக்கொண்டு அவரிடமே உதவி கேட்கலாமா என்று யோசித்தான்.
ஆசிரியை எல்லாரும் கவனிக்கும்படி சத்தமாகப் பேசினார். "பசங்களா, நம்ம அருண் மூலமா நம்மளுக்கு ஒரு நல்ல சயன்ஸ் ப்ராஜெக்ட் பண்ற வாய்ப்பு கிடைச்சு இருக்கு உங்களுக்கு. எல்லாரையும் குழு குழுவா பிரிச்சு, எந்தக் குழு ஜெயிக்கப் போறது அப்படீங்கற முறையில் இதை செய்யப்போறோம்."
"எதைப்பத்தி டீச்சர்?" முந்திரிக்கொட்டையாக சாம் கேட்டான். அவனைப் பார்த்து சாரா "உஷ்" என்று சைகை காண்பித்தாள்.
சாம் தன் பக்கத்தில் உட்கார்ந்து இருந்த இன்னொரு மாணவனிடம், "டேய், நம்ம அருண் நல்லா மாட்டிகிட்டான்னு நினைச்சா, டீச்சர் என்னமோ அவனைப் பாராட்டுற மாதிரி இல்ல இருக்கு!" என்று கிசுகிசுத்தான்.
"அட ஆமாம்டா, நானும் பெரிய லட்சுமி வெடி மாதிரி டீச்சர் வெடிப்பாங்கன்னு நினைச்சேன்" என்றான் பதிலுக்கு அருகில் இருந்த மாணவன்.
அருண் மெதுவாக எழுந்து நின்றான். ஆசிரியை என்னவென்று அவனைப் பார்த்துக் கேட்டார்.
"டீச்சர், இதை நானே பண்ணிக்கறேன்.மத்த யாரும் இதைப் பண்ணுவதை நான் விரும்பவில்லை" பயம் கலந்த தாழ்வான குரலில் சொன்னான். ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தார் ஆசிரியை. எங்கே அருணிடம் கேட்காமல் வகுப்பைக் கலந்துகொள்ளச் சொன்னது தப்போ என்று அவருக்குத் தோணியது.
"அருண், இது அற்புதமான விஷயம். இதைப்பத்தி நிறைய பேருக்குத் தெரிஞ்சா நம்ம ஊருக்கு நல்லது" ஆசிரியை எடுத்துச் சொல்லிப் பார்த்தார். அவருக்கும் அவனது ஆராய்ச்சியில் பங்குகொள்ள ஆசையாக இருந்தது.
"டீச்சர், நான் என் அம்மாகிட்ட நானேதான் பண்ணப்போறதா சொல்லி இருக்கேன்."
ஆசிரியை சற்று யோசித்தார். அவருக்கு அருண் சொல்வது சரி என்று பட்டது. ஆனாலும் ஆர்வம் தாங்கவில்லை.
"அருண், நீ என்ன பண்ணப் போறேன்னாவது எனக்குச் சொல்லலாமா?"
"நிச்சயமா."
"நன்றி அருண்."
அருணுக்கும் வகுப்பு ஆசிரியைக்கும் நடந்த அந்த உரையாடல் என்ன என்று யாருக்கும் புரியவில்லை.
"மிஸ், எதைப்பத்தி அருண் எழுதி இருக்கான்?" சாரா அடக்கமாகக் கேட்டாள்.
"இதோ சொல்லறேன் கேட்டுக்கோங்க. அருண், நம்ம எர்த்தாம்ப்டன் ஊருக்கு வெளியே இருக்கிற பாலைவனத்தைப் பத்தி ஆராய்ச்சி செஞ்சு அதுல இருக்கிற செடிகொடி, உயிரினம் பத்தி ஒரு ஆய்வு பண்ணறான்."
"என்னது, நம்ம ஊர் பக்கத்துல இருக்கிற பாலைவனமா? அது சுத்த வேஸ்டான இடம் ஆச்சே? அதைப்பத்தி என்ன அருண் பண்ணப் போற?" சாரா நேரடியாகக் கேட்டாள்.
சாம் உடனே சேர்ந்துகொண்டான். "சரிதான் சாரா நீ சொல்லறது. அந்த இடத்துல ஒரு செடி கொடி கூட வளராது. அதைப் போய்…"
வகுப்பு ஆசிரியை அருணை உன்னிப்பாகக் கவனித்தார். அருண் அமைதியாக இருந்தான். அருண் யாருடனும் தான் செய்யும் ஆராய்ச்சி குறித்துச் சொல்ல விரும்பவில்லை. அனாவசியமாக புரளியைக் கிளப்ப வேண்டாம் என்று இருந்தான்.
"சும்மாதான், ஒரு ஆர்வத்துலதான் பண்ணறேன் சாரா. நம்ம ஊரைச் சுத்தி என்ன மாதிரி எல்லாம் சுற்றுச்சூழல் இருக்குன்னு ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். அதை நான் கொஞ்சம் கொஞ்சமா தொகுத்து எழுதலாம்னு இருந்தேன்."
ஆசிரியை அருணைப் பாராட்டினார். "இந்த மாதிரிதான் நீங்க எல்லாரும் ஆர்வமா, தானே முன்வந்து செய்யறவங்களா இருக்கனும். நீங்களும் இந்த மாதிரி உங்களுக்குப் பிடிச்ச அறிவியல் விஷயம் ஒன்றை எடுத்து ஒரு ப்ராஜெக்ட் பண்ணுங்களேன்."
"இதே தலைப்பை எடுத்து செய்யட்டுமா?" ஒரு மாணவி கேட்டாள்.
மிஸ் க்ளே பதில் அளிக்கும் முன் அருண் பட்டென்று கத்தினான். "இது என்னோட சிறப்புத் தலைப்பு. யாரும் என்கூட சேர்ந்து பண்ணவேண்டாம்."
அருண் சொன்னது ஆசிரியக்கு தர்ம சங்கடமாக இருந்தது. அவனைத் தனியே கூட்டிப்போய் கேட்டிருந்தால் அவர் சொன்னதை அவன் ஒப்புக் கொண்டிருப்பான். அவசரத்தில் குட்டையைக் குழப்பிவிட்டோமோ என்று நினைத்தார் அவர்.
"ரொம்பத்தான் பந்தா காட்டறான் இவன். பெரிய கொம்பன்னு நினைப்பு." அந்த மாணவி கோபத்தோடு முணுமுணுத்தாள்.
"நாம அருணைத் தொந்தரவு பண்ண வேண்டாம். இந்த வேலை முடிச்சப்புறம் நம்மகிட்ட அவனே தன்னோட கண்டுபிடிப்புகளை ஷேர் பண்ணட்டும், சரியா?" என்றார்.
அருண் ஒன்றும் பேசவில்லை.
(தொடரும்) |
|
ராஜேஷ் |
|
|
|
|
|
|
|