|
இனிப்பு நீரின் மர்மம் |
|
- |ஜனவரி 2020| |
|
|
|
|
அத்தியாயம் - 1 "அருண், அருண்! பள்ளிக்கூடம் போக நேரமாச்சு பாரு. இன்னுமா கிளம்பல?" இது அதிகாலை சுப்ரபாதம் அருணின் தாயார் கீதாவிடமிருந்து. எல்லார் வீட்டிலும் நடக்கும் காலைநேரக் கூத்துதான். அருண் வீடும் விதிவிலக்கல்ல. சில சமயங்களில் எல்லாமே சீக்கிரமாக நடந்துவிடும். அந்த மாதிரி நாட்களில் கீதாவிற்கு ஒரு மேஜிக் நடந்ததுபோலத் தோன்றும். ஆனால் சில தினங்களில் பூகம்பம் வெடித்ததுபோல எல்லாமே தாறுமாறாக இருக்கும். அப்படிப்பட்ட நாட்களில் கீதா வீட்டையே ஒரு உலுக்கு உலுக்கிவிடுவார்.
சமையல் அறையிலிருந்து கீதா போட்ட கூச்சல் அருணின் காதிற்கு எட்டியதோ இல்லையோ தெரியவில்லை, ஆனால் அருகே இருந்த பக்கரூவின் காதில் விழுந்துவிட்டது. அது ஓடிவந்து கீதாவின் காலை முட்டியது. கீதா அதை ஒரு முறை முறைத்தார், அவ்வளவுதான். ஓடிப்போய் வாலைச் சுருட்டிப் படுத்துக்கொண்டது.
அருணிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
"அரூண்! நான் கத்தறது காதுல விழலையா? இன்னும் அப்படி என்ன மேல பண்ணிட்டு இருக்க?" என்று மாடிப்படியில் ஏறிக் கூப்பிட்டுப் பார்த்தார். மாடியில் உள்ள குளியலறைக் கதவு மெல்லத் திறந்தது. சினிமாவின் கனவுக்காட்சி போல, நீராவி மேகம்போல வெளிவந்தது. அதிலிருந்து தேவகுமாரன் போல அருண் வெளியே வந்தான். அவன் தனது தலைமுடியை மோஹாக் போல வாரியிருந்தான்.
"என்னாச்சு அம்மா? எதற்கு இந்தப் பதட்டம்?" என்று ஏதோ சூப்பர்ஹீரோ ஒரு பேதைப் பெண்ணைக் கேட்பதுபோலக் கேட்டான். கீதா மௌனமாகக் கடிகாரத்தைக் காட்டினார். அருண் மணியைப் பார்த்து, தோளைக் குலுக்கினான். அம்மாவின் முகத்தில் தெரிந்த எரிச்சலைச் சட்டை செய்யாமல் சென்றான்.
"அம்மா, நிறைய நேரம் இருக்கு, அவசரமே படவேண்டாம்" என்று அம்மாவுக்கு ஆறுதல் சொல்லி, அவர் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டுத் தனது அறைக்குள் சென்றான்.
அருணுக்குத் தெரியும், இன்னும் அரை மணி நேரத்தில் உடை அணிந்துகொண்டு, காலை உணவை முடித்துவிட்டு, மதிய சாப்பாட்டைப் பையில் வைத்துக்கொண்டு, வீட்டுப்பாடத்தைச் சரிபார்த்து எடுத்து, சைக்கிளில் காற்று சரியாக உள்ளதா என்று பார்த்து, பக்கரூவோடு சில நிமிஷங்கள் கொஞ்சி விளையாடி -- எல்லாம் செய்து முடிக்கவேண்டும்.
"ஓடு! நேரமாச்சு. இன்னும் ஒரு தடவை லேட் ஸ்லிப் வாங்கினா, உன்னை ஒருவழி பண்ணிடுவேன்" கீதா பொறுமை இழந்து கத்தினார்.
அம்மாவின் சத்தம் கேட்டு, ஒரு ராணுவ ஜெனரலின் உத்திரவுக்கு ஒரு ராணுவ வீரன் கட்டுப்படுவதுபோல, பம்பரமாகச் செயல்பட்டான். சட்டையும் பான்ட்டும் சம்பந்தேமில்லாத ஒரு கலரில் போட்டுக்கொண்டு வெளிவந்தான். அதுவும் இல்லாமல், இரு கால்களிலும் இருவித சாக்ஸுகள்! வேகவேகமாக ரொட்டித் துண்டுகளை வாயில் அமுக்கிக் கொண்டான். பையில் வீட்டுப்பாடம் எடுத்து வைக்கும்போது, முந்திய தினச் சாப்பாடு அப்படியே சாப்பிடப்படாமல் இருப்பதை கவனித்தான். அம்மாவுக்குத் தெரியாமல் மெதுவாகச் சமையல் அறை அங்கணத்தில் கொட்டினான்.
என்ன தோன்றியதோ தெரியவில்லை, திடீரென்று மாடிக்கு ஓடினான். கீதா என்னவென்று கேட்குமுன், மாடிக் குளியலறையில் தண்ணீர்க் குழாய் திறக்கும் சத்தம் கேட்டது. கூடவே அருண் பல் தேய்க்கும் சத்தமும் கேட்டது. |
|
கீதா எரிமலை ஆனார். "அருண், நீ இன்னுமா பல் விளக்கலை? என்ன கருமம்டா இது!" என்று ஓர் அதட்டுப் போட்டார். 'இதுக்குத்தான் காலையில சீக்கிரமா எழுந்துக்கணும்னு சொல்றேன். கேட்டாத்தானே?'
இது முதல் புத்திமதி. அடுத்த அறிவுரை வருமுன் பள்ளிக்கூடத்துக்கு ஓடிப் போய்விட வேண்டும்.
அருணின் சட்டை, பேன்ட், சாக்ஸ் கூத்தைக் கவனித்தார் கீதா. "நான் ஒருத்தி எல்லாத்தையும் மடிச்சு வைக்கிறது தெரியலயோ சாருக்கு? என்ன இது கச்சாமுச்சான்னு... கூத்தாடிபோல?"
"அம்மா, இதுதான் இப்ப கூல் திங். என் நண்பி செரா கூட இதுதான் இப்ப ட்ரெண்டுன்னு சொல்லுரா. Take it easy, அம்மா" என்று சொல்லிக் கொண்டே பள்ளிக்கூடப் பையை எடுத்தான்.
"ஊப்ஸ்!" என்று சொல்லிக்கொண்டே மாடிக்குத் திரும்பி ஓடினான்.
சில வினாடிகளில் தலையில் ஹெல்மெட்டைப் போட்டுக்கொண்டு படிகளில் தபதபவென்று விண்வெளி வீரன்போல இறங்கினான். பள்ளிக்கூடப் பையை எடுத்துக்கொண்டு, கராஜ் பக்கமாக ஓடினான். கீதாவுக்கு எரிச்சல் தாங்கமுடியவில்லை. அருணின் அப்பா ரமேஷுக்கு இதெல்லாம் ஒரு ஹாஸ்யமான நிகழ்ச்சி போலத் தோன்றும். அவர் இதையெல்லாம் சுவாரஸ்யமாகச் சில சமயம் வீடியோ பிடிப்பார். கீதாவுக்கு அப்பொழுதெல்லாம் ரமேஷை கட்டி வைத்து உதைக்கலாமா என்று தோன்றும்.
அருண் மணியைப் பார்த்தான். பள்ளிக்கூட மணியடிக்க இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன. "அருண், ஒரு நிமிஷம்" என்று கீதா கூப்பிட்டார்.
"சாரி அம்மா. லேட்டாகுது" என்று சொல்லிக்கொண்டே, சைக்கிள் ஸ்டாண்டை உதைத்து, சைக்கிளில் உட்கார்ந்து புயல்போலக் கிளம்பினான்.
அருண் கிளம்பிய பின்னர்தான் கீதா சுயநினைவுக்கு வந்தார். வீடு ஒரே நிசப்தமாக இருந்தது. பக்கரூகூட நகராமல் படுத்திருந்தது. ரமேஷோ இன்னும் உறக்கத்தில் இருந்தார். அவருக்கு அலுவல் பளு, காலையில் சற்றுத் தாமதமாகத்தான் எழுகிறார். ரமேஷின் உதவி காலையில் கீதாவிற்கு மிகவும் தேவை. அருணோடு மல்லுக்கட்டும் போது ரமேஷை ஒரு உலுக்கு உலுக்கி எழுப்பிவிடலாமா என நினைப்பார்.
அருண் எல்லாவற்றையும் சரியாக எடுத்துக்கொண்டு போனானா என்று கீதா நோட்டம் விட்டார். சமையலறை மேடை ஓரத்தில் அருணின் தண்ணீர் பாட்டில் தண்ணீரோடு இருந்தது. அது அவன் அடம்பிடித்து போன வாரம்தான் வாங்கிய புத்தம்புதிய பாட்டில். அதை எடுத்துக்கொள்ளாமல் போய்விட்டான். தண்ணீர் பாட்டிலை விட்டுப் போனால் கீதாவுக்குப் பதட்டமாகிவிடும். பள்ளிக்கூடத்தில் குடிநீர்க் குழாய் இருந்தாலும், அருணை வீட்டிலிருந்து தண்ணீர் கொண்டுபோகச் சொல்வார். அப்படியே பழகிவிட்டது அவனுக்கும்.
"போச்சுடா, பாட்டில விட்டுட்டுப் போயிட்டானா" என்று அலுத்துக்கொண்டே, மற்ற வேலைகளைச் செய்யத் தொடங்கினார். அவருக்கும் அலுவலகம் போகும் நேரமாகிவிட்டது.
தண்ணீர் பாட்டிலைக் கொண்டு போகாததால் அருண் மீண்டும் ஒரு புதிய பிரச்சினையை அன்று சந்திக்கப் போகிறான் என்பது அவருக்குத் தெரியாது.
(தொடரும்) |
|
|
|
|
|
|
|