|
வாலு போய் கத்தி வந்தது டும்...டும்..டும்... |
|
- சரவணன்|மார்ச் 2002| |
|
|
|
"இந்தியக் குழந்தைகளுக்கு இந்தியச் சூழ் நிலையை மையமாக வைத்து எழுதப்பட்ட நல்ல கதைகளுக்கு இன்று ஒரு பஞ்சமே நிலவுகிறது.
கதைப் புத்தகங்களாகட்டும், பாடப் புத்தகங் களாகட்டும் அம்மா சமைக்கிறாள், அப்பா பேப்பர் படிக்கிறார், அண்ணன் பந்து விளையாடு கிறான்... என்பது போன்ற கருத்துக்களையே குழந்தைகள் மனதில் பதிய வைக்கின்றன. பெண் ஆணுக்கு உடலாலும் அறிவாலும் தாழ்ந்தவளே, வீடே அவள் உலகம் என்றே சிறுவர் புத்தகங்கள் குழந்தைகளை மூளைச் சலவை செய்கின்றன" என்று கூறும் கீதா உல்·ப் அமெரிக்காவிலும் ஜெர்மனியிலும் படித்து இலக்கியத்தில் பி.ஹெச்.டி பட்டம் பெற்று கணவர் ஹெல்மட் உல்·ப் மற்றும் மகனுடன் தன்னுடைய தாய் நாடான இந்தியா திரும்பி தற்போது சென்னை யில் வசித்து வருகிறார்.
கீதா உல்·ப்புக்குக் கதைகள் எழுதுவதென் றால் பிரியம். அதுவும் குழந்தைகளுக்கான கதை கள் என்றால், குதூகலமாகி விடுகிறார். தான் எழுதும் கதைகள் எப்படி குழந்தைகளைச் சென்றடைய முடியும்? என்று யோசித்தவருக்கு 1993-ஆம் ஆண்டு யோசனையொன்று உதித் தது.
1993-இல் தாரா பதிப்பகத்தைத் தொடங் கினார். முழுக்கவும் குழந்தைகளுக்கான கதைகளை வெளியிட வேண்டும் என்று கங் கணம் கட்டிக் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தாரா பதிப்பகத்தின் முதல் புத்தகம் தயாரானது. புத்தகத்தின் பெயர் 'மாலா'.
'மாலா' வித்தியாசமான ஒரு இந்திய நாடோடிக் கதை. தங்கள் ஊரை ஆட்டிப் படைக்கும் கொடிய பூதத்தைப் பையனாக மாறி அழிக்க விரும்பும் ஒரு சிறுமியைப் பற்றியது. அவளிடம் 'ஆணே இப்படிப்பட்ட ஒரு வீரச் செயலைச் செய்ய முடியும்' என்று சிறுவயது முதல் சொல்லி வளர்க்கப்பட்டதாலேயே அவளுக்கு இந்த ஆசை. அவள் ஆணாய் மாறவும் செய்கிறாள். ஆனால் கடைசியில் அச் செயலைச் செய்து முடிப்பது அவளுக்குள் உறங்கிக் கிடக்கும் பெண்ணே! பெண்மைக்கே உரிய மதியுகமே அவளுக்குக் கை கொடுக்கிறது அந்தப் பூதத்தை அழிக்க...
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்தக் கதை தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றவுடன் தொடர்ந்து இந்தத் தளத்தில் இயங்க வேண்டுமென்ற உறுதியான பிடிப்பு கீதா உல்·ப்புக்குள் ஏற்பட்டு விட்டது. நண்பர்கள் கைகோர்க்க தாரா பதிப்பகம் வெற்றி நடை போட ஆரம்பித்தது. முற்போக்குச் சிந்தனையாளரும் களப் பணியாளருமான வ.கீதா, கீதா உல்·ப்புக்குக் கிடைத்தார். வ.கீதா 'தாரா பதிப்பக'த்தின் எடிட்டர் பொறுப்பை ஏற்றுச் செயலாற்ற ஆரம்பித்தார்.
தாரா பதிப்பகம் வெறும் புத்தகங்கள் வெளி யிடுவது என்று மட்டும் நின்று விடாமல், தாரா கல்வி ஆய்வு மையமொன்றையும் நடத்தி வருகிறது. இந்தக் கல்வி ஆய்வு மையம் தற் போதுள்ள இந்தியக் கல்வியின் நிலை பற்றி விரிவாக ஆய்வு செய்து, அதற்கு மாற்றான கல்வி முறையை முன்மொழிய ஆயத்தமாகிக் கொண்டி ருக்கிறது. இதற்காக 'தாரா' குழு பல ஊர்கள், மாநிலங்களுக்குப் பயணம் செய்து நேரிடையாக குழந்தைகளைச் சந்தித்து அவர்களது பிரச்சனை களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இனி தாரா பதிப்பகத்தின் படைப்புகள் குறித்து...
குழந்தைகளின் கலையார்வத்தை வளர்க்கும் விதமாக கலைப் பொருட்கள் தயாரிப்பது பற்றிய புத்தகமொன்றை வெளியிட்டுள்ளது. தேவையற்ற பொருட்களைக் கொண்டு கலைப் பொருட்கள் தயாரிப்பது எப்படி? என்பதைக் குழந்தைகளுக்கு விளக்கும் விதமாக தனிப் பயிற்சிப் பட்டறை ஒன்றை நடத்தி, பட்டறையில் குழந்தைகள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு அதன் செயல்முறைகளை விளக்கி இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் கிராமங்களில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பொம்மைகள், விசில்கள் தயாரித்து விளையாடித் திரிந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனால் நவயுகக் குழந்தைகளுக்கு இந்த அனுபவம் கிடைக் காமலே போய்விட்டது. அரச மரத்திலையில் 'பீப்பி' தயாரித்த அனுபவம் கிடைக்காத குழந்தைகளுக்காக தாரா பதிப் பகம் சிறப்பு முகாமொன்றை நடத்தி விளையாட்டுக் கருவிகள் செய்வது பற்றி கற்றுத் தந்து அதை ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறது. முகமூடிகள் தயாரிப்பது எப்படி? என்கிற புத்தகமொன்றும் தயாராகிக் கொண்டிருக் கிறது.
பொம்மலாட்டம் பற்றிய விரிவான தகவல் அடங்கிய புத்தகமொன்றும் வெளியிடப் பட்டுள்ளது. கையால், நூலால், குச்சியால் , நிழலைக் கொண்டு இயக்குவிக்கப்படும் பொம்மலாட்டங்களைப் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்ளும் விதமாக இந்தப் புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஒரு நல்ல மாணவன் எப்படியிருக்க வேண்டும் என்ற புத்தகமொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 'I Love My India' என்கிற புத்தகமொன்றும் தயாராகிக் கொண்டுள்ளது.
'குழந்தையின் பார்வையில் மாகாபாரதம்' என்ற புத்தகம் இரண்டு பகுதிகளாக வெளியிடப் பட்டுள்ளது. பதினோரு வயதுச் சிறுமியொ ருத்தியே இந்தப் புத்தகத்தைத் தன்னுடைய பார்வையில் விரித்து எழுதியிருப்பது கூடுதல் தனிச் சிறப்பு. இதுவரை பெரியவர்களின் பார்வையில் சொல்லப்பட்டு வந்த மகாபாரதக் கதை முதன்முறையாக குழந்தைகளின் கைகளில் வந்து சேர்ந்திருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. 'வாலு போய் கத்தி வந்தது டும் டும் டும்' என்று நாமெல்லாம் சிறுவயதில் பாடி விளையாடிய குரங்கின் கதையை 'குரங்கின் கூத்து' என்கிற தலைப்பில் படக் கதையாக வெளியிட்டிருக் கிறார்கள். |
|
'குப்பை மேடுகளில்' என்ற புத்தகத் தயாரிப்பு வித்தியாசமான முயற்சி. தெருவோர குப்பை பொறுக்கும் சிறுவர்களைச் சந்தித்து அவர்களது அனுபவங்களைத் தொகுத்து அதன் வழியே சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வை இந்தப் புத்தகத்தின் வாயிலாக எழுப்ப முயற்சித் துள்ளார்கள். இந்தப் புத்தகம் ஹாலாந்தில் உள்ள பள்ளியொன்றில் பாடப் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. 'ஐந்திணை நிலங்கள்' ஐந்து திணைகளிலும் வசித்து வரும் குழந்தைகள் மற்றும் அவர்களது வாழ்க்கை முறையைப் பற்றி விரிவாகப் பேசும் புத்தகம்.
'பூக்காரப் பொன்னி' மற்றும் 'சர்வர் பாபு' ஆகிய இரண்டு புத்தகங்களும் படு வித்தியாசமான முயற்சி. குழந்தைகள் அன்றாடம் சந்திக்கும் சாதாரண மனிதர்களின் ஒருநாள் வாழ்வைப் படம் பிடித்து படக்கதைகளாகப் புத்தகமாக்கி யிருக்கிறார்கள்.
"நல்ல தரமான அச்சாக்கத்துடன் தாரா பதிப்பகம் குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங் கள் பலவற்றை வெளியிட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலெல்லாம் எங்களு டைய புத்தகங்களுக்கு பலத்த வரவேற்புக் கிடைக்கிறது. ஜெர்மனியிலுள்ள ‘பிராங்க்பர்ட்’ டில் நடக்கும் புத்தகத் திருவிழாவில் தொடர்ந்து எங்கள் பதிப்பகம் கலந்து கொண்டு வருகிறது. அதுவுமில்லாமல் இத்தாலியிலுள்ள பொலோ னியா புத்தகத் திருவிழாவிலும் இந்த வருடம் கலந்து கொள்ளப் போகிறோம். இங்கு தயாரிக்கப்படும் புத்தகங்களுக்குக் குழந்தை களும் அவர்களுடைய பெற்றோர்களும் நல்ல ஆதரவை அளிக்கிறார்கள்" என்கிறார் தாரா பதிப்பகத்தின் புரொடக்ஷன் மேனேஜராகப் பணிபுரிந்து வரும் சி.ஆறுமுகம்.
குழந்தைகளுக்கான புத்தகங்கள் தயாரிக்கும் பணி அரிதாகிப் போன இச் சூழலில், தாரா பதிப்பகத்தின் பணி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இங்கு தயாராகும் புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பெரும்பாலான இந்திய மொழிகளில் கிடைக்கிறது.
தாரா பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம். TARA Publishing 20/GA shoreham 5th Avenue, Besant Nagar chennai - 600 090 Ph: 91 - 44 - 446 4479 Fax:91 - 44 - 491 1788 E-mail: tara@vsnl.com Website: www.tarabooks.com
சரவணன் |
|
|
|
|
|
|
|