|
|
|
|
வயல் ஓரத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. காட்டிலிருந்து இரை தேடி வந்த ஓநாய் ஒன்று அந்த ஆடுகளைக் கண்டது. எப்படியாவது ஓர் ஆட்டை ஏமாற்றிக் காட்டுக்குள் அழைத்துச் சென்றுவிட எண்ணியது. தனியாக மேய்ந்து கொண்டிருந்த ஓர் ஆட்டுக் குட்டியின் அருகே சென்று, புதருக்கருகில் நின்றவாறே பேச்சுக் கொடுத்தது.
"ஆஹா... நீதான் எவ்வளவு அழகாக இருக்கிறாய்..." என்றது ஓநாய். திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தது ஆடு. "ஐயோ, ஓநாய்" என்று அலறி ஓடப் பார்த்தது.
"அடடா.. என்னைப் பார்த்து பயப்படுகிறாயே! நான் ஆடுகளுக்கு எதிரி அல்ல. நண்பன்" என்றது ஓநாய்
"வேண்டாம். வேண்டாம். உங்கள் தொடர்பே வேண்டாம்" என்று சொல்லி முன்னகர்ந்தது ஆடு.
உடனே எதிரே வந்த ஓநாய், "இதோ பார்.. என்னைப் பார்த்து அஞ்சாதே! உன்னைப் பார்த்ததும் எனக்கு என் குட்டியின் ஞாபகம் வந்து விட்டது. நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? உன் முகம் எவ்வளவு பளபளப்பாக இருக்கிறது! ஒளி வீசும் கண்கள் உனக்கு. செடிகளை எவ்வளவு அழகாக உன் நாவால் சுழற்றிச் சுழற்றிச் சாப்பிடுகிறாய். உன்னைப் பார்க்கும்போது நானும் ஆடாகப் பிறந்திருக்கலாமே என்று தோன்றுகிறது" என்று சொன்னது.
".........."
"என் குட்டி அப்படியே உன்னை மாதிரியே இருக்கும். பாவம், அவனுக்கு விளையாடத் துணை யாரும் இல்லை. நீ வந்தால் நன்றாக இருக்கும்" என்று சொல்லிப் பெருமூச்சு விட்டது ஓநாய்.
"ஊஹூம். அதோ பார், அங்கேதான் என் குடும்பத்தினர் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வருவது? எனக்கு பயமாக இருக்கிறது" என்றது ஆடு.
"நீ கவலையே பட வேண்டாம். இப்போது என்னுடன் வா. சற்றுத் தொலைவில்தான் என் குகை இருக்கிறது. அங்கே உனக்கு நிறைய தழைகள், பயிர்கள் எல்லாம் கிடைக்கும். அவற்றைத் தின்றுவிட்டு, என் குட்டியுடன் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டு, நீ இங்கே வந்துவிடலாம். நானே உன்னை பாதுகாப்பாகக் கொண்டுவந்து விடுகிறேன். பயப்படாதே!"
"ம்ம்ம்ம். சரி, நீ இவ்வளவு தூரம் சொல்வதால் நான் வருகிறேன்" என்று சொல்லி ஓநாயுடன் செல்லத் துவங்கியது ஆடு.
இன்று நமக்கு நல்ல விருந்து என்று எண்ணியவாறே சென்றது ஓநாய். |
|
திடீரென தாய் ஆட்டுக்குக் குட்டியின் ஞாபகம் வந்தது. உடனே அதைத் தேடியது. கத்திப் பார்த்தது. பதிலில்லை என்றதும் காட்டுக்குள் சென்றிருக்குமோ என்று நினைத்து, அந்த வழியே சென்று பார்த்தது. வழியில் தன் குட்டியின் கால் தடங்களுடன் ஓநாயின் கால் தடங்களையும் கண்டது. நடந்ததை ஊகித்த அது, பிற ஆடுகளைக் கத்தி அழைத்தது. எல்லா ஆடுகளும் ஒன்று சேர்ந்து வேகவேகமாக அந்தத் தடத்தில் சென்றன.
ஒரு திருப்பத்தில் குட்டி ஆட்டை முன்னே நடக்க விட்டுவிட்டு, பின்னே பாய்வதற்குத் தயாராக ஓநாய் நின்று கொண்டிருந்தது. அதைப் பார்த்த ஆடுகள் வேகமாகச் சென்று ஓநாயைச் சூழ்ந்தன. அவற்றில் கூரான கொம்பு கொண்ட ஆடுகளும் இருந்தன. அவற்றால் சிறுவயதில் தாக்கப்பட்ட அனுபவம் ஓநாய்க்கு இருந்தது.
"ஓ... வாருங்கள்.. வாருங்கள்.. என் குட்டியோடு விளையாடத்தான் இவனைக் கூட்டி வந்தேன். வேறொன்றுமில்லை" என்றது.
"ஓ. அப்படியா! உன் குட்டியை நாங்கள் இருக்கும் இடத்திற்கு அனுப்பி வை. அது எங்கள் குட்டியுடன் விளையாடட்டும். உன் இடத்திற்கு எங்கள் குட்டி வந்தால் என்ன நடக்கும் என்பது எங்களுக்குத் தெரியாதா என்ன?" என்றது தாய் ஆடு.
"இல்லை.. இல்லை.. நான் உங்கள் நண்பன்" என்று உளறிக் கொட்டிய ஓநாய், "சரி சரி. அப்படியே செய்கிறேன்" என்று சொல்லிவிட்டுக் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
நடந்ததைக் கேட்டறிந்த தாய் ஆடு, "இனிமேல் இப்படித் தனியாக வராதே! புகழுக்கு மயங்காதே. ஒரு ஓநாய் ஒருக்காலும் ஆட்டுக்கு நண்பனாக இருக்க முடியாது. சரியா?"என்று சொல்லி அழைத்துச் சென்றது.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|