|
|
|
|
மரகதபுரி என்ற நாட்டை மகேஸ்வரன் ஆண்டு வந்தார். அவருக்கு வாரிசு இல்லை. அதனால் மந்திரியை அழைத்த அவர், "ஒப்பற்ற செயல் புரிபவர் இந்த நாட்டின் அடுத்த இளவரசராக முடிசூட்டப்படுவார்" என்று அறிவிக்கச் செய்தார். ஆர்வம் கொண்ட இளைஞர்கள் பலரும் பல வீரதீரச் செயல்களைச் செய்ய முற்பட்டனர்.
ஆறு மாதம் கழிந்தது.
இளைஞர்களில் சிலர் மன்னரிடம் வந்து தாம் செய்த செயல்களைப் பட்டியலிட்டனர். ஓர் இளைஞன், "மன்னா, நான் ஆற்றில் அடித்துக்கொண்டு போன ஒரு குழந்தையைக் காப்பாற்றினேன்" என்றான். மற்றொருவன், "மன்னா, இறக்கும் தறுவாயில் இருந்த ஒருவரை நான் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினேன்" என்றான். இன்னோர் இளைஞன், "மன்னா, சத்திரத்தில் அந்நிய நாட்டு வியாபாரி ஒருவர் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தீப்பற்றி விட்டது. நான்தான் தீயை அணைத்து அவரைக் காப்பாற்றினேன்" என்றான்.
இப்படி இளைஞர்கள் பலரும் கூறினர். ஆனால் இதில் எதுவுமே மன்னரைக் கவரவில்லை. "இவர்கள் செய்தது எல்லாம் நல்ல விவேகமான செயல்கள்தாம். ஆனால் வருங்காலத்தில் நாட்டை ஆளப்போகும் ஒருவனுக்கு இருக்கவேண்டிய நுண்ணுணர்வு இதில் இருப்பதாகத் தெரியவில்லையே" என்று அவர் சிந்தித்துக் கொண்டிருந்தார்.
இளைஞர்கள் கூட்டத்தில் இருந்த ஓர் இளைஞன் மட்டும் தன் செயலைப் பற்றி ஏதும் கூறாமல் இருப்பதை மன்னர் கவனித்தார். உடனே அவனை அழைத்த அவர், "இளைஞனே, இங்கே பலரும் தங்கள் வீரதீரச் செயல்கள் பற்றிக் கூறிக் கொண்டிருக்க, நீமட்டும் அமைதி காப்பது ஏன்? நீ எதுவுமே செய்யவில்லையா?" என்று கேட்டார். |
|
இளைஞன், "மன்னா, உண்மைதான். நான் இப்படிப்பட்ட வீரதீரச் செயல் எதுவுமே செய்யவில்லை" என்றான்.
"அப்படியானால் இந்த ஆறு மாதத்தில் நீ செய்ததுதான் என்ன?" என்றார் மன்னர் சீற்றத்துடன்.
அதற்கு அந்த இளைஞன், "மன்னா, 'நீர் உயர நெல்லுயரும்; நெல்லுயர்ந்தால் நாடு உயரும்; நாடு உயரக் கோன் உயர்வான்' என்று படித்திருக்கிறேன். அதன்படி நீர்வளம் உயர வேண்டுமானால் நிறைய மழை பொழிய வேண்டும். அதற்கு நிறைய நாட்டில் மரங்கள் இருக்க வேண்டும். அதன்படி நான் இந்த ஆறு மாதத்தில் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அவற்றுக்குத் தினந்தோறும் என் குடும்பத்தோடு சேர்ந்து நீர் பாய்ச்சி வருகிறேன். அவை பெரிய மரங்களாகி விடும். எதிர்காலத்தில் நம் நாட்டில் தண்ணீர்ப் பஞ்சமோ, உணவுப் பஞ்சமோ இருக்காது. இதுதான் நான் செய்தது" என்றான்.
"தற்காலப் பிரச்சனைகளை கவனிப்பதோடு, நாட்டின் எதிர்காலப் பிரச்சனைகள் மீதும் கவனம் செலுத்துபவன்தான் சிறந்த அரசனாக இருக்க முடியும்" என்று சிந்தித்த மன்னர், அந்த இளைஞனை நாட்டின் இளவரசனாகப் பட்டம் சூட்டினார்.
சுப்புத் தாத்தா |
|
|
|
|
|
|
|