|
|
குழந்தைகளே! கொலுவுக்குப் போய் பாட்டுப் பாடினீங்களா? பொம்மையெல்லாம் நல்லா இருந்திச்சா? வாங்க, ஒரு கதை சொல்றேன்.
ஒரு வியாபாரி தனது பண்ணையில் ஒரு குதிரையையும், கழுதையையும் வளர்த்து வந்தான். குதிரை அவனையும், கழுதை அவனது சுமைகளையும் ஏற்றிக்கொண்டு போகும். வியாபாரி வாரம் ஒருமுறை குதிரைமேல் ஏறிச் சந்தைக்குப் போவான். அப்போது தனது பொருட்களைக் கழுதை மீது ஏற்றி, வேலையாளை விட்டு அதனை சந்தைக்கு அழைத்து வரச் செய்வான். மற்ற நாட்களிலும் கழுதைக்கு அதிக வேலைப்பளு இருந்தது. அதனால் அது மிகவும் உடல் சோர்ந்து வாடி இருந்தது. ஆனால் குதிரையோ வாரம் ஒருமுறை வியாபாரியை சந்தைக்கு அழைத்துச் செல்வதோடு சரி, மற்ற நாட்களில் அதிக வேலை இல்லாததால் நன்றாகத் தின்று கொழுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.
ஒருநாள் இரவு குதிரையும் கழுதையும் அருகருகே கட்டப்பட்டு தங்கள் இரை தின்று கொண்டிருந்தன. வேகவேகமாகத் தின்று கொண்டிருந்த கழுதையைப் பார்த்து குதிரை கிண்டலாகச் சிரித்தது.
"ஏன் சிரிக்கிறாய், என் வேதனை உனக்கு வேடிக்கையாக இருக்கிறதா?" என்று சோகத்துடன் கேட்டது கழுதை.
"ஆம். நீ ஒரு முட்டாள்; அதை நினைத்துச் சிரித்தேன்!" என்றது குதிரை.
"ஏன் அப்படிச் சொல்கிறாய்?" என்று கேட்டது கழுதை
"நீ கொஞ்சங்கூட ஓய்வே எடுக்காமல் தினமும் வேலை செய்கிறாய். அது சரியான முட்டாள்தனம். நான் சொல்வதுபோல் செய்தால் உனக்கு நல்ல ஓய்வும் கிடைக்கும். சொகுசாகவும் இருக்கலாம்" என்றது குதிரை.
"சரி சொல், அதையும்தான் செய்து பார்க்கிறேன்" என்றது கழுதை.
"வேலைக்காரன் உன்னை வேலைக்கு அழைத்துப் போக வரும்போது எழுந்திருக்காதே! ரொம்பச் சோர்வாக இருப்பதுபோல் படுத்துக்கொள். அவன் சாட்டையால் நாலு அடி அடித்தாலும் தாங்கிக் கொள். பின்னர் அவன் உன்னை விட்டுவிட்டுப் போய்விடுவான். அப்புறம் நீ உன் இஷ்டம் போல் படுத்துக் கொண்டிருக்கலாம். தேவையான அளவு இரை உண்ணலாம். தினமும் இதையே செய். பிறகு உனக்குப் பூரண ஓய்வு கொடுத்துவிடுவார்கள். எப்போதும் சுகமாக இருக்கலாம்!" என்று ஆலோசனை சொன்னது குதிரை. |
|
கழுதையும் அப்படியே செய்வதாகச் சொல்லி குதிரைக்கு நன்றி சொன்னது.
மறுநாள் காலை. சந்தைக்குப் போகும் நாள். வேலையாள் வந்து கழுதையை எழுப்பினான். ஆனால் அது எழுந்திருக்காமல் படுத்து முரண்டு செய்தது. கண்கள் சோர்ந்து கிடப்பது போல் பரிதாபமாகப் பார்த்தது. வேலையாள் சாட்டையால் சிலமுறை அடித்தான். கம்பு கொண்டு பலமுறை குத்தினான். கழுதை அனைத்தையும் தாங்கிக் கொண்டு அப்படியே படுத்துக் கிடந்தது. வேலையாள் பலமுறை முயற்சித்தும் பலனில்லாததால், விஷயத்தை வியாபாரியிடம் தெரிவித்தான்.
வியாபாரிக்கோ அன்று அவசரமாகச் சந்தைக்குச் செல்ல வேண்டி இருந்தது. என்ன செய்வதென்று யோசித்தவன், குதிரையை ஒரு பெரிய வண்டியில் பூட்டி, எல்லாச் சுமைகளையும் அந்த வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு, தானும் அந்த வண்டியிலேயே சென்றான். வேலையாள், வியாபாரி இருவரும் ஏறிகொள்ள, இழுக்க முடியாமல் இழுத்துக்கொண்டு சந்தைக்குப் புறப்பட்டது குதிரை.
இதுவே வியாபாரிக்குப் பிடித்துப் போகவே, எப்போதும் குதிரை வண்டியில் சந்தைக்குப் போவதே வாடிக்கையானது. தினமும் கழுதை செய்யும் வேலைகளில் பாதியை குதிரையும் செய்ய வேண்டி ஆனது.
எப்பவுமே, சொல்ற அறிவுரை சரியானதா இல்லேன்னா, தனக்கே அது ஆபத்தாக முடியும்னு குதிரைக்குப் புரிந்தது. கதை நல்லா இருந்துச்சா? சரி, அடுத்த மாசம் சந்திக்கலாம்.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|