Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | நலம்வாழ | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நிதி அறிவோம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிரிக்க சிரிக்க | ஜோக்ஸ் | விளையாட்டு விசயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல் | சிரிக்க, சிந்திக்க | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
விளையாட்டு விசயம்
அமெரிக்கா அடித்த டக்
- சேசி|ஏப்ரல் 2007|
Share:
Click Here Enlarge200 வருட பாரம்பரியம், 50 வருட நவீன கால கிரிக்கெட் அனுபவம், 6 மில்லியன் கிரிக்கெட் விசிறிகள், 36 லீக் அமைப்புகள், 650-க்கும் மேற்பட்ட கிரிக்கெட் குழு அமைப்புகள் (Clubs), 12,000-க்கும் மேல் அனுபவம் மிக்க விளையாட்டு வீரர்கள், 50,000க்கும் அதிகமான பொழுது போக்கிற்காக ஆடும் கிரிக்கெட் ஆர்வலர்கள் – இந்த கிரிக்கெட் சொர்க்க பூமி எங்கே இருக்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறதா? வேறு எங்கும் தேட வேண்டாம், நாம் வசிக்கும் அமெரிக்க தேசத்தைப் பற்றித்தான் சொல்கிறேன். ஆனால் ஒரு சராசரி பள்ளிச் சிறுவனிடம் சென்று ‘கிரிக்கெட் என்றால் என்ன’ என்று கேட்டால், அது ஒரு பூச்சி என்ற பதில்தான் வரும். அப்படி ஒரு விளையாட்டு இருப்பதே பலருக்கும் தெரியாது. இந்த முரண்பாடான நிலமைக்குக் காரணம் என்ன? பக்கத்து நாடான கனடா 1979-ல் இருந்து உலகக் கோப்பை பந்தயங்களில் பங்கெடுத்து வருகிறது. ஆனால் அமெரிக்கா உலகக் கோப்பையில் பங்கு பெறுவது ஒரு பகற்கனவாகவே இருக்கிறது. இந்த நிலை எப்போது மாறும்? இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா என்று கிரிக்கெட் பிரபலமான நாடுகளில் இருந்து குடிபெயர்ந்த ரசிகர்கள் லட்சக் கணக்கில் இங்கே இருக்கும்போது, கிரிக்கெட் வளராததற்கு காரணம் என்ன?

பதில் வேண்டும் என்றால் அதை அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தில்தான் (United States of America Cricket Association – www.usaca.org) தேடவேண்டும். உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸில் நடக்கும் வாய்ப்பை அமெரிக்க கிரிக்கெட் சங்கம் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தனது ஆதங்கத்தை நமது பதிப்பாசிரியர் சென்ற மாதத் தென்றல் இதழின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த அமைப்பிற்குள் நிலவும் பதவிப் போட்டிகளையும், அரசியலையும் பற்றி அவர் வருத்தம் தெரிவித்திருந்த கையோடு, அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் அந்தஸ்தை தற்காலிகமாக நீக்கி இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சங்கம் (International Cricket Council - ICC - www.icc-cricket.com) அறிவித்திருக்கிறது. அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் போக்கை கடந்த சில வருடங்களாகக் கவனித்து வந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சியாக இருக்காது.

இத்தகைய அதிரடி நடவடிக்கைகளுக்கு உள்ளாவது அமெரிக்க கிரிக்கெட் சங்கத்திற்கும் ஒன்றும் புதிதல்ல. ICC அமெரிக்க சங்கத்தை தற்காலிக நீக்கம் செய்வது இரண்டாவது முறை. இரண்டு முறையும் தற்போதைய தலைவர் கிளாட்ஸ்டோன் டைன்டியின் தலைமையில் நடைபெற்றிருக்கிறது. அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தில் இருக்கும் உட்பகையால் பல வாய்ப்புகளை அமெரிக்க கிரிக்கெட் இழந்து வருகிறது. 2005-ல் கண்டங்களுக்கு இடையேயான கோப்பை (Intercontinental Cup) போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டது, சென்ற வருடம் Project USA என்ற வளர்ச்சித் திட்டம் கலைக்கப்பட்டது, என தொடர்ந்து கிரிக்கெட் வளர்ச்சிக்கு கிரிக்கெட் சங்கமே ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.

அமெரிக்க கிரிக்கெட் சங்கம் 1961-ல் துவக்கப்பட்டது. 1965-ல் சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினராக அங்கீகரிக்கப் பட்டது. இந்தச் சங்கத்தின் குறிக்கோள்கள் கிரிக்கெட்டை அமெரிக்காவின் எல்லா நிலைகளிலும் வளர்ப்பது, மற்றும் தேசிய அணிகளை உருவாக்கி சர்வதேச அரங்கில் போட்டியிடுவது. ஆனால் அந்த இரண்டிலுமே இந்த அமைப்பு இதுவரை வெற்றி காணவில்லை. கிரிக்கெட்டை பிரபலப் படுத்துவதிலும் அமெரிக்கச் சங்கம் பின் தங்கிவிட்டது. இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவர் கிளாட்ஸ்டோன் டைன்டியின் (Gladstone Dainty) கூட்டணி ஒரு பிரிவாகவும், வட்டத் தலைவர்கள் (regional presidents) கூட்டணி ஒரு பிரிவாகவும் மோதி வருகின்றனர். சங்க விதிமுறைகளை மாற்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. புதிதாக அறிவிக்கப்பட்ட விதிமுறைகள் தேவையான அளவு ஆதரவு இல்லாமலே அங்கீகரிக்கப் பட்டுள்ளன. 2005-ல் நடந்த சங்கத் தேர்தலில் கிளாட்ஸ்டோனுக்கு எதிரணி அங்கத்தினர் பல பிரிவுகளில் வெற்றி பெற்றனர். அவர்களில் சிலர் தேர்தலில் பங்கு பெறத் தகுதி இல்லாதவர்கள் என்று காரணம் காட்டி பதவியில் இருந்து நீக்கப் பட்டனர். தொடர்ந்து வரும் இந்த உட்பகைகள் இப்போது நீதிமன்றம் வரை சென்றுள்ளன.

அங்கத்தினர்கள் அமைப்பிற்குள் இருக்கும் பிரச்சினைகளில் சர்வதேச கிரிக்கெட் சங்கம் தலையிடாது. அதே சமயம் நல்ல கிரிக்கெட் ஆட்டங்களைக் காண அமெரிக்க கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்கி இருப்பதையும், அந்த ஆட்டங்கள் மூலம் நல்ல வருமானம் வருவதற்கான வாய்ப்பு இருப்பதையும் சர்வதேச கிர்க்கெட் சங்கம் உணர்ந்து இருக்கிறது. முக்கியமாக அமெரிக்காவில் இருக்கும் புலம் பெயர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் உயர்ந்த வருமானக் கோட்டிற்குள் இருப்பதால் தயங்காமல் கிரிக்கெட் ஆட்டங்களைக் காண செலவு செய்பவர்கள் என்பதையும் கணக்கில் கொண்டு, Project USA என்ற முயற்சியை 2004-ல் துவக்கியது. வெளிநாட்டுக் குழுக்களை அழைத்து வந்து அமெரிக்காவில் ஒரு நாள் போட்டிகள் நடத்துவதுதான் அதன் திட்டம். அதன் மூலம் வரும் வருமானத்தை அமெரிக்கக் கிரிக் கெட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்ற கருத்தையும் அமெரிக்கச் சங்கத்தின் முன் வைத்தது. இந்த முயற்சியில் பெரிய அளவில் முதலீடு செய்யவும் சர்வதேச கிரிக்கெட் சங்கம் தயாராக இருந்தது. வருமானத்தை அமெரிக்கக் கிரிக்கெட் சங்கமும், சர்வதேச கிரிக்கெட் சங்கமும் எப்படிப் பிரித்துக் கொள்வது என்பதில் இருந்து, அமெரிக்கக் கிரிக்கெட் சங்கத்திற் குள் இருந்த உள்பூசல், கலவரம் என்ற பல பிரச்சினைகள் எழவே, கிட்டத்தட்ட திட்டம் துவங்கிய 6 மாதத்திற்குள், Project USA கலைக்கப் பட்டது. இதே எண்ணத்தை மனதில் கொண்டு அமெரிக்க கிரிக்கெட் சங்கம் ProCricket என்ற முயற்சியைத் துவங்கியது. பல மில்லியன் டாலர்கள் இழப்போடு அந்த முயற்சியும் படுதோல்வி அடைந்தது.

அமெரிக்க கிரிக்கெட் சங்கம் கிளாட்ஸ் டோன் டைன்டி தலைமையில்தான் சரிவு கண்டு வருகிறது. இவருக்கு முன்னால் டாக்டர் அடுல் ராய் (Atul Rai) பதவியில் இருந்த போது பல வளர்ச்சிகளைக் கண்டது. டாக்டர் அடுல் ராய் தயாரித்த ஐந்து வருட அளவுகோல் திட்டம் (5-Year Measurable Objective) என்ற திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே ICC, Project USA திட்டத்தைத் துவங்கியது. அமெரிக் காவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகக் கிட்டத்தட்ட 20 மில்லியன் டாலர்கள் செலவிடத் தயாராக இருந்தது. அடுல் ராய் தேசிய கிரிக்கெட் கோப்பைப் போட்டிகளை ஆரம்பித்தார். அமெரிக்காவை பல பிரிவுகளாகப் பிரித்து அப்பிரிவுகளுக்கு இடையே போட்டிகள் நடத்தி, மேற்குப் பிரிவுகளில் வெற்றி பெற்ற அணியும், கிழக்குப் பிரிவில் வெற்றி பெற்ற அணியும் தேசியக் கோப்பைக்காக மோதும். இந்தப் போட்டிகள் முதன் முறையாக 2002-ல் நடந்தன. அமெரிக்க தேசிய அணி 2002-ல் அமெரிக்கா கோப்பையை முதன் முறையாக வென்றது. அர்ஜென்டினாவில் நடந்த போட்டியில் கனடா அணியைத் தோற்கடித்து இந்தக் கோப்பையைக் கைப்பற்றியது. அடுல் ராய் இளைஞர்கள் வளர்ச்சித் திட்டம் (Junion Youth Development Program – JYDP) ஒன்றையும் உருவாக்கி 19-வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான தேசியக் கோப்பைப் போட்டியை நடத்தினார். அமெரிக்கக் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ஆவதற்கு முன் அடுல் ராய் தென் கலி·போர்னியா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். அப்போது முதன் முறையாக இந்தியா A-பிரிவு, ஆஸ்திரேலியா A-பிரிவு அணிகளை வரவழைத்து ஐந்து ஆட்டங்கள் கொண்ட AXN-Move என்ற சர்வதேசப் போட்டியை 2000-ல் நடத்திக் காட்டினார்.
Click Here Enlarge2000-ல் பெர்னார்ட் காமரோன் (Bernard Cameron), கிளைவ் லாய்ட் போன்ற சிலரின் உதவியோடு Major League Cricket (MLC – www.mlcus.com) என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் குறிக் கோள்கள் கிரிக்கெட்டை அமெரிக்கர்கள் இடையே பிரபலப் படுத்துவது, அமெரிக்கா முழுவதும் இந்த ஆட்டத்தை வளர்ப்பது போன்றவை. வளர்ந்து வேரூன்றிய அமெரிக்க கிரிக்கெட் சங்கத்துடன் போட்டியிடுவது கடுமையான காரியம். ஆனாலும் MLC அமைப்பு மெதுவாக தொடர்ந்து வெற்றி களைப் பெற்றுவருகிறது. அமெரிக்க கிரிக்கெட் சங்கத்தின் உள்பூசல்கள் முற்றி நீதிமன்றம் வரை செல்லவே, 2006-ல் பெர்னார்ட் காமரோன் MLC-ஐ சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாக அறிவிக்கும்படி வேண்டினார். ஆனால் சர்வதேச கிரிக்கெட் சங்கம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ICC-ன் அங்கீகாரம் இல்லாததால் இந்த அமைப்பின் எதிர்காலம் என்ன என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. MLC நடத்தும் போட்டிகளில் பங்கு பெற்றால், அந்த வீரர்களுக்கு அமெரிக்க கிரிக்கெட் சங்கம் நடத்தும் போட்டிகளில் இடம் கிடைக்காமல் போகலாம். அதனால் சில அணிகள் MLC நடத்தும் போட்டிகளில் பங்கு பெறத் தயங்குகின்றனர்.

அமெரிக்க இளைஞர்கள் இடையே கிரிக்கெட் திறமைக்குப் பஞ்சம் இல்லை. 19-வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான போட்டிகளில் அமெரிக்கா சிறப்பாக பங்கு பெற்று வருகிறது. அமெரிக்கவை ஒட்டிய தேசங்களுக்கிடையே நடந்த போட்டிகளில் 19-வயதிற்குட்பட்ட இளைஞர்கள் குழுவும், 15-வயதிற்குட்பட்ட இளைஞர்கள் குழுவும் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

ICC நடத்திய 19-வயதிற்குட்பட்ட இளைஞர்களுக்கான உலகக் கோப்பை பந்தயங்களுக்கு அமெரிக்கா 2006-ல் தேர்வு பெற்றது.

அமெரிக்க கிரிக்கெட்டின் எதிர்காலம் என்ன என்பது ஒரு பெரிய கேள்விக் குறியாக அனைவர் முன்னும் நிற்கிறது. கிளாட்ஸ் டோன் டைன்டி, பெர்னார்ட் காமரோன் இருவரும் Cricinfo-விற்கு அளித்த பேட்டியில் அமெரிக்காவில் கிரிக்கெட்டின் எதிர்காலம் நம்பிக்கை தருவதாக கூறி உள்ளனர். பெர்னார்ட் காமரோன் 2011-ல் உலகக் கோப்பை ஆட்டங்களை அமெரிக்கா விற்குக் கொண்டுவர விரும்புகிறார்.

உங்கள் மனதிடத்திற்கும், நம்பிக்கைக்கும் இதோ ஒரு சவால். அமெரிக்க கிரிக்கெட்டின் பிரச்சினைகள் தற்காலிகம் ஆனவை, அமெரிக்க இளைஞர்களின் திறமையும், ஆர்வமும் வளர வாய்ப்புகள் அதிகரிக்கும், கிரிக்கெட் விளையாடுவதற்கான விளையாட்டு அரங்குகள் உருவாகும், பல சர்வதேச அணிகள் அமெரிக்க மண்ணில் போட்டியிடும், அமெரிக்கவின் கிரிக்கெட் எதிர்காலம் பசுமையாக இருக்கும் என்று நம்ப நீங்கள் தயாரா?

சேசி
Share: 




© Copyright 2020 Tamilonline