Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
பொது
யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன்
அட்லாண்டாவில் சிவன் கோவில்
சொற்சித்திரம் - உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
- கேடிஸ்ரீ|நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeஆவணி பிறந்துவிட்டால் போதும், வரிசையாகப் பண்டிகைகள் வந்துக் கொண்டே இருக்கும். கிருஷ்ண ஜெயந்தி, ஆவணிஅவிட்டம், பிள்ளையார் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி... ஒரே கொண்டாட்டம்தான்.

பண்டிகைகள் என்றாலே எல்லோருக்கும் கொண்டாட்டம்தான். (இப்போது இருக்கும் விலைவாசியில் திண்டாட்டம்தான் என்பது வேறுவிஷயம்). நான் சிறு வயதாக இருக்கும் போதெல்லாம் தீபாவளிக்கு ஒரு மாதத்துக்கு முன்பே ஈஸ்ட்மன் கலர் கனவுகளில் மிதந்து கொண்டிருப்போம்...

எங்கள் குடும்பம் பெரிய குடும்பம். அப்பா, அவருடன் கூடப் பிறந்த சகோதரர்கள், பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் குழந்தைகள், அப்பாவின் தாயார் என்று குடும்ப அங்கத்தினர் எண்ணிக்கை இருபதைத் தாண்டிவிடும்!

அந்தக்காலத்து வீடு. கிட்டத்தட்ட 100 அடி நீளம் இருக்கும். அகலம் கொஞ்சம் கம்மிதான்-21 அடி. இரண்டு தாழ்வாரங்கள் கொண்ட நீளமான வீடு. வாசல் பக்கம் ஒரு தெரு இருக்கும். பின்புற வாசல் மற்றொரு தெருவில் முடிவடையும். இப்போது உள்ள வீடுகள் போல் இருக்காது. வீட்டின் உள்ளே நுழைந்தவுடன் இரண்டு பக்கமும் இரண்டு ஆள் படுக்கக்கூடிய அளவுக்கு நீளமான திண்ணை. திண்ணையின் மேல்பகுதியில் தலைவைத்துப் படுப்பதற்கு ஏதுவாக அழகாகத் தலைகாணிபோல் திண்டு வைத்துக் கட்டி இருக்கும். யாராவது விருந்தாளிகள் வந்தால் படுப்பதற்கு பல வீடுகளில் இப்படித்தான் திண்ணைகள் இருக்கும்.

திண்ணையிலிருந்து உள்ளே நுழைந்தவுடன் பெரிய முன்னறை. ஹாலின் சுவர் நிறைய சுவாமி படங்கள். ராமர் பட்டாபிஷேகம், தாமரைப்பூவில் லட்சுமி, ஸ்ரீனிவாசர், பிள்ளையார், சரஸ்வதி என்று ஏகப்பட்ட படங்கள் கிழக்கு நோக்கி இருக்கும்.

ஹாலுக்கு மேலேயும் கீழேயும் பெரிய அறைகள் உள்ளன. இந்தக் காலம் போல் அதைப் படுக்கை அறை என்று சொல்ல மாட்டார்கள். எங்கள் வீட்டில் ஹாலுக்கு மேலே உள்ள அறையில்தான் அலமாரிகள் இருக்கும். அதை பீரோ ரூம் என்றுதான் சொல்லுவோம். கீழே உள்ள அறையில் அரிசி, பருப்பு, எண்ணெய் வகையறாக்கள் அடுக்கி வைத்திருப்பார்கள். அதை உக்கராண அறை என்று நாங்கள் சொல்லுவோம்.

அதன் பிறகு முற்றம், முற்றத்தை ஒட்டிச் சமையல்அறை. சமையல் அறைக்கு அடுத்து மறுபடியும் ஒரு நீண்ட பின்னறை. அதற்கு பிறகு குளியல் அறை. அப்புறம் கிணற்றடி, தோட்டம், புழக்கடை இப்படிப் போய்க் கொண்டிருக்கும்.

எதையோ சொல்லவந்து எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறேனே... தீபாவளிக்குப் பத்துநாட்கள் முன்னால் எங்கள் பெரியப்பா சென்னைக்கு வந்து குடும்பத்தில் உள்ள அத்தனை பேருக்கும் தேவையான ஜவுளிகளை வாங்கிவருவார். இப்போது போல் அன்றைய காலத்தில் குடும்ப அங்கத்தினர் கூட்டமாகப் போய் சரவணா, குமரன், ஜெயச்சந்திரன் என்று அவரவர் இஷ்டப்படி ஆடைகளை வாங்கிக்கொள்ள முடியாது. பெரியப்பா எல்லோருக்கும் ஒரே மாதிரி கலரில் துணி எடுத்துவருவார். அதுவே எங்களுக்கு ரொம்பவும் சந்தோஷத்தை கொடுக்கும்.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பட்சணங்கள் செய்ய எங்கள் வீட்டுப் பெண்கள் பாட்டியின் தலைமையில் கூடிவிடுவார்கள்.

விதவிதமான பட்சணங்கள் இருக்கும். தீபாவளி மருந்து, திரட்டிப்பால், மனோகரம், ஓமப்பொடி, மிக்சர், காரமுறுக்கு, ரவா லட்டு, தேங்காய் பர்·பி, மைசூர் பாக் ('க்' உண்டு, உறுதியானது!) எல்லாம்தான். ஆறு ஸ்வீட் ஆறு காரம் என்று இடுப்பு ஓடிய எல்லோரும் செய்வார்கள். வாசனை மூக்கைத் துளைக்கும். ஆனால் யாருக்கும் கொடுக்கமாட்டார்கள்.

''தீபாவளி அன்னிக்குதான் எல்லாருக்கும். போங்க போய் படிங்க...'' பாட்டி ஆர்டர் போட்டுவிடுவாள்.

நாட்களை நாங்கள் எண்ணிக் கொண்டிருப்போம் ஒன்று, இரண்டு என்று. பட்டாசுகளை எங்கள் சித்தப்பா, பெரியப்பா வாங்கிவருவார்கள். கம்பி மத்தாப்பு, புஸ்வாணம், கேப், சாட்டை, சங்குசக்கரம், லட்சுமி வெடி, மிளகாய் வெடி என்று. யார் கண்ணிலும் படாமல் மொத்தப் பட்டாசையும் பத்திரமாக எடுத்து வைத்துவிடுவார்கள். நாங்கள், யாரும் பார்க்காதபோது, அந்த அறைக்குச் சென்று பட்டாசுகளைத் தொட்டுத் தொட்டு பார்ப்போம். ''குருவிப் பட்டாசு வாங்கியிருக்காடா... எலக்டிரிக் பட்டாசு வாங்கியிருக்காடா...'' என்று எங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வோம்.

காத்திருப்போம் அந்த நாட்களுக்காக...

விடிந்தால் தீபாவளி... இரவெல்லாம் தூக்கம் வராது. புரண்டு கொண்டிருப்போம். எப்ப பொழுதுவிடியும், புதுசு போட்டுக் கலாம், பட்டாசு வெடிக்கலாம் என்று காத்திருப்போம்.

எங்கேயோ ஒரு வீட்டில் எலக்டிரிக் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டவுடன் பாட்டி எழுந்துவிடுவாள். லைட்டைப் போட்டு மணி பார்ப்பாள். விடியற்காலை 1 இருக்கும். அவ்வளவுதான், ''ஹ¥ம் எழுந்திருங்கோ. மணி ஆயிடுத்து. எதிராத்தில எல்லோரும் எழுந்து குளிச்சு பட்டாசு வெடிச்சிண்டிருக்கா. எப்ப பார்த்தாலும் என்ன தூக்கம்! எழுந்திருங்கோ'' பாட்டி உரக்கக் குரல் கொடுக்க ஆரம்பிப்பாள்.

எப்படா பாட்டி சொல்லப்போறா என்று காத்திருந்த நாங்கள் சட்டென்று படுக்கையிலிருந்து எழுந்து ஓடிவருவோம்.

''போங்க. போய் பல் தேய்ச்சுட்டு வாங்கோ எல்லோரும்'' என்பது போல பாட்டி அன்று முழுவதும் ஏதாவது சொல்லிக்கொண்டே இருப்பாள்.

அம்மா எழுந்து புழக்கடைப்பக்கம் போய் பெரிய அண்டாவில் வெந்நீர் வைப்பாள். அதற்குள் எங்கள் சித்தி நடு ஹாலில் கோலம் போட்டு, இரண்டு மணைகளைத் துடைத்து, அதன் மேல் படிக்கோலம் இட்டு இரண்டு குத்துவிளக்கை எடுத்து வந்து வைத்து ஏற்றிவைப்பாள்.

எங்கள் வீட்டில் தீபாவளியின் போது எல்லாக் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நலங்கு வைப்பார்கள். அதற்கான வேலைகளைச் சித்தி செய்துகொண்டிருப்பாள்.

தாம்பாளத் தட்டில் கும்பகோணத்து வெற்றிலை, பாக்கு, ஏஆர்ஆர் சுண்ணாம்பு, ஒரு கிண்ணத்தில் காய்ச்சின நல்லெண்ணெய் எல்லாம் வைத்திருக்கும்..

நாங்கள் ஒவ்வொருவராக வந்து மணையில் அமருவோம்.

சித்தி 'சீதாராமா கல்யாணம்' என்று பாடிக்கொண்டே ஒவ்வொருவருக்கும் நலங்கு வைத்துவிடுவாள். நலங்கு முடிந்தவுடன் ஆளுக்கு ஒரு வெற்றிலையில் கொஞ்சம் பாக்கு வைத்து மடித்து கொடுப்பாள். தீபாவளி அன்று மட்டும் சிறுவர்கள் வெற்றிலை போடலாம் என்பாள் எங்கள் பாட்டி.

தொலைவில் சேரில் அமர்ந்து கொண்டு பாட்டி கவனித்துக் கொண்டிருப்பாள்.

அதற்குள் வெந்நீர் தயாராக இருக்கும். ஒவ்வொருவருக்கும் ஒரு வாளியில் விளாவி நிரப்பி வைத்திருப்பாள் அம்மா. நான், நீ என்று முதலில் குளிப்பதற்கு ஒரு யுத்தமே நடக்கும். கடைசியில் ஒருவர் கிணற்று அருகிலும், ஒருவர் குளியல் அறையிலும் என்று மடமடவென்று குளித்து விட்டு வருவோம்.

அதற்குள் எல்லாப் புதுத் துணிகளின் ஓரத்திலும் மஞ்சள் தடவி அழகாக சுவாமி முன் தாம்பாளத்தில் அடுக்கி வைத்தி ருக்கும். எங்கள் பெரியம்மா ஒவ்வொருவருடைய ஆடையையும் கொடுப்பாள். கொடுப்பதற்குள் பட்டென்று பிடுங்கிகொண்டு ஓடுவோம். அதை அணிந்து பார்ப்பதற்கு.

மனசெல்லாம் சந்தோஷம் ததும்பும்.

வாசலில் எங்கள் ஊர் ஆஸ்தான மேளக்காரர் தன் பரிவாரங்களுடன் ஒவ்வொரு வீட்டிலும் மங்கள வாத்தியம் வாசிக்க வந்துவிடுவார். பக்கத்து வீட்டில் அவர் வாசித்துக் கொண்டிருக்கும் போதே எங்கள் வீட்டில் ஒரு தட்டில் வெற்றிலை பாக்கு 20 ரூபாய் தட்சணை என்று எடுத்து வைத்துவிடுவார்கள்.

ஒவ்வொரு வீட்டிலும் தலா ஒரு பாடல் வாசிப்பார். இன்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம். அருமையாக வாசிப்பார். இன்று எல்லாம் டிவி மயம்தான்! ஒவ்வொரு வீட்டிலும் அவர் வாசிக்க வருவதை அன்று கெளரவமாக கருதுவார்கள்.

தயாராகச் சித்தப்பா எல்லோருக்கும் பட்டாசுகளை பங்குபோட்டு வைத்திருப்பார். ஆம்பளைப் பசங்களுக்கு கொஞ்சம் பெரிய வெடி. (மிளகாய் வெடிதான் பெரிய வெடின்னு சொல்லி அதைக் கொடுத்து விடுவார்). பெண் பிள்ளைகளுக்கு கேப், மத்தாப்பு, சங்குசக்கரம் என்று பிரித்து அவர் கடமையை முடித்துக் கொள்வார்.

எங்கள் வீட்டு ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் பட்டாசை வாங்கிக் கொண்டோமோ இல்லையோ வாசலுக்கு ஓடிவிடுவோம்.

சின்னதாகச் சிமினி விளக்கை ஏற்றிக் கொடுப்பார் எங்கள் அம்மா. மிளகாய் வெடியை வெடிப்பதற்குள் ஏதோ பெரிய சாதனையைப் செய்துவிட்டாற்போல் இருக்கும் எங்களுக்கு.

எல்லா வெடியையும் என் தம்பி சீக்கிரம் வெடித்துத் தீர்த்துவிடுவான். பிறகு மற்றவர்களிடம் வந்து கெஞ்சுவான். நைசாகப் பேசி சில நேரம் லட்சுமி வெடியை வாங்கி வெடிப்பான். பாவம் என் தங்கை. அவளுக்கு வெடிக்கவே பயம். ஆனால் வெடிக்க ஆசை. எதையும் வெடிக்காமல் பத்திரமாக வைத்திருப்பாள். தம்பி அவள் அருகில் போய் ''ஏய் மீனா ஏன் பயப்படற. ஒண்ணும் பயமில்லை. நான் வெடிச்சுக் காமிக்கிறேன் பாரு...'' என்று சொல்லி ஒண்ணு ஒண்ணாக அவளிடம் வெடிகளை வாங்கித் தானே வெடித்துவிடுவான்.

''மொத்த வெடியையும் நீயே வெடிச்சிட்டியே. நான் என்ன பண்ணுவேன்!'' என்று அவள் அழ ஆரம்பித்துவிடுவாள். ஒரே சண்டை. சமாதானத்திற்கு அப்பா வருவார்.

அதற்குள் பொழுது பலபலவென்று விடிந்து விடும்.
கையில் வெடி கொஞ்சம் இருப்பில் வைத்திருப்போம். பக்கத்து வீட்டுப் பசங்களும், எதிர் வீட்டுப் பசங்களும் வெடிவெடித்து தூள் கிளம்பியிருப்பார்கள். ''ஏய் மணி ஆத்துல நிறைய வெடிச்சாடா. அவன் அப்பா 1000 ரூபாய்க்கு வெடி வாங்கினாராம்'' ஏக்கத்துடன் சொல்வான் எதிர் வீட்டு கிரி.
நாங்கள் கூட்டமாக ஒவ்வொரு வீட்டு வாசலிலும் எவ்வளவு வெடி குப்பைகள் சேர்ந்து இருக்கிறது என்று பார்த்துக் கொண்டு வருவோம்.

''ஏய் இங்க வாங்க எல்லோரும். பெரியவாளை சேவிக்க வேண்டாமா. வாங்க வாங்க..." என்று என் அக்கா கூச்சல் போட, ஓடுவோம் வீட்டிற்குள்.

பாட்டி ரொம்ப பிகு பண்ணிப்பாள். ''என்ன ஒண்ணும் யாரும் சேவிக்க வேண்டாம். அவா அவா அப்பா அம்மாவை சேவிங்கோ போதும்'' என்பாள்.

''இல்ல பாட்டி. நீங்கதான் இந்த ஆத்துல பெரியவா. உங்கள தான் முதல்ல சேவிக்கணும்'' என்று கோரஸாகக் கூறுவோம். அப்பா இடைபுகுந்து ''பசங்க சேவிக்கட்டும் இரு'' என்பார்.

ஒவ்வொருத்தராகப் பாட்டியின் கால்களில் விழுவோம்...

''எழுந்திருங்கோ... நன்னா படிச்சு முன்னுக்கு வாங்கோ. சமர்த்தா இருங்கோ'' பாட்டி வாழ்த்துவாள்.

வரிசையாக அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி என்று காலில் விழுந்து எழுவோம்.

சேவித்தல் முடிந்தவுடன் எங்களையெல்லாம் பாட்டி சாப்பிடச் சொல்வாள். "குழந்தைகளுக்கெல்லாம் நான் செஞ்ச திரட்டிப்பால், தீபாவளி மருந்து எல்லாம் கொடுங்க" என்பாள்.

பாட்டி எப்பவுமே ஒருத்தரைக் குறிப்பிட்டு சொல்லமாட்டா. மொத்தமாக மூன்று பெண்களையும் சொல்வாள்.

பட்சணத்தைக் கொடுங்கோ என்று பாட்டி சொன்னதுதான் தாமதம், நாங்கள் அத்தனை பேரும் சமையலறையில் ஆஜர்.

எல்லோருக்கும் தட்டில் போட்டுக் கொடுப்பார்கள். நாங்கள் வட்டமாக அமர்ந்து கொள்வோம். மொத்தம் பன்னிரண்டு, பதிமூன்று பேர் இருப்போம். ''ஐய் இங்க பாருடா கொக்கு...'' என் கடைசி தம்பி தன் கையிலுள்ள கார முறுக்கை ஒடித்து கொக்கு போல் இருக்கும் அதைக் காண்பிப்பான்.

''இது பாரு கொஸ்டின் மார்க்'' இது என் பெரியப்பா பெண்.

நாங்கள் எல்லோரும் சாப்பிட்டு ஹாலுக்கு வருவோம். விடியற்காலையிலேயே எழுந்ததால் தூக்கம் கண்களைச் சொருகும். அப்படியே சிலர் தூங்கிவிடுவோம்.

மறுபடியும் வருமா இப்படிப்பட்ட சந்தோஷங்கள்! அதிலும் வாழ்க்கையை டி.வி. ஆக்கிரமித்துவிட்ட இந்தக் காலத்தில்...

கேடிஸ்ரீ
More

யாஹு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் ராகவன்
அட்லாண்டாவில் சிவன் கோவில்
Share: 
© Copyright 2020 Tamilonline