பறவைக்காதலர் விஜயாலயன்
|
|
|
|
|
அமெரிக்கத் தமிழிளைஞர்கள் இந்த ஹீரோவைக் கொஞ்சம் பொறாமையோடுதான் பார்க்கிறார்கள். இவர் மேரிலாண்ட் மாநில காலேஜ் டீம் பாஸ்கெட் பால் வீரர் வருண் ராம். தமிழர்கள் படிப்பில் மட்டுமல்ல, விளையாட்டிலும் சூரர்கள்தாம் என்ற செய்தியை வருண் ராமின் வெற்றி உலகுக்கு அறிவிக்கிறது.
சேலம் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சாந்தி - கொழந்தவேல் ராமசாமி இணையரின் மகனாகக் கென்டக்கியில் பிறந்த வருண், வளர்ந்தது மேரிலேண்ட் மாநிலத்தில். வருணின் ஐந்தாவது பிறந்தநாள் பரிசாக மாமா தந்த Tikes ஆட்டம் வருணை மிகக்கவர்ந்தது. விளையாட்டுத்துறையில் வழிகாட்ட யாருமில்லாத நிலையில் தானே முயன்று படிப்படியாக ஏறினார் வருண். மாமா அவரை 'மைக்கேல் ஜோர்டன்' என்று கேலியாக அழைத்ததை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட வருண், கூடைப்பந்து விளையாட்டில் சிறந்த இடத்தைப் பெற்றார்.
வருண் விளையாட்டை ட்ரெயினரிடம் பயின்ற நேரம்போக, இணைய வீடியோ பார்த்தும் தூண்டித் துருவிக் கற்றுக்கொண்டார். 5 அடி 9 அங்குல உயரம் என்றாலும், ஆர்வம், சாதுர்யம், உயிரைக்கொடுத்து விளையாடுவது என எல்லா அணிக்கு அணிசேர்த்தார் வருண். மேரிலாண்ட் பல்கழைக்கழக அணியில் தற்போது விளையாடி வருகிறார் (Maryland, a Division 1 team ranked 12th overall in the U.S.) |
|
IVY கல்லூரிக்கு விளையாடுவது வருணின் லட்சியம். ஆனால் அத்தகைய கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. மிகவும் சோர்ந்து போனாலும் கூடுதலாக ஓராண்டு பள்ளியில் பயின்று, அடுத்த ஆண்டும் ஐவி கல்லூரியில் முயற்சி செய்தார். அதிலும் தோல்வி! மனந்தளராமல் கனெக்டிகட் ட்ரினிடி கல்லூரியில் சேர்ந்து டிவிஷன் 3 பாஸ்கட்பால் அணிக்கு விளையாடினார்.
இரண்டாமாண்டில் மேரிலாண்ட் பல்கலைக்கு மாற்றல் வாங்கிவந்தார். "இங்க டீம்ல சேக்க மாட்டாங்க" என்று கூறியவர்களின் சொல்லைப் பொருட்படுத்தாமல், விளையாட்டில் தீவிர கவனம் செலுத்திய வருணுக்கு அணியில் இடம் கிடைத்ததோடு, முக்கிய வீரராகவும் உயர்த்தப்பட்டார். சமீபத்தில் நடைபெற்ற போட்டியில் மேரிலாண்ட் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமே வருண்தான். அவருடைய டிஃபென்ஸ் தேசிய அளவில் வலுவானதாகக் கருதப்பட்டது.
"IVY கல்லூரியில் இடம் கிடைக்காதபோது நான் தோற்றுவிட்டதாக நினைத்தேன்; 'Never Quit' என்ற மனவுறுதிதான் என்னை அதிலிருந்து வெளிவரவும், மேலே உயர்த்தவும் செய்தது" என்கிறார். கல்வியிலும் சளைக்காத வருண் 4.00க்கு 3.99 புள்ளிகளுடன் நரம்பு உயிரியல் மற்றும் உடலியங்கியல் (neurobiology and physiology) படிக்கிறார். "பாடம் போரடித்தால் விளையாட்டு; விளையாட்டு போரடித்தால் பாடம், இதுதான் என் சூட்சுமம்" என்கிறார் வருண்.
"எனக்குத் தெரிந்ததெல்லாம் பாஸ்கட்பால்தான்l" என்னும் இந்த 22 வயது இளைஞருக்கு அறிவியல் பிடிக்கும். தன் குடும்பத்தோடு நேரம் செலவிடுவதும் மிகப்பிடிக்கும். தந்தை கொழந்தவேல் ராமசாமி தமிழார்வலர். வாஷிங்டன் வட்டாரத்தில் இருபதாண்டுகளாகத் தமிழ்ப்பணி ஆற்றிவரும் ராமசாமி இலக்கிய வினாடிவினா, இலக்கிய வட்டம், தமிழிசை விழா நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். வருணின் இன்னொரு ஆசை இந்தியாவைச் சுற்றிப் பார்ப்பது. "அமெரிக்க தேசிய அணியில் விளையாடுவது குறிக்கோள்" என்று கண்ணில் சுடர்தெறிக்க வருண் சொல்லும்போது நமக்கும் விம்மிதம் ஏற்படுகிறது. அதையும் சாதிப்பார் இந்தப் பிடிவாதக்காரர்!
சித்ரா ரத்தினம், டாலஸ், டெக்சஸ் |
|
|
More
பறவைக்காதலர் விஜயாலயன்
|
|
|
|
|
|
|