Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2015 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நலம்வாழ | அஞ்சலி | ஹரிமொழி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
பொது
தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது
வீரத்துறவி விவேகானந்தர் வாழ்வில்
தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா
தெரியுமா?: ஜெயமோகனுக்கு 'இயல் விருது'
NRI செய்திகள்
படப்பார்வை: இன்டர்ஸ்டெல்லார் (Interstellar)
- யோகா பாலாஜி|ஜனவரி 2015|
Share:
புரியுதோ புரியலையோ நெறைய பேரு பேசிக்கிட்டு இருக்கற ஹாலிவுட் புதுப்படம் இன்டர்ஸ்டெல்லர். இந்தப் படத்த எடுத்த கிரிஸ்டஃபர் நோலன் (Christopher Nolan) தன் கம்பெனியோட பேரையே 'தலைசுத்தல் தயாரிப்பு' அப்படீங்கற அர்த்தத்துல Syncope Productions-னுதான் வெச்சிருக்காரு. அத வெச்சி நீங்க அவரு கதை சொல்ற பாணிய யூகிச்சிடலாம். படம் பாக்கறவங்க எல்லாரையும் அறிவாளிகளா நெனச்சி படம் எடுக்கறது இவருடைய பாணி.

படக்கதையச் சொல்றேன். ஜனங்க பழைய வயலும் வாழ்வும் நிகழ்ச்சிய ரொம்பக் கிண்டல் பண்ணி, நெலத்த சரியா கவனிக்காததால, பூமில பயிர் கருகல் (blight) வியாதி வந்து, பயிர் விளையாமப் போய்ட்ட நிலைமை. பூமியில வெளச்சல் கொறஞ்சு போயி, சோளமும் வெண்டையும் தவிர வேற பொரியலே இல்லாத ஒரு சோகம். அது தவிர, தூசிப்புயல் (dust storm) அடிக்கடி வந்து சுவாசிக்கற காத்தயும் பிரச்சன பண்ணிடுது. நெஜமாவே 1930களில் இந்த தூசிப்புயல் அடிக்கடி வந்து அமெரிக்காவுல பெரிய அட்டகாசம் பண்ணினதை நேர்ல பாத்த மக்கள புடிச்சி, அவங்ககிட்ட பேசற காட்சி எல்லாம் படத்துல காட்றாங்க. இயற்கை சீற்றங்களக் காட்டி, இப்ப இருக்கற தலைமுறைகள் பூமிய ஒழுங்கா பாத்துக்கலன்னா, இங்க வாழ முடியாம போற வாய்ப்புகள் நெருங்கிகிட்டு இருக்குன்னு மெரட்றாருன்னு சொல்லலாம்.

இந்தப் படத்தோட 'ரஜினி', கூப்பர் (Mathew Mcconaughey). நாசாவுல ராக்கெட் ஓட்டிகிட்டு இருந்தவரு, இப்ப விவசாயம் பாக்கற ஒரு தகப்பனார். மனைவிய இழந்து, சின்னப் பையன், குட்டிப் பொண்ணு, வயசான மாமனார்கூட வாழற குடும்பஸ்தர். கூப்பருக்கும் அவர் பொண்ணுக்கும் இருக்கற பாசப்பிணைப்பு படத்தோட முக்கிய அம்சம். அவங்க நெருக்கம், இந்தப் படம் விண்வெளி அறிவியல் சம்மந்தப் பட்ட படமா இல்ல தந்தை-மகள் பாசப்படமான்னு நம்ம ஊரு பாப்பையா, ராஜா எல்லாரையும் பேச வெக்கற ஒரு 'அபியும் நானும்' நெருக்கம். கூப்பரோட பழைய நாசா மொதலாளி பேரா. பிராண்ட் (Michael Caine) மறுபடி ராக்கெட் ஓட்ட கூப்புடும்போதுதான் படத்தோட கொழப்புர சயன்ஸ் பாகம் ஆரம்பிக்குது.

பூமி ரொம்ப நாள் தாங்காதுன்னு நாசாவுக்கு தெரிஞ்சி போச்சு. அதனால வேற எதாவது கிரகம் வசிக்க லாயக்கா (Habitability) இருக்கான்னு நாசா ரொம்ப வேகமா ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கும்போது, சனிக்கோள் (Saturn) பக்கத்துல புழுத்துளை (Wormhole) ஒண்ணை யாரோ உருவாக்கி இருக்காங்கன்னு கண்டுபிடிக்குது. அங்க நம்ம மக்கள் வாழ முடியுமுன்னு ஒரு நம்பிக்கைல, மூணு நாசா குழுக்கள், அங்கேயே மூணு வெவ்வேறு இடங்களுக்கு ஏற்கனவே போயிருக்கு. பூமியோ எதிர்பாத்ததுக்கு மாறா ரொம்ப வேகமாவே பாழாயிட்டுப் போறதால, அந்த இடங்களுக்கு இன்னும் ஒரு புதுக்குழு போயி, பாத்து, தகவலைப் பூமிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம். அதுக்குள்ள நம்ம பேராசிரியர் பூமில இருக்கற மக்கள் எல்லாரையும் விண்வெளி நிலையங்கள் மூலமா எப்பிடி அந்தப் புது கிரகத்துக்கு தள்றதுன்னு ஒரு புவியீர்ப்பு சமன்பாடு (Gravitational Equation) மூலமா கண்டுபிடிச்சுடுவாரு!
அப்பிடி மக்கள் அங்க போக முடியலேன்னா, அங்கயே புதுசா மக்களை உருவாக்க, நாசா பலதரப்பட்டவங்களோட மனிதக் கருமுட்டைகள வாங்கி வெச்சிருக்கு.
அந்த புதுக்குழு போற ராக்கெட்ட ஓட்டப் போறது நம்ம ஹீரோ கூப்பர். அந்தக் குழு பேராசிரியர் பிராண்ட் மகள், ரெண்டு விண்வெளி ஆராய்ச்சிக்காரங்க, இன்னும் ரெண்டு எதையும் தாங்கும் இதயங்கொண்ட ரோபோட்டுங்க. இதுல என்ன ஒரு டார்ச்சர்னு கேட்டீங்கன்னா, இவங்க எப்ப திரும்பி வருவாங்கன்னு-ஏன், திரும்பி வருவாங்களான்னே-தெரியாது.

மகள விட்டுப்போற கூப்பர்-அப்பு பூமிக்கு திரும்பி வருவாரா? எப்பிடி வரப்போறாரு? வந்தா பூமி இருக்குமா? பொண்ணு பாசம் இவர என்னவெல்லாம் பண்ண வெக்கும்? பொண்ணு, பய்யன் பூமில என்ன ஆகப்போறாங்க? ராக்கெட்ல போறவங்க என்ன ஆவாங்க? போற எடத்துல வில்லனுக இருக்காங்களா? பேரா. பிராண்ட் புவியீர்ப்பு சமன்பாட அதுக்குள்ள தீர்ப்பாரா? பூமிவாசிகள வெற்றிகரமா கிரகக்-கடத்தல் பண்ணுவாரா? இல்ல போறவங்க புது கிரகத்துல மனித முட்டையைத்தான் பொரிக்கணுமா?
IMAX 120 அடி வெண்திரையில தான் காணணும்! மீதி கதைய சொல்லக்கூடாதுன்னு கேக்கற கேள்விங்க இல்ல இதெல்லாம். இந்த படம் பாத்துட்டு வந்த பிறகுகூட இப்படித்தான் கேட்டுக்கிட்டே இருப்பாங்க.

கட்டுக்கதைனாலும், படத்துல வர்ற இயற்பியல் கோட்பாடுகள் நச்சுன்னு இருந்தாப் போதாது, சும்மா துல்லியமா இருக்கணுமுன்னு, நோலன் ஒரு பிரபல அமெரிக்க விஞ்ஞானி கிப் தோர்ன் (Kip Thorne) கூட வேல பண்ணாரு. அவரையே இந்தப் படத்துக்கு ஒரு தயாரிப்பாளராவும் ஆக்கிட்டாரு. இந்தப் படத்துல 'காலப் பயணம்' (Time Travel) சமாசாரம் நெறைய இருக்கும். ஒரு எடத்துல ஒரு மணி நேரமுன்னா, இன்னொரு எடத்துல 7 வருஷம் போயிருக்கும். ஆனா எல்லாத்துக்கும் விளக்கம் இருக்கும்.

மத்த நோலன் படங்கள் மாதிரியே, இந்தப் படத்த பாத்துட்டும், ஜனங்க கண்டிப்பா யாரு கிட்டயாவது படத்தப் பத்தி பேச நெனப்பாங்க, கதைல வர்ற சமாசாரத்த கூகிள் பண்ணுவாங்க... எல்லாத்துக்கும் மேல, படத்தப் பத்தி கொஞ்ச நாளைக்கு யோசிச்சிகிட்டே இருப்பாங்க. படம் நல்லா இருக்குன்னு சொல்றாங்களோ இல்லையோ, படம் நல்லா இல்லேன்னு சொல்லவே மாட்டாங்க. தல சுத்தரா மாதிரி எடுத்தாலும், யோசிக்க வெக்கற படம் எடுக்கறாரே, அதுதானே முக்கியம்!

யோகா பாலாஜி,
நேப்பர்வில், சிகாகோ
More

தெரியுமா?: பூமணிக்கு சாஹித்ய அகாதமி விருது
வீரத்துறவி விவேகானந்தர் வாழ்வில்
தெரியுமா?: சான் ஹோசேவில் தமிழ்த் திருவிழா
தெரியுமா?: ஜெயமோகனுக்கு 'இயல் விருது'
NRI செய்திகள்
Share: 




© Copyright 2020 Tamilonline