|
|
|
|
ரொம்ப காலத்துக்கும் மிந்தி ஒரு மண்டபம்! ஆயிரங்கால் மண்டபமாம் அது. ஆனா பல ஆயிரம் தூண்கொண்ட மரமாம் அது. அபாரமான ஒரு மரம் பல்லாயிரம் கெளைவுட்டு நெடுக வளர்ந்து ஒசந்துபோன ஆலமரம். நீள நீளமா கெளைவுட்டு கெளையில விழுது விழுதா பரப்பி கிளையும் விழுதும் போட்டி போட்டு கிளை நீள, விழுது ஊண விழுது ஊண கிளை நீளன்னு வளர்ந்து, கல் தட்டிப் போயி ஒவ்வொரு விழுதும் ஆனைக்கால் ஆனைக்காலா பூமில ஊணி, ஒரு மலை போத்துன எலைக் கூடமா நெறிய வளந்துது அந்த மரம். காலகாலமா நிக்கிது. ராஜா காலத்து மரம். எத்தனை ராஜாவோ? பாத்து விழுந்து போன ராஜாவெல்லாம் திரும்பிப் பாத்தப்ப பல நூறு ஆயிரம் வருஷம் ஓடிப் பெய்டுச்சாம். மரம் கல்லிச்சு கட்டிதட்டு முண்டு முண்டா பருத்து உருண்டு கவுத்துன கொடை மாதிரி இருந்து எலை எலையா பழுத்து விழுது விழுதா நின்ன கெளை எல்லாம் அப்படியே வளைஞ்சு பூமில கலந்து மண்டபமா பெரிய கொகை மாதிரி ஆயிப் பெய்டுச்சாம். ரெண்டாயிரம் மூவாயிரம் வருஷத்து மரம் இப்ப மரம் மாரியா நிக்கும்? கல்லுக் கொகை மாரி ஆயிப் பெய்டுச்சாம். இப்புடி கல்லு மண்டபம் எஞ்சாவுது இருக்காட்டேயப்பான்னானாம். போ! பெரிய மண்டபம் ஆயிரம் பதினாயிரம் தூணு! ரெண்டாயிரம் வருஷத்து விழுது எல்லாம் தூண் தான்னாக் கூட மண்டபத்தெத் தாங்கி நிக்கிற வயிரம் பாஞ்ச விழுது எல்லாம் ஆனைக்காலு ஆனைக்காலா நிக்கிதுவ! ஒவ்வொரு விழுதும் முட்டு முண்டி வளர்ந்து பூமியெப் பொளந்து முண்டு தட்டி வளந்து தாங்குது. இப்ப அதுதான் ஆலமரம்னு சொன்னாக் கூட யாரும் நம்ப மாட்டானுவ போ! ஏன்னா ராஜாவெல்லாம் விழுதுவுட்ட எடத்துல தாங்குகோல் போவப் போவ எப்பேர்ப்பட்ட மரமாயிருந்தாலும் உளுத்துப் போயி உசிரு உட வேண்டியதுதானா? இல்லியாங்க? விளுது வுட்டு கொடிக்கால் பரப்பி கெளை வீசி வளந்த இந்த ஆலமரத்துக்கும் உயிரு சுருங்க ஆரமிச்சப்ப மிச்ச ராஜாக்களெல்லாம் உளுத்துப்போன விழுதுல எல்லாம் தாய்க்கோல் சாய்க்கோல் எல்லாம் ஊணி தாங்கு வேலை பந்தல் மாதிரி நிறுத்திக் காப்பாத்துனானுவ. மாயம் மாதிரி இருக்கு.
செலப்பதிகாரம், மணிமேகலைன்னு ஒவ்வொரு தூணு, தொல்காப்பியம், அகத்தியம், பெரு நாரை, பெருங்குருகு, வளையாபதி, குண்டலகேசி, சீவக சிந்தாமணின்னு எத்தனை தூணு. ஆகா! கல்லுல மாணிக்கத்துலன்னு கடைஞ்செடுத்த வயிரத்தூணுக எல்லாம் ஒச்சம் இருந்தாலும் ரொம்ப மெச்சமானதாய்க் கோலுகளா இருந்தது எல்லாம்! காலம் கரஞ்சு கட்டியாப் போய்டிச்சி பாருங்க - விழுதுகளும் வுழுவுது. அப்புறமும் பெரிய பெரிய ராஜாக்கள்ளாம் விழுதெல்லாம் நீக்காமெ பக்கத்துலியே சாய்க்கோலும் ஊணாமே, மறுபடியும் தங்கத்தூணும் வைரத் தூணுமா நிறுத்துனாவளாம். என்னா பண்றதுங்க? மரம் இப்ப மண்டபமாகி, மண்டபத்து காலெல்லாம் தூணாகி, கோலாகி, அப்புறம் கல் மண்டபமா ஆயிருச்சி.
இருபதாயிரம் வருஷம் கழிஞ்சு பெய்டுச்சாமே! அதுக்கும் அடுச்சிக்கிருவாளே? மண்டபம் தங்கம்ங்கிறான் ஒருத்தன்! இல்லெ வெள்ளீங்குறான் மருதுபய! அதெல்லாம் கெடையாது இது மரமல்ல, இது கொகைங்கிறான் இனிமே ஒரு பய ! மண்டபமும் கெடையாது மரமும் இருந்தது கெடையாது. போற போக்குல பரதேசிக கூடி மடம் கட்டிருக்கானுவ, இதுல ஒண்ணுமில்லேங்கிறான், இன்னொரு தப்புலிப் பய! மண்டபம் என்னமோ பெருசிதான். ரொம்ப அழகுதான். யாரும் பண்ணுனதுமில்லெதான், தானா உண்டானதுதான். ஆனா இதுக்கு உசுரு இல்லங்க, அட...
பத்தாயிரம் வருஷமா எந்த மரம் நிக்குமாம்? பயலுவளுக்கு அதான் பெரிய்ய கொண்டாட்டமாய் போச்சு. கல்லும் மண்ணும் தோணாத காலத்துலயே கட்டுனதுன்னு எவனோ சொல்லி வைக்ய அவனவனுக்கும் மயக்கம் தாங்கல .மரம இப்பமும் மரம் மாதிரியும் கோயில் மாதிரியும் அரண்மனை மாதிரியும் காச்சி குடுக்குது. அஞ்ச அஞ்ச ஜனங்க பூந்து குடும்பம் நடத்துவொ. ஒரு ஊரு ஜனம்ல்லெ பல ஊரு பலசாதி கூட்டம். எடையனுவ தொடையனுவ கடையனுவ பாப்பானுவ கூட்டம் திமிறி கிட்டு பிரிஞ்சு மண்டபத்துக்குள்ள பொழைக்கிதுவல்லே? எத்தினு பொசலு, எத்தினி சூறக்காத்து சொழலு, வெள்ளம், தீன்னு எத்தினி விக்கினம் வெள்ளத்துல புடுங்கீட்டு அரிச்சி ஓடிப் பள்ளமாப் போனப்பவும் ஆல மண்டபம் அப்படியே நிக்கிதே! எத்தனை பேரு வெறகு தறிச்சி, எத்தனை பேரு கெளை வெட்டி, உத்திரம் பண்ணி, ஊடு கட்டி, அடிமரத்தெக் கூறு போட்டு தேருக்கும், சாமி ரதத்துக்கும், ஊஞ்சலுக்கும் எத்தனை விழுதெ வெட்டிக் கொண்டு போனானுவ? ராஜான்னு வந்தவன் தெரியுமா? ஆனா, மரம் சரியும். ஆனா வுழாது. வேர் அறுப்புண்டு போகும். சாவாது. நாப்பது தலமொறை பாத்தாச்சு. அப்புறமும் மரம் சாகலெ. மரம் எல்லாத்தியும் எதுத்து நின்னுது! கல்லா, இது மரமான்னு தெரியாத இருண்ட காலம் வந்தது. ஒரு காலத்துல ராஜாவும் ஆயிரம் அக்குரோணி சேனைகளும் இந்த ஆலமண்டபத்துக்குள்ற நின்னு எளைப்பாருனாங்களாம். வந்த வந்த ராஜாவெல்லாம் மரத்துக்கு நெழலா புதுசா புதுசா பச்சுபச்சுன்னு வுழுது விட்டானுவ தெரியுமா? ஆதி சிவனே இந்த நெழல்ல நின்னவன் தானாம். செவனுக்கு மிந்தியும் மரம் இருந்துதாமே! பயலுவ மெய் மறந்து பொலம்புறானுவளே! இருக்காதா பின்னே?
மரம் கல்மண்டபமா ஆக முந்தி மரத்துல நின்ன வயிரச் சிற்பம், தங்க வேலைப்பாடு, நவரத்ன, நவபாஷாண, நவ மூலிகை, கலைச் செதுக்கு எல்லாத்தையும் அவனவன் இஷ்டத்துக்கு மாத்தி திருகி வெச்சானுவளாம். அப்புறம் திருடிக் கொண்டு போனவனுவளை எவனும் கேக்கவேயில்லையாம். ரத்தினத்தையும் பொன்னையும் வெள்ளியையும் வெட்டி மண்டபத்து உருவத்தையே இடிச்சி, அள்ளிக் கொண்டு போனவனுவளையும் யாரும் ஒண்ணும் தடுக்கவேயில்லியாம். ஆலமண்டபமாச்சே.
ஆலமண்டபம்! புழுதித் தோட்டம். அப்படியே நிக்கிதாம். தூணுங்கூட இடிஞ்சி நிக்கிது. அப்பப்ப ஆழ்வானுவ நாயன்மாருங்கன்னு மண்டபத்துக்குள்ள விதானத்தை தாங்குறாப்ல நெறைய தேக்கந்தூணுகளெக் கொண்டாந்து நட்டாலும் தூணு நிக்கலியே! மண்டபம் சாஞ்சு கோணலா அஞ்சஞ்சா பொளந்து கிட்டு நிக்கிது அப்படீங்கறதெ யாரும் ஒண்ணும் பண்ணல. சமணனுவ புத்தனுவ சோனகன்க கிரேக்க் யவன் ரோமனுங்க சீனமிலேச்சனுவன்னு எத்தினொயோ பயலுவ வந்து மண்டபத்துலதான் போனானுவ! ஆனா மரத்து உசிரு பெய்கிட்ட தானே இருக்கு? மரம் உசிரவிடும்னு தோணுறப்ப எல்லாம் எவனாவுது கவிஞனா வந்து மண்டபமே நில்னு பாடி வெச்சுட்டுப் பெய் கிட்ட இருந்தானுவளா? கவி வாக்குல மண்டபத்துல உக்காந்து வெச்ச கண்ணு வாங்காம மண்டபத்தப் பாத்து அசந்து விதானம் எல்லாம் முறுக்கிகிட்டு புதுவிதானமா இறுதிக்கும். கெளை எல்லாம் முறுக்கி எலை எல்லாம் பந்தல் போல இருந்த மேல் விதானத்து கெளை எல்லாம் வயிரம் பாஞ்சு இறுகிப் போயிருந்ததெப் பாத்து ஆச்சரியப்படாத ஆளு யாரு? ராஜா யாரு? அட ஆராய்ச்சி பண்ணி முடியிற விஞ்ஞானமில்லே அது! இப்ப மண்டபமா மரமாயிருந்து மரம் மண்டபமா இறுகி அது மேல கல்லும் வெள்ளியும் கட்டியும் உலோகமுமா வந்தவன் போனவன் எல்லாம் வரி வரியா ஏத்தி எழுதி ஆகா ஓஹோன்னு சங்கம் சங்கமா பொளந்து கல்லு, காரை, தகரம், தங்கம்னு பேதமில்லாமெ வெச்சுப் பூசிக்கட்டி இறுக்கி வெச்சானிவ! ஆசை யாரெவிட்டுது? அது மரமா, மண்டபமா? |
|
அட இதென்ன மண்டபம் இப்புடியாச்சேன்னு யாரும் யோசிக்கவேயில்லை. துலுக்கனுவ வந்தானுவ! மண்டபத்துல ஏறிக் கிட்டானுவ! துராணிய ஜனம் வந்துது. பட்டாணிய்யனுவ வந்து பாத்ததுல கடக்கால் போட்டு நோண்டி குழிக்குள்ளே ஒளிஞ்சுக் கிட்டானுவ. அப்புறம் பல ஜாதி மிலேச்சனுவ வெள்ளக்காரனுவ வந்தானுவ. பாருங்க. அவனவனும் வாசல் வெச்சான். அவனவனும் கதவு போட்டான். கோயிலா இருந்த மண்டபம் வீதியா ஆச்சு. ஜனம் புதுசு புதுசா ஆசையோட மண்டபத்துமேல ஏறி ஆரக்கட்டுச்சு. கொடி ஊணுச்சு! மேல் கட்டு கட்டி அதுமேல மாடியும் கட்டி மண்டபம் மேல கோட்டை கட்டி வெள்ளைக்காரன் டச்சுக்காரன் எல்லாம் துப்பாக்கி பீரங்கி எல்லாம் வெக்ய ஓட்டை வெச்சு பிளவு கட்டி கொத்தளம் ஆக்கினாலும் மண்டபம் கவிதையால நின்னிது.
கால வித்யாசம் மண்டபம் இடிஞ்சு ஒரு கல்லு சிக்கி நாலு கல்லு மாட்டி ஒண்ணெ ஒண்ணு தொடுத்துகிட்டு நிக்கிது. எப்புடி இன்னும் இது விழலெ! ஏன் விழாமெ எப்படி நிக்க முடியும்னு ஸ்தபதிலருந்து கட்டிட மேஸ்திரில ஆரமிச்சு சிற்பி வரைக்கும் ஆச்சரியப்பட்டு நிக்கிறாங்க.
இன்னும் மண்டபம் நிக்கிது. இனிமேயும் மண்டபம் நிக்கணும்னு ரொம்பப் பேருக்கு ஆசை! பாரதி, புதுமைப்பித்தன்னு ரெண்டு அசடு. ஓட்டை ஒடசல் மேல அபாரமா துணிச்சலா புதுவூடே கட்டிப்புட்டாங்க. இடிசல் குழியில புது அஸ்திவாரம் போட்டான் பாப்பான். சுதந்திரம் வேணும்னு கர்ஜிச்சான். அட பாப்பானே! வெள்ளைக்காரன் லேசா அசந்துதான் போனான். ஜெர்மன்காரன், போர்ச்சுகீஸ்காரன்னு வந்தவன் எல்லாம் அசந்து அப்படியே போனான். ஆலமண்டபம் மேல இருந்து சரிஞ்சுது! ஆனா இப்பமும் விழுதே மரமா புதுசா புது ஆலம்விதை உள்ளருந்து முளச்சு பழைய மண்டபத்து மேலேயே வேரு சொழட்டிகிட்டு இப்ப ஓடியிருக்கு. புதுவேரு கம்பி கம்பியா கட்டடத்தெ இறுக்கிப் புடிச்சுக்கிட்டு மேலேயே புதுமரம் விழுதுவுடுது. இப்ப வேரெல்லாம் விழுதா ஊணி புதுசா பரப்பவுடுது. ஜனம் புதுசு புதுசு வம்சாவளிவுட்டுக் கெளம்புது. ஆனாலும் ஆல மண்டபம் ஒருநாள் வுழும். யாராவது ஒரு கல் எடுத்தா வுழும். வுழுவாத மரம், மண்டபம்னு ஏதாவது இருக்கா என்ன?
வழிப்போக்கனுங்க வந்து வந்து ஆல மண்டபத்தை பாத்து விழுது எது? வேரு எதுன்னு தெரியாம கட்டடம் ஏது? கல் கோயில் எது? மூலக்கவிதைச் சாரம் எதுன்னு புரியாமெ கலந்து கட்டு எடுத்து ஆடி இன்னமும் ஒரே கூச்சல்தான் வாழ்க! ஒழிக! கூப்பாடுதான். ஒர்த்தனெ ஒர்த்தன் வெட்டிச் சாப்பிட இப்பமும் எவ்விக் குதிச்சுத்தான் பாக்குறான்.
ஏனோ மண்டபம் குப்புற விழல்லெ! பாதை நீண்டு கெடக்கு. மன்னனுவ ராஜாதி ராஜனுவ மனுஷங்களா வந்து மண்டபத்துல இன்னமும் சேர்றாங்க. பிச்சமூர்த்தி, ரசிகமணி, நகுலன், மணி, க.நா.சு., கு.ப.ரா.ன்னு ஏராளம் பைத்தியங்கள் மழையில ஒதுங்குது. மண்டபத்துல நூறு நூறு வருஷமா கழிஞ்ச குப்பை, மக்கள் மேல மேல சின்னச் சின்னப்பூச் செடி, சூரியன் சூரியனா பூ மலருது. மேல மேல காலம் கழியிது. இன்னும் புதுப் புது திராட்சை பழங்களா கனியிது மண்டபம். இன்னும் இன்னும் சரியுது! மண்டபத்து மேல இனியும் கொடி கொடியா புதுக்கொடிகள் முறுக்கிட்டு மேல படருது! நூறு நூறு வருஷமா கொடியோடு படர்ந்த பூங்குலை கனம் கனமா தொங்குது. ஆரஞ்சு பெருசு திராட்சைப் பழங்கள் குலைகுலையா தள்ளுது. மண்டபத்துக்குள்ள இடிசல் தரைப்பரப்புல ஜனங்க நட்ட நாடோடிக் கிழங்குகள் சூரியன் பழய மண்டபத்துக்குள் வந்து கையெ நீட்டி கிழங்கு சர்க்கரை வள்ளிக் கவிதைக் கொடிகளை எட்டித் தொடும்போது பக்கத்தில் சுண்ணாம்புத் தரையில் வளர்ந்து ஓங்கிக் கிடக்கும் நாட்டுச் சுண்டைச் செடிகளைப் பார்த்து ஆச்சர்யம் தான்! விட்டத்தில் படர்ந்திருக்கும் புடலங்கொடி கதைகள் தன் பாம்பு போன்ற நீண்ட சிறுகதைகளை நீட்டித் தொங்க விட்டிருக்கும் சந்தோஷம் பார்த்தால்தான் புரியும். சிறுகதைகளும் நூற்றாண்டுப் பாம்புகளாய் மண்டபத்தில் தொங்கும் கனவுகளாய் மாதுளஞ் செடிகள் மண்டபத்தின் கற்களை அணைத்துக் காத்திடும் விந்தை இலக்கண ரம்பப் பற்களை ராவுகிற கட்டிடத் தச்சர்களுக்குப் புரியாது. கனவுகளைக் கழுதைகளாய் மேய்க்கும் இலக்கணக் கொல்லர்களும் மேதாவிக் கொம்பர்களும் கட்டிடத்தை இடித்து மண்டபத்தை உடைத்து புதுசாய்க் கட்டத் துடிக்கும் பேச்சு வெற்றோசையாய், ஒலித்து முகடேறும். ஆனால் அவர்களுக்கு தங்களுக்கு முன்பே இந்த மண்டபம் வெறும் மண்ணில் உயிர்த்த ஆலமரம் என்பது தெரியவேயில்லை. நூற்றாண்டுகளாய் மண்டபம் ஊசி நுனியில் நிற்குது என்று சொன்ன கவிஞர்களின் ரத்தம் மண்டபத்தின் செங்கல்களில் ஊறிக்காய்ந்து சுண்ணாம்பாகிக் சுவர்ந்து விட்டதும் தெரிவதேயில்லை. மண்டபம் கூடக் கனவு காணும் என்று தெரியாத மனுஷியர்களின் கூட்டம் தெருப் பொறுக்கிகள், விபசாரிகள், குருவிக்காரர்கள், கனவுகளைச் சுருளில் சுருட்டும் கவிகள் கூச்சலிட்டுப் பாடும் வெங்கப்பயல்கள் என்று மண்டப ஆலமரத்தில் கூட்டம் எப்போதும் திமிறத் திமிற மண்டபம் குண்டும் குழியுமாய் நூற்றாண்டு மழையில் ஓயாமல் நனைந்து குதிர்ந்து கொண்டேயிருந்தது.
நூற்றாண்டுகள் செத்த அந்த ஆலமண்டபம் இப்போது ஊறி நைந்து உதிரக் காத்திருந்தும் கூட உயிருள்ள விழுதுகள் கட்டியணைத்திறுக்கிப் பிடித்திருப்பதாலும் உயிருள்ள கவிதைத் தூண்களாலும் சிறுகதைமான்களாலும் பூக்குலைகள் சரிய கனிக்குலைகள் தொங்கப் புதிய வண்டல் படிய, புதிய கலை மண்டபமாய் எழுந்து நின்றாலும் மண்டபம் பழசுதான். புதுசானாலும் புதுசு போலவும் இல்லாத புதுசு. பழசு மேல புதுசாய்ப் பெய்ட்டு.
ஒருநாளு வளைஞ்சு போற பாதையில ஒரு கொழந்தை எஞ்சருந்தோ வெளியாடிகிட்டே இஞ்ச வந்துரிச்சாம். ஆலமண்டபம் புழுதி சரிய பழசெல்லாம் உதுர வார்த்தையெல்லாம் கொட்ட மண்டபம் இருந்தது. கொழைந்திக்கி ஆச்சரியமா பொங்குது. ஆனா அது மணல்ல கட்டுற பொந்து வூடு மாதிரி கிளிக்கூடு மாதிரியே இருக்கு. அட பெயகளான்னு அது நெனச்சிகிச்சாம். ஒரே கும்மாள குதியாட்டமா இருக்கு. தூணு தூணா எறங்கி இப்பவும் பச்சை எண்ணை பூசின ஆலம் இலைகளோட மண்டபம் ஆ! அதுக்கு கொஞ்சி விளையாடலாம் போல இருக்கு.
கொழந்தையக் காணும்னு கொழந்தையோட அப்பா, அம்மா எல்லாரும் வந்து அஞ்ச இஞ்ச தேடி அலையிறாங்க. ஆல மண்டபம் வானத்துக்கும் பூமிக்குமா மாறிக்கிது. உள்ள ஏகப்பட்ட கலைத்தூண்கள், பூஞ்சோலை மாதிரி பந்தல் கணக்கா வுழுது வுட்டு வளைவு வளைவா ஆரங்கட்டி தொங்கவுட்டு தேர் மாதிரி இருக்கு. உள்ள ஏராளமான இடிசல் வழியா சூரியன். ஜனங்க ஜீவிக்கிறதால புகை கெளம்புது. கொழந்தயக் காணும்! பேரு சொல்லிக் கூப்புட்டுக்கிட்டே போறாங்க. அப்பா வெளிய போயி தேடிக்கிட்டே பெய்ட்டாரு.
"அம்மா! நா.. இங்கருக்கேன்" - குழந்தை கூப்புடுது.
"இடிசல் தேர்வானம் பாத்த மண்டபத்துல எஞ்ச போயி ஒளிஞ்சிக்கிட்டா?"
"பாழடஞ்ச மண்டபம். ஜாக்கிரதையா போங்க."
"இருட்டு, வெளிச்சம், உசுரு, சாவுன்னு எல்லாம் இஞ்ச சர்வ சாதாரணம். கொழந்தை எஞ்சயும் பெய்ட மாட்டா தேடு."
"அம்மா.. நான் இஞ்சருக்கேம்மா! வா.. வா..."
தேடுறாங்க... தேடுறாங்க.. கொழந்தையக் காணவே காணுமாம். தேடுதேடுன்னு தேடுறாங்க. எஞ்சயாவுது தண்டினாப் போச்சு. மண்டபம் இடிஞ்சு அப்படியே கொட்டிப் பெய்டும்.
"அம்மா நான் இஞ்சருக்கேம்மா வாவா!"
"கொழந்தை கூப்புட்றாளே ஆனா காணுமே"
பல்லாயிரம் வருஷமா நிக்கிற மண்டபம் ஆல மண்டபம்; கொழந்தை காணாம பெய்ட்டு! கதறி அழுறா அம்மா! நாமளும் தேடுவமே! எதுனாச்சும் அம்புடாய்மயா பெய்டும்? எத்தனை குயக்கம், எத்தன தத்துவம், எத்தன கவிதெ. எத்தனை இதிகாசம், சங்கப்பாட்டு. எத்தினி சிறுகதை. எத்தினி கலைஞன். எத்தினி கலையும், கடவுளும்? இஞ்ச தாய்க்கோலா தூணா பெய்ட்டாங்க! இதுக்கு கொழ்ந்தையுமா வேணும்? தெனம் கொழந்தையோட அம்மா வந்து ஆல மண்டபத்து வாசல்ல ஒக்காந்து கிட்டு ஒப்பாரி வச்சு அழும்.
"தங்கமுன்னு சொல்லி ஒன்ன தட்டாம வளத்தேனே தாயீ தமிழுன்னு சொல்லி - ஒன்ன தூக்காம தூக்குனேனே - ஆயீ போனேன்னு சொல்லி - ஒன்ன வாயேன்னு அழக்யலியே மாயீ"
"அம்மா நா இஞ்சருக்கேனே!"
கொழந்த கூப்டுக்கிட்டே இருந்தது. ஆனா யாரும் பாக்கவே முடியலியாம். ஆல மண்டபத்துல கொழந்தையோட கொரல் மட்டும் நூற்றாண்டுகளுக்கு அந்தப் பக்கத்துலருந்து கேக்குதாம். ஆயிக்காரி தேடிக்கிட்டே இருந்தாளாம்.
அந்த மாதிரி இருக்கையில ஒருநாளு அந்தப் பக்கமா ஒரு பரதேசி வந்தப்ப அந்த அம்மா அழுதுகிட்டு ஒப்பாரி வெச்சுக்கிட்டு இருந்ததெப் பாத்தானாம். ஏம்மான்னு கேட்டானாம்.
"கொழந்தயத் தின்னுடுச்சுய்யா இந்த ஆல மண்டபம்"ன்னு புலம்புனாளாம் அந்த அம்மா.
ஒடனே அந்த அம்மா மொகத்தெப் பாத்து, "என்னமா நீயி! இதோ இருக்கே ஒங்கொழந்தை. பாக்கலியா. இதுகூடத் தெரியல்லிய்யான்னானாம் பரதேசி.
திரும்பிப் பாத்தாளம் ஆயிக்காரி.
கொழந்தை தன்னோடரெண்டு கையையும் விட்டத்துல குடுத்து விதானத்தெத் தாங்கிகிட்டு ஆலமண்டபத்தோட இன்னொரு விழுதா நிக்கிதாம்! அப்படியே வாரி அணைச்சுக்கிட்டு ஆனந்தக் கண்ணீர் உட்டாளாம் ஆயிக்காரி.
"அம்மா.. நீயுமா வந்துட்டே"ன்னுதாம் கொழந்தை!
ஆயும் தாயும் தூணா நிக்கிறாங்களாம்.
தூணு தூணா, விழுது விழுதா உயிர் உயிரா நிக்கிதாம். ரகசியம் ரகசியமா ஆலமண்டபம் உதுந்து கிட்டே நிக்கிதாம்.
தஞ்சை ப்ரகாஷ் |
|
|
|
|
|
|
|
|