|
டிசம்பர் 2014: வாசகர் கடிதம் |
|
- |டிசம்பர் 2014| |
|
|
|
|
நவம்பர் இதழில் ஒபாமா தீவு பயணக் கட்டுரை படித்தேன். இதுவரை மார்த்தாஸ் வின்யார்ட் பற்றிய விபரம் தெரியாதவர்களுக்கும் தெரியும்வண்ணம் எழுதியுள்ளார் சோமலெ. சோமசுந்தரம். பயணக் கட்டுரை எழுதுவதில் தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொண்டவர் நெற்குப்பை சோமலெ. செட்டிநாட்டுத் தமிழுக்குச் செழுமை சேர்த்தவர். அவரது இளவலின் எழுத்து, தந்தை எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பதற்கு ஒரு சோற்றுப்பதம்.
தெரியுமா பகுதியில் எனது அறிவுசார் நண்பரும், எங்கள் மாவட்டம் சார்ந்தவருமான மேரிலாண்ட் துணைச் செயலாளர் டாக்டர். ராஜன் நடராஜன் தமிழகம் மற்றும் புதுவையில் 1330 கிராமங்களைத் தேர்வு செய்து, திருக்குறள் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் திருக்குறள் அறிவுத் தலம் உருவாக்க அழைப்பு விடுத்துள்ளார். தென்றலில் வந்த இதன் முதல் எதிரொலியாக எங்கள் அரிமளம் பகுதியில் "அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு" என்ற வள்ளுவப் பெருந்தகையின் அடியொற்றி, "அகரமுதலி" பற்றிய மொழியார்வத்தையும் ‘ஆதி பகவன்’ போன்ற இறையாண்மை தத்துவத்தையும் பிரதிபலிக்கும் வகையில், நான் இந்தியா திரும்பியதும் முயற்சியில் ஈடுபட உள்ளேன். சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் கிராமத்திலும் வேறொரு திருக்குறள் கிராமத்தை உருவாக்கிட ஒக்கூர் ஊராட்சித் தலைவர் பொறியாளர் கே. அருணாசலம் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறேன்.
அரிமளம் தளவாய் நாராயணசாமி, ஹூஸ்டன்
*****
தென்றல் நவம்பர் இதழில் ஆஷ்ரிதா ஈஸ்வரன் நேர்காணல் நன்றாக இருந்தது. ஒவ்வொரு இதழிலும் வேறுபட்ட பல பிரபலங்களை அறிமுகப்படுத்தும் உங்கள் இதழைப் பாராட்டுகிறேன். 13 வயதில் ஆடத் துவங்கி, பல வெற்றிகளைச் சந்தித்து, தற்போது தன்னைவிடப் பெரியவரை வென்றது உண்மையிலேயே பெரிய சாதனைதான். அவர் மென்மேலும் பல வெற்றிகள் பெற்று, அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித்தரட்டும் என மனமார வாழ்த்துகிறேன்.
கே.ராகவன், பெங்களூரு, இந்தியா
***** |
|
நவம்பர் மாத தென்றல் படித்தேன். பாரம்பரியமிக்க இதழ்களை மிஞ்சும் வகையில் தென்றல் இதழின் தமிழ்ப் பணியையும் அதன் சிறப்பையும் கண்டு வியந்தேன். கடல்கடந்த தங்களின் தமிழ்த்தொண்டு மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.
ரத்னசபாபதி தங்கசாமி, ப்ளசன்டன், கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|