Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2005 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | நிதி அறிவோம் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | அமெரிக்க அனுபவம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | விளையாட்டு விசயம் | வார்த்தை சிறகினிலே
Tamil Unicode / English Search
நலம்வாழ
பறவைக் காய்ச்சல் பரவுகிறது
- மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன்|நவம்பர் 2005|
Share:
Click Here Enlargeஉலகம் இருக்கும் இருப்பில் இயற்கையின் சீற்றங்களுக்குப் பஞ்சமே இல்லை. கடந்த ஆண்டில் ஏற்பட்ட சுனாமியைத் தொடர்ந்து காட்ரீனா, ரீட்டா முதலிய சூறாவளிகள், காஷ்மீரில் சென்ற வாரம் ஏற்பட்ட நில நடுக்கம் என்று பல்லாயிரம் உயிர்களைக் காவு வாங்கி விட்டது இயற்கை. போதாக் குறைக்குத் தீவிரவாதம் மற்றும் அதைச் சார்ந்த பிரச்சினைகள். இவை எல்லா வற்றையும் தூக்கிச் சாப்பிடக்கூடிய அளவுக்கு உயிர்ச் சேதம் ஏற்படுத்தத்தக்க ஒரு காய்ச்சல் இந்த வருடம் நம்மைத் தாக்குமா அல்லது இன்னும் சில காலம் கடந்து வருமா என்பதே இன்றைய அரசாங்கங்களையும் மருத்துவ ஆய்வாளர் களையும் பிடித்து உலுக்கும் கேள்வி.

இன்·ப்ளூவன்சா (அல்லது சுருக்கமாக ·ப்ளூ) என்பது ஒரு சாதாரண வைரஸ் காய்ச்சல். ஆண்டுதோறும் வரி கட்டுதல், பல் மருத்துவரிடம் செல்லுதல் போன்ற ஓர் இம்சை! இரண்டு அல்லது மூன்று தினம் ஜலதோஷம், தொண்டைக் கட்டு போன்ற அறிகுறிகளில் ஆரம்பித்து, லேசான காய்ச்சல் ஏற்பட்டு, பசியின்றி, தலை வலித்து, அடித்துப் போட்டது போலச் செய்துவிடும். நான்காவது நாள் எல்லாம் சரியாகி வேலைக்கோ, பள்ளிக்கோ திரும்பிவிடுவோம். குழந்தைகளையும், முதியோர் மற்றும் இதய, நுரையீரல் நோய் உடையவர்களையும் இது கடுமையாகத் தாக்கலாம். இதனால் நிமோனியா என்று சொல்லக் கூடிய நுரையீரல் அழற்சி வந்து இறப்பவர்கள் பெரும்பாலும் முதியோர் மற்றும் மற்ற உபாதைகளால் நலிந்தவர்கள் மட்டுமே.

சுமார் இருபது முதல் நாற்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை இது உலக அளவில் பரவலாக சற்றே கடுமையாக ஏற்படக் கூடும். இதை மருத்துவ ரீதியில் pandemic என்பர். சென்ற நூற்றாண்டில்
1918-ம் ஆண்டு இந்த நோயினால் கடுமையான உயிர்ச்சேதம் ஏற்பட்டது. உலகம் முழுவதிலும் அந்த ஆண்டு ஐம்பது மில்லியன் மக்கள் ·ப்ளூ கண்டு இறந்தனர். இந்தியாவில் மட்டுமே
கிட்டத்தட்டப் பதினைந்து மில்லியன் மக்கள் மாண்டனர். முதலாம் உலகப் போரில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையைவிட இது பல மடங்கு அதிகம்!

இதற்குப் பின் இப்படி கடுமையாக ·ப்ளூ ஏற்பட்டது 1968-ம் ஆண்டு. அதற்குப் பிறகு முப்பத்தேழு ஆண்டுகள் ஓடிவிட்டன. சொல்லப் போனால் சென்ற பத்து ஆண்டுகளிலேயே அடுத்த சுற்று
வந்திருக்க வேண்டியது, தப்பித்தோம்.

·ப்ளூ வைரஸ்கள் பொதுவாக பறவை களின் உடல்களில் வாழ்வன. பறவைகள் ஆண்டு தோறும் இடப் பெயர்ச்சி (migration) செய்யும் போது இவை உலகின் பல இடங்களுக்கும் பரவுகின்றன.

வெப்பநிலை குறைந்து லேசான குளிர் ஏற்படும் சமயம் இந்த நோய் ஏற்படச் சரியான காலமாக அமைகிறது. இந்த வைரஸ் திடீர் திடீரென தன் உடலில் உள்ள புரத அமைப்பை சற்றே மாற்றிக்
கொள்ளும் சாமர்த்தியம் படைத்தது. இதனால் தடுப்பூசி போன்ற விஞ்ஞான முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும் இந்த வைரஸ் கிருமியை முற்றிலும் ஒழித்து விட முடியாது. இதனால் தான் இது ஆண்டு தோறும் நம்மை இம்சைப்படுத்த வந்து விடுகிறது. ஓரளவிற்கு நம் உடலின் எதிர்ப்புச் சக்தியினால் இதை நாம் எதிர்ப்பதால்தான் இது நம்மை ரொம்பவும் படுத்தாமல் விட்டுவிடுகிறது. அதே
காரணத்தினால் தடுப்பூசிகளும் ஒவ்வோர் ஆண்டும் புதிதாகத் தயாரிக்க வேண்டி யுள்ளது. கூட்டிக் கழித்துப் பார்த்தால் இது ஒன்றும் அவ்வளவு பெரிய பிரச்சினையாகத் தெரியவில்லையே என்று
தோன்றுகிற தல்லவா? மேலே படியுங்கள்!

ஹாங்காங் நகரம் 1997-ம் ஆண்டில் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சீனர்களிடம் சென்றது. அதே ஆண்டு, அந்த நகரத்தைச் சார்ந்த பல கோழிகள் ஒரு வினோதமான ·ப்ளூ ஜுரம் கண்டு இறந்தன.

இது மனிதர்களை பாதிக்கும் என்று ஒருவரும் கனவில் கூட எண்ணவில்லை - அந்த வருடம் மே மாதம் வரை! மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் அந்த நகரின் ஒரு மருத்துவ மனையில் இருமலோடு காய்ச்சலுடன் சேர்க்கப்பட்டான். பல்வேறு நுண்ணுயிர்க்கொல்லிகள் (antibiotics) மற்றும் வென்டிலேட்டர் எனப்படும் காற்றூட்டும் கருவி பொருத்தியதையும் மீறி, சேர்த்த ஆறாம் நாள் அவன் இறந்து விட்டான். அவனுடைய மூச்சுக் குழாயில் சேர்ந்திருந்த திரவத்தைச் சோதித்த போது ஆய்வாளர்களே அதிர்ந்துவிட்டார்கள். ஆம். H5N1 என்று பெயரிடப்பட்டு கோழிகளைக் கொன்ற அதே வைரஸ் கிருமிதான் அந்தச் சிறுவனையும் கொன்றுவிட்டது.

ஏதோ அது அவனுக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டம் போலும், விட்டுவிடலாம் என்று முதலில் அசட்டையாக இருந்து விட்டார்கள் -மேலும் பதினேழு பேர் அதே அறிகுறிகளுடன் மருத்துவ மனைகளுக்குச்
செல்லும் வரை. அவர்கள் அனைவருக்கும் அதே H5N1 வைரஸ் பாதித்து இருந்தது. அவர்களில் ஆறு பேர் விரைவில் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் பலர் அந்தத் தீவில் உள்ள கோழிச் சந்தைக்கு அண்மையில் சென்றிருந்தவர்கள்! அவ்வளவுதான். உலகின் பொதுநல மருத்துவ நிபுணர்கள் பலர் ஹாங்காங் நகரில் குவிந்தனர்; தீவிலுள்ள வயல்களிலும் சந்தைகளிலும் இருந்த கடைசிப் பறவை வரை கொன்று விடுமாறு அரசாங்கத்திடம் முறையிட்டனர். பலன் - 15 லட்சம் பறவைகள் அழிக்கப்பட்டன; H5N1 வைரஸ் கிருமிகளை அதன் பின்னர் காண முடியவில்லை. திடீரென்று ஒரு நாள், 2001-ம் ஆண்டு, மீண்டும் கோழிகள் அழிய ஆரம்பித்தன. ஆனால் இம்முறை வைரஸ் தொற்று சீனாவைச் சேர்ந்த குவங்டோங் மாநிலத்திலிருந்து வர ஆரம்பித்தது. வேகமாகப் பரவி தென் கொரியா, ஜப்பான், தாய்லாந்து மற்றும் வியட்நாம் நாடுகளில் பல பறவைகளை அழித்தது.

நோய்வாய்ப்பட்ட பறவைகள் விரைவிலேயே இறந்து விடுவதால், இம்முறை பறவைகளின் பயணத்தினால் இது பரவுவதில்லை என்றும் உயிருடன் இருக்கும் பறவைகளை வைத்து நடத்தப்படும் சந்தைகளினாலேயே பரவுகின்றன என்றும் இப்போது நம்பப்படுகிறது. இதுவரை பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட அறுபது. மனிதரிடமிருந்து மற்ற மனிதருக்கு

இதுவரை இந்தக் காய்ச்சல் தொற்றியதாக எந்தத் தகவலும் இல்லை. மருத்துவர்களும் ஆய்வாளர்களும் ஒருமித்த குரலில் இப்போது தெரிவிப்பது இதுதான்: பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவும் வாய்ப்பு உண்டா என்பதை விட எப்போது பரவும் என்பதே கேள்வி. இதற்குக் காரணம் இந்த வைரஸின் சடுதிமாற்றம் (mutation) செய்யக்கூடிய சக்தி தான்.

பறவை ப்ளூ பறவைகளுக்கும் மனித ·ப்ளூ மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பது தெரிந்த ஒரு உண்மை. விவசாயப் பண்ணைகளில் வாழும் வேறு சில விலங்குகளை எடுத்துக் கொள்வோம்.

குறிப்பாகப் பன்றி. பன்றிகள் மேற்சொன்ன இரு வைரஸ்களாலும் எளிதில் தாக்கப்படலாம். ஒரே சமயத்தில் இரண்டு வைரஸ்களும் தாக்கிவிட்டால், இவை தமக்குள்ளேயே reassortment என்று
சொல்லக் கூடிய முறையில் மரபணுக்கள் மற்றும் புரதங்களை பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு நிகழ்வு ஏற்படுமே ஆனால், இது எளிதில் மனிதர்களுக்கு இடையே பரவிச் சேதம்
ஏற்படுத்திவிடும்.

இன்றைய தேதியில் பறவைக் காய்ச்சலை குணப்படுத்த மருந்து மாத்திரைகள் எதுவும் இல்லை; தடுப்பூசிகளும் ஆரம்ப காலப் பரிசோதனை நிலையிலேயே உள்ளன. சுருக்கமாகச் சொல்லப்
போனால், பாதிக்கப்பட்ட பறவைகள் மற்றும் விலங்குகளைத் தவிர்த்தல், கோழி மற்றும் வாத்து இறைச்சியை நன்றாகச் சமைத்தபின் உண்ணுதல், அடிக்கடி கை கழுவுதல், அறிகுறிகள் ஏற்பட்டால் விரைவில் மருத்துவ உதவியை நாடுதல் போன்ற பொது அறிவுக்கு உட்பட்ட எச்சரிக்கைகளே அறிவுறுத்தப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு: http://www.cdc.gov/flu/avian/என்ற இணைய தளமும் அக்டோபர் 2005

நேஷனல் ஜியாக்ரா·பிக் இதழும் மிகவும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன.
பறவைக் காய்ச்சல் எச்சரிக்கை நடவடிக்கைகள்

வழக்கமான ·ப்ளூ தடுப்பூசி பறவைக் காய்ச்சலைத் தடுக்காது என்றாலும், மற்ற விஷ ஜுரங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்கிறார் பென்சில்வேனியா பல்கலைக் கழகத்தின் தொற்றுநோயியல்
மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநர் டாக்டர் நீய்ல் ·பிஷ்மன். ஆனால் சிறுவர்கள், நோயாளிகள், 40 அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிமோனியா தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது
என்கிறார். ஏனென்றால், பறவைக் காய்ச்சலில் இறப்பவர்களில் பெரும்பாலோர் பாக்டீரிய நிமோனியா போன்ற பின் விளைவுகளால் பாதிக்கப் பட்டவர்கள்.

அதே சமயம், டாமி·ப்ளூ (Tamiflu (oseltamivir)) என்ற ·ப்ளூ மருந்தை வாங்கிப் பதுக்குவதில் லாபமில்லை என்று எச்சரிக்கிறார். பதுக்கல்களால் மற்றவர்களுக்கும் மருந்து பயன்படாமல்
போவது மட்டுமல்லாமல், மருந்தின் வீரியம் கெடும் நாளைக் கடந்த பதுக்கல்கள் வீண் பாதுகாப்பு உணர்வுக்கே வழி வகுக்கும். மேலும், காய்ச்சல் இல்லாமலே மருந்தை எடுத்துக் கொண்டால், காய்ச்சல் வரும்போது ·ப்ளூ வைரஸ் தடுப்பு மருந்தைத் தாக்குப் பிடித்துக் கொள்ளலாம்.

அப்படியானால் என்னதான் செய்வதாம்?

"கையைக் கழுவுங்கள்!" ஆமாம், உங்களையும் மற்றவர்களையும் காக்க கையைக் கழுவுங்கள் என்கிறார் ·பிஷ்மன். ·ப்ளூ வைரஸ் இருமல் அல்லது தும்மலால் கையில் படும் துளிகளால் பரவுகிறது என்கிறார் தாமஸ் ஜெ·பர்ஸன் பல்கலைக் கழக மருத்துவமனை இயக்குநர் டாக்டர் காத்லீன் ஸ்கொயர்ஸ். தும்மும்போதும், இருமும்போதும் மூக்கையும், வாயையும் திசுத்தாளால் மூடி மறையுங்கள். கையை ஆன்டிசெப்டிக் மருந்தால் துடைத்துக் கொள்ளுங்கள். காய்ச்சல் வந்தவர்களோடு நெருங்கி இருப்பதைத் தவிருங்கள். உங்களுக்குக் காய்ச்சல் வந்தால் வீட்டில் தங்குங்கள்.

மரு. நிரஞ்சன் சங்கரநாராயணன்

நன்றி: ·பிலடெல்·பியா டெய்லி நியூஸ்
Share: 
© Copyright 2020 Tamilonline