தேவைகள் வீட்டுக்கு வந்த இசைக்குழு
|
|
|
|
|
"அம்மா. விஜயா டீச்சர் கதை சொல்லம்மா" என் கடைக்குட்டி அபிராமி ஆஃபீஸ் மேஜைமேல் நான் ஃப்ரேம் போட்டு வைத்திருந்த டீச்சர் படத்தை கையில் எடுத்துக்கொண்டு பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள். "உன்னோட அம்மா சின்னப் பொண்ணா இருந்தபோது" எனத் தொடங்கிய என்னைத் தடுத்து "சென்னையில் பாவாடை தாவணி, ஒத்தைபின்னல், ரிப்பன் இதெல்லாம் சொல்ல மறந்துட்டியே" என்று குறுக்கிட்ட அபியைப் பார்த்து சிரித்த என் மனம் ஒரு நொடியில் சிகாகோவில் இருந்து இருபது வருடங்களுக்கு முந்தைய சென்னைக்குப் பறந்தது.
பெண் குழந்தை பிளஸ் டூ முடித்தவுடன் ஜாதகத்தை எடுத்தால் டிகிரி வாங்குமுன் நல்ல வரன் அமைஞ்சு கல்யாணம் பண்ணலாம்னு அப்பா போட்ட கணக்கை மாத்தியது எனக்கு பிளஸ் டூவில் கணக்கு சொல்லித்தந்த விஜயா டீச்சர்.
விஜயா டீச்சரால் கணிதம் என் மனம் கவர்ந்த பாடமாகிப் போனது. டீச்சரை சந்தோஷப்பட வைக்க கடினமாய் உழைத்து எல்லாத் தேர்வுகளிலும் நூற்றுக்கு நூறு வாங்கிய என்னை ஐ.ஐ.டி.க்கான பரீட்சை எழுதத் தூண்டி, தன் மகன் படிக்க வாங்கிய புத்தகங்களைத் தந்து பள்ளிமுடிந்து தினமும் அரைமணி நேரம் கோச்சிங் சொல்லிக் கொடுத்தார் விஜயா டீச்சர். மற்றவர்கள் விநாயகரை விழுந்து கும்பிட்டும் ஃபெயிலான அந்த ஐ.ஐ.டி. தேர்வில் விஜயா டீச்சரை மனதில் வணங்கி எழுதிய நான் முதல் 100 மாணவர்களில் தேர்ச்சிபெற்று, அப்பா அம்மா ஆசியோடு சென்னை ஐ.ஐ.டி.யில் நுழைந்தது நேற்றுப்போல் இருக்கு. பெண்ணைப் பெரிய படிப்பு படிக்க வைத்தால் எப்படி மாப்பிள்ளை பார்க்கப் போகிறோம்னு கவலைப்பட்ட அப்பா மனதில் பாலை வார்க்க ஐ.ஐ.டி. கணிதப் பேராசிரியர் ஸ்ரீநிவாசன் வீடுதேடி வந்து தன் அமெரிக்க பிள்ளைக்கு என்னைப் பெண்கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கொண்டது பத்தி வாய் பிளக்காதவர்கள் அப்போ மயிலாப்பூரில் இல்லை.
பதினைந்து வருடங் கழித்து இப்போ சிகாகோவில் கடைக்குட்டி அபிராமிக்கு விஜயா டீச்சர் எனக்கு கணிதம் சொல்லி கொடுத்த கதையைச் சொல்ல ஆரம்பிக்கும் போது "அம்மா.. பாட்டி வீட்டு விஜயாக்கா படத்தை ஏன் ஃபிரேம் போட்டு விஜயா டீச்சர் படத்துக்கு பக்கத்துல வச்சிருக்க?" எனக்கேட்ட வண்ணம் என் மூத்த பெண் காயத்ரி பக்கத்தில் வந்து உட்கார மனம் சட்டென்று நாலு மாதத்திற்குமுன் தாவியது.
அமெரிக்க வாழ்க்கை, அருமையான கணவர், அழகான இரு பெண் குழந்தைகள் எல்லாம் இருந்தும் மனசு அழுத காலம் அது. வாரம் பூராவும் வேலை நிமித்தம் வெளியூர் செல்லும் கணவரா, அவர் சம்பளத்தில் முக்கால்வாசியை மார்ட்கேஜுக்கும் என் நாளில் முழுவாசியைப் பராமரிப்புக்கு முழுங்கிய பெரிய வீடா, வருடத்தில் எட்டு மாதம் அடிக்கும் குளிரா, ஐ.ஐ.டி. படிப்பு அடுப்பங்கரைக்கு தானா என்ற ஆதங்கமா, அப்பா போனபின்பு அம்மாவைச் சென்னையில் தனியே தவிக்கவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியா.... எல்லாம் எனக்குள் மன அழுத்தத்தையும் தன்னிரக்கத்தையும் ஏற்படுத்தத் தொடங்கிய அந்த நேரம்… எல்லாம் இருந்தும் சந்தோஷமாய் இருக்க மறந்த அந்த நிலை… அப்போ கடவுள் அனுப்பிய, இல்லை, கடவுளாய் வந்த டீச்சர்தான் இந்த விஜயா.
சென்னையில் தனியாய் இருந்த அம்மாவுக்குத் துணையாக வீட்டோடு இருக்க ஏஜன்சிமூலம் ஏற்பாடு செய்திருந்த வேலைக்காரி. உதட்டிலே புன்னகை, மனதிலே உற்சாகம், உடம்பிலே சுறுசுறுப்பு... இதுதான் விஜயா. "எங்கிருந்தோ வந்தான்.. இடைச்சாதி நான் என்றான்..." என்று படிக்காத மேதை ரெங்காராவாக எங்கம்மாவைப் பாடவைத்த அற்புதம் இந்த விஜயா. |
|
கோடை விடுமுறைக்குச் சென்னை போய் இறங்கிய சில நாட்களில் நான் அறிந்துகொண்டது, விஜயா தன் கணவரையும், இரண்டு பெண் குழந்தைகளையும் கிராமத்தில் விட்டுவிட்டுக் கடந்த ஐந்து வருடங்களாகச் சென்னையில் வீட்டுவேலை செய்துகொண்டிருக்கிறாள் என்பது. கணவரின் அறுவை சிகிச்சைக்கும், நாத்தனார் திருமணத்திற்குமாய் வாங்கிய கடனை அடைக்கச் சம்பளம் முழுதும் மாசாமாசம் ஊருக்கு அனுப்பி வருடமுடிவில் பத்துநாள் விடுமுறைக்கு கிராமம் சென்றும் வருகிறாள்.
உடல்நலக் குறைவினால் வேலைக்குச் செல்ல இயலாத கணவர், அம்மாவின் அன்பு தெரியாமல் பாட்டியிடம் வளரும் குழந்தைகள், தனக்கென்று எதுவும் வாங்கப் பணமில்லாத நிலை, இப்படி எவ்வளவோ கஷ்டங்கள் வாழ்வில் இருந்தும் எப்போதும் சிரித்த முகமாய் இருந்த அவளிடம் நான், "உன் குடும்பத்தை விட்டுட்டு தனியாய் இருக்க கஷ்டமாயில்லையா விஜயா?"ன்னு கேட்க, "இல்லை அக்கா, என் கடமையைச் செய்றதுல எனக்கு ரொம்ப சந்தோசம்! அதோட நீங்க என்னை உங்க குடும்பத்திலே ஒருத்திபோல நடத்துறீங்க, எனக்கு அது போதுமே"ன்னு யோசிக்காம பதில் வந்தது.
தன் சொந்த வீட்டைப் பராமரிக்கச் சோம்பிய என் மனம் இன்னொருவர் வீட்டில் வேலைக்காரியாக விழுந்து விழுந்து வேலை செய்த விஜயாவை வணங்கியது. குழந்தைகள் படிப்புக்கு சேமிக்கச் சலித்துக்கொண்டே கூப்பன் வெட்டும் நான் எங்கே? குடும்பக்கடனுக்கு முழுச் சம்பளத்தையும் சிரித்துகொண்டே அனுப்பும் விஜயா எங்கே! என்னோட முதல் விஜயா டீச்சர் சொல்லிக் கொடுத்தது கணக்குப் பாடம். இந்த விஜயா எனக்குச் சொல்லிக் கொடுத்தது வாழ்க்கைப் பாடம். அசைபோட்ட மனசைத் தற்சமயத்துக்கு கொண்டுவந்தது அபியின் கேள்வி, "அம்மா, சொல்லும்மா, ஏன் விஜயாக்கா படத்தை ஃபிரேம் பண்ணி உன் டீச்சர் படம் பக்கத்தில் வச்சிருக்க?"
"கணித பாடக்கதை புரிந்த உனக்கு கர்மயோகப் பாடம் புரிய வயதாகவில்லையடி" என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே "அப்புறம் சொல்லறேன் கண்ணா.." எனச் சிரித்தபடி அபியின் சுருட்டை முடியை வருடினேன்.
மாலதி சுப்ரமணியன், ட்ராய், மிச்சிகன் |
|
|
More
தேவைகள் வீட்டுக்கு வந்த இசைக்குழு
|
|
|
|
|
|
|