|
போலிக்குரலில் பாடக்கூடாது: அருணா சாயிராம் |
|
- வத்சலா சாரதி|நவம்பர் 2005| |
|
|
|
அருணா சாயிராம் வசீகரமான குரலுக்குச் சொந்தக்காரர். பிரபல சங்கீத வித்வான். வளைகுடாப் பகுதியில் இசையைத் தன் முழுநேரப் பணியாகக் கொண்ட வத்சலா சாரதி அருணாவுடன் ஓர் அவசரப் பேட்டி கண்டார். அதிலிருந்து:
கே: குரல் வளம் என்றால் என்ன? உங்களுடைய குரலின் ஈர்ப்புத் தன்மைக்குக் காரணமென்ன?
ப: வாழ்க்கையில் நமக்கு எந்தக் குரல் இயற்கையாய் அமைந்ததோ அதில் இருக்கும் நல்லதை மேலும் அழகுபடுத்துவதே குரல் வளம். அசுர சாதகம் ஒரு பாடகருக்கு மிகவும் அவசியமானது. என் குருக்கள் என் குரலுக்கு ஏற்ற சாதகங்களை சொல்லிக் கொடுத்து என் குரலின் தன்மையை மேம்படுத்துவதில் உதவியுள்ளார்கள். அசுர சாதகத்தை நான் இன்னமும் தினந்தோறும் செய்கிறேன். இந்தப் பழக்கம் இல்லை யென்றால் நம் கற்பனையைச் சங்கீதம் மூலம் வெளிப்படுத்துவது கடினம். அதுபோல் ஒவ்வொரு பாடகரும் தத்தம் குரலை ஆய்ந்து அதில் இருக்கும் நல்ல, கெட்ட விஷயங் களைப் புரிந்துகொண்டு தனக்கேற்ற சாதக முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இதில் குருவின் வழிகாட்டுதல் மிகவும் முக்கியம்.
கே: நீங்கள் கர்நாடக சங்கீதத்தை தவிர வேறு சங்கீதத்தை அல்லது சாதக முறைகளைக் கற்றீர்களா?
ப: நான் எங்கு சென்றாலும் வித்வான் களையும் ஆசிரியர்களையும் சந்தித்து உரையாடிப் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முயற்சி செய்வேன். ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் அங்கு இருக்கும் ஓபரா, செவ்விசை ஆசிரியர்களுடன் உரையாடி அந்தச் சங்கீதத்தின் பெரிய வித்வான்கள் தங்கள் குரலை எப்படி வளர்க்கிறார்கள், பாது காக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வேன். அவர்களும் தினமும் உடலையும் குரலையும் நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்காகச் சில வழிமுறைகளைத் தவறாமல் கடைப்பிடிக்கிறார்கள். ஆகாரம், இகாரம், உகாரம் என்று எல்லா உயிரெழுத்து களிலும் சாதகம் செய்கிறார்கள்.
நம்முடைய பெரியோர்களும் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள். தியாகராஜ சிஷ்ய பரம்பரையில் வந்த மகாவைத்தியநாத ஐயர் என்னும் அறிஞர் பல ஆராய்ச்சிகளைச் செய்து குரல் பயிற்சி பற்றிப் பல விஷயங் களை கண்டுபிடித்தார் என்று அவருடைய வாழ்க்கை வரலாறு தெரிவிக்கிறது. முக்கியமான விஷயங்களை நம் முன்னோர்கள் 'த்வன்யாவ லோகம்' என்னும் நூலில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே கூறியிருக் கிறார்கள். பாடும் பொழுது மூச்சை எப்படிப் பிரயோகிப்பது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காகத் தனிப்பட்ட மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். இதனால் நாம் நாதத்தை இயற்கையான அழகுடனும், குறைந்த சிரமத்துடனும் இயல்பாக வெளியில் கொண்டுவர முடியும். பாடும் பொழுது மூக்காலோ, கத்தியோ, அடக்கியோ போலிக்குரலில் பாடாமல் இருக்கப் பயில வேண்டும்.
கே: தொடர்ந்து பல மணி நேரம் கச்சேரிகள் செய்யும் உங்களால் எப்படி குரலைப் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடிகிறது?
ப: அது அவரவர் சாரீரத்தைப் பொறுத்தது. சிலருடைய குரல் அவ்வளவு சுலபமாக பாதிக்கப்படாத குரலாக இருக்கும். சிலருக்கு குளிர்க்காற்று பட்டாலோ குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டாலோ குரல் கட்டி விடலாம். நம்முடைய சரீர, சாரீர வகையைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். 4-5 மணி நேரக் கச்சேரிக்குப் பிறகு, சில மணிநேரம் மெளனவிரதம் இருந்து குரலுக்கு வேண்டிய ஓய்வைக் கொடுக்கவேண்டும். |
|
வத்சலா சாரதி |
|
|
|
|
|
|
|