|
|
|
|
அட்லாண்டாவில் சில மாதங்களுக்கு முன் வீட்டில் நான் மட்டும் தனியே. இரவு 10 மணி. வழக்கத்தைவிடச் சீக்கிரமாகவே அலுவலக, வீட்டு வேலைகள் முடிந்துவிட்டன. தூக்கம் வரவில்லை. அதிகம் புத்தகம் படிக்கும் பழக்கமும் இல்லை. ஏனோ அன்று அதிசயமாகத் தொலைக்காட்சியைப் பார்ப்பதிலும் நாட்டமில்லை. உருப்படியாக ஏதாவது செய்யலாமே என்று பில்கள், ஆவணங்கள் இவற்றை நேர்செய்து வைக்கும் வேலையைத் தொடங்கினேன்.
எப்போதும் 10 மணிக்கெல்லாம் வீட்டுக்குள் செக்யூரிடியைப் போட்டுவிடுவேன். ஆனால் ஒழிக்க ஆரம்பித்தால், கழிக்க வேண்டியவை நிறையச் சேரும். கராஜுக்குள் இருக்கும் ரீசைக்கிள் பெட்டியில் அவற்றைப் போட அடிக்கடி கதவைத் திறக்கவேண்டி இருக்கும். எனவே செக்யூரிடியைத் தூங்குமுன் போட்டுக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.
கூடத்திலிருந்து கராஜ் போகும் வழியில் சுவரோடு சேர்ந்து ஒரு பெரிய அலமாரி. அதில்தான் ஃபைல்களை வைப்போம். அவற்றை அங்கேயிருந்த மேடையில் வைத்து, ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவ்வப்போது காகிதக் குப்பைகளை ரீசைக்கிள் பெட்டியில் போட்டு வந்தேன். அப்படியே கராஜின் வெளிக்கதவு சாத்தி இருப்பதையும் ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்.
இரவு மணி பன்னிரண்டைத் தாண்டிவிட்டது. வேலை முடிந்தபாடில்லை. எடுக்க எடுக்க அட்சயபாத்திரம் போல் பேப்பர்கள் வந்த வண்ணம். கண்கள் பூத்து, கால்களும் கடுக்க, "இன்றைக்கு இந்த இழுபறி வேலை தேவையா?" என்று அலுத்துக்கொண்டேன். போட்டது போட்டபடி தூங்கிவிடலாம். கேட்க ஆளில்லை. இருந்தாலும் பாதியில் விடக்கூடாது என்ற வறட்டு வைராக்கியம்!
பல்சிகிச்சை சம்பந்தமான பேப்பர்களை எடுத்துப் போட்டுக் கீழே உட்கார்ந்தேன். என் மகளின் பல்லுக்குக் கிளிப் போட்ட பிராஜக்ட் 4 வருடங்களுக்கு ஓடி இருக்கிறது. அதற்கான செலவைப் பார்த்தால், குடும்பத்தோடு இரண்டுமுறை இந்தியா போய்த் திரும்பி வந்திருக்கலாம்! அவளுக்குக் கிளிப் சரியாக வந்ததோ இல்லையோ, சிறிய ஜெம் கிளிப்புகளும், சற்றே பெரிய பைண்டர் கிளிப்புகளும் போட்ட ஏதேதோ கற்றைகள். கிளிப்புகளைக் கழட்டிக் கீழிருந்தே அவற்றை மேடையில் மேலிருந்த ஒரு பிளாஸ்டிக் கிண்ணத்துக்குள் தூக்கிப் போட்டுக் கொண்டிருந்தேன்.
பேப்பர்களைப் புரட்டும்/கிழிக்கும் சத்தம், கிளிப்புகளைத் தூக்கிப் போடும் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த அந்த நிசப்த வேளையில், திடீரென வெளி கராஜ் கதவு திறக்கும் சத்தம்! குலை நடுங்கிப் போனேன்.
"யாராக இருக்கும் இந்த நட்டநடு ராத்திரியில்? யாரால் கதவைத் திறந்திருக்க முடியும்?"
பையனும், பெண்ணும் வெவ்வேறு ஊர்களில். அவர்கள் வர வாய்ப்பில்லை.
கணவருக்கு அந்தச் சமயம் 200 மைல் தள்ளி வெளியூரில் வேலை. அமெரிக்காவில் சிறியவர்முதல் பெரியவர்வரை யாருக்காவது ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். இந்தமாதிரி விளையாட்டுக்கெல்லாம் விதிவிலக்கு என் கணவர். ஒரே ஒருமுறை எனக்கு ஃபோன் செய்ய மறந்துவிட்டது என்று சொல்லித் திடீரென அட்லாண்டா வந்திருக்கிறார். அதுபோல் சொல்லாமல் வந்திருப்பாரோ? ஆனால் இரவு வண்டி ஓட்டுவதைத் தவிர்ப்பாரே?
வீட்டிலிருந்து கராஜுக்குள் போகும் கதவைத் திறந்து பார்க்கலாமா? வந்தவன் திருடனாக இருந்தால் என்ன ஆகும்? திறக்கும்போதே சுட்டு விடுவானோ?
அந்தக் கதவுக்குத் தாழ்ப்பாள் போடவில்லை, வெறுமனேதான் சாத்தினேன் என்பதை நினைத்ததும் என் சப்தநாடியும் அடங்கியது!
"வேகமாகப் போய் செக்யூரிடியைப் போட்டு விடுவோமா? போட்டால் கூட என்ன பிரயோஜனம்? வந்தவன் நம்மைத் துப்பாக்கி முனையில் மிரட்டி, அதை டிஸ்-ஆர்ம் செய்ய வைக்க எத்தனை நொடி ஆகும்?"
45 வருடங்களுக்கு முன்னால் எங்கள் மானாமதுரை வீட்டில், ஒரு திருடன் இரவில் பட்டா போட்ட கொல்லைக் கதவைத் தட்ட, என் அப்பாவும், அண்ணாவும் யாரென்று பார்க்கக் கிளம்ப, என் அக்கா, "ஐயையோ! வந்துட்டானே! போமாட்டானே!" என்று ராகத்துடன் அழுதது ஞாபகத்து வந்தது. |
|
ஏன் இன்னும் யாரும் உள்ளே வரவில்லை? கராஜுக்குள் என் பையன் ஆசை ஆசையாய் வாங்கி வைத்திருக்கும் கார் சாமான்களை எடுக்கிறார்களோ? ஆனால் சத்தத்தையே காணோமே?
மேல்மாடிக்கு ஓடுவோமா? பேஸ்மென்டில் பதுங்குவோமா? பின் வழியே சென்று பைன் மரக் காட்டுக்குள் அடைக்கலம் புகுவோமா? என்ன செய்யலாம்?
இப்படிப் பல யோசனைகள். ஆனால், போலீஸைக் கூப்பிடத் தோன்றவில்லை. முதலில் கணவரைக் கூப்பிட்டு, என் கதை இன்னும் கொஞ்சநேரத்தில் முடியப் போவதைச் சொல்லிவிடலாம் என்று, தொலைபேசியை எடுத்தால், அது கையை விட்டு நழுவி நழுவிப் போகிறது. எப்படியோ அதைப் பிடித்து, எண்களை டயல் செய்து, விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.
என் கணவருக்கு எப்போதுமே நிதானம் அதிகம். நான் மேலும் பயந்துவிடப் போகிறேனே என்று இன்னும் நிதானம் காத்திருக்கிறார். அது புரியாமல், "இந்த ஆபத்தான சமயத்திலும் என்ன இவர் குரலில் பதட்டத்தையே காணோம்?" என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு, ஆனால் வெளிக்காட்டாமல் பேசினேன்.
என் கணவர், "போலீஸைக் கூப்பிட வேண்டி இருக்கும். ஆனால் அதற்கு முன் நான் சொல்வதைப் பயப்படாமல் செய்" என்றார்.
"சரி" என்றேன் முதல் முறையாக!
"முதலில் வீட்டிலிருந்து கராஜுக்குப் போகும் கதவைப் தாழ்ப்பாள் போடு, சத்தம் போடாமல் மெதுவாக." "வீட்டுக்குள் ரேழி வழியே நடந்து, வாசல் பக்கம் போ."
ரோபாட் போல் மறுப்பு ஏதும் சொல்லாமல் அவர் ஆணைகளை நிறைவேற்றினேன்.
"உள் விளக்கையோ, வெளி விளக்கையோ போட்டுவிடாதே! சலசலப்பை ஏற்படுத்தாமல் கதவின் பிளைண்ட்ஸைத் திற!"
நடுங்கும் கைகளால் திறந்தேன்.
"வெளியே ஏதாவது கார் நிற்கிறதா?"
"அவ்வளவுதான், நான் காலி இன்னிக்கு! ஒரு வேன் நிக்கறது. இருட்டுல வேற ஒண்ணும் தெரியல்ல. ரெண்டு மூணு பேரா வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன். போலீஸைக் கூப்பிட்டுடவா?"
என் குரல் தழுதழுத்து, அழுவதற்கு முந்தைய நிலைக்கு வந்துவிட்டது.
"இரு இரு. அவசரப்படாதே. எனக்கு ஒண்ணே ஒண்ணைச் சொல்லு."
"இன்னும் என்ன பாக்கி இருக்கு, சொல்லறதுக்கு?"
"கராஜ் ஓப்பனரை எங்கே வைச்சே? காரிலேயா, இல்லை உள்ளேயா?"
அப்போதுதான், காரிலேயே இருந்தால், யாராவது அதன் ஜன்னலை உடைத்து, ஓப்பனரை எடுத்துத் திறந்து வீட்டுக்குள் வந்து விடுவார்களோ என்ற பயத்தில் உள்ளே எடுத்து வைத்திருந்தது நினைவுக்கு வந்தது.
உடனே பேப்பர்களைச் சரிசெய்து கொண்டிருந்த மேடைக்கு வந்தேன். நான் விரக்தியுடன் தூக்கிப் போட்ட கறுப்புக் கிளிப் ஒன்று, கிண்ணத்தில் இருந்த கராஜ் ஓப்பனரின்மேல் ஜம்மென்று உட்கார்ந்து கொண்டிருந்தது. என்னைச் சற்றுநேரம் ஆட்டிவைத்த எகத்தாளத்துடன்! நான் போட்ட வேகத்தில், பொத்தான் அமுங்கி கராஜ் திறந்திருக்கிறது.
"அப்படியானால் வெளியில் நின்ற வேன் யாருடையது?" என்று கேட்கிறீர்களா? அது என்னுடையதுதான்! அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். எனது எல்லை கடந்த பயத்தில், அதை நான்தான் டிரைவ் வேயில் நிறுத்தி வைத்திருந்தேன் என்பதை மறந்து விட்டிருந்தேன்!
ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா |
|
|
|
|
|
|
|