Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ் | பொது
சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | முன்னோடி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அமெரிக்க அனுபவம்
Tamil Unicode / English Search
சிறுகதை
இனிப்பும் டயரியும் இன்னும் சில நினைவுகளும்
விருந்தாளி
- ராஜ ரங்கராஜன்|செப்டம்பர் 2014|
Share:
"ரவி நம்ம புது GM சனிக்கிழமை USலேருந்து கிளம்பி இந்தியா வராராம். நீங்க சண்டே ஒருநாள் அவர என்டர்டெய்ன் பண்ணமுடியுமா?" என்றார் கோபால் திடுதிப்பென்று!

"என்ன கோபால் நீங்க பாத்துக்கலாமே, நான் எதுக்கு?" என்றேன்.

"இல்ல ரவி எனக்கு சண்டே ஒரு கல்யாணம் அட்டெண்ட் பண்ண வேண்டியிருக்கு. மிஸ் பண்ண முடியாது. ஒருநாள் தானே. சும்மா அவர எதாச்சு மால் இல்லேன்னா மகாபலிபுரம் சுத்திக் காட்டுங்களேன். அவர் இந்தியர்களப் பத்தி தெரிஞ்சுக்க ரொம்ப ஆர்வமா இருக்காராம். இது மொதல் வாட்டி வரார். நீங்க ஈசியா சமாளிக்கலாம். ஒண்ணும் பயப்பபடாதீங்க."

கோபாலுக்கு அவர் வேலையை என் தலையில் கட்டுவதே வாடிக்கையாய்ப் போனது. ஒருநாள் பொழுது ஓடிவிடும், ஒன்றும் சிரமம் இருக்காது என்று நினைத்து அந்தக் கவலையை அப்போதைக்கு மறந்தேன். சனிக்கிழமை இரவுவரை! இரவு ஏழு மணிக்கு ஃபோன் அடித்தது. "Hello This is Richard. Can I talk to Raavee" என்று அமெரிக்க ஆங்கிலத்தில் ஒரு குரல். "Sir, I am Ravi. Welcome to India" என்று ஆரம்பித்து எனக்குத் தெரிந்த அமெரிக்க ஆங்கிலத்தில் குசலம் விசாரித்தேன். "ரவி நாம எப்போ பாக்கலாம்" என்றார்.

"நாளைக்கி பாக்கலாம் சார். உங்களுக்கு சென்னைல என்ன பாக்கணும்?"

"எனக்கு ரொம்ப டைம் இல்லை. 2 நாள்ள திரும்பிப் போகணும். சைட்சீயிங் வேணாம்னு பாக்கறேன். எனக்கு மொதல்ல இந்திய கலாசாரம் தெரியணும். அப்போதான் என்னால இந்தியன் எம்ப்ளாயீஸ நல்லா புரிஞ்சிக்க முடியும்னு நெனைக்கிறேன். உங்களுக்கு ஆட்சேபணை இல்லேன்னா நாளைக்கி உங்க வீட்டுக்கு வரலாமா? ஏனக்கு நீங்க வீட்லயே இந்தியா பத்தியும் சென்னை பத்தியும் சொல்லிடுங்களேன்."

"கட்டாயம் வாங்க சார். என் அட்ரெஸ் இருக்கா? "

"உங்க அட்ரெஸ், ஃபோன் எல்லாம் கோபால் குடுத்துட்டார். நாளைக்கி காலை பத்து மணிக்கி உங்களப் பாக்கறேன். பை."

இந்த கோபால் நல்லாதான் என்ன மாட்டிவிட்டுருக்கான். நாளை இவருடன் என்ன பேசுவது. அமெரிக்காவில் காலை பத்து மணிக்கி என்ன சாப்பிடுவார்கள்? ஒன்றும் விளங்கவில்லை.

"மீரா, அம்மா இங்க வாங்க. டேய் பாலு ஷீலாவையும் கூட்டிடு வாடா. முக்கியமான விஷயம்." எல்லோரும் ஆஜராக விஷயத்தை உடைத்தேன்..பாலுவும் ஷீலாவும் ‘பூ இவ்வளவுதானா!’ என்று சட்டை செய்யாமல் போய்விட்டனர். மீராவுக்கு என்னைவிடப் பதட்டம் அதிகம் தொற்றிக்கொண்டது.

"அமெரிக்கா GM நம்ம வீட்டுக்கு வந்து என்ன பண்ணப்போறார்? அவரு வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா? நம்ம சுத்த சைவம்னு சொன்னேளா?" கேள்விமேல் கேள்வி.

"மீரா நீ சமையல் வழக்கம்போல இல்லாம கொஞ்சம் நல்லாப் பண்ணு. காரம் எல்லாம் ஜாஸ்தி போடாத. அப்புறம் ரவிக்கு வேலை போயிடப்போறது. டேய் ரவி அவருக்கு கல்யாணம் ஆயுடுத்தாடா?"

மீராவும் அம்மாவும் குடைந்து எடுத்தார்கள். எதற்கும் பதில் தெரியாமல் விழித்தேன். ஒருவழியாக வீட்டில் இட்லி செய்து பாலுவைவிட்டு வெஜிடபிள் பிட்சா வாங்கி வைக்க முடிவானது.

"இத பாருங்கோ. அவர் இந்தியாபத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்க வர்றார். அவர்கிட்ட ஏதானும் அச்சுபிச்சுனு சொல்லி வக்காதீங்கோ. அவர் பேசறது புரியலேன்னா, சும்மா சிரிச்சி வைங்கோ போறும்."

"இதென்னடா எங்கள அதிகாரம் பண்ற. நம்ப ஆத்துக்கு நம்பள பாக்கதானே வறார். பேசாம இருக்கறதுன்னா அவர் எதுக்கு வரணும்? எனக்கும் இங்கிலீஷ் எல்லாம் தெரியும். நன்னாப் பேசுவேன். நீ ஒண்ணும் கவலப்படாதே" அம்மாவின் பேச்சு எனக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.

வீட்டைச் சுத்தம் செய்து இரவு படுக்க மணி பன்னிரண்டைத் தொட்டது. காலை சரியாக 10:02க்கு ரிச்சர்ட் ஆஜரானார். சிவந்த நிறத்தில், மெல்லிய தாடியோடு, கண்ணாடி அணிந்த ஒருவரை எதிர்பார்த்த எனக்கு அவரின் கருநிறம் ஆச்சரியம் அளித்தது. "உங்கள் வீடு அழகாக உள்ளது. என்னுடைய சின்ன அன்பளிப்பு" என்று இனிப்பு டப்பாவை நீட்டினார். வாங்கிக்கொண்டு நன்றி என்றேன்.

உள்ளிருந்து அம்மா அழைத்தாள். "என்னடா அமெரிக்கான்னு சொன்னே, ஆப்பிரிக்காலேர்ந்து யாரோ வந்திருக்கார்!"

"அமெரிக்கால எல்லா கலரும் உண்டு. நீ எதாவது கேட்டு வெக்காத."

ரிச்சர்டுக்கு எல்லோரையும் அறிமுகம் செய்தேன். அரைகுறை ஆங்கிலத்தில் என் அம்மா "உங்க சொந்த ஊர் எது?" என்றாள். "நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மிச்சிகன்தான். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு பேர். என் அப்பா எங்களை விட்டுச் சிறு வயதிலேயே பிரிந்துவிட்டார். எங்களை வளர்த்துப் படிக்கவைத்தது எங்கள் அம்மாதான். எங்களுக்காக மிகவும் கடுமையாக உழைத்தாள்" என்றார்.

"அப்படியா! அமெரிக்கால யாருக்கும் எதுக்கும் கஷ்டம் இல்லைன்னு நெனைச்சேன். பகவான் யாருக்கு சோதனை குடுக்கலை. உங்க அம்மாவ நெனச்சா பெருமையா இருக்கு" என்றாள். என் அம்மா எதுவும் உளறாமல் இருக்க வேண்டுமென வேண்டிக்கொண்டிருந்தேன். "உங்களுக்கு ஒபாமாவத் தெரியுமா" என்றாள்.
ஹஹ்ஹா எனப் பெரிதாகச் சிரித்த ரிச்சர்ட், "உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ, அதே அளவுதான். இந்தியன் பீப்பிள் கொஞ்சம் ஷைன்னு சொன்னாங்க. உங்கள் பேச்சு, சுபாவம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு..உங்களைப்பற்றிச் சொல்லுங்களேன். நீங்கள் பிறந்தது இந்த ஊரிலா?"

"என்னத்த சொல்ல.." என்று ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்கள் சொல்லிக்கொண்டே இருந்தாள். தான் கான்வென்ட்டில் படித்தது, சிறு வயதில் கல்யாணம் செய்தது, சீக்கிரமே கணவனை இழந்தது எப்படியோ முட்டி, மோதி என்னை ஆளாக்கியது வரை திக்கிதிக்கி ஆங்கிலத்தில் சொல்லி முடித்தாள். அவருக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை. "உங்கள் கதை என் அம்மாவின் வாழ்க்கைபோல் தான் உள்ளது" என்றார்.

"ஆனா இந்தியா அமெரிக்கா மாதிரி இல்லை. இங்க எங்க மாதிரி மனுஷாளுக்கெல்லாம் மரியாதை கிடையாது. ஒரு சலுகை கிடையாது. என் பிள்ள படிப்புக்கு என்னெல்லாம் கஷ்டம். இந்த அரசாங்கம் ஜாதியும் வோட்டும்தான் பாக்கர்து. திறமைக்கு மதிப்பு இருந்தா தேவலை. அதெல்லாம் இங்க கிடையாது. கண்டவனுக்கு எல்லாத்தயும் தூக்கி குடுக்கிறது. ஒண்டியா இருந்த எனக்கு ஒரு கரிசினம் இல்லை."

ரிச்சர்ட் ஆச்சரியமாகப் பார்த்தார். "அப்படியா? இது சரியாப் படலியே. என்ன ரவி இங்க சிஸ்டம் இப்படித்தானா?"

நான் கொஞ்சம் விழித்தேன். “இல்ல சார், பழைய காலத்தில இருந்து சில மக்கள் ஒதுக்கப்பட்டதால இப்போ கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்றாங்க. அவ்வளவுதான். இப்பொ எதுக்கும்மா அதெல்லாம் அவர்கிட்ட சொல்ற? உன்னோட சின்ன வயசு ஆல்பம் கொண்டு வந்து காமியேன்."

"அவரும் தெரிஞ்சிக்கட்டுமே..என்ன தப்பு. நீங்க சொல்லுங்கோ சார்..இந்த மாதிரி மக்கள ஜாதி வாரியா பிரிச்சி எங்கள ஒடுக்கறது சரியா? இப்படி செஞ்சா நாடு என்னாகும். உங்க நாட்டுல இப்படி பண்றாங்களா? இங்க மட்டும்தான் இப்படி நடக்கறது."

ரிச்சர்ட் பொறுமையாக அமெரிக்கக் கருப்பர்களின் போராட்டத்தையும், அவர்களின் விடுதலை பற்றியும் விளக்கினார். ஆனால் இப்பொழுது எல்லோரும் சமம், யாருக்கும் குறிப்பான சலுகைகள் இல்லை என்றார்.

"அப்படிச் சொல்லுங்கோ. இங்க அதுதானே பிரச்சனை. இங்க மாத்திரம் திறமைக்கு முழு மதிப்பு குடுத்தா இந்தியா எப்பவோ முன்னேறி இருக்கும். அமெரிக்கா எல்லாம் எங்ககிட்டே கை ஏந்தணும்."

இன்னும் அம்மாவைப் பேசவிட்டால் என் கதி அதோ கதி எனத் தோன்றியது. "டிஃபன் சாப்பிடலாமா" என்றேன். மீராவிடம் இட்லி கொண்டு வந்து அம்மாவின் வாயில் திணி என்று சைகை செய்தேன்.

வாசலில் அயர்ன் பெண் வந்து "அம்மா துணி கொண்டாந்துருக்கேன்" என்றது.

"அம்மா வாங்கி வைம்மா" என்று விரட்டினேன்.

"என்னடி இத்தனை நாழி. சரி குடு."

"பாட்டிமா கொஞ்சம் ஜில் தண்ணி குடுங்களேன். ரொம்ப தாகமா இருக்கு."

"மீரா கொஞ்சம் ஃஃப்ரிட்ஜ்லேங்து தண்ணி கொண்டாயேன். அயர்ன்கார பொண்ணு கேக்கறது பாரு."

"இந்தா குடி..நன்னா தூக்கிக் குடிக்கணும். வாயில படக்கூடாது."

அது தலையாட்டிக்கொண்டே மிக தூரத்தில் வைத்துக் குடித்தது. பாதி தண்ணீர் முகத்தில் கொட்ட "சாரி பாட்டிமா" என்று சிரித்தது. அம்மா இடது கையால் அதை வாங்கிக்கொண்டாள்.

"இந்தாடி மீரா. இந்த தண்ணிய கொட்டிட்டு கையோட பாத்தரத்த தேச்சி வச்சிடு. அப்படியே உள்ள வச்சுடாதே" என்றாள்.

ராஜ ரங்கராஜன்
More

இனிப்பும் டயரியும் இன்னும் சில நினைவுகளும்
Share: 


© Copyright 2020 Tamilonline