|
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: எனக்கென்ன மனக்கவலை |
|
- ஹரி கிருஷ்ணன்|செப்டம்பர் 2014| |
|
|
|
|
|
கதையில் கண்ணனுடைய பங்கைப் பற்றிப் பேசாமல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியாது. 'யார் இல்லாவிட்டால் யுத்தம் நடந்திருக்காது' என்ற கேள்விக்கு விடையாக இருவரைத்தான் சொல்ல முடியும். முதலாமவள் பாஞ்சாலி. அடுத்தவன் கிருஷ்ணன். பாண்டவர்களுக்கே போரில் ஊக்கம் தளர்ந்திருந்த சமயத்திலும் சரி, யுத்தம் நடந்துகொண்டிருந்த சமயத்திலும் சரி; மிகமிக நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் சரி, போரில் பாண்டவர்களை வழிநடத்தியவன் கண்ணன்தான். இதை ஆதாரத்துடன் பார்க்க வேண்டுமானால், இரண்டு பக்கத்து சைனியங்களின் அதிகார அடுக்கைப் பார்க்க வேண்டிவரும். அதைப் பின்னால் செய்வோம். அதற்கு முன்னால் சுருக்கமாக, பாண்டவர்களுடைய ஏழு அக்குரோணி சைனியத்தை ஏழு தனித்தனி தளபதிகள் வழிநடத்தினர். இந்த ஏழு தளபதிகளுக்கும் திருஷ்டத்யும்னன் தளகர்த்தனாக இருந்தான்; திருஷ்டத்யும்னனோ, அர்ஜுனனுக்குக் கீழ்ப்பட்டவனாக இருந்தான். அதிகார அடுக்கின் உச்சத்தில் அர்ஜுனன் நின்றாலும், அவனை இயக்கியவன் கண்ணனாக இருந்தான்.
கண்ணன் வெறும் தேர்ச்சாரதி அல்லன். அவன்தான் சூத்திரதாரி. கௌரவர்களின் பக்கத்தில் அதிகாரம் ஒரே நபரின் கையில் குவிந்திருந்தது. பீஷ்மர் பத்து நாள்; துரோணர் ஐந்து நாள்; கர்ணன் 1½ நாள்; ½ நாள் தளபதி யாரும் இல்லை; ஒருநாள் (பகல் பொழுது) சல்யன்; அதேநாள் (இரவு) அஸ்வத்தாமன். இதுதான் பதினெட்டு நாளில் கௌரவர்கள் பக்கம் படை நடத்திய தளகர்த்தர்களின் விவரம். ஒவ்வொரு சமயத்திலும் அதிகாரம் ஒரேஒரு நபரிடம்தான் குவிந்திருந்தது. பாண்டவர்களுடையதைப் போல் பரவலாக்கப்பட்டிருக்கவில்லை. பாண்டவர்களுடைய படைக்கு முதல் தளகர்த்தன் அர்ஜுனன். ஆனால் அர்ஜுனனை இயக்கியவன் கண்ணன். பலசமயங்களில் யுத்தம் நடந்துகொண்டிருக்கும்போது, 'இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது. இதைச் சமாளிக்க இவனால் முடியாது. ஆகவே, பீமா நீ அங்கே போ; கடோத்கசா நீ அங்கே போ' என்று அனுப்பி வைக்கும் காரியத்தையே கண்ணன் தன் கைகளில் எடுத்துக் கொள்வதைக் காணலாம். சும்மா தேரோட்டிக் கொண்டிருந்துவிட்டு, 'ஆயுதத்தைக் கையில் தொடமாட்டேன்' என்று சொல்லி ஒதுங்கியிருந்தவன் அல்லன் அவன். ('ஆயுதம் எடுக்கமாட்டேன்' என்ற அவனுடைய வாக்கை அவனே குறைந்தது மூன்று இடங்களில் மீறுகிறான். அவற்றையும், அவற்றுக்கான காரணங்களையும் பின்னால் பேசுவோம்.)
இது ஒருபுறம். நம்முடைய சூத்திரதாரி கிருஷ்ணனை எடுத்துக்கொள்வோம். இவன் ஒரு மனிதனா, அவதாரமா? ராமனுடைய காதையில் ஐயத்துக்கு இடமே இல்லை. 'நான் ஒரு மனிதன்; தசரத சக்ரவர்த்தியின் புதல்வன்' என்றுதான் தொடக்கத்திலிருந்து, கடைசியில் பிரமனுடைய பணியால் எமனே நேரில் வந்து 'நீங்கள் வைகுந்தம் திரும்பும் நேரம் வந்துவிட்டது' என்று சொல்லும் வரையில் பேசுகிறான். கிருஷ்ணனோ, எங்கெல்லாம் சந்தர்ப்பம் நேருகிறதோ அங்கெல்லாம் தான் ஒரு அவதாரம்தான் என்பதை அறுதியிட்டு, அதைச் சொற்களாலும் செய்கைகளாலும் உறுதிசெய்தபடி நடக்கிறான். ஆனால், சிலசமயம் 'நாளை நடக்கப்போவது என்ன' என்பதை அறிந்திராத, சாதாரண மனிதனைப் போலச் செயல்படுகிறான்.
ராமனைப் பற்றி எண்ணும்போது ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது. கடலுக்குக் குறுக்கே சேதுவைக் கட்டுவதற்கு முன்பாக ராமன், அதனைக் கட்டுவதற்காக வருணனின் அனுமதியை வேண்டிநின்று திருப்புல்லாணியில் காத்திருந்தும் வருணன் வராமல் போகவே, சீற்றம் கொண்டு கடல்மேல் பிரமாஸ்திரத்தைப் பிரயோகம் செய்ய எழுகிறான். அந்தச் சமயத்தில் ஓடோடி வரும் வருணன் ராமனைப் பற்பல விதமாகத் துதித்து அவனை அமைதிப்படுத்தி, 'நீ தாராளமாக என்மீது சேது அமைத்துக்கொள்' என்று சொல்கிறானல்லவா, அந்தசசமயத்தில் வருணன் துதியில் ஒரு பாடல் வருகிறது. அன்னைநீ அத்தன்நீயே (என்னுடைய தாயும் தகப்பனும் நீதான்.) அல்லவை எல்லாம் நீயே (அவை தவிர இந்த உலகத்தில் எனக்குள்ள உறவுகள், உறவின்மைகள் எல்லாமும் நீயேதான்). பின்னும் நீ முன்னும் நீயே (இந்த உலகத்தின் ஆதியும் நீதான்; அந்தமும் நீதான்.) பேறுநீ இழவும் நீயே (சொர்க்கமும் நரகமும் நீயேதான்.) என்னைநீ இகழ்ந்ததென்றது எங்கனே! (பிரமாஸ்திரத்தை என்மேல் செலுத்தி நீ என்னுடைய தன்மையை இகழ்வது பொருத்தமாகுமா!) ஈசனாய உன்னை நீ உணராய்! (ஐயா, நீதான் ஈசன். நீதான் இறைவன். இதை நீயே உணரவில்லை. உன்னாலேயே உன்னை உணரமுடியவில்லை. அவ்வாறு இருக்கும்போது,) நாயேன் எங்கனம் உணர்வேனுன்னை (வெற்று நாயான நான் எங்ஙனம் உன்னை உணர இயலும்! [ஏழையை மன்னிக்கவேண்டும்.]) |
|
'ஈசனாய உன்னை நீ உணராய்' என்ற சொற்றொடர்தான் ராமனிடத்தில் திரும்பத் திரும்பப் பேசப்படுகிறது. அது சரபங்கர் ஆசிரமத்தில் ராமனைக் கண்ட இந்திரனின் துதிமொழியானாலும் சரி, இந்த இடத்தில் வருணன் துதிப்பதானாலும் சரி, அரக்கனாக நின்று ராமன் பாதத்தால் மோட்சம் பெற்ற விராதனாக இருந்தாலும் சரி ('பாதங்கள் இவை என்னின் படிவங்கள் எப்படியோ' என்ற விராதனுடைய துதி மிகவும் பிரசித்தி பெற்றது); அல்லது இந்திரஜித்தின் நாகபாசக் கட்டிலிருந்து விடுவிக்க வந்த கருடன் துதிக்கும் மொழியானாலும் சரி. 'உன்னை நீ உணராய்' என்ற குறிப்பு அடிநாதமாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.
ஆனால் கண்ணனோ, தொடக்கம் முதலாகத் தன்னை ஒரு அவதார புருஷனாகவே அறிவித்தும் அறியப்பட்டும் வந்த ஒருவன். கிருஷ்ணனுடைய பால லீலைகள், பூதனை வதம், சகடாசுர வதம் போன்றவற்றைப் பார்க்க வேண்டுமானால் ஸ்ரீமத் பாகவதத்துக்குத்தான் போகவேண்டும். பாரதத்தில் அவை பேசப்படவில்லை. பாகவதத்தில்தான் பௌண்ட்ரக வாசுதேவன் என்ற இன்னொருவன் 'தானே உண்மையான அவதாரம்' என்று அறிவித்துக் கொண்டு, கண்ணனைப்போலவே சக்கரப்படையும் கௌஸ்துப மாலையும் தரித்துத் திரிந்து கொண்டிருந்ததும், கண்ணன் அவனை வதைத்ததும் பேசப்படுகின்றன. ஆனால், பாரதத்தில் கண்ணன் அறிமுகமாகும் திரௌபதி சுயம்வரக் காட்சி தொடங்கி, காதை ஈறாக, அவன் ஓர் அவதாரமே என்று உணர்ந்து பேசியவர்கள் ஏராளம் — பீஷ்மர், துரோணர், திருதிராஷ்டிரன் உட்பட. அப்படித்தான் கண்ணனும் பேசியும் செயல்பட்டும், விஸ்வரூபக் காட்சியைக் காட்டியும் (துரியோதனன் சபையில் எடுத்த விஸ்வரூபக் காட்சியை இங்கே குறிப்பிடுகிறேன்) வந்திருக்கிறான். என்றபோதிலும்.
சில குறிப்பிட்ட சமயங்களில் கண்ணனுடைய நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கைகளையும் பார்க்கும்போது 'நாளைக்கு என்ன நடக்கப்போகிறது என்று அறிந்தவன் இப்படிச் செய்வானா! இதுதான் நடக்கும் என்று உறுதியாகத் தெரிந்திருந்தும் இப்படியெல்லாம் செய்திருக்க வேண்டியது அவசியம்தானா' என்ற எண்ணம் தோன்றாமல் இருக்காது.
குறிப்பாக ஒன்றைச் சொல்கிறேன். ஜயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்துக்குள் கொல்வதாகவும், அப்படிக் கொல்லாவிட்டால், தான் தீயில் பாய்ந்து உயிர்விடப் போவதாகவும் அர்ஜுனன் சபதம் செய்கிறான் அல்லவா? அந்தச் சமயத்தில் அர்ஜுனனுடைய தேவதத்தம் ஒலிக்கும்போது அத்துடன் சேர்ந்துகொண்டு தன் பாஞ்சஜன்யத்தையும் ஒலித்து நின்றவன்தான் கண்ணன்.
அதற்குப் பிறகு, அன்றைய இரவுப் பொழுதின் தொடக்கத்தில் கௌரவர்களுடைய கூடாரத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளை ஒற்றர் மூலம் அறிந்துகொண்டபின், அர்ஜுனனிடம் வந்து, 'என்னடா முன்பின் ஆலோசிக்காமல், என்னைக்கூட ஒரு வார்த்தை கேட்காமல் இப்படி ஒரு சபதத்தைச் செய்துவிட்டாய்! நாளைக்கு அவர்கள் பாதி-சக்கர, பாதி-பத்ம வியூகமாக வகுத்து, அதன் மத்தியில் ஒரு ஊசி வியூகத்தை நிறுத்தி, அந்த ஊசியின் கண் பகுதியில் ஜயத்ரதனை நிறுத்தப் போகிறார்கள். (ஏறத்தாழ நாற்பத்தெட்டு மைல் நீளமும் இருபது மைல் அகலமும் கொண்ட) இந்தச் சைனியத்தை ஊடுருவி, மஹாரதர்கள் பற்பலரால் காக்கப்படும் ஜயத்ரதனை நாளை மாலைக்குள் சென்று அடைவது நடக்கிற காரியமா? யோசித்திருக்க வேண்டாமா அர்ஜுனா' என்று கவலையோடு கேட்கிறான்.
அர்ஜுனன் என்ன பதில் சொன்னான் தெரியுமோ?
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|