|
பள்ளி மாணவர்களுக்கு உதவ 'மேகதூதம்' காவிய நாடகம் |
|
- ராஜி ஸ்ரீதர்|செப்டம்பர் 2014| |
|
|
|
|
|
காளிதாசரின் 'மேகதூதம்' என்னும் காவிய நாடகத்தைக் கண்டு அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதைப் பார்க்கும்போது என் இளமை நினைவுகள் திரும்ப வந்தன. பன்னிரண்டு வயதில் தந்தையை இழந்த எனக்கு, கூட்டுக்குடும்பமும், உற்றார், உறவினரும், உணவு, உடை, உறைவிடம், படிப்பு என எதுவும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டனர். இதேபோல் இந்தியாவில் நம் கிராமங்களில் இலட்சகணக்கான குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் தள்ளியிருக்கும் பள்ளிகளுக்குச் செல்ல சிரமப்படும் அவலநிலையை மாற்ற, நாம் ஒரு சர்வதேச கூட்டுக் குடும்பமாகச் செயல்பட வேண்டும். AIM for Seva (AIMS) இந்தியாவின் கிராமங்களில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கருகில் தங்குமிடம், கல்விப்பொருள் வசதி, மருத்துவ வசதி மற்றும் கல்விசார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. இந்த இலவச மாணவர் விடுதிகள் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும் ஆதாரமாக இருக்கின்றன. மாணவர்கள் தவறாமல் பள்ளிக்குச் செல்லவேண்டும், படிப்பை அரைகுறையில் நிறுத்தக்கூடாது, நல்ல மதிப்பெண்கள் பெற்று மேலே படிக்க வேண்டும் என்கிற நல்லெண்ணத்தில் தோன்றியது AIMS. இதனை பூஜ்யஸ்ரீ சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் 2000 ஆண்டில் நிறுவினார். இந்தியாவின் 15 மாநிலங்களில் வசிக்கும் பதினான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்திட்டத்தால் பயனடைகின்றனர். நிர்வாகச் செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதால் 90% நன்கொடை மாணவர்களைச் சென்றடைகின்றன. 2020ம் ஆண்டுக்குள் 200 விடுதிகள் கட்டும் இலக்கை நோக்கி இந்த அமைப்பு செல்கிறது. எல்லா நன்கொடைகளும் அமெரிக்கா உள்நாட்டு வருவாய் பிரிவு 501©(3) கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
இதற்கு நிதி திரட்டவே காளிதாசரின் மேகதூதம் என்கிற காவிய நாடகம் மேடையேற்றப்படுகிறது. அதன் கதையைப் பார்க்கலாம்.
இமயத்திலிருக்கும் குபேர லோகத்திலிருந்து ஓராண்டுக் காலத்துக்கு நாடு கடத்தப்பட்ட இளம் யட்சன் ஒருவன் விந்திய மலைச்சாரலுக்கு வருகிறான். அங்கே அவன் தன் காதலியான யட்சியை எண்ணி ஏங்குகிறான். விரகத்தின் துன்பத்திலும் வலியிலும் துடிக்கிறான். அங்கிருக்கும் செடிகொடிகளும், பூக்களும், பட்டாம்பூச்சிகளும் அவனைத் தேற்ற முயற்சித்தும் பயனில்லை. ஒரு மேகத்தை அவன் தன் காதலியிடம் தூதாக அனுப்புகிறான். அந்த மேகம் கடந்து போகும் வழியிலுள்ள நாடுகள், நகரங்கள், ஏன் மரங்களைக்கூடக் கவிஞன் வெகு அழகாகத் தன் கவிதையில் சித்திரிக்கிறான். தனது காதல் தன் காதலிக்கானது மட்டுமல்ல; தன்னைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றின் மீதுமேதான் என்பதை அவன் மெல்ல மெல்ல உணர்கிறான். மனிதனும் இயற்கையும் ஒன்று என்னும் ஆற்றல்மிக்க அத்வைத சத்தியத்தைக் கவிதை அழகுற விவரிக்கிறது. |
|
இதற்கான இசையை பாம்பே ஜெயஸ்ரீ சிறப்பாக அமைத்திருக்கிறார். ஷீஜித் நம்பியாரும் பார்வதி மேனனும் மேடைக் கதையைத் திறம்பட அமைத்திருப்பதோடு நடனத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். துல்லியமான முகபாவங்கள் பார்த்தோரை வசீகரிக்கின்றன. பாரம்பரிய பரதநாட்டியத்தோடு பிற கலைவடிவங்களும் அழகுறச் சேர்க்கப்பட்டுள்ளன. பாதவேலை, முத்திரைகள், அபிநயங்கள் எல்லாமே கம்பீரமும் லலிதமும் கொண்டிருக்கின்றன. ஆடை அணிமணிகளும் ஒளியமைப்பும் பிரமிக்கச் செய்தன.
இது பாரத பாரம்பரியத்தை உணர்த்தும் உலகத் தரம் வாய்ந்த படைப்பாகும். இதைக் காண்பதால் ஏற்படும் மகிழ்ச்சி மட்டுமல்லாமல் ஓர் உயரிய நோக்கத்துக்கும் உதவும் வாய்ப்பு ஏற்படுகிறது. "தானம் என்பது இரட்டை வரம். அது கொடுப்பவரையும், கொள்பவரையும் பயனுறச் செய்கிறது" என்று கூறுகிறார் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி. உங்கள் அருகிலுள்ள நகருக்கு 'மேகதூதம்' வரவிருக்கிறது. தவற விடாதீர்கள்.
இடம் | நாள் | சான் ஃப்ரான்சிஸ்கோ | ஆக. 23 | அட்லாண்டா | 24 | வாஷிங்டன் D.C. | 29 | ராலே, NC | 30 | ஃப்ள்ஷிங், நியூ யார்க் | 31 | டாலஸ், டெக்சஸ் | செப். 1 | ஹூஸ்டன், டெக்சஸ் | 6 | சிகாகோ, இல்லினாய்ஸ் | 7 | டெட்ராய்ட், மிச்சிகன் | 12 | ஃபிலடெல்ஃபியா | 13 | பிங்காம்டன், நியூ யார்க் | 14 | அல்பனி, நியூ யார்க் | 19 | பாஸ்டன், மாசசூசட்ஸ் | 20 | நியூ ஜெர்சி | 21 |
மேலும் விவரங்களுக்கு: ட்விட்டர் - #aim4seva முகநூல் - aimforseva வலைமனை - www.aimforsevabayarea.org, www.aimforseva.org
ராஜி ஸ்ரீதர், விரிகுடாப்பகுதி, கலிஃபோர்னியா |
|
|
|
|
|
|
|