Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
சொல்லாயோ, வாய் திறந்து...
அயோத்தி
இதோ ஒரு இந்தியா
- காகுத்தன்|ஆகஸ்டு 2014|
Share:
என்னுடைய குறட்டைச் சத்தமே என்னை எழுப்பிவிட்டது. இந்தக் குறட்டையைக் குறைத்துக்கொள்ள வேண்டும். எப்படிக் குறைப்பது என்றுதான் தெரியவில்லை.

மாடியிலுள்ள கூரைக்கொட்டகைதான் எனக்கு வசதியான படுக்கை அறை. மல்லாந்து படுத்துக்கொண்டு அடுக்கடுக்காக ஓலை வேய்ந்திருக்கும் கூரையின் அழகை ரசிப்பதே ஒரு பொழுதுபோக்கு. அடுக்கடுக்காக ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்திருக்கிற காரணத்தாலே வெயில்கூட ஒழுகுவதில்லை.

மழையின் தாக்குதலுக்கும் அந்தக் கொட்டகை மசிந்து கொடுப்பதில்லை. என் கண்ணே பட்டுவிட்டதோ என்னவோ, நேற்றடித்த பயங்கரச் சூறாவளியில் ஒரு ஓலை பிய்த்துக்கொண்டு தொங்குகிறது. வெய்யிலில் நனையாத தரையை இப்பொழுது பனி பதம் பார்க்கிறது. ஆயிரம் ஓலைகள் அடுக்கடுக்காக இருந்தாலும் ஒரு ஓலை பிரிந்துவிட்டால் அது பெரிய ஊறு விளைவித்து விடுகிறது. அந்த இடத்தைச் சரிசெய்ய வேண்டும். பொழுது விடிகிறது.

எதிரே இருக்கும் ஏரிக்குள் தங்க விளக்காகச் சூரியன் நெருப்போவியம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.

"செங்கதிர்த் தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கிறோம் - அவன்
எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக"


என்று சூரிய வணக்கம் சொல்லிவிட்டு எழுகிறேன்.

இன்று ஜிம்ஜிம் சர்க்கஸ் அதிபரைப் பேட்டி காணவேண்டும். நாளையே கட்டுரையை வெளியிட வேண்டுமாம். ஆசிரியர் சொல்லிவிட்டார்.

ஜிம்ஜிம் சர்க்கஸில் மூன்று வயதுக் குழந்தை ஒன்றைச் சக்கரத்தில் படுக்கவைத்துச் சுற்றுகிறார்களாம். அதன்மேல் படாமல் மேலே ஊஞ்சலில் ஆடிக்கொண்டே ஒருவர் கத்தி வீசுவாராம். நாற்பத்தி இரண்டு கத்திகளாம். நாற்பத்தி இரண்டு என்ன கணக்கோ? மற்றப் பத்திரிகைகளில் செய்தி வருமுன் எங்கள் பத்திரிகையில் வந்துவிடவேண்டுமாம். 'நெருப்புச்சுடர்' பத்திரிகையாயிற்றே! சுடச்சுடச் செய்தி இருக்க வேண்டாமா? பறக்க வேண்டியதுதான்.

ஜிம்ஜிம் சர்க்கஸ் முதலாளியோடு தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். எட்டரை மணிக்கே வரச் சொல்லிவிட்டார். அன்று பன்னிரண்டு மணிக்கு ஒரு காட்சி தொடங்குவதால் அதற்குமுன் அவரைப் பேட்டி கண்டுவிட வேண்டும்.

சர்க்கஸ் கொட்டகை இரவில்தான் நன்றாக இருக்கும் போலிருக்கிறது. அந்தக் காக்கித் துணிக்கு வயசாகியிருக்க வேண்டும்."நெருப்புச் சுடரிலிருந்து தானே வரீங்க, வாங்க, வாங்க" வரவேற்பு பலமாகத்தான் இருந்தது.

"டேய் பையா, சாருக்குக் குடிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டுவா" என்றார் சர்க்கஸ் முதலாளி. தொடர்ந்து,"மன்னிக்க வேண்டும். இன்று எங்கள் சர்க்கஸில் அரைநாள் உண்ணாவிரதம். அதனால் உங்களுக்கும் தண்ணீர்தான்" என்றார். எனக்கு வியப்பாக இருக்கிறது. சர்க்கஸில்கூட உண்ணாவிரதமா? ஏதும் தகராறா?"

"எங்கள் சர்க்கஸில் யாருக்காவது உடல்நிலை மிக மோசமாக இருந்தால் எல்லோரும் அரைநாள் உண்ணாவிரதமிருந்து இறைவனை வேண்டிக் கொள்வோம்."

"இப்பொழுது யாருக்கு உடல்நிலை சரியில்லை?"

"ஒரு ஒட்டகத்துக்கு."

"ஒட்டகத்துக்கா?"

"ஆமாம். எங்களுக்குள் மனிதன், மிருகம் என்ற பேதமெல்லாம் கிடையாது."

எனக்கு வியப்பாக இருந்தது.

"இன்று அரைநாள் மிருகங்களுக்கும் உணவு கிடையாது."

வியப்பின் வேகம் டிகிரி டிகிரியாக உயர்ந்துகொண்டிருக்கிறது, வெளியே வருகிறோம். வாசலில் ஒட்டகத்தைச் சுற்றிப் பலர் கவலையோடு நிற்கிறார்கள். விலங்கின மருத்துவர் அதற்கு வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார். அசைபோடாமல் யானைகள் அசைந்து கொண்டிருக்கின்றன.

"சார், குழந்தையைச் சுத்திக் கத்தி வீசுற நிகழ்ச்சியைப்பத்தி உங்களைச் சில கேள்வி கேக்கணும்" என்கிறேன்.

"வாங்களேன், நம்ம ஆளுங்க இருக்கற இடத்துக்கே போவோமே. அவங்ககிட்டப் பேசுங்களேன்."

கூடரத்தின் அருகே கட்டிலில் ஒருவர் படுத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய கையில் ஏதோ காயம். அவருக்கு இன்னொருவர் மருந்து போட்டுக் கொண்டிருக்கிறார்.

"சார், இவருக்கும் உடம்பு சரியில்லையா?"

"ஆமாம். இவருடைய பெயர் டெங்கோ. நாகாலாந்துக்காரர். தீ விளையாட்டில் வல்லவர். நேற்றுச் சிறிது காயம் பட்டுவிட்டது. அவருக்கு மருந்து போடுபவர் தமிழர்."

அங்கே இந்தியாவின் எல்லைகள் இணைந்து கொண்டிருப்பதை உணர்கிறேன்.

"சார், இங்கே ஒரு இந்தியாவே இருக்கு. ரிங் மாஸ்டர் மாராட்டிக்காரர், பார் விளையாடுபவர்களில் வங்காளி, தெலுங்கர், மலையாளி எனப் பல மாநிலத்தவர் உண்டு. பயில்வான் ராஜஸ்தானத்தைச் சேர்ந்தவர். மோட்டார் சைக்கிள் வீரர் காஷ்மீரி."
"இவங்களெல்லாம் எப்படிப் பேசிப்பாங்க?"

"அது பிரச்சினையே இல்லை. சைகை இருக்கவே இருக்கு. எப்படியோ சமாளித்துக் கொள்கிறோம்."

கூடாரத்துக்குள் நுழைகிறோம்.

"பாரத் எங்கேம்மா?" என்ற முதலாளியின் கேள்விக்கு "அவனுக்குத் திடீர்னு உடம்பு சரியில்லை முதலாளி. தூங்கிக்கிட்டு இருக்கான்" என்ற குரல் கேட்கிறது. முதலாளியின் நெற்றியில் கவலையின் சாயல் படிகிறது.

"இன்னிக்கு நிகழ்ச்சிக்கு அவன் வரமுடியாதா?"

"ஜுரம் பலமா அடிக்குது முதலாளி."

"அவனுக்கு ஏதாவது ஆகாரம் கொடுத்தியா?"

"அது எப்படிக் கொடுக்கிறது? இன்னிக்குப் பகல்லேதான் உண்ணா விரதமாச்சே!"

"குழந்தைக்கு அதெல்லாம் ஒண்ணும் கிடையாதம்மா."

"சட்டம்னா எல்லாருக்கும் ஒண்ணுதானே முதலாளி."

"கத்தி வீசுற நிகழ்ச்சியைப் பார்க்க இன்னிக்கு நெறையப் பேர் வராங்க. இப்போ என்ன செய்ய? ரத்து செஞ்சுட வேண்டியதுதான்."

"வேண்டாம் முதலாளி. என் பொண்ணு பாரதி இருக்கா. அவளை வெச்சு நடத்திரலாம்."

"அவளுக்கு வயசு ஒண்ணுகூட ஆகலியேம்மா."

"சர்க்கஸ்காரங்களுக்கு வயசு ஒரு கணக்கா முதலாளி!"

முதலாளியின் கண்களில் ஈரம் கசிகிறது.

போருக்குச் செல்லத் தன் மகனையே அலங்காரம் செய்து அனுப்பிய அம்மறக்குலத்து மங்கை நினைவுக்கு வருகிறாள்.

"சார், இவங்கதான் அந்தக் குழந்தையோட அம்மா. மங்கம்மான்னு பேரு. இவ வீட்டுக்காரர் வங்காளி. நரேந்திரநாத் ராய். இப்பச் சொல்லுங்க சார், அது தமிழ்க் குழந்தையா, வங்காளக் குழந்தையா?"

எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை.

'இந்தக் குழந்தை இந்தியக் குழந்தை. அதனாலேதான் 'பாரத்' என்று பெயர் வைத்திருக்கிறோம். பெண்ணுக்குப் பாரதின்னு பெயர்."

இப்பொழுது என் கண்கள் பனிக்கத் தொடங்குகின்றன. அந்த நேரத்தில் அங்கே அவசரம் அவசரமாக ஒருவர் வருகிறார். "முதலாளி, கரலாக் கட்டை சுத்தும்போது நம்ம நாயர் கை சுளுக்கிடுச்சாம். இன்னிக்குப் பன்னிரண்டு மணி காட்சிக்கு தாமோதரன்தான் கத்தி வீசுறாரு. அவரிட்டே சொல்லிட்டேன்."

இதைக் கேட்டதும் மங்கம்மாவின் முகம் சுருங்கிவிடுகிறது.

"முதலாளி..." சொல்ல வந்ததைச் சொல்ல முடியாமல் தயங்குகிறாள்.

"கவலைப்படாதேம்மா. தைரியமா இரு. நாயர் வரதுக்கு முன்னாலே தாமோதரம்தானே கத்தி வீசிக்கிட்டு இருந்தார். அவர் மகா கெட்டிக்காரர். குழந்தைக்கு ஒண்ணும் ஆகாது. நம்மவங்க யாரும் தப்புச் செய்ய மாட்டாங்க."

"அதுக்கில்லே முதலாளி...."

"எனக்கு எல்லாம் தெரியும். கவலைப்படாதே"

"தம்பி,, நீங்களும் வாங்க. தாமோதரனைப் போய்ப் பார்க்கலாம்."

நான் அவரைப் பின்தொடர்கிறேன். "மங்கம்மாவைத் தாமோதரன் கல்யாணம் செய்துக்க விரும்பினார். ஆனா மங்கம்மா ராயை விரும்பிக் கல்யாணம் பண்ணிக்கிட்டா. இதனால் தாமோதரன் பழி தீர்த்துப்பாரோன்னு மங்கம்மா பயப்படறா" என்றார் முதலாளி.

அடுத்த கூடாரத்தை நெருங்குகிறோம்.

"தம்பி, அதோ சாமி கும்பிட்டுக்கிட்டு இருக்காரே, அவர்தான் தாமோதரன்." நாங்கள் சென்றதுகூடத் தெரியாமல் தாமோதரன் தொழுது கொண்டிருக்கிறார்.. நாங்கள் அவரை நெருங்குகிறோம். அவர் இறைவனிடம் வேண்டுவது காதில் விழுகிறது.

"ஆண்டவா, தப்பித்தவறி கத்தி குழந்தை மேலே பட்டுட்டா நான் வேணுமின்னு செய்ததா நினைப்பாங்க. குழந்தை மேலே கத்தி பட்டுட்டா அப்புறம் நான் உயிரோட இருக்க மாட்டேன். காப்பாத்துப்பா...."

முதலாளி நெகிழ்ந்துபோய்த் திரும்புகிறார்.

நான் அவர் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே வருகிறேன்.

"தம்பி, வாங்க, மத்தவங்களையும் பாக்கலாம்" என்கிறார் முதலாளி.

'வேண்டாங்க, இன்னிக்கி இதுக்குமேலே தாங்காது. உங்க ஜிம்ஜிம் சர்க்கஸின் நிகழ்ச்சிகள் ஜம்ஜம்முன்னு நடக்கட்டும். நான் வருகிறேன்"

வெளியே வருகிறேன்.

இந்தியா முழுதும் சுற்றிப்பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

கட்டுரை பிற்பகலில் தயாராகிவிடும்.

இப்பொழுதே தலைப்புத் தயார் - "இதோ ஒரு இந்தியா"

காகுத்தன்,
சிகாகோ, இல்லினாய்
More

சொல்லாயோ, வாய் திறந்து...
அயோத்தி
Share: 


© Copyright 2020 Tamilonline