Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | சிறப்புப் பார்வை | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | நூல் அறிமுகம் | பொது
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | அஞ்சலி | சாதனையாளர் | எங்கள் வீட்டில் | சமயம் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
கதிரவனை கேளுங்கள்
ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10c)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2014|
Share:
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இத்தொடரின் சில பகுதிகளில் ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், விற்பதா/வளர்ப்பதா, ஆராய்வதா/ஆரம்பிப்பதா, விமர்சகர்கள் முக்கியத்துவம், வருமான/லாப திட்டம், விற்பனை வழிமுறைகள் போன்ற பல யுக்திகளைப் பார்த்துள்ளோம். முற்பகுதியில் நுகர்வோர் மற்றும் நிறுவன மென்பொருட்களுக்கான தற்கால எதிர்பார்ப்புக்களை விவரிக்க ஆரம்பித்தோம். இப்பகுதியில் அதைத் தொடரலாம் வாருங்கள்!

*****


கேள்வி: கடந்த பல்லாண்டுகளாக மென்பொருள் துறை பல மாற்றங்களை அடைந்துள்ளது. இப்போது உருவாக்கப்படும் மென்பொருள் சேவைகளுக்கும், விற்பொருட்களுக்கும், பயனர் எதிர்பார்ப்புக்கள் என்ன? புது மென்பொருள் உருவாக்குகையில் நான் எந்தெந்த அம்சங்களுக்கு அதிகக் கவனம் செலுத்த வேண்டியுள்ளது?

கதிரவனின் பதில்: மென்பொருட்களில் பலவகை உள்ளதால் ஒவ்வொரு வகைக்குமான எதிர்பார்ப்புக்கள் வித்தியாசமாக உள்ளன என்று பார்த்தோம். நுகர்வோர் மென்பொருட்கள், மின்வலை மற்றும் இணையச் சேவைகள், நிறுவன மென்பொருட்கள் (enterprise software), மற்றும் கட்டமைப்பு மென்பொருட்கள் என்னும் வகைகளைப்பற்றி குறிப்பிட்டோம். மேலும் முற்பகுதியில், கைக்கணினிகளில் நுகர்வோர் பயன்படுத்தும் மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்களைப் பற்றியும், நிறுவன மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்பு விவரங்களையும் பார்த்தோம். இப்போது கட்டமைப்பு (infrastructure) மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்களைப் பார்ப்போம்.

மென்பொருள் வகைகளிலேயே, மிக அதிக எதிர்பார்ப்பு மாற்றங்கள் கட்டமைப்பு மென்பொருட்களில்தான் என்பது என் கருத்து என்று கூறியிருந்தேன். அது உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திருக்கலாம். மற்ற மென்பொருள் வகைகள் எவ்வளவு பளபளப்பான வியத்தகு மாற்றங்கள் அடைந்துள்ளன, அதையெல்லாம் விட்டுவிட்டு, போயும் போயும் வெறும் வெறிச்சென்று சுவாரஸ்யமற்ற கட்டமைப்பு மென்பொருட்களைப்பற்றி கதை அளக்கிறானே என்று அங்கலாய்த்திருக்கக் கூடும். மன்னித்துக் கொள்ளுங்கள்.

நுகர்வோருக்கும் (consumers) நிறுவனப் பயனர்களுக்கும் (enterprise users) கட்டமைப்பு ஒரு சுவாரஸ்யமற்ற துறை என்பதாலேயே கட்டமைப்பின் எதிர்பார்ப்புகளுக்கு விளைந்துள்ள மாற்றங்கள் பெரிது, வியக்கத்தக்கது. திரைக்குப் பின் வசிக்கும் கட்டமைப்பில் மற்ற மென்பொருட்கள் போல் அதைப் பயன்படுத்துபவர்கள் பொதுவாகப் பெரும் மாற்றங்களை எதிர்பார்ப்பதில்லை. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்றங்களை ஏற்றுக் கொள்கிறார்கள். அவ்வாறிருக்க, அப்பப்பா? சென்ற சில வருடங்களில் கட்டமைப்பின் மேல் உள்ள எதிர்பார்ப்புக்கள் எவ்வளவு மாறிவிட்டன. இவற்றில் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த்துள்ள மூன்றே மூன்று எதிர்பார்ப்புக்களை மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட்டு முடித்துக் கொள்கிறேன். (இல்லாவிட்டால் இதுவே ஆஞ்சநேயர் வால்போல் நீண்டுகொண்டே போகும்!)
முதல் எதிர்பார்ப்பு, பெட்டிகளாக மட்டுமே கிடைக்கப் பெற்ற கட்டமைப்பு இப்போது பெட்டிகளிலிருந்து விடுதலையடைந்து மென்பொருளாகவும், அது மட்டுமல்லாமல் மென்பொருள் சேவைகள் மற்றும் வலைமேகச் சேவைகளாக அளிக்கப்பட வேண்டும் என்பதுதான். சிஸ்கோ, ஜூனிப்பர், நெட்டேப், ஈஎம்ஸி, போன்ற பெரும் நிறுவனங்களிலிருந்து பெட்டிமேல் பெட்டியாக வாங்கித் தள்ளிய நிறுவனங்கள் தற்போது பெரிய பெட்டிகள் (scale-up boxes) வேண்டாம், எங்கள் வலைமேக அமைப்புக்களில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொள்ளக் கூடிய (scale-out) மெய்நிகர் தனிமங்களாக (virtual instances) அளிக்க வேண்டும் என்று வழியமைப்பி (router), தீச்சுவர் (firewall) போன்ற பல கட்டமைப்புக்களை மெய்நிகர் மென்பொருட்களாகவும், தீயமென்பொருட்களைத் தடுக்கும் (malware prevention) வெப்ஸென்ஸ் போன்ற சேவைகளாகவும் கேட்கிறார்கள். அதனால், புதிய கட்டமைப்பு வசதிகளை உருவாக்க எண்ணினால், பெட்டிகளாக மட்டும் அளிக்க எண்ணாமல், மெய்நிகர் மென்பொருளாகவும் அளிக்க வேண்டிய எதிர்பார்ப்பு உள்ளது என்பதை மனதிலிருத்திச் செயல்படுங்கள்.

மேல் குறிப்பிட்டதோடு நெருங்கிப் பிணைந்துள்ள இரண்டாம் எதிர்பார்ப்பு மென்பொருள் இயக்கக் கட்டமைப்பு (software defined infrastructure). கட்டமைப்பு மென்பொருளாக மட்டும் இருக்க இயலாது. ஆனால் வெகு வேகத்துக்கான பெட்டிகள் எங்கு தேவையோ, அங்கு முன்போல் எல்லாம் கூடி மூடப்பட்ட (closed proprietary) கட்டமைப்பாக இல்லாமல், வேகத்துக்கான பகுதியை மட்டும் பெட்டிகளில் வைத்துவிட்டு அவற்றுக்குத் திறந்த இடைமுகமளித்து, அறிவுபூர்வமான கணிப்புக்களையெல்லாம் வெளியுள்ள மென்பொருளில் செய்து பெட்டிகளின் இயக்கங்களைத் தேவையான மாதிரி ஆக்குவது. அப்படியாக்கப் பட்டால், பெட்டிகள் வகை பெருகி விலை குறையும் என்பது வாடிக்கையாளர் எதிர்பார்ப்பு. இது மின்வலையில் ஆரம்பித்து (software defined networking), இப்போது சேமிப்பகம், பாதுகாப்பு மட்டுமன்றி மொத்தத் தகவல் மையத்துக்கே பரவியுள்ளது (software defined data center). இந்த மென்பொருள் இயக்கக் கட்டமைப்பு எதிர்பார்ப்பையும் புரிந்துகொள்ள வேண்டும்.

கட்டமைப்பு மென்பொருட்களுக்கு வேறொரு திக்கிலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கைக்கணினி மென்பொருட்கள் ஸிரி போல் அறிவுற்றிருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ளது என்று பார்த்தோம் அல்லவா? அதே எதிர்பார்ப்பு கட்டமைப்பு மென்பொருட்களையும் ஆக்கிரமிக்க ஆரம்பித்துவிட்டது! பெரும்தகவல் அலசல் (Big data Analysis) என்ற ஒரு விஷயம்பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது, பல்வேறு வகைப்பட்ட தகவல்துளிகளை எண்ணமுடியா அளவுக்கு சேர்த்து அலசி ஆராய்ந்து அதிலிருந்து கடற்கரை மணலை அலசி வைரம் கண்டெடுப்பது போல் மிக முக்கியமான விவரத்தைக் கடைந்தெடுப்பது. இந்த நுட்பத்தைக் கட்டமைப்பு மென்பொருட்களும் பயன்படுத்தி, கட்டமைப்பு முன்னேற்றத்துக்கும், தகவல் மையங்களை மென்பொருளால் இயக்கவும் பயன்படுத்தப் படவேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பு. அதிலும், இன்னொரு முன்னேற்றம் என்னவென்றால் ஸிரி போல் இயந்திரக்கற்றல் (machine learning) எனப்படும் செயற்கையறிவு நுட்பத்தால், நாளாக நாளாக இன்னும் மேன்மேலும் அறிவுவளர்ச்சியுற்று, இன்னும் பலமான பலனளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். இந்தத் துறைக்கு தகவல்நுட்ப இயக்க அலசல் (InfoTech Operational Analytics) என்ற புதுப்பெயரே அளிக்கப்பட்டு வளரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இத்தகைய இயக்க அலசல் பலவிதங்களிலும் பயன்படுத்தப் படுகிறது. ஒரு முக்கியமான விதம், மின்வலை மற்றும் பயன்பொருள் பாதுகாப்பு (network and applications security). சமீபத்தில் ஏற்பட்ட பல கணினித் தாக்குதல்களால் டார்கெட் போன்ற பெரும் நிறுவனங்கள் பாதிக்கப் பட்டதாலும், அமெரிக்க தேசீய பாதுகாப்புச் செயலாண்மை (national security agency – NSA) பற்றிய செய்தி வெளிப்பாடுகளாலும் மின்வலைப் பாதுகாப்பு மிக அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதுவும், உள்புகுதல்களை மொத்தமாகத் தடுக்க இயலாமையும், உள்ளாட்கள் தாக்குதல்கள் (எட்வர்ட் ஸ்னோடென் போல்) வெளிவந்துள்ளதாலும், மின்வலைப் போக்குவரத்து அலசல் (network traffic analysis) மூலந்தான் தாக்குதல்களைக் கண்டுபிடித்து முட்டுக்கட்டையிட இயலும் என்ற முடிவுக்குப் பெரும்பாலோர் வந்துள்ள படியால், மேற்கண்ட பெருந்தகவல் அலசல்பற்றி இத்துறையில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இன்னொருவிதம் என்னவெனில், மின்வலையில் உண்டாகும் இடைஞ்சல்களுக்கான மூலகாரணங்களையும், மின்வலை இயக்கத்தை எவ்வாறு செம்மைப்படுத்துவது என்பதற்கும், பெருந்தகவல் அலசலும், இயந்திரக்கற்றலும் பயன்படுத்தும் எதிர்பார்ப்பு.

மேற்கண்ட விவரிப்பில் மென்பொருட்களுக்கானத் தற்கால எதிர்பார்ப்புக்களைச் சிறிதேனும் விளக்கியிருப்பதாக நம்புகிறேன். இன்னும் விவரித்துக் கொண்டே போகலாம் என்றாலும், இப்போதைக்கு இத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது என்று கருதுகிறேன்.

இதுவரை இக்கட்டுரைத் தொடரில் பத்து ஆரம்பநிலை யுக்திகளைப் பார்த்துள்ளோம். இன்னும் பலப்பல யுக்திகள் உள்ளன. ஆனால் இந்தப் பத்து யுக்திகளுக்கே பதினெட்டு மாதங்களாகி விட்டன! (ஒரு யுக்தியே ஏழு பகுதிகளாக விரிந்து விட்டது!) அதனால், ஆரம்பநிலை யுக்தித் தொடரைத் தற்போதைக்குப் பரணில் ஏற்றி வைத்துவிட்டு வேறு தொடரை ஆரம்பிக்க எண்ணுகிறேன். அத்தொடரை முடித்துவிட்டு, இந்த யுக்திக் கட்டுரைகளை மீண்டும் தொடர்வோம்.

(இடைவேளை)

கதிரவன் எழில்மன்னன்

*****


மீண்டும் 'சூர்யா துப்பறிகிறார்'

முப்பரிமாண மெய்ப்பதிவின் முடிச்சு!
தொழில்நுட்ப நிபுணர் சூர்யா தனது துப்பறியும் திறமையால், கிரண் மற்றும் ஷாலினியோடு இணைந்து பல தொழில்நுட்ப குற்ற மர்மங்களை இதற்கு முன்னர் தீர்த்து வைத்துள்ளது தென்றல் வாசகர்களுக்குத் தெரியும். இந்த வரிசையில் இன்னொரு விறுவிறுப்பான கதையைச் சொல்ல வருகிறார் கதிரவன் எழில்மன்னன். மெய்ப்பதிவு தொழில்நுட்ப நிறுவனம் (Bio-3D printing) ஒன்று பெரும் சிக்கலில் மாட்டியிருப்பதைச் சூர்யாவின் கவனத்துக்குக் கொண்டு வருகிறாள் ஷாலினி.

கிரணும் ஷாலினியும் புடைசூழ, இந்த மர்ம முடிச்சை அவிழ்க்கக் கிளம்பிவிட்டார் சூர்யா. எப்படியென்பதை வரப்போகும் தென்றல் இதழ்களில் வாசிக்கத் தவறாதீர்கள்!
Share: 




© Copyright 2020 Tamilonline