தேர்வு பெற்ற சிறுகதைகள் பெரிய மனசு
|
|
|
|
|
தென்றல் சிறுகதைப் போட்டி - மூன்றாம் பரிசு
"தஞ்சாவூரு மண்ணு எடுத்து" என்று அருமையான குரலெடுத்துப் பாடத் தொடங்கியவன் எதிரில் அமர்ந்திருந்த என்னைப் பார்த்ததும் முதல் வரியிலேயே நிறுத்தினான். "டேய், சாருக்குத் தொந்தரவாய் இருக்கும்டா, வேணாம்" என்றான். "டேய் கோபாலு, சும்மா பாட்றா. சார் ஒண்ணும் சொல்ல மாட்டார். சரிதானே சார்?" என்று திடீரென்று என்னிடம் திரும்பிக் கேட்டவனைப் பார்த்தேன். காற்சட்டையின் பின்புறப் பையிலிருந்து எடுத்த ஊதாநிறச் சீப்பினால் பின்புறமாய்ப் படியத் தலைவாரிக் கொண்டவன் அந்த சீப்பை வைத்துத் தாளம் போடுவதற்குத் தயாராய் இருந்தான்.
அவன் கேட்ட தொனி மரியாதையா கிண்டலா என்பதைக் கணிப்பதற்குச் சற்று கடினமாக இருந்தது. பதில் சொல்ல நான் வாயெடுப்பதற்குள் இன்னொருவன், "சார், நீங்க வேணும்னா இந்தப் பக்கம் வந்துருங்க, இந்தப் பசங்க இப்படித்தான் கலாட்டா பண்ணுவாங்க சார்" என்றான். குரலும் வார்த்தைகளும் அவன் அவர்களின் 'தலை'யாயிருக்கலாம் என்றன.
சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணத்தை நாடிச் சென்றுகொண்டிருக்கும் 6:45 மின்வண்டி அப்போதுதான் பெரம்பூரைக் கடந்திருந்தது. சரியான கூட்டம்!
"இருக்கட்டும்பா, நீங்க பாட்டுக்குப் பாடுங்க. எனக்கொண்ணும் தொந்தரவில்லே!" என்றேன் தணிவான குரலில். "சாரே சொல்லிட்டார்றா. அப்புறம் என்னடா, பாட்றா நீ!" என்ற ஊதா சீப்புக்காரன் ஒரு கையில் சீப்பாலும், மறுகையின் மணிக்கட்டின் உட்புறத்தாலும் ரயில் சுவரில் தன் தாளத்திறமைக்கு ஒரு வெள்ளோட்டம் காட்டினான். அந்த கோபாலும் கொஞ்சம் வழிசலாகச் சிரித்து, பின் பாடத் தொடங்கினான்.
சோடாப் புட்டி கண்ணாடியும், பின்மண்டை வழுக்கையுமாய் இருக்கும் என்னிடம் இந்த இளைஞர்கள் இவ்வளவு மரியாதை காட்டுவதே அதிகம் என்ற திருப்தியுடன் அவர்களை ஒரு நோட்டம் விட்டேன். ஆறுபேர் உட்காரக்கூடிய அந்த எதிரெதிர் இருக்கைகளில் என்னை எட்டாயாக்கிய அந்த ஏழு பேருக்கும் வயது மிஞ்சிப் போனால் இருபதிலிருந்து இருபத்திரண்டுக்குள் இருக்கும். சன்னமான அழுக்குத் தெரியும் உடைகளும், அவற்றிலிருந்த வியர்வை வரைபடங்களும் அவர்கள் கல்லூரிக் காளைகளல்லர் என்பதைக் காட்டின. அதுமட்டுமல்ல, மேலே இருந்த அரையடிக்கு முக்காலடி ரெக்ஸின் பைகளும் அவற்றின் பக்கவாட்டு வாய்களில் செருகப்பட்டிருந்த 'வண்ணத்திரை', 'சினிமா எக்ஸ்பிரஸ்' இத்யாதிகளும் அவர்கள் கிண்டியிலோ மண்ணடியிலோ ஏதோவொரு வேலைசெய்து வீடுதிரும்பும் சாதாரணக் குடிமகன்கள் என்று இரைந்தே அறிவித்தன.
'சாதாரணக்' குடிமகன்களா? சட்டென்று எனக்குள் ஒரு குற்றவுணர்ச்சி. அப்படியென்றால் நான் யார்? வானத்திலிருந்து குதித்தவனா?
"மிஸ்டர், உங்களுக்குத் திருமணமாகி விட்டதா?"
"ஆம்."
"அப்படியானால் உங்கள் மனைவி ...?"
"அவள் கூட வரவில்லை."
"அப்போது நீங்கள் தனியாகத்தான் செல்கிறீர்களா?"
"ஆம்."
"அவர்களை ஏன் அழைத்துச் செல்லவில்லை?"
'அதைப்பற்றி உனக்கென்னடா, நான் போக வழிகேட்டால்...' உள்ளே எழுந்த எரிச்சலை அடக்கி ஓர் அசட்டுச் சிரிப்புடன், "பொருளாதாரம்..." என்று நான் இழுப்பதற்குள் ஏற்பட்ட இடைவெளியைப் பயன்படுத்தி என்னைக் கையமர்த்திய அந்த அதிகாரி, "ஓக்கே, சற்று அங்கே உட்காருங்கள், கொஞ்ச நேரம் கழித்து அழைக்கிறோம்" என்றான் என் முழு பதிலுக்குக் காத்திராமல்.
பிறகு? அவனுக்கு நான் ஒரு பொருட்டா? அந்த அமெரிக்கனுக்கு நான் ஒரு 'சாதாரணக்' குடிமகனாகத்தானே பட்டிருக்கவேண்டும்? அதிலும் இந்தியக் குடிமகன்! நான்கு மணிநேரம் ஆகியும் நெஞ்சுக் கசப்பு நீங்கவில்லை.
"சார், வேர்க்கடலை எடுத்துக்குங்க."
குரல் கேட்டுத் திரும்பி வந்தேன். பாடகனுக்குப் பக்கத்திலிருந்தவன் - சட்டைக் காலருக்குள் கழுத்தைச் சுற்றி காப்பிக் கலரில் கட்டம் போட்டிருந்த கைக்குட்டையைச் செருகியிருந்தான் - அவன் நீட்டியிருந்த கையிலிருந்து கடலைப் பொட்டலம் ஒன்று என்னைப் பார்த்தது. ஏழு மணியாகியும் ஏப்ரல் மாதப் புழுக்கம் ஓடும் வண்டியிலும் வேதனை செய்தது.
"வேணாம்ப்பா, தேங்க்ஸ்."
"பரவாயில்லே சார், கொஞ்சம் எடுத்துக்குங்க."
"சாரைக் கட்டாயம் பண்ணாதேடா, கடலை பிடிக்காது போல," என்றான் என் பக்கத்திலிருந்த நான்காமவன். என்னை அழுத்தி உட்கார்ந்திருந்த அவனுடைய வேர்வை மணம் அவ்வப்போது நெருடியது.
"கடலை பிடிக்கலையோ, நம்மளைப் பிடிக்கலையோ?" என்றான் இன்னொருவன் சிரிப்புடன்.
உடனே நான், "அதெல்லாம் இல்லப்பா" என்றவாறே கொஞ்சம் எடுத்துக் கொண்டேன்.
"ஸோ, நீங்கள் அமெரிக்காவிற்குச் சுற்றுலா போகிறீர்கள்; இல்லையா?"
அவன் மென்று கொண்டிருந்த சிவிங்கத்தையே பார்த்துக்கொண்டிருந்த நான் கேள்வியைத் தவறவிட்டதில், "பெக் யுர் பார்டன்" என்றேன்.
"நீங்கள் அமெரிக்கா செல்லும் காரணம் என்ன?" என்றான் அழுத்தமாக. குரலில் சினம் சற்று எட்டிப் பார்த்தது.
"யெஸ், யெஸ், சுற்றுலா செல்கிறேன்."
அந்த அறையில் குளிர்பதனம் சற்று அதிகமாகவே முடுக்கிவிடப்பட்டிருந்தது. காதுக்கருகில் ஊசியாய்க் குளிர்காற்று. கருப்புக் கண்ணாடிகள் இருள் கவிந்திருப்பது போல் ஓர் தோற்றத்தைக் கொடுக்க எனக்கு ஏற்கனவே சென்னையிலிருந்து வெகுதூரம் சென்றுவிட்டதாய்ப் பட்டது. 'கபக்'கென்று நெஞ்சுக்குள் ஒரு மகிழ்ச்சி. விசா கிடைப்பது திண்ணம். இல்லையேல் ஏன் இந்த மீள்விசாரணை?
"ஸாரி; நீங்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பி இந்தியா வருவது உறுதியாகத் தெரியவில்லை. எனவே விசா மறுக்கப்படுகிறது."
நான் மறித்து ஏதோ சொல்ல முற்படுவதற்குள் 'பச்சக்' என்று குத்தி என்பக்கம் என் விண்ணப்பத்தைத் தள்ளிய அந்த அதிகாரி, "குறைந்தது ஆறு மாதம் கழித்து - உங்கள் நிலைமை மாறினால் - நீங்கள் மறுபடி விண்ணப்பிக்கலாம்" என்றான். அதற்கு மேல் பேசுவதற்கு ஏதும் இல்லை என்பது தெளிவாக, தளர்வுடன் எழுந்தேன்.
இருபது ஆண்டுகளாய் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த எல்.ஐ.சி. வேலை நான் திரும்பி வருவதற்கு உத்தரவாதமில்லையா? வீட்டுக் கடன், மனைவியின் சிகிச்சைக்குக் கடன், தேன்மொழியின் சட்டக்கல்லூரி செலவுக்கான கடன், என்று எல்லாப் பிடித்தமும் போகப் பன்னிரண்டாயிரம் கைக்கு வந்தாலும் காகிதத்தில் இருக்கும் இருபத்து நான்காயிரம் ரூபாய் ஊதியம் உத்தரவாதம் இல்லையா? அட, இங்கேயே விட்டுவிட்டுச் செல்லும் என் மனைவி, மகள்? என்ன உளறுகிறான் இந்த அமெரிக்கன்? நான் மட்டும் அங்கே அமெரிக்காவில் தனியாக இருந்து என்ன செய்யப் போகிறேன்? நிலைமை மாறினால் திரும்பி விண்ணப்பிக்கலாமாம்! ஆறு மாதத்தில் என்ன கிழியப் போகிறது? ஹா! சிரிப்புத்தான் வருகிறது!
"த பார்றா, சாரே சிரிக்கிறார்" என்றான் கைக்குட்டைக்காரன். வாயில் நிறுத்திய சிரிப்புமாய், அந்தரத்தில் நிறுத்திய சீப்புமாய் என்னையே உற்றுப் பார்த்த தாளக்காரன், "டேய், அவர் நாம சொன்னதுக்கில்ல, வேற ஏதோ நினைச்சிச் சிரிக்கிறார்டா; ரைட்டா சார்?" என்றான்.
'பைத்தியம்' என்ற பெயர்தான் எனக்கு இப்போது பாக்கி! சுதாரித்துக் கொண்டவன், "என்ன சொன்னீங்க?" என்றேன். "இந்தா இருக்கானே, ஆறுமுவம்; இவனப்பத்திதான் சார் பேசிக்கிட்டிருந்தோம்." ஆறுமுகம் எனப்பட்டவன் என் பக்க இருக்கையில் ஓரத்தில் ஒட்டிக்கொண்டிருந்தான். மடித்துவிடப்பட்ட முழுக்கைச்சட்டையும் காக்கிக் காற்சராயும் போட்டிருந்தவன் உட்கார இடம் போதாதிருந்ததால் பக்கவாட்டில் திரும்பி ஒரு காலை இருபக்க இருக்கைகளுக்கு இடையில் வைத்தபடிக் கைகளைக் கால்களின் மேல் முட்டுக்கொடுத்தவாறு உட்கார்ந்திருந்தான். முகத்தில் தாறுமாறாக இரண்டு மாத தாடி.
"ஆறுமுவத்தோட ஆளு சார்! பக்கத்துப் பெட்டிலதான் இருக்குது. பத்து மாசமா நம்ம மாம்ஸுக்கு 'பொவ்வு' காட்டுது சார்" என்று தொடர்ந்தான் சீப்புக்காரன்.
"சும்மா இர்றா சிவா" என்றான் ஆறுமுகம். அவன் முகம் வருத்தத்திலும் அவமானத்திலும் சற்று சுருங்கியது. எனினும் 'நண்பர்கள் நம் பக்கம்தான்' என்னும் பெருமை அவன் கண்களில். "போன மாசம்தான் சார்," என்று இழுத்த சீப்பு சிவா மேலும் ஏதோ சொல்வதற்கு முன், "அடக்கி வாசிடா, வள்ளிப்பொண்ணு பக்கத்திலதான் ஒக்காந்திருக்குது," என்றான் 'தலை' போலிருந்தவன், மேற்பாதி கம்பிவலையால் பிரிக்கப்பட்ட பெண்கள் கம்பார்ட்மென்ட்டை சாடையில் காட்டியவாறே. |
|
"கேக்கட்டுமே ராஜா, எனக்கென்ன பயம்?" என்று கேட்ட சிவா குரலைச் சற்று தாழ்த்திக்கொண்டு என்னிடம், "பேர்கூட என்னா பொருத்தம், பாருங்க சார்: ஆறுமுவம், வள்ளி! ஆனா சேரத்தான் குடுத்து வக்கல, என்ன சொல்றது?"
'மாம்ஸ்' என்று அழைக்கப்பட்ட ஆறுமுகத்தை நான் மறுபடி பார்த்தேன். அடிபட்ட கண்கள்.
"பொண்ணு விருப்பப்படலேன்னும்போது நாம என்னப்பா செய்யமுடியும்?" என்றேன். ஆறுதலும் அறிவுரையும் மற்றவர்க்கு என்னும்போது எவ்வளவு இலகுவாய் வருகிறது!
"ஆமா சார். அத்தையேதான் நாங்களும் சொல்றோம். கேக்குதா மாம்ஸு? தாடியோட அலையுது!"
"ஆனா ஒண்ணுமா, எந்தக் கடையில எண்ணெ வாங்கறான்னு எனக்குத் தெரியணும்டா," என்றான் இதுவரை நான் கவனிக்காதிருந்த ஐந்தாமவன்.
"தாடியப் பாரு, சும்மா கருகருன்னு!" இருக்கும் ஏழு பேர்களில் இவன்தான் சற்று பளிச்சென்று துணி உடுத்தியிருந்தான். எனக்கு 'சார்' போடாததையும் கவனித்தேன். ஆறுமுகத்திற்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் அவன் பேசியது நேராய் மேலே எங்கோ பார்த்துக்கொண்டு. முகத்தில் சற்றும் சிரிப்பில்லை. அவ்வார்த்தைகளை ஏற்கனவே மற்றவர்கள் கேட்டிருக்கக்கூடும். இருப்பினும் சிரித்தார்கள்.
சூழ்நிலையை மேலும் எளிமையாக்க எண்ணி, "என்னப்பா நீங்க, பாடறத நிறுத்திட்டீங்க? இன்னும் பாடலாமில்லே?" என்றேன்.
"ரைட் சார். கோவாலு, பாட்றா."
"எனக்குத் தொண்டத்தண்ணி வத்திப் போச்சிடா. நீ பாட்றா சிவா."
முதன்மை விளக்குகள் அணைந்து, பின் கண்ணிமைக்கும் நேரத்தில் பிற்காப்பு விளக்குகள் எரிய, வண்டி அம்பத்தூரைத் தாண்டி அன்னனூர் மின்கடத்தி மாற்ற நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. இப்போது காற்றில் சற்று குளிர்ச்சி இருந்தது இதமாயிருந்தது.
பாடு என்று பணிக்கப்பட்ட சிவா தன் சீப்பினால் தட்டிக்கொண்டே லயிப்புடன் "ஊதாக் கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்?" என்று எடுத்தான். எனக்கு வியப்பாய் இருந்தது. ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கும் முன்னதாக ரயிலேற வேண்டும். நாளெல்லாம் வேலைசெய்துவிட்டு இப்படி மாலை ஏழெட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறார்கள். ஞாயிறு ஒரே நாள்தான் வாரத்தில் விடுமுறையாயிருக்கும். இப்படியிருக்க இவர்களுக்கு ஒரு வார்த்தை பிசகாமல் பழைய பாடலானாலும் சரி, புதுப்பாடலானாலும் சரி, எப்படி மனப்பாடமாகத் தெரிகிறது? செல்பேசியைப் பேச மட்டுமே பயன்படுத்தும் என் கேள்வியின் அபத்தம் எனக்கு உடனே உறைத்தது.
அது ஒருபக்கம் இருக்கட்டும். நாட்டில் நடப்பது ஏதாவது இவர்களை பாதிக்கிறதா? தேர்தலாவது, தேவயானி கொப்ரகடேயாவது! அமெரிக்க டாலரைத் தேள் கொட்ட இந்தியப் பொருளாதாரத்தில் நெறி கட்டும் விபரீதம் அரங்கேறிக் கொண்டிருந்தாலும் இங்கே இந்த முருகன் வள்ளியையும் சிவன் பார்வதியையும் துரத்துவதைத் தவிர வேறெதைப் பற்றியும் கவலைப் படுகிறார்களா? என்ன இது? என்னை மீண்டும் நான் கடிந்து கொண்டேன். இவர்களைக் குற்றம் சொல்லுமளவுக்கு நான் என்ன பெரிதாய்ச் சாதித்து விட்டேன்?
தம்பி அமெரிக்காவில் இருக்கிறான், போய்வரப் பணம் தருகிறான் என்று நானும்தான் விசாவுக்காக அமெரிக்க கன்சலேட் வாசலில் இரண்டு மணிநேரம் தவம் கிடந்தேன்! 'இந்திய அமெரிக்க நல்லுறவு' என்பது இங்கிருந்து அங்கு செல்லும் மூளைகளுக்கும் அங்கிருந்து இங்கு வரும் உருளைக்கிழங்கு சிப்ஸுகளுக்கு மட்டும்தான் என்பது நன்றாகவே தெரிந்தும் 'சுற்றுலா விசா' வாங்கச் சென்றேன். மனுஷன் மாதிரியா நடத்துகிறார்கள்! அமெரிக்கர்கள் இந்தியா வருவதற்கு விசா வாங்குவதில் ஏதும் தடையிருக்கிறதா? எவ்வளவு ஊதியம் என்றெல்லாம் அங்கே இந்தியத் தூதரகத்தில் கேட்பார்களா? அடுத்த முறை நியூஜெர்சியிலிருந்து பரத் பேசும்போது இதுபற்றி அவனைக் கேட்கவேண்டும்!
"சார், இப்போ நீங்க ஏதாவது பாடுங்க சார்!"
இதோ என்னைப் பார்த்து ஏதோ சொல்கிறானே இவனுடய ஊதியம் எவ்வளவு? மூவாயிரம் இருக்குமா?
"உன்னோட சம்பளம் எவ்வளவுப்பா?" என்னையறியாமல் எண்ணங்கள் வார்த்தைகளாய் விழுந்தன.
"என்ன சார், பாடுங்கன்னா சம்பளம் எவ்வளவுன்னு சம்மந்தா சம்மந்தம் இல்லாம கேக்கிறீங்க!"
"டேய் சம்மந்தம் இருக்குடா. அண்ணன் எஸ்பிபிக்குச் சொந்தம். கைமேலெக் காசுவச்சாதான் பாடுவார். அவரோட 'ரேட்'டுக்கு உன் சம்பளம் தேறுமான்னு தெரிஞ்சுக்கத்தான் கேக்கிறார்" என்றான் முன்பு ஆறுமுகத்தின் தாடியைக் கிண்டல் செய்த அதே இளைஞன்.
அவன் என்னை ஏளனம் செய்ததை உணர்ந்தாலும் பாதிக்கப்படாத என் முகபாவத்தைக் கண்ட மற்றவர்கள் ஒருவிதப் பரிவுடன் என்னைப் பார்க்க அதில் ஒருவன், "டேய் சும்மா இர்றா, இவன் ஒருத்தன், எப்பப் பார்த்தாலும் யாரு என்னான்னு தராதரம் பார்க்காம!" என்றான்.
என் நிலைக்கு மெதுவாகத் திரும்பிய நான், "சாரி, நானா? பாடறதா? எனக்குப் பாட வராதுப்பா," என்றேன்.
என்னையே அவர்கள் விடாமல் பார்த்துக் கொண்டிருக்க, ஆபத்தான நேரத்தில் உதவுமுகமாய் ராஜா சொன்னான்: "சாரை விடுங்கடா, நான் பாடறேன் இப்போ" என்றவுடன் எல்லோரும் அவன் பக்கம் திரும்பினார்கள்.
"வசந்த முல்லை போலே வந்து - அசைந்து ஆடும் பெண்புறாவே ..."
அவன் பாடுவதைக் கேட்டவுடன் ஒரு கணம் சில்லிட்டது. நான் இதுவரை கேட்ட எந்தவொரு சினிமாக் குரலுக்கும் குறைந்ததல்ல அந்தக் குரல். இந்தப் பாடல் வெளிவந்தபோது இந்தப் பையன் பிறந்திருக்கவே மாட்டானே? ஆனாலும் என்னவொரு ஈர்ப்புடன் பாடுகிறான்? இவனுடைய 'ஆளும்' பக்கத்துப் பெட்டியில் இருப்பாளோ?
அவன் பாடி முடிக்கவும் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் வண்டி நுழையவும் சரியாக இருந்தது. எல்லோரும் எழுந்து கொண்டார்கள். "அப்போ, வர்றோம் சார்" என்றனர் ஒவ்வொருவராக.
ரயில் முழுதுமாக நிற்குமுன் ஓட்டத்திலேயே ஒருவர் பின் ஒருவராக இறங்கத் தொடங்கினார்கள்.
"டேய் சிவா, உன்னோட ஆள நான் வூட்டு வரைக்கும் கொண்டுவுட்டுட்டு வரட்டுமா?"
"மவனே பல்லு பேந்துடும்."
"அட, மச்சிக்குப் பார்றா கோவத்தை! உனக்கு ஆளுன்னா எனக்குத் தங்கச்சிதானடா. டேய் ஆறுமுவம். நேரா வூட்டுக்குப் போற வழியப் பார். நாளைக்கி அஞ்சு-நாப்பத்தெட்டப் புடிக்கணும்!"
கடைசியாய் இறங்கவிருந்த ராஜா என்ன நினைத்தானோ தெரியவில்லை. என்னிடம் திரும்பி வந்தவன், "சார் தப்பா நினைச்சுக்காதீங்க. நீங்க ஏதோ கவலையில இருக்கீங்கன்னு தெரியுது. சின்னப் பசங்க சார். அசால்டா நடந்துக்கினாங்க; கண்டுக்காதீங்க. உங்களுக்கு என்ன கவலைன்னு எனக்குத் தெரியல சார். ஆனா அதையே நினைச்சிக்கிட்டிருந்தா வலிக்கத்தான் செய்யும். எங்களையே பாருங்க சார்; நாளைக்கு வேலை நிக்குமாங்கிறதே நிரந்தரமில்ல. ஆனா அதையெல்லாம் நினைச்சா ஆவுமா? ஆட்டம் பாட்டம்னுட்டு சந்தோஷமா வரலே?"
பல்தெரியச் சிரித்துவிட்டு என்னிடமிருந்து விடையேதும் எதிர்பாராமல் சட்டென்று ரயிலிலிருந்து இறங்கி பிளாட்பார இருளில் மறைந்தான்.
கோவர்தனன் இராமச்சந்திரன், கேன்டன், மிச்சிகன் |
|
|
More
தேர்வு பெற்ற சிறுகதைகள் பெரிய மனசு
|
|
|
|
|
|
|
|