Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | சிறப்புப்பார்வை
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | நூல் அறிமுகம் | Events Calendar | பொது | முன்னோடி | ஜோக்ஸ் | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
விசாலி, கார், விருந்தாளி
தென்றல் சிறுகதைப் போட்டி 2014
கப்பல் பறவை
காத்திருப்பு…
- ஆனந்த் ராகவ்|ஜூன் 2014||(6 Comments)
Share:
(தென்றல் சிறுகதைப் போட்டி-2014 யில் இரண்டாவது பரிசு பெற்ற கதை)

வீட்டை அடைந்ததும் வாசல் கதவருகிலிருந்த ஜோடி செருப்பு கண்ணில் பட்டது. அவனுக்குப் பரிச்சயமான செருப்பு. முழுவதும் மூடாத கதவு வழியே கசிந்த பேச்சுக்குரல்கள் அவன் உள்ளே நுழைந்ததும் நின்று போயின. தங்கதுரைக்கு தெரியும் ரேணுகாவும் அவன் மாமனாரும் தன்னைப் பற்றிதான் விவாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று. மூன்று வருடங்களாய் அவ்வப்போது எழுந்து அடங்கிப்போகிற பேச்சு.

"வாங்க மாப்ள" என்றார் அவர். எழுந்து கதவருகில் இருந்த ஒற்றை இருக்கையை அவனுக்குக் காண்பித்துவிட்டு எதிர்ப்புறம் இருந்த சோஃபாவில் இடம் பெயர்ந்து அமர்ந்துகொண்டார். தங்கதுரை பதிலுக்கு அவரை வரவேற்றவுடன், "போன தடவை பாத்ததுக்கு ரொம்ப மெலிஞ்சிட்டீங்க" என்றார் கரிசனத்துடன். "அவருக்கு காப்பி எடுத்தாம்மா" என்றார் மகளிடம். அவனை மிகவும் ஜாக்கிரதையாகவும் பரிவுடனும் கையாளவேண்டிய சுமை அவர் வார்த்தைகளில் பொதிந்திருந்தது. அந்த முகமன்களின் பின்னால் ஒளிந்திருக்கும் எண்ணங்களில் முழு வீச்சும், சாப்பிட்டுவிட்டு ஊர் அடங்கிய பின் இரவில் மெல்லத் தலைதூக்கும்.

பெண்ணைப் பார்க்க வந்திருக்கிறார். அவளுக்கு ஆறுதலாய் நாலு வார்த்தை சொல்ல. ஃபோன் போட்டு அவள் ஒரு பாட்டம் அழுதிருக்கவேண்டும். "இன்னும் எத்தனை நாளு இப்பிடி இருக்கறது? சாவு விழுந்த வீடுபோல வீட்டுல எப்பவும் ஒரு இறுக்கம். நீங்க வந்து கொஞ்சம் அவருகிட்ட பேசுங்கப்பா" என்று மன்றாடியிருக்கவேண்டும். அவ்வப்போது வந்து அவனிடம் முறையிடுவதுமாய் அவன் பிடிவாதத்தை வெளிப்படுத்திய பிறகு திரும்பிப் போவதுமாய்க் கடந்துபோன வருடங்கள். வருடங்கள் கரையக் கரைய இப்போதெல்லாம் பேசவேண்டிய அவசியம்கூட இல்லாமால் அவர் வருகையே தன்னிடம் செய்யப்போகிற முறையீடல்களை நினைவுபடுத்தி அவனைத் தயார்செய்துவிடுகிறது.

அவரிடம் பேசிவிட்டு வரவேற்பறைக்கு ஒட்டினாற் போல இருந்த படுக்கையறையில் நுழைந்தான். புழுக்கமும் லேசான மருந்து வாசனையும் பரவியிருந்த இறுக்கமான, அவனைக் கொஞ்சம்போல நெகிழ்த்திய படுக்கை அறை. அப்பாவின் அறை. "அப்பா…" என்று அழைக்கிறான். விளக்கைப் போடுகிறான்.

ஒரு கை வேலோடும் புன்னகையோடும் பாலமுருகன் சிரிக்கும் நேற்றைய தேதி கிழித்த தினசரி காலண்டரும், அவரும் அம்மாவும் இணைந்து நிற்கும் கல்யாண புகைப்படமும், குடும்பமாய் ஏலகிரி மலையில் எடுத்த படமும் கட்டிலுக்கு எதிர்த்திசையில், அவர் கண்விழித்துப் பார்த்தால் தெரியும்படி. காலையில் கவசமும், மாலையில் பாட்டும் கேட்க ஒரு சிடி ப்ளேயர் கட்டிலுக்கு அருகில். இடது மூலையில் சுவரில் பொருத்திய சின்ன அலமாரியில் வார இறுதியில் தங்கதுரை அவருக்குப் படித்துக்காட்டும் தி.ஜா.வும், ஜெயகாந்தனும் மற்றவர்களும். வலதுபக்கம் கதவை ஒட்டினாற்போல சுவரோடு பதிந்திருந்த மரக் கேபினெட்டுகளில் அவரின் சொற்ப உடமைகள். அவரின் ஞாபகங்களும், ஆசைகளும், அத்தியாவசியங்களும் நிரம்பியிருந்த அவருக்கென்றே ஒதுக்கப்பட்ட தனியறை.

"ஏம்ப்பா லேட்டு?"

"இன்னைக்கு ஆபீஸ்ல கொஞ்சம் வேலைப்பா. டெல்லிலந்து டைரக்டர் வந்திருந்தாரு. கொஞ்சம் கண்டிப்பானவர்னு ஏகத்துக்கும் கெடுபுடி. இன்னைக்குன்னு பார்த்து யூனியன்காரங்க பிரச்சனை பண்ணாங்க. ஒரே அமளி. பேச்சு வார்த்தை. மீட்டிங் முடியவே ஆறரை மணி ஆயிருச்சு," அலுவலகத்தில் நடந்தவற்றை நிதானமாய்ச் சொல்கிறான்.

"ரொம்ப புழுக்கமா இல்ல?"

"ஜன்னலைத் திறக்கட்டா? வெளிய நல்லா குளிராத்தான் இருக்கு. மழை வராப்பல இருக்கு."

மூடியிருந்த ஜன்னல் கதவுகளில் ஒன்றைத் திறந்தான். மின்விசிறி வேகத்தைச் சற்றுக் கூட்டினான். மூலையில் கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டான். அப்பாவின் கையை மெல்ல எடுத்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான். அலுவலக வேலை சுவாரசியமற்றுப் போவதாகவும் வேறு நல்ல வேலையைத் தேடலாம் என்று யோசித்து வருவதாயும் சொல்கிறான்.

அலுவலகத்திலிருந்து திரும்பி வர எவ்வளவு நேரம் ஆனாலும் தினமும். ஒரு பத்து நிமிடங்களாவது அவரிடம் பேசுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறான். ரேணுகா அந்த அறைக்குள் வருவதை நிறுத்திப் பல மாதங்களாயின. அவள் கோபம் காரணம், குழந்தைகளும் அப்பாவை உதாசீனப் படுத்திவிடக் கூடாதென்று அவர்களைப் பழக்கியிருக்கிறான். பள்ளிக்குப் போகும்போதும், திரும்பி வந்தவுடனும் அவரிடம் பேசச் சொல்லி. சமயத்தில் அவர்களுடன் சினிமா கதையையும், பள்ளிக்கூட சங்கதிகளையும், மதிப்பெண்கள் விவரத்தையும், போட்டிகளின் வென்றதையும் பற்றிப் பேசுவதை அவர் அறையில் வைத்துச் செய்கிறான். அவர் பிறந்த நாளுக்குப் பிள்ளைகளையும் குடியிருப்பின் இதர குழந்தைகளையும் வரவழைத்து, பாட்டுப் பாடி, கேக் வெட்டிக் கொண்டாட வைக்கிறான்.

"பாட்டு போடுய்யா... போர் அடிக்குது."

சிடி ப்ளேயரை முடுக்கிவிட்டான். விளக்கை அணைத்தான். இருட்டுக் கவிந்த அறையில் இசை நிரம்பிப் பழைய ஞாபகங்களால் அந்த இடத்தை நிரப்பியது. அப்பாவுக்குப் படுக்கையில் படுத்துக்கொண்டு விளக்கை அணைத்துவிட்டு ஜன்னல் வழி தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்தபடி இருட்டில் பாட்டுக் கேட்கப் பிடிக்கும். நல்ல வரிக்கோ குழையும் இசைக்கோ இடையிடையே ‘ஆஹா!’ என்பார். சில பாடல்களுளோடு உடன் பாடுவார். சில சமயம் "இந்தப் பாட்டைக் கேக்கும்போது ஞாபகம் வருது" என்று கதை சொல்லுவார். அவர் அலுவலக நாட்களில் சாப்பிட்டுவிட்டுக் கட்டிலில் காலை நீட்டிச் சாய்ந்துகொண்டு மற்றவர்களைச் சுற்றி உட்காரவைத்துக்கொண்டு ஒலிக்கும் பாட்டினூடே பேசுவது அவருக்குப் பிடித்தமான ஒன்று. அவர்கள் ஒவ்வொருவருக்கும் நியமிக்கப்பட்ட இடங்கூட உண்டு. இடப்பக்கத்தில் அம்மா. அவருக்கு ஒட்டினாற்போல வலப்பக்கத்தில் கமலா. காலடியில் துரை. அது அம்மா இருந்தவரை. அப்புறமாய் அம்மா இடத்தில் கமலா. அவளிடத்தில் இவன்.

அன்றைக்கு இசைத்ததும் அவருக்கு மிகப் பிரியமான பாடல்கள். மனமுருக பி.பி. ஸ்ரீநிவாஸ் பாடுவதை துரை கண்களை மூடிக்கொண்டு கேட்டான். அப்பா பாடகராயிருந்தால் பி.பி. ஸ்ரீநிவாஸ் போலத்தான் பாடுவார். அதிர்ந்து பேசாத, ரௌத்திரம் பழகாத நிதானமாய் இயங்கும் அப்பா. பாட்டில் ஆழ்ந்தபோது ஞாபகங்களில் சவாரி செய்து கடந்துபோன வாழ்க்கையின் கணங்களோடு இணைந்து பயணிக்கவைத்தன அந்தப் பாடல்கள்.

"சின்னச்சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ..." குழைகிறார் ஸ்ரீநிவாஸ்.

*****


மந்தமான வேகத்தில் போய்க்கொண்டிருந்த அந்த ரயில் பெட்டியில் அதிகம்பேர் இல்லை. எதிர்ப்புற ஜன்னலுக்கு அருகே சிவப்பு முண்டாசும், கொடுவா மீசையுமாய் கையில் கித்தான் பையும் மடியில் டிரான்சிஸ்டருமாய் பாட்டு கேட்டுக்கொண்டு தன்னையே துளைக்கிறமாதிரி பார்த்துக்கொண்டு வந்தவரை துரைக்கு பிடிக்கவில்லை. கும்மிடிப்பூண்டியிலிருந்து ஏற்றிவந்த அரிசி மூட்டைகள் அடைத்த பெட்டியில் அடித்த ஆரஞ்சுப்பழ வாசமும் சுருட்டுப்புகை வாசமும் பிடிக்கவில்லை. எதிர்காற்று அடித்தோ அல்லது பொங்கிவரும் துக்கமோ தாளாமல் கண்ணில் தளும்பிய நீரைப் புறங்கையால் துடைத்துக்கொண்டபோது அப்பா தன் கையால் அவனை அணைத்துக்கொண்டார். முண்டாசுக்காரர் அப்பாவைப் பார்த்து வினவினார்.

"பட்டணத்துல இருந்தோம். இப்ப பொன்னேரி வந்திருக்கோம். மெட்ராசுல படிச்ச புள்ள. புதுப் பள்ளிக்கூடம் திருவற்றியூர்ல இருக்கு, ஃபிரண்ட்ஸ் மாறிப்போச்சு. இன்னிக்குப் பள்ளிக்கூடத்துக்கு மொதநாள். அதான் மனசு கலக்கமாயிருக்கு அவனுக்கு."

"ஐய்யய்யே… பள்ளிக்கூடம் போக அப்பா கூட வரணுமா? பாத்தா பெரிய பையனாட்டம் இருக்கு. குழந்தையாட்டம் அளுகுது" சின்னப் பையனைச் சீண்டி வேடிக்கை பார்க்க முண்டாசுக்காரர் எகத்தாளமாய் சிரித்தார்.

அப்பா இன்னும் அணைத்துக்கொண்டார். "கொஞ்சம் பயந்த சுபாவம். புது ஆளுங்களை அவ்ள சீக்கரமா ஒத்துக்கிடமாட்டான்."

முண்டாசுக்காரர் மீஞ்சூரில் இறங்கிப் போனபிறகு துரைக்கு இன்னும் அழுகை வந்தது. "அந்த மெட்ராஸ் வேலையிலேயே இருந்திருக்கலாமுல்ல? ஏம்ப்பா அதை விட்டுட்டு இந்த வேலைக்கு வந்தீங்க?" என்றான், அப்பாவுக்கு வேலை போனதையும், எட்டு மாதங்கள் வேறு வேலை தேடிக் கஷ்டப்பட்டதையும், மாமாவிடம் கடன் வாங்கிக் குடும்பம் நடத்தியதையும், வேறு வழியில்லாமல் அந்த வேலையை ஒத்துக்கொண்டதையும் உணராமல். எண்ணூரில் வண்டி நின்றவுடன் கூடை கூடையாய் ஏற்றிய மூட்டைகளிலிருந்து வெளிக்கிளம்பிய கருவாட்டு வாசம் வயிற்றைப் பிரட்டியது.

நிழலுக்கு ஒதுங்க மரங்கூட இல்லாத அந்த நீளமான ப்ளாட்ஃபாரத்தில் இறங்கினபோது வெறுப்பு முழுமையாகியிருந்தது. "நல்லா பாத்துக்க தம்பி. விம்கோ நகர். பின்னால சிகரெட்டு ஃபேக்டரி. இன்னாண்ட நெருப்புப் பொட்டி செய்யறாங்களே அந்த ஃபேக்டரி. இதா இருக்கு ரிக்‌ஷா ஸ்டாண்டு. இங்க வேலுன்னு இவருகிட்ட பேசியிருக்கு. உன்னைய தினம் கொண்டுபோய் விட்டு மறுபடி சாயந்தரம் திரும்ப கூட்டி வருவாரு. பாத்துக்க நீலக்கலர் ரிக்‌ஷா." அப்பா ஒரு விவரம் பாக்கி இல்லாமல் அவனுக்குச் சொன்னார். ரிக்‌ஷாவில் போகும்போது ஆறு கிலோமீட்டர் ஆயாசமாய்க் கடந்தன.
"தூரமா இருக்குல்ல. வேற வழியில்ல கண்ணு. இப்ப என் புதுவேலை கும்முடிப்பூண்டில. என் ஆபீசுக்கும் பள்ளிக்கூடத்துக்கும் இடையில இருக்கறதுல நல்ல இடம் பொன்னேரிதான். அங்க ஸ்கூல் சரியில்ல. இந்த வட்டாரத்திலேயே இருக்கற ஓரே ஸ்கூலு இதான்."

வந்து நின்றவுடன் எதிர்ப்பட்ட கொஞ்சம்போல சிதிலமான பழைய கட்டிடத்தில் பள்ளிக்கூட பெயர்ப்பலகை. வலதுபக்கம் தெரிந்த வாலிபால் கோர்ட். இடது பக்கம் மைதானம். அதை ஒட்டினாற்போல கூரைவேய்ந்த நீளமான பள்ளிக்கூட அறைகள். ஆபீஸ் அறைக்குள் விரோதமான தலைமையாசிரியர். பள்ளிக்குப் பின்னால் இருக்கிற கடல் பரப்பினால் மண்டிக்கிடந்த மணலில் கால் அழுந்த நடந்து அந்தக் கூரை வேய்ந்த அறையில் அதட்டலாய் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரை இடைமறித்து அப்பா அவனை முன்னிறுத்தினார்.

வலதுகையில் இருந்த பிரம்பை இடது கைக்கு மாற்றிக்கொண்டு அந்த நாலாவது பெஞ்சுல உக்காரு என்று இடம் காண்பிக்கிறார்.

அப்பா அவன் போகுமுன் மண்டிபோட்டு அவன் உயரத்துக்கு வந்து பேசுகிறார். கையிலிருந்த பையை துரையிடம் தருகிறார். "இதுல சாப்பாடு இருக்கு. தண்ணி பாட்டிலும். இந்தா ரயிலு பாசு பத்திரமா பாக்கெட்ல வச்சிக்க. நாலரைக்கு ஸ்கூல் விட்டதும் கேட்ல போய் இரு. வேலு ரிக்‌ஷால வருவாரு. விம்கோ நகர். ஞாபகம் வச்சிக்க. அஞ்சே முக்காலுக்கு கும்முடிப்பூண்டி பாசஞ்சர் ரயிலு வரும். அனுப்பம்பட்டுக்கு அடுத்த ஸ்டேஷன். புரியுதா தம்பி. இந்தக் காகிதத்துல எல்லாம் எழுதியிருக்கேன். சந்தேகம்னா யாரையாவது கேட்டுக்க. அளக்கூடாது கண்ணு..."

துரை கண்ணில் நீர் பெருக உள்ளே போவதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டுத் திரும்புகிறார். கேட்டை நோக்கி நடக்கிறார்.

முதல் நாள் என்பதால் ஆசிரியர் அவனை அவ்வளவாய் கண்டுகொள்ளாமல் மற்ற பையன்களை மிரட்டிக்கொண்டிருக்க துரை மனசு ஒட்டாமல் வகுப்பறையை கவனித்தான். அழுக்காக இருந்தது. அருகில் இருந்த பையன்கள் அவனை விரோதமாய்ப் பார்த்தார்கள். அவன் அழுவதை கவனித்து ஒன்றிரண்டு மாணவர்கள் சின்னதாய்ச் சிரித்தார்கள். மதிய நேரத்து மணி அடித்ததும் கொஞ்சம் ஆசுவசமாய் இருந்தது. இருந்த இடத்திலேயே தலையைக் கவிழ்ந்து உட்கார்ந்துகொண்டான். பசிக்கவில்லை. இந்த பள்ளிக்கூடத்திற்கு தினமும் வரவேண்டுமா? அப்பாமேல் கோவமாகக்கூட வந்தது. ஏதோ ஒரு மூலையில் அவனுக்குப் பிடிக்காத பள்ளிக்கூடத்தில் விட்டுவிட்டு அவர் போய்விட்டார்.

ஒவ்வொரு கிளாசும் நரக வேதனையில் நகர்ந்து, பச்சாதாபம் சூழ்ந்த மனதுக்கு இறுதி மணி ஓசை சந்தோஷம் தந்தது. ஆங்காங்கே பள்ளி விட்ட குதூகலத்தில் பையன்கள் விளையாடிக் கொண்டிருக்க, பையை முதுகில் சுமந்தபடி மெல்ல கேட்டை நோக்கி நடந்தான் துரை. களைப்பாய் இருந்தான். தளர்வுடன் மெல்ல மெல்ல நடந்துவந்தவனின் கண்களில் கேட்டுக்கு பக்கத்து வாதாம் மரத்தடியில் உட்கார்ந்திருந்த அப்பா தென்பட்டார். அவனைப் பார்த்ததும் எழுந்து நின்று புன்னகையுடன் கையை நீட்டி அவனை எதிர்கொண்டார். துரை சந்தோஷம் மிக ஓடிப்போய் அவரை அணைத்துக் கொண்டான்.

அவனைச் சுற்றியிருந்த சிறுவர்களை அப்பா கூப்பிட்டார். "இவங்கள்ளாம் உன் கிளாசுதான? உன் பேரு என்னப்பா?" என்று ஒவ்வொருவராய் விசாரிக்க ஆரம்பித்தார். இது துரை. இவனை ஃபிரண்டு பிடிச்சிக்குங்க. துரை எல்லாருகிட்டயும் ஷேக் ஹாண்ட்ஸ் பண்ணுய்யா. வாப்பா. உன் பேரு என்ன?" அப்பா ஒவ்வொருவராக விசாரித்து தமிழ்ச்செல்வன், பிரபு, இளங்கோ, திவாகர், சார்லஸ் பரிசுத்தம் என்று ஒவ்வொருத்தனாய் அவனுடன் பேச வைத்தார். "இவன் கிரிக்கெட் நல்லா ஆடுவான். லெக் ஸ்பின்னர். நீங்க ஆடும்போது இவனைச் சேர்த்துக்கங்க," என்று அறிமுகம் செய்தார். ஒவ்வொருத்தரையாய் கேள்வி கேட்டு அவர்கள் பதிலில் ஹாஸ்யம் பண்ணி அவர்களைச் சிரிக்க வைத்தார். சிறுவர்கள் எல்லோரும் கையசைத்து விடை பெற்றவுடன் இறுக்கம் தளர்ந்தார்போல இருந்தது துரைக்கு.

"நீங்க எப்ப அவ்வள தூரத்துலிருக்கற ஆபீஸ்லந்து திரும்பி வந்தீங்க?"

"ஆபீசு போகலை. நாளைக்கு போய்க்கிறேன். நீதான் அப்படி அளுதியே. சரி உன்னை தனியா விட்டுட்டு போவ தயக்கமா இருந்துச்சு. இங்கிட்டே உக்காந்துகிட்டு இருந்தேன்," மரத்தடியையும் சின்ன பெஞ்சியையும் காண்பிக்கிறார்.

"காத்தாலந்தா?" துரை வாஞ்சையுடன் கேட்கிறான். "சாப்டீங்களப்பா?"

"இல்லப்பா. இங்க பக்கத்துல ஒரு ஹோட்டலும் இல்லை. எல்லாம் ஃபேக்டரி ஏரியா. பொட்டல் காடு. டீ கடையில டீயும் பிஸ்கட்டும் சாப்டேன். வீட்ல போய் சாப்டுக்கறேன்."

துரை சாப்பாட்டு டப்பாவை எடுக்கிறான். "மத்தியானம் நானும் சாப்பிடலை. இப்ப பசிக்குது. இரண்டு பேரும் சேர்ந்து சாப்படலாம்ப்பா."

"ஏன்யா சாப்பிடலை. நல்லவேளை புளிசாதம்தான். தயிர்சோறா இருந்தா புளிச்சிருக்கும்" என்று அவனைக் கடிந்து கொள்கிறார். பக்கத்தில் இருக்கிற குழாயில் கையைக் கழுவிக்கொண்டு மரத்தடியில் உட்கார வைக்கிறார். அவனை முதலில் சாப்பிட வைக்கிறார். துரை கொஞ்சமாய் எடுத்து சாப்பிடுவிட்டு டப்பாவை அவரிடம் திருப்புகிறான். அவர் கவளம் எடுத்து சின்ன உருண்டயாய் செய்து வாயில் போட்டுக்கொண்டு "ஒரு கல்லு உப்பு கூட போட்டுட்டேன்" என்கிறார். ஒரு மிடறு தண்ணீர் குடிக்கிறார்.

கடைசி பருக்கைவரை சுரண்டி சுரண்டி தின்றுவிட்டு தண்ணீர் குடித்ததும் வயற்றில் இன்னும் பசி பாக்கியிருந்தாலும் மனசு நிறைந்திருந்தது. ரிக்‌ஷாவில் ஏறி ஸ்டேஷன் போகும்போது அப்பா பள்ளிக்கூடம் பற்றி கேட்டுகொண்டே வந்தார். "நாளைக்கு நீயா வருவியா தம்பி" என்றார் நெற்றியில் விழுந்த அவன் தலைமுடியைத் திருத்திக்கொண்டே. துரை முகத்தில் மெல்லிய காற்று வருட அவர் மடியில் சரிந்து தூங்க ஆயத்தமானான். அப்பா அவன் கைகளை அழுந்தப் பிடித்தபடி என்னமோ பாடிக்கொண்டு வந்தார்.

*****


சிதறிய நினைவுகள் மறுபடி அந்த அறைக்குள் வந்து சங்கமமாயின. அத்தனை நேரம் உணராத மருந்து வாசனையைத் தாங்கி ஜன்னல் வழி வீசிய குளிர்காற்று முகத்தை வருடியது. கண்களை மூடியபடி கடந்த காலத்திலேயே இருந்துவிடலாம் போலத்தான் தோன்றியது. அவனுக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அப்பா அவனின் அத்தனை முக்கியத் தருணங்களிலும் கூட இருந்திருக்கிறார். சைக்கிள் ஓட்டக் கற்றுகொடுக்க, காத்தாடி செய்து தர, பள்ளிக்கூடத்தில் அம்மை தடுப்பு ஊசி போடும்போது கூட வந்து அழைத்துப்போக, தேவி தியேட்டரில் மெக்கனாஸ் கோல்ட் படத்தை வரிக்கு வரி தமிழில் மொழிபெயர்த்து சொல்லிக்கொடுக்க…..

அந்த இருட்டும் நிசப்தமும் கலைகிறது. ஒரு மிருதுவான கை மெல்ல அவன் கைகள்மேல் பட்டு மெல்லத் தடவியது. கண்களை மெல்லத் திறந்தபோது ஒரு உருவம் கண்ணை நிறைத்து அவனை நெருங்கி வந்தது. திடுக்கிட்டு எழுந்தான்.

"மாப்ள…. நாந்தான்… உக்காந்தபடிக்கே கண்ணசந்திட்டீங்க போல" மாமனார் அவனைத் தட்டி எழுப்பினார். துரை எழுந்திருக்கக் காத்திருந்தார். சற்றே பொறுமை இழந்தவராய், கொஞ்சமாய்க் குரல் உயர்த்திப் பேச ஆரம்பிக்கிறார்.

"நான் திரும்பத் திரும்பச் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மாப்ள. எத்தனை நாள் இப்படி காத்திருக்கப் போறீங்க… இனிமே அவர்…."

துரை அவரை அவசரமாய் இடைமறித்தான். ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து சைகை செய்து ’அப்பா முன்னிலையில் பேசவேண்டாம் அவர் காதில் விழப்போகிறது’ என்று சமிக்ஞையால் எச்சரிக்கிறான்.

"நேரமாச்சு.. சாப்பிட வாங்க," என்று சொல்லிவிட்டு மாமனார் மௌனமாய்த் திரும்பிப்போனார்.

அப்பா அசைவற்றுக் கிடந்தார். அவருக்குள் உறைந்து போன உயிரின் சுவடு அவருடைய மெல்லிய மூச்சுக் காற்றில் மட்டும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது., மூக்கு வழியாய் குழாயில் நீராகாரம். கைக்குழந்தை போல டயப்பர். மலம் துடைக்கவும் உடம்பை சுத்தம் செய்யவும், வந்துவிட்டுப் போகும் ஒரு தாதி என்று நீளும் நித்திய வாழ்க்கையில் சப்பிப்போன உடம்போடு அவரை கிடத்தியிருந்த படுக்கையோடு இணைந்து இறுகிப்போனவர். ஒரு சிறிய அறுவைச் சிகிச்சையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாய் நினைவு தப்பிபோய் கோமாவுக்கு தள்ளப்பட்டு மூன்று வருடங்களாய் அந்த நிலையிலேயே இருக்கிறவர். அவர் மீண்டு வரக் காத்திருக்கும் துரையை தவிர மற்றவர்களுக்கு வெறும் ஜடப்பொருளாய் ஆகிப்போனவர்.

வரவேற்பறை விளக்கின் ஒளி அப்பாமேல் படர்ந்து முகத்தைக் காட்டியது. உதட்டோரம் சின்னதாய் ஒரு புன்னகை படர்ந்திருப்பது போல அவனுக்குத் தோன்றியது. "சாப்ட்டு வரம்பா" என்றான். கதவை சப்தம் வராமல் மெல்ல சார்த்தினான். இன்னொரு நீண்ட விவாதத்திற்குத் தன்னை மனத்தளவில் தயார் செய்துகொண்டே சாப்பாட்டு மேஜையில் காத்திருந்த ரேணுகாவையும் மாமனாரையும் நோக்கி நடக்கும்போது வேறொரு புது உலகத்தில் நுழைந்தாற் போல இருந்தது.

அவன் பின்னால் சன்னமாய் அப்பா பாடிக்கொண்டிருந்தார்.

ஆனந்த் ராகவ்,
பெங்களூரு, இந்தியா
More

விசாலி, கார், விருந்தாளி
தென்றல் சிறுகதைப் போட்டி 2014
கப்பல் பறவை
Share: 




© Copyright 2020 Tamilonline