Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
பொது
காண்டாமிருகங்கள்
ஒரே தூற்றல்
ரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்
தென்றல் சிறுகதை போட்டி 2014
37வது புத்தகக் காட்சி
விருதுகள்
- |பிப்ரவரி 2014|
Share:
தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது - 2013
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் இயல் விருது இவ்வருடம் (2013) சு. தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இவர் தமிழ் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலர். இந்த விருதைப் பெறும் 14வது எழுத்தாளர் இவர். முன்னர் இந்த விருது சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், ஜார்ஜ் ஹார்ட், ஐராவதம் மகாதேவன், அம்பை, எஸ். பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில்நாடன் போன்றவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தாராபுரத்தில் பிறந்த தியடோர் பாஸ்கரன் சென்னை கிறித்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டம் பெற்றார். நாற்பதாண்டுகளாகச் சுற்றுச்சூழல், சினிமா ஆகியவை குறித்துத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி வருகின்றார். உயிர்மை பதிப்பகம் 'இன்னும் பிறக்காத தலைமுறைக்காக' (2006), 'தாமரை பூத்த தடாகம்' (2008), 'வானில் பறக்கும் புள்ளெலாம்' (2011) ஆகிய நூல்களைப் பதிப்பித்தது. உல்லாஸ் கரந்தின் The Way of the Tiger என்ற நூலை 'கானுறை வேங்கை' (காலச்சுவடு, 2006) என்ற தலைப்பில் மொழிபெயர்த்திருக்கிறார். காட்டுயிர் பற்றி இவர் எழுதிய The Dance of the Sarus (OUP) 1996ல் வெளிவந்தது. சென்ற ஆண்டு பெங்குவின் பதிப்பகம் இவரைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு The Sprint of the Blackbuck நூலை 2009ல் வெளியிட்டது. தமிழ்நாட்டில் மதிப்புறு காட்டுயிர்க் காவலராக பணியாற்றியிருக்கிறார். இயற்கைக்கான உலக நிதியகத்தில் (WWF-India) அறங்காவலராக உள்ளார்.

1980ல் வெளிவந்த இவரது நூல் Message Bearers (க்ரியா) தமிழ்த்திரை ஆய்வில் முன்னோடிப் புலமை முயற்சியாக கருதப்படுகின்றது. தமிழ் சினிமா பற்றிய The Eye of the Serpent நூலுக்காக தேசிய அளவில் ஸ்வர்ண கமல் விருதை 1997ல் பெற்றார். இந்நூலின் மொழிபெயர்ப்பு 'பாம்பின் கண்' 2012ல் வெளிவந்தது, தமிழில் சினிமா பற்றி மூன்று நூல்கள் எழுதியுள்ளார். 2003ல் தேசிய திரைப்பட விருதுத் தேர்வுக் குழுவில் ஒரு நடுவராக இருந்தார். ஐ.நா. சபையின் சார்பில் கென்யாவில் இரண்டு மாதம் ஆலோசகராகப் பணியாற்றினார். போஸ்ட்மாஸ்டர் ஜெனரலாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநராக மூன்றாண்டுகள் (1998-2001) பணியாற்றினார். மனைவி திலகாவுடன் பெங்களூரில் வசிக்கிறார். இவர்களுக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

இயல் விருது கேடயமும் 2500 டாலர் பணப்பரிசும் கொண்டது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் வரும் ஜூன் மாதம் நடைபெறும்.

*****


டாக்டர் மீரா சந்திரசேகருக்கு விருது
அமெரிக்காவின், மிசௌரி பல்கலைக்கழகத்தில், இயற்பியல் மற்றும் வானியல் துறைப் பேராசிரியரான மீரா சந்திரசேகருக்கு அமெரிக்காவின் உயர்கல்வி விருதான Robert Foster Cherry Award for Great Teaching வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐ.ஐ.டி.யில் படித்த இவர், மைசூர் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் பட்டம் பெற்றார். பின் அமெரிக்காவின் பிரௌன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்த விருது, $250,000 ரொக்கப் பரிசு கொண்டது. டாக்டர் மீரா சந்திரசேகரின் சிறந்த பணியை பாராட்டி, விருதுத் தொகையுடன், இவர் பணியாற்றும் பல்கலைக் கழகம் கூடுதலாக ரொக்கப் பரிசு வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. மீரா ஏற்கனவே கல்வி பயிற்றல் மற்றும் ஆய்வுகளில் பல விருதுகள் வென்றவர்.
பார்க்க: http://web.missouri.edu/~chandrasekharm/honors.html

*****


விளக்கு விருது
தமிழின் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான பெருமாள் முருகனுக்கு 2012ஆம் ஆண்டுக்கான விளக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1995ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பால் புதுமைப்பித்தன் நினைவாக இவ்விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழின் இலக்கிய ஆளுமைகளான சி.சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார், தேவதச்சன் ஆகியோர் இதுவரை இவ்விருது பெற்றுள்ளனர். இவ்வாண்டுக்கான விளக்கு விருதைப் பெறும் பெருமாள் முருகன் நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாசிரியர், கல்லூரிப் பேராசிரியர் எனப் பன்முகங்கள் கொண்டவர். 'ஏறுவெயில்', 'கூளமாதாரி', 'நிழல் முற்றம்', 'மாதொருபாகன்' போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்களாகும். இளமுருகு என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார். விளக்கு விருது ரூ.50,000 பரிசுத்தொகையும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது. (பார்க்க: பெருமாள் முருகன்)

*****


சாரல் விருது
சாரல் விருது ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளையின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியவாதிகளுக்கு வழங்கப்படும் ஒன்று. 50,000 ரூபாய் பரிசுத் தொகையும், அழகிய வெண்கலச் சிற்பமும் கொண்டது இவ்விருதை பிரபல திரைப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்கி வருகின்றனர். இதுவரை இவ்விருதுகளை திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன், வண்ணநிலவன், வண்ணதாசன் (2012), பிரபஞ்சன் ஆகியோர் பெற்றுள்ளனர். இவ்வாண்டு விருது கவிஞர் விக்கிரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. விக்கிரமாதித்யன் பதினாறுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகளும், இரண்டு சிறுகதைத் தொகுப்பும், ஏழு கட்டுரைத் தொகுப்புகளும் எழுதியுள்ளார். காசி பற்றிய இவரது கட்டுரைகள் உயிர்ப்பு மிக்கவை. இவரது இயற்பெயர் நம்பிராஜன்.

*****
பத்ம விருதுகள்
இந்திய அரசு ஆண்டு தோறும் வழங்கும் பத்ம விருதுகள் அறிவிக்கப்படுள்ளன. இவ்வாண்டு பத்ம விருதுகளை 127 பேர் பெறுகின்றனர். பத்மஸ்ரீ விருதை தொழில்துறையைச் சேர்ந்த மல்லிகா ஸ்ரீநிவாசன், யுனானி மருத்துவப் பேராசிரியர் ஹக்கிம் சையத் கலீஃபத்துல்லா, தேனும்கல் போலோஸ் ஜேக்கப், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த அஜய்குமார் பரிடா, கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ஸ்க்வாஷ் வீராங்கனை தீபிகா பள்ளிக்கல், நடிகை வித்யா பாலன், மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் உள்ளிட்ட 101 பேர் பெறுகின்றனர். பத்மபூஷண் விருதுக்கு நடிகர் கமல்ஹாசன், கடம் விக்கு விநாயக்ராம், கவிஞர் வைரமுத்து, டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாடகி பர்வீன் சுல்தானா, பாட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த் உள்ளிட்ட 24 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்துறை கவுன்சில் முன்னாள் தலைவர் டாக்டர் ஆர். மசேல்கர் ஆகியோர் பத்மவிபூஷண் பெறுகின்றனர்.
More

காண்டாமிருகங்கள்
ஒரே தூற்றல்
ரோஹன் கிருஷ்ணமூர்த்தி வழங்கும் இணையவழி மிருதங்கப் பாடம்
தென்றல் சிறுகதை போட்டி 2014
37வது புத்தகக் காட்சி
Share: 




© Copyright 2020 Tamilonline