Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
இரைச்சலே வாழ்க்கையாக...
"உன் குடும்பம் அழகானது!"
கனவு மெய்ப்பட வேண்டும்
- லக்ஷ்மி சுப்ரமணியன்|பிப்ரவரி 2014||(5 Comments)
Share:
ஆண்டு 1995. பள்ளி மணி அடித்தது. பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் தவிர அத்தனை பேரும் புத்தக மூட்டைகளை எடுத்தபடிக் கிளம்பினார்கள். அன்று பத்தாம் வகுப்பிற்கு ஸ்பெஷல் க்ளாஸ். பாரதியாரின் பாடல்களைப் பற்றி கட்டுரை, கவிதை, உரை நிகழ்த்த ஒரு போட்டி இருந்தது. மூன்று போட்டிகளிலும் பங்கேற்கும் சிறப்பான மாணவருக்கு ஒரு பெரிய கோப்பையைப் பரிசாக ஆசிரியர் அறிவித்திருந்தார்.

"போட்டிக்காக இல்லை செம்பா. பாரதியார் பாடல்கள்மேல் உள்ள பற்றுக்காவது பங்கு பெறணும் நான்" என்று சொல்லிப் பங்குபெற்றது புவி என்கிற புவனா.

கோப்பையைக் கேரியரில் வைத்துக் கட்டிக்கொண்டு புவி, செம்பா இருவரும் வழக்கம்போல் சைக்கிளை உருட்டியபடி நடந்தனர். புவி, செம்பா இருவரும் ஆறாம் வகுப்பு முதல் ஒன்றாகவே படிக்கும் அன்புத் தோழிகள். இருவர் வீடுகளும் பக்கத்துப் பக்கத்துத் தெருவில்தான் இருந்தன. பள்ளியில் இருந்து இருவரது வீடும் கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. சைக்கிளில் சென்றால் பத்து நிமிடத்தில் வீடு சென்று விடலாம். ஆனால் இருவருக்கும் பேசிக்கொண்டே நடப்பது பிடிக்கும். காலையில் அவசரத்திற்கு சைக்கிளில் வருவார்கள், மாலையில் பேசிக்கொண்டு நடந்து போவார்கள். ஐந்து வருடப் பழக்கம்.

"புவி. சூப்பர்பா நீ. ரொம்ப நல்லா பேசின. அந்தக் கட்டுரைகூட ரொம்பத் தெளிவா இருந்தது," இது செம்பா.

"தேங்க்ஸ் செம்பா! உன்னோட கவிதைகூட எனக்கு ரொம்பப் பிடிச்சது. நீ ரெண்டாவது பரிசு வாங்கினதுக்கு வாழ்த்துக்கள்"

"நன்றி புவி. நம்ம ஆசிரியர் பாரதியார் மீது ரொம்ப ஈடுபாடு வச்சிருக்கார் இல்ல?"

"ஆமாம் செம்பா. பாரதியைப் பிடிக்காத தமிழ் மாணவர்களே கிடையாது. ஒவ்வொரு பாடலும் நச்சு தெரிச்சாப்புல என்ன வார்த்தைகள் இல்ல!"

"ஆமாம் புவி."

இருவரும் சிறிதுநேரம் அமைதியாக நடந்தனர்.

"இன்னும் ஒரு மாதத்தில் இறுதித் தேர்வு வந்துவிடும். எனக்கு ஒரே பயமா இருக்கு" என்றாள் செம்பா.

"எனக்கும்தான் செம்பா. ஆனா நாம ரெண்டு பேரும்தான் எப்பவும் வகுப்புல முதல் ரெண்டு ராங்க். அதனால தைரியமா படிச்சு எழுதணும்," இது புவி.

"ஏய் புவி, பரீட்சை முடிஞ்சு அப்புறம் மூணு மாசம் லீவுல நீ என்ன பண்ணப் போற? நான் எங்க பாட்டி வீட்டுக்குப் போகப் போறேன். நீயும் வர்றியா? அது ரொம்பக் கிராமம். ரெண்டு பேரும் சேர்ந்து நல்லா ஊர் சுத்தலாம். நான் உங்கம்மா கிட்ட பர்மிஷன் கேட்கறேன்."

"இல்ல செம்பா. அம்மா லீவுல என்னை டைலரிங் கிளாஸ்ல சேர்த்திருக்கா. நான் கொஞ்சம் பிடுங்கி பர்மிஷன் வாங்கி கராத்தே க்ளாஸ் போலாம்னு இருக்கேன். எனக்கு பாட்டு, டான்ஸ் க்ளாஸ் வேற இருக்கு. இதெல்லாம் நின்னு போய்டும். நான் வரல. நீ போய் நல்லா எஞ்சாய் பண்ணிட்டு வா."

"என்னப்பா நீ லீவ் நாளில் கூட ஒரே க்ளாஸ், க்ளாஸ்னு, போர் அடிக்கலை?"

"ச்சீ இல்ல. An idle mind is a devil’s workshopன்னு கேட்டது இல்ல? நம்ம மூளையை எப்பவும் தீட்டிச் சுறுசுறுப்பா வச்சிருக்கணும். அப்பதான் அது உபயோகப்படும். எனக்கு நிறைய வேலை செய்யறது ரொம்பப் பிடிக்கும்."

"அதுசரிதான். ஆனால் All work and no play makes Jack a dull boyன்னு பழமொழி கேட்டிருக்கியா?" என்று செம்பா கிண்டலடிக்க, இருவரும் சிரித்தபடி நடந்தனர்.

டீக்கடை ஒன்றைக் கடந்தபோது பழைய பாடல் ஒன்று ஒலித்ததைக் கேட்டனர். "மாசிலா உண்மைக் காதலே" என்ற அலிபாபா படத்தின் பாடல்.

நடக்கும்போது அந்தப் பாடலை முணுமுணுத்தபடி புவி நடந்தாள். "செம்பா, பானுமதி என்ன அருமையான நடிகை இல்ல? அவங்க பெர்சனாலிடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். அந்தக் காலத்திலேயே பெண்கள் நிமிர்ந்த நன்னடையோடு இருக்கணுங்கறதுக்கு எடுத்துக்காட்டா இருந்தாங்க. எத்தனை கலைத்திறன் தெரியுமா? பாட்டு, டான்ஸ் இப்படி அவங்க ஒரு அஷ்டாவதானி."

"அஷ்டாவதானின்னா?"

"ஒரே சமயத்தில் எட்டு விஷயங்களை அவங்களால தவறில்லாமல் செய்ய முடியுமாம். நம்மகூட கம்ப்யூட்டர் க்ளாஸ்ல படிச்சோமே multi tasking, அதுபோல. எனக்கு அவங்க ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்."
"ஹே.. அதனாலதான் நீயும் இப்படி எல்லா க்ளாஸுக்கும் போறியா?"

"இல்ல... அவங்க எட்டு விஷயம் செய்வாங்க. நான் பதினெட்டு கையுடைய பராசக்தி மாதிரி ஒவ்வொரு கையிலும் ஒவ்வொரு செயல் செய்யணும்னு யோசனை பண்றேன்" என்றாள் புவி சீரியஸாக.

*****


பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. மாவட்டத்திலேயே முதல் மாணவியாக புவியும், இரண்டாவதாக செம்பாவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பத்திரிகையில் அவர்கள் புகைப்படம் வந்தது. அவர்களைப் பேட்டி எடுத்தனர். புவியிடம் ஒரு நிருபர், "நீங்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்கள்?" என்றார். "நான் ஐ.ஏ.எஸ். எழுதி கலெக்டர் ஆக வேண்டும் என்ற கனவு எனக்கு. ஒரு கலெக்டர்னா எல்லாத் துறைகளிலும் சிறந்தவரா இருக்கணும். பல செயல்களை ஒரே சமயத்தில் செய்யக்கூடிய திறமை இருக்கணும். அப்படித்தான் நான் என்னைத் தயார் செய்துகொண்டு வருகின்றேன். என்னுடைய கனவு கலெக்டர் ஆவது. அது பாரதி சொன்னதுபோல கனவு மெய்ப்பட வேண்டும்" என்றாள்.

நிருபர் செம்பாவிடம் அதே கேள்வியைக் கேட்டார். "நான் ஒரு மருத்துவராக விரும்பறேன். இந்த விடுமுறையை என்னுடைய பாட்டி வீட்டில் கழித்தேன். அப்போதுதான் இன்னும் நம்முடைய கிராமங்கள் மருத்துவத்தில் பின்னடைந்து இருப்பது தெரிந்தது. நான் டாக்டருக்குப் படித்து கிராமங்களுக்குச் சென்று சேவை செய்ய விரும்புகிறேன்" என்றாள்.

*****


ஆண்டுகள் ஓடின. புவி, செம்பா இருவரும் +2 தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றனர். செம்பா தன்னுடைய கனவைப் போலவே டாக்டருக்குப் படிக்கச் சென்றாள். புவி எஞ்சினியரிங் பக்கம் எல்லாம் போகாமல் டிகிரி படிக்க ஒரு கல்லூரியில் சேர்ந்தாள்.

*****


கலெக்டர் ஆஃபிஸ் வாசலில் ப்யூன், "இருங்கம்மா. கலெக்டரைப் பார்க்கக் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க" என்று ஒருவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். உள்ளே புவி அழகான மடிப்புடன் கூடிய ஒரு கதர் சேலையில் மிடுக்குடனும் கம்பீரத்துடனும் ஒரு மீட்டிங்கில் இருந்தாள். இடையில் ஒரு ஃபோன். எடுத்துப் பேசிய புவி, "ஓ, கட்டாயமா மியூசிக் அகாடமி வரவேற்புக்கு நான் வர்றேன்" என்று பேசிவிட்டு, பல வேலைகளை ஒரே நிமிடத்தில் செய்தபடி இருந்தாள்.

வாசலில் ப்யூன், "எங்க கலெக்டர் அம்மா எட்டு, பத்து வேலையை ஒரே நேரத்தில் செய்வாங்க. ரொம்பத் திறமைசாலி" என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார்.

*****


"புவி புவி... போதும் தூங்கினது. எழுந்திரு," இது செம்பா

"ஏய். செம்பா. வா வா... எப்ப வந்த!"

"நான் ரொம்ப நேரமா உன்னை உலுக்கறேன். என்ன கனவு ஏதும் கண்டியா என்ன, உளறிக்கிட்டிருந்த.."

"ஆமாம். நான் கலெக்டர் ஆய்ட்ட மாதிரி ஒரு சூப்பர் கனவு," சொல்லிவிட்டுக் களுக்கென்று சிரித்தாள்.

"போச்சுடா, உன்னோட பல கை பராசக்திக் கனவா, அத இன்னும் மறக்கலியா நீ?"

"இல்ல செம்பா. நான் சர்வீஸ் கமிஷன் பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சாச்சு. என்னோட காலேஜ் ரிசல்ட் அடுத்த வாரம் வந்திடும். நீ எப்படி இருக்கே, டாக்டர் ஆயிட்டியா என்ன? ஆனா நாட்டுல நிறையப் பேர் உயிரோட இருக்காங்களே" என்று புவி மறுபடியும் கேலி செய்ய, "ஏய், நீ வேற. என்னுது 5 வருஷப் படிப்பு. இப்பதான் 3 வருஷம் முடிச்சிருக்கேன். அரை டாக்டர்தான். பாதி அறுவைச் சிகிச்சை வேணா பண்ணலாம்". இருவரும் சிரித்தனர்.

*****


ஆறுமாதம் கழித்து, புவியின் திருமணம் நடந்த நாள். "செம்பா இந்தப் பூவைக் கொஞ்சம் சரி செய்யேன்."

அலங்காரம் செய்ய உதவிய செம்பாவால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. "என்ன புவி இது. உனக்கு 21 வயசுதானே ஆகுது. உங்கம்மா ஏன் அதுக்குள்ள அவசர அவசரமாக் கல்யாணம் பண்றாங்க. ஏதோ கலெக்டர், பதினெட்டு கையுடையாள் அப்படி இப்படின்னு உன் கனவு எல்லாம் போயிடுத்தே. இப்பதான் டிகிரி முடிச்ச. அதுக்குள்ள ஏன் அவசரப்படறாங்க?" என்று புலம்பினாள் செம்பா, கண்ணீருடன்.

"செம்பா. சீ அழாத. கண்ணைத் துடை. என்ன பண்றது, அம்மா கொஞ்சம் பழைய பஞ்சாங்கம். எப்பப் பாரு கல்யாணம், குழந்தைதான் வாழ்க்கை. அம்மாவை குத்தம் சொல்லி என்ன பண்ண? அவங்க ஜெனரேஷன் அப்படி. பெண்ணாப் பொறந்தா சீக்கிரமா கல்யாணம் பண்ணி வச்சுடணும். இது தவிர வேற யோசனையே கிடையாது அவங்களுக்கு."

"அப்படின்னா, ஏன் உன்ன அத்தனை க்ளாஸுக்கு அனுப்பினாங்க. கலெக்டர் ஆனா டென்ஷன் குறைக்கத் தெரிஞ்சுக்கணும்னு யோகாகூடக் கத்துக்கிட்டயே. இப்படி எல்லாத் திறமையும் வீணாப் போய்டுத்தே" என்று ஆறாமல் கேட்டாள் செம்பா.

"கடவுளே, கல்யாணம் பண்ணா, எல்லாத் திறமையும் வீணாப் போய்டுமா என்ன? என்னுடைய திறமைகள் என்னோடதான் இருக்கும். இன்னும் நிறையவே வளர்த்துப்பேன். அம்மாவின் விருப்பம்தான் செம்பா. யோகா படித்ததால் வந்த நிதானம், வளர்த்த திறமைகள் கொடுத்த தெளிவு. என்ன ஆனாலும் வெற்றி பெற முயற்சித்தால் அது வீண் போகாது என்ற நம்பிக்கை. இதெல்லாம் எனக்கு இருக்கு. அம்மாவிடம் எதிர்த்துச் சண்டை போடுவதைவிட, வாழ்க்கையை வாழ்ந்து சாதிப்பது நல்லதில்லையா?"

*****


ஆண்டுகள் கடந்தன. செம்பா டாக்டர் படித்து, பின் எம்.டி. படித்து தனியாக ஒரு க்ளினிக் வைத்து கைராசியான மருத்துவர் என்று பெயர் எடுத்திருந்தாள். அவளது கணவனும் மருத்துவர்தான். அவர்கள் மனமொத்து வாழ்ந்தனர்.

எதிர்பாராதவிதமாக ஒருநாள் க்ளினிக்கில் புவியைச் சந்தித்தாள் செம்பா. பத்து ஆண்டுகளுக்கு முன் புவியின் திருமணத்தின்போது சந்தித்தது. அதற்குப் பின் சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. புவியின் கணவன் குடும்பம் பெரிய குடும்பம். அவளுக்குக் கடமைகள் அதிகம் இருந்தன. அதனால் செம்பாவின் திருமணத்தில்கூட அவளால் கலந்துகொள்ள முடியவில்லை. எதேச்சையாக அன்று அந்தச் சந்திப்பு. ஆனல் புவியோ அவசரமாகப் போக வேண்டி இருந்ததால் முகவரியைக் கொடுத்து ஞாயிற்றுக்கிழமை அவசியம் வீட்டுக்கு வரவேண்டும் என்று பலமுறை வற்புறுத்திச் செம்பாவிடம் கூறிச் சென்றாள்.

ஞாயிற்றுக்கிழமை. மனதுள் பழைய நினைவின் சுழல்களுடன், புவியின் ஐ.ஏ.எஸ். கனவு நிறைவேறியதா என்று தெரிந்து கொள்ளும் ஆவலுடனும் பல்வேறு கேள்விகளுடனும் புவியின் வீட்டுக் கதவைத் தட்டினாள் செம்பா.

கதவைத் திறந்தன இரு வாண்டுகள். ஒன்றிற்கு ஆறு வயது இருக்கும். மற்றதிற்கு நாலு. இருவருக்குமே புவியின் ஜாடை. புவியின் குழந்தைகளாக இருக்கும் என்று ஊகித்தபடியே உள்ளே சென்றாள் செம்பா. ஹாலில் ஒரு மூலையில் மூன்று பெண்கள் அமர்ந்தபடி எதையோ தைத்துக் கொண்டிருந்தனர். உள்ளே ஒரு அறையில் இருந்து சிறு குழந்தைகள் ஒன்று சேர்ந்து பாடும் சத்தம் வந்தது. "லம்போதர லகுமிகரா" எனப் பாடிக் கொண்டே கதவைத் திறந்த வாண்டுகளும் அந்த அறையை நோக்கி ஓடின. ஒரு நிமிடம் கழித்து வெளியே வந்தாள் புவி.

பெரிய புன்னகையுடன் ஓடி வந்து ஆறத் தழுவினாள், செம்பாவை.

"ஏய் செம்பா. வா வா. உட்காரு. கொஞ்ச நேரம் வெயிட் பண்றியா. இதோ ஃப்ரீ ஆய்டுவேன்" என்று சொல்லிவிட்டு ஃபேனைப் போட்டுவிட்டு ஒரு புத்தகம் எடுத்துப் படிக்கச்சொல்லி நீட்டினாள். உள்ளே பாட்டு களாஸ் நடத்தியபடி அவ்வப்போது சமையல் அறைக்கும் சென்று அதையும் கவனித்துக் கொண்டிருந்தாள். இடையில் செம்பாவுக்கு ஒரு காபியும் போட்டுக் கொடுத்தாள். பாட்டு களாஸ் நடந்து கொண்டிருந்த அறைக்குப் பக்கத்து அறையிலிருந்து "அம்மா, புவனா. கொஞ்சம் தண்ணி கொடும்மா" என்று ஒரு குரல் தீனமாக ஒலித்தது.

சிரித்தபடி சமையல் அறையிலிருந்து வெளிவந்த புவி, "ம்ம்ம். எங்கே ‘ஸ.. ப... ஸ..’ சொல்லுங்க" என்று பாடிக் கொண்டிருந்த குழந்தைகளிடம் சொல்லிவிட்டு, ஒரு குவளைத் தண்ணீருடன் அந்த அறைக்குச் சென்றாள். குழந்தைகள் அவள் சொல்லியபடி அன்றைய ‘ஸ.. ப... ஸ..’ சொல்லத் தொடங்க, தையல் மிஷினில் தைத்துக் கொண்டிருந்த ஒரு பெண், "மேடம். இந்த சாய்வுத் தையல் சரியா இருக்கா?" என்று கேட்க, அவளிடம் சென்று அதைச் சரிபார்த்து அவளுக்கு பதில் சொல்லிவிட்டு ஏதோ சரிசெய்தாள். இவளைப் பார்த்து அங்கிருந்தே சிரித்தாள்.

செம்பா மெல்ல எழுந்து அங்கிருந்த ஷோகேஸில் உள்ள போட்டோக்களை வேடிக்கை பார்க்கத் துவங்கினாள். எங்கேயாவது புவியின் ஐ.ஏ.எஸ். பேப்பர்ஸ், படம் பார்க்கக் கிடைக்குமா என்று பார்த்தாள்.

அரைமணி நேரம் கழித்து ஒரு சுவையான, சூடான தின்பண்டம், பழச்சாறு இவற்றுடன் செம்பா முன் அமர்ந்த புவியின் முகத்தில் களைப்போ, அயர்ச்சியோ சிறிதும் இல்லை. ஒரு அமைதி. நிதானம் இருந்தது. சிறிது நேரம் மேலோட்டமாகப் பேசிய பின்னர், "என்ன ஆச்சு புவி, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதினியா, ஏதாவது வேலைக்குப் போறியா என்ன?" என்று கேள்விகளை அடுக்கினாள் செம்பா.

சிரித்தபடி ஆரம்பித்தாள் புவி. "இல்ல செம்பா. இவர் வீடு கூட்டுக்குடும்பம். எல்லாருக்கும் சமையல், குழந்தைகளைப் பார்த்துக்கணும். அப்புறம் என்னோட மாமியாருக்கு உடம்பு சரியில்லை. ரொம்ப வருஷமா படுத்த படுக்கை. அவங்களை கவனிச்சு வேளா வேளைக்கு மருந்து தர்றது இப்படிப் பல விஷயங்களை நான்தான் செய்யணும்குற சூழ்நிலை. நாட்கள் வருஷங்களாப் பறந்து போயிருச்சி. என்னால ஐ.ஏ.எஸ் எழுத முடியலை. நீ எப்படி இருக்க, டாக்டர் ஆகி என்னல்லாம் பண்ற?"

"ம்ம்ம். முன்னாடி சொன்னபடி என்னால கிராமத்துல சர்வீஸ் பண்ண முடியலை புவி. இவருக்கு இங்கதான் பிராக்டிஸ். அதனால ரெண்டு பேரும் இங்கயே செட்டில் ஆகிட்டோம். ஆனா என்னால முடிஞ்சவரைக்கும் ஏழைகளுக்கு இலவசமா மருத்துவம் பண்றேன். அதைத் தவிர வேற எதுவும் என்னால பண்ண முடியலை."

"அதுனால என்ன செம்பா! நீ ஒரு கைராசி டாக்டர் இப்போ. அது எவ்ளோ பெருமை!"

"அது சரி. ஆனா நீ உன் கனவை நிறைவேத்த முடியலையே புவி. எனக்கு அது ரொம்ப வருத்தம்."

"அட.. என்ன சொல்ற நீ! நான் வேலைக்குதான் போகலை. வீட்டுல குழந்தைங்கள, பெரியவங்கள பார்த்துக்கணும்னு ஆயிடுத்து. ஆனா கார்த்தால வீட்டிலேயே யோகா க்ளாஸ், அப்புறமா டைலரிங், எம்பிராய்டரி க்ளாஸ், சாயங்காலம் குழந்தைகளுக்கு பாட்டு, டான்ஸ், டியூஷன் இப்படி பல வேலைகளைச் செஞ்சு பிஸியாதான் இருக்கேன். என்னோட வீட்டுக்குப் பக்கத்துச் சேரியில இருக்கற குழந்தைங்களுக்கு பாடம் சொல்லித்தரேன். என் நேரம் உபயோகமாகத்தான் போகுது."

"ஆனாலும் கனவு மெய்ப்பட வேண்டும்னு பாரதியார் கவிதை எல்லாம் பாடுவியே புவி" என்று செம்பா குரல் தழுதழுக்க, "செம்பா. அது அந்தப் பாடலோட ஒரு வரிதான். அதன் மத்த வரிகள் அத்தனையும் எனக்குக் கிடைக்கும்படி உழைக்கிறேன். மனதில் உறுதி, வாக்கினில் இனிமை, நினைவு நல்லது, இன்பம், தரணியில் பெருமை, மண் பயன்பெற உழைப்பு, உண்மையா நின்று வளர்வது! இப்படி எல்லாமே கிடைத்த பெருமை எனக்கு இருக்கு. கனவு ஒண்ணு போனா என்ன செம்பா, பலநூறு இன்னும் இருக்கும்" என்று கூறியபடி சிரித்தாள் புவி. பல கைகளுடைய பராசக்தியாகத் தெரிந்தாள் செம்பாவுக்கு.

லக்ஷ்மி சுப்ரமணியன்,
மின்னசோட்டா
More

இரைச்சலே வாழ்க்கையாக...
"உன் குடும்பம் அழகானது!"
Share: