Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Feruary 2014 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | கவிதை பந்தல் | அஞ்சலி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர் கடிதம் | Events Calendar | பொது
Tamil Unicode / English Search
சிறுகதை
இரைச்சலே வாழ்க்கையாக...
கனவு மெய்ப்பட வேண்டும்
"உன் குடும்பம் அழகானது!"
- லக்ஷ்மி சங்கர்|பிப்ரவரி 2014|
Share:
ஆறுமாதம் இருக்கும் இது நடந்து. என் பத்துவயது மகன் பரத் ராத்திரி எட்டுமணி வாக்கில் வயிற்றை வலிக்கிறது என்றான். அஜீரணமாக இருக்கும் என்று நினைத்த நான் ஒரு பெப்டோ பிஸ்மால் மாத்திரை சாப்பிடு என்று சொல்லி எடுத்தும் கொடுத்தேன். நேரம் ஆக, ஆக இன்னும் வலிக்கிறது என்று சொல்லி அழ ஆரம்பித்துவிட்டான். எமர்ஜென்ஸிக்குப் போனபோது, "நல்லவேளை. அழைத்து வந்தீர்கள். உடனடியாக அபெண்டிக்ஸை எடுக்கணும்" என்றார்கள்.

நானும் என் கணவரும் பரத்தை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே உட்கார்ந்திருக்கும்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தால் நேஷ்வில் பிள்ளையார் கோவிலுக்கு மகனை அழைத்து வந்து நமஸ்காரம் செய்யச் சொல்வதாக வேண்டிக்கொண்டேன். தேங்காய் உடைப்பதாக நேர்ந்து கொள்ளவில்லை. அமெரிக்கக் கடைகளில் பாதி சமயம் தேங்காய் அழுகலாக இருப்பதால், எதற்கு வம்பு என்று நினைத்தேன். பரத்துக்கு உடம்பு சரியாகி இரண்டு வாரத்தில் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்துவிட்டான். ஒரு லாங் வீக் எண்டில் நேஷ்வில் போகலாமென்று நினைத்திருந்தோம்.

தன் ஒரே பேரன் பரத்துக்கு சர்ஜரி நடந்தது என்று தெரிந்தவுடன் அவனைப் பார்க்க என் மாமியார் சென்னையிலிருந்து வந்தார். ஓரிரு முறை இதற்கு முன்பு அமெரிக்கா வந்திருக்கிறார். ஆனால் அமெரிக்காவில் போரடிக்கிறது என்று சொல்லி ஏழெட்டு வருடங்களாக வருவதில்லை. நாங்கள்தான் 2, 3 வருடங்களுக்கு ஒருமுறை சென்னைக்குப் போய் அவரைப் பார்த்து வருவோம்.

லேபர் டே வாரயிறுதி, 3 நாள் விடுமுறை. ஞாயிற்றுக்கிழமையன்று நேஷ்வில்லுக்குப் போய்விட்டு, தரிசனத்தை முடித்துக்கொண்டு, சாயந்திரமாகவே திரும்பிவிடலாம் என்று திட்டம் போட்டோம். அம்மா உட்கார்ந்து போகச் சௌகரியமாக இருக்குமென்று ஒரு வேனை வாடகைக்கு எடுத்து வந்தார் கணவர் ராகவ்.

மாமியார் இந்தியாவிலிருந்து என் பெண் சுதாவுக்கு ஒரு பாவாடை தாவணி செட் எடுத்து வந்திருந்தார். தாவணி என்றால் என்ன என்று அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும் காலத்தில் ஏன் காசைச் செலவழித்து வாங்கி வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். ஒன்றும் சொல்லவில்லை.

"கோவிலுக்குப் போகும்போது சுதாவை நான் வாங்கி வந்த பாவாடை தாவணியை உடுத்திக்கச் சொல்லு மீரா" என்றார். காலையில் சுதாவைக் கிளப்புவதே கஷ்டம். இதில் பாவாடை தாவணியைப் போட்டுக்கொள் என்று சொன்னால் என்ன களேபரம் நடக்குமோ என்று பயம். ஆனால் சுதாவோ ஆச்சரியமாகப் பாட்டி ஆசைப்படி கட்டிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டாள்.

காலை 4 மணிக்கு அலார்ம் வைத்து எழுந்து, குளித்துத் தயாரானோம். மாமியாருக்கும் கணவருக்கும் காஃபி கலந்து கொடுத்தேன். என் கப்பை வாய்க்கருகே கொண்டுபோன சமயம் சுதா மாடியிலிருந்து "மாம், ஐ நீட் வார்ட்ரோப் அஸிஸ்டன்ஸ்" என்று கத்தினாள். கப்பை டைனிங் டேபிளின்மேல் வைத்துவிட்டு மேலேபோய் சுதாவுக்குப் பாவாடை தாவணியைக் கட்டிவிட்டேன். கண் பட்டுவிடும்படி அழகாக இருந்தது. மாமியாருக்கு ஒரே சந்தோஷம்.

ஒருவழியாக எல்லோரும் வாடகை வேனில் ஏறிக்கொண்டு கிளம்பினோம். ஐஃபோனில் வழியைப் பார்த்து ஒட்டிக்கொண்டிருந்த ராகவ் திடீரென்று "அடச்சை! ஃபோனில் பேட்டரி சார்ஜ் தீர்ந்து போய்விட்டது. நேற்று ராத்திரி ரொம்ப நேரம் ஆஃபீஸ் விஷயமாகப் பேசிக்கொண்டிருந்தேன். சரி. கார் சார்ஜர்தான் இருக்கிறதே. கவலையில்லை. காரில் சார்ஜ் பண்ணிக்கலாமென்று நினைத்துத் தூங்கப் போய்விட்டேன். கார் சார்ஜர் வீட்டுக் காரில் இருக்கு. அதை எடுத்துக்க மறந்துட்டேன். மீரா! உன் ஃபோனை எடு. நீயும் வீட்டில் வச்சுட்டு வந்துட்டேன்னு சொல்லாதே,"

"இல்ல. நான் ஞாபகமா எடுத்துண்டு வந்தேன். சுதா கைல இருக்கு. ஏதோ கேம் விளையாடிண்டிருக்கா. ஃபோனைக் குடு சுதா" என்றேன்.

நாங்கள் பேசிக்கொள்வது எதையும் கவனித்திராத சுதா "இந்த கேமை முடிச்சுட்டுத் தரேன்" என்றாள்.

ராகவுக்கு ஒரேயடியாகக் கோபம் வந்துவிட்டது "என்ன ஒரு இர்ரெஸ்பான்ஸிபிள்னெஸ். ஏதாவது சீரியஸ்னஸ் இருக்கா? வழி தெரிலன்னு நா முழிச்சுண்டிருக்கேன். நீ கேம முடிச்சுட்டுப் ஃபோனத் தரேங்கறியே" என்று கத்தினார்.

சுதாவின் கண்களில் நீர் தளும்பியது.

"கேம்ல முழுகியிருந்ததுல அவளுக்கு ஏன் ஃபோனக் கேக்கறோம்னு புரியல. ஃபோனக்கொடு சுதா. அப்பாக்கு வழி பாக்கணும்" என்றேன்.

சுதா உடனே ஃபோனைக் கொடுத்துவிட்டாள்.

ராகவின் மூட் இதற்குள் அவுட் ஆகிவிட்டது. "மீரா, நான் குழந்தைகளக் கரெக்ட் பண்றப்ப அவாளுக்கு வக்காலத்து வாங்கிண்டு வராதேனு எத்தன தடவ சொல்லியிருக்கேன்! சுதா, பாட்டி அதிசயமா ஊர்லேந்து வந்திருக்கா. பாட்டிகூடப் பேசிண்டு வராம, என்ன ஃபோன்ல வெளயாடறது?"

சுதா பதின்ம வயதினள். அமெரிக்காவிலேயே பிறந்து வளர்பவள். பாட்டிமேல் பாசம் இருந்தாலும் அடிக்கடி பார்க்காததால் பாட்டிக்கும் பேத்திக்கும் இடையே ஒரு சின்ன இடைவெளி. எல்லா அமெரிக்க வாழ் தமிழ்க் குழந்தைகளயும்போல என் குழந்தைகளும் தமிழ்க் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில்தான் பதில் சொன்னார்கள். என் மாமியாருக்கு ஆங்கிலம் தெரியும் ஆனால் அமெரிக்க ஆங்கில உச்சரிப்பைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது.

இதையெல்லாம் யார் ராகவுக்கு, அதுவும் மூட் அவுட் ஆன சமயத்தில் எடுத்துச் சொல்வது?

நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த என் மாமியார் சுதாவிடம் பேச்சுக்கொடுத்தார். "என்ன சுதா, பியானோ கற்றுக் கொள்கிறாயாமே? எனக்குக் கர்நாடிக் மியூஸிக்தான் தெரியும். இப்ப நீ பியானோவுல என்ன கத்துக்கறே?" என்றார்.

"ஃபர் எலிஸ்."

"எனக்கு ஒன்னும் புரியல. நீ அப்றமா எனக்கு வாசிச்சுக் காமி."
"ஒனக்கு என்ன பட்சணம் பிடிக்கும்? நா பண்ணித் தரேன்."

"சீடை."

"சூப்பர் சிங்கர் பாப்பியா?"

"இல்ல."

"நீ ஏப்ரல் மாசம் இடலிக்குப் போகப்போறியாமே, ராகவ் சொன்னான்."

"ஆமா."

பாட்டிக்கும் பேத்திக்கும் நடக்கும் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டே வந்த ராகவ் இடைபுகுந்து கத்தினார். "பார்த்தியாமா, இவ ஒத்த வார்த்தைல பதில் சொல்றத. தமிழ்ல பேசுன்னா அவ்ளோ கஷ்டமா இருக்கு. ஸ்கூல்ல லேடின் படிக்கிறாளாம். இடலிக்குப் போணுமாம். பேத்தலாயிருக்கு. தாய்ப் பாஷய மொதல்ல ஒழுங்காப் பேசமுடியல. ட்ரிப்பக் கேன்ஸல் பண்ணிட்டுப் பணத்தத் திருப்பி வாங்கணும்."

மாமியார் "அமெரிக்காலதான் கொழந்தேள் இங்கிலிஷ்லயே பேசறா. டென்மார்க்ல பானு சித்தியோட பேத்திகள் இருக்காளே, அவாள்ளாம் தமிழ் நன்னாப் பேசறா" என்றார்.

என் மாமியாருடன் கூடப் பிறந்தவர்கள் 8 பேர். பானு சித்தியென்றவுடன் பேச்சு சுந்தரி பெரியம்மா, ரவி மாமா என்று திரும்பியது. அம்மாவும் பிள்ளையும் அவர்களைப்பற்றிப் பேசத் தொடங்கிவிட்டார்கள். சுதாவும் விட்டால் போதுமென்று வெளியே வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள்.

திடீரென்று மாமியார் ரெஸ்ட் ரூம் பிரேக் வேண்டுமென்றார். தகுந்த இடம் வந்தவுடன் அவரை அழைத்துப் போனோம். மாமியார் பாத்ரூமுக்குள் இருக்கும்பொழுது சுதா என்னிடம் "மாம், எனக்குக் கட்டாயம் இடலி போயே ஆகவேண்டும். இதென்ன அப்பா பணத்தைத் திருப்பி வாங்க வேண்டுமென் கிறார்?" என்றாள்.

"சுதா! இப்ப ஒண்ணும் நீ பேசாத!. அப்பா கோவத்துல இருக்கார். பின்னால பார்த்துக்கலாம்" என்றேன்.

காரில் ஏறிக்கொண்ட மாமியார் தோத்திரப் புத்தகங்களைப் படித்துக்கொண்டு வர, ஒருவழியாகக் கோவில் போய்ச் சேர்ந்தோம். தரிசனமெல்லம் நல்லபடியாக முடிந்தது.

கோவிலுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தினர் தங்களுக்கு அன்று 25வது கல்யாண நாளென்று வருபவர்கள் அனைவருக்கும் தமது செலவில் சாப்பாடு என்றும் சொன்னார்கள். நாங்களும் அங்கே சாப்பிடப் போனோம்.

சர்க்கரைப் பொங்கலைப் பார்த்தவுடன் பரத் "எனக்கு இந்த கூயி ஸ்டஃப் வேண்டாம்" என்றான். உடனே மாமியார் "நானும் வந்தத்துலேர்ந்து பாக்கறேன். கொழந்தேள் பாஸ்டாவும், பீட்ஸாவுந்தான் தெனம் சாப்படறா. நம்மூர் சாப்பாடு வகயறாக்களெல்லாம் அடிக்கடி பண்ணித் தரணும்" என்றார்.

நல்ல வேளையாக ராகவ் இடைபுகுந்து "அம்மா! இங்க ஒவ்வொரு வாரமும் யாராத்துலயாவது ஏதாவது ஒரு பஜன இருக்கு. பெரியாவா பாடுவா. கொழந்தேள் சேர்ந்து விளையாடிண்டிருப்பா. ஒண்ணு ரெண்டு பாடத் தெரிஞ்ச கொழந்தேள் கூப்டா வந்து பாடிட்டுப் போவா. பஜனக்கிப் பின்னாடி சாப்பாடு இருக்கும். ஸ்டிக்கி, கூயினு சொல்லிண்டு நம்மூர்ப் பதார்த்தம் பாதியையும் தொடமாட்டா. சில பேராத்துல பீட்ஸாவே ஆர்டர் பண்ணி வெச்சுடறா" என்றார். மாமியார் ஒன்றும் சொல்லவில்லை.

பொழுதோடு திரும்பிவிடலாம் என்று சாப்பிட்டவுடனே காரில் ஏறிக்கொண்டோம். காலையில் காபி குடிக்க மறந்ததால் தலைவேறு விண்விண்ணென்று வலித்துக் கொண்டிருந்தது.

அரைமணி கழித்து பரத், "அப்பா டின்னருக்குப் பீட்ஸா ஹட் போகலாம்" என்றான். மாமியார் பீட்ஸா சாப்பிடமாட்டார். ராகவும் "அம்மா, நீ வேணா அங்க சாலட், பிரெட்னு சாப்பிடறியா?" என்றார். மாமியார் உடனே "நா ரவிவாரம் விரதம். வெளில சாப்ட மாட்டேன். மீரா நீ ஆத்துக்குப் போனவுடனே ஒரு உப்புமாவக் கிளறிடு" என்றார்.

பரத் மூஞ்சியைத் தூக்கிவைத்துக்கொண்டான்.

அதன் பின்னர் மாமியார் ஆயாசமாக இருக்கிறதென்று தூங்கிக்கொண்டு வர அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாமென்று யாரும் ஒன்றும் பேசாமல் மௌனமாக வீடுபோய்ச் சேர்ந்தோம். வீடு வந்ததும் காஃபி கலந்து குடித்துவிட்டு உப்புமாவைக் கிளறினேன். பரத்தும் சுதாவும் கொறித்துவிட்டு அவரவர் ரூமுக்குப் போனார்கள்.

நான் கொஞ்சம் காற்று வாங்கினால் தேவலாமென்று வாக்கிங் கிளம்பினேன். எதிர்வீட்டு லிண்டா வாக் போய்விட்டுத் திரும்பிக்கொண்டிருந்தாள். அவள் தனியாக இருப்பவள். ஒவ்வொரு வருடமும் சம்மர் வந்தால் ஏதோ ஒரு குழுவுடன் ஆஸ்திரேலியா, அண்டார்டிகாவென்று போய்விட்டு வருவாள். அவளைப் பார்த்து எனக்குச் சிலசமயம் பொறாமையாக இருக்கும், பிக்கல் பிடுங்கல் இல்லாத பேர்வழியென்று.

லிண்டா என்னைப் பார்த்தவுடன் "ஹாய் மீரா! என்ன உங்கள் வீட்டு வாசலில் ரென்டல் வேன்?" என்றாள்.

"நாங்கள் என் மாமியாருடன் நேஷ்வில் போய் வந்தோம்" என்றேன்.

"யூ ஹேவ் எ ப்யூடிஃபுல் ஃபேமிலி மீரா. யூ ஆர் லக்கி!"

நான் மனதிற்குள் சிரித்துக் கொண்டே, "தேங்க் யூ" என்று முணுமுணுத்தேன்.

லக்ஷ்மி சங்கர்,
அட்லாண்டா, ஜார்ஜியா
More

இரைச்சலே வாழ்க்கையாக...
கனவு மெய்ப்பட வேண்டும்
Share: