இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி இசையுதிர்காலம்: சவால் ராஜா! சவால்! இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! அம்மாவின் முடிவு
|
|
பாரதியாரும் உளவாளிகளும் |
|
- |டிசம்பர் 2013| |
|
|
|
|
|
இரகசியப் போலீசார், பல வேஷங்கள் தரித்து பாரதியாரைப் பார்க்க வருவார்கள். இந்த பாக்கியம் அரவிந்தருக்கும், (வ.வே.சு.) அய்யருக்குங்கூட உண்டு.
ஒரு நாள் பாரதியாருக்கு ஒரு கடிதம் வந்தது. அதன் சாரம் வருமாறு:
ஹே! கவிச்சக்கரவர்த்தி! தங்களுடைய திவ்வியமுகமண்டல ஜோதியைக் கண்டும், தங்களுடைய அமிருத வர்ஷதாரைகளான பாடல்களைக் கேட்டும் ஆனந்தப்படுவதற்காக, கையில் காசில்லாமல், ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி, டிக்கெட்டில்லாமல் கடைசியாகப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன். இப்பொழுது ஓர் இடத்தில் மறைந்துகொண்டிருக்கிறேன். இரவு ஏழு மணிக்குத் தங்கள் வீட்டுக்கு வருகிறேன் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைத்துக் கொண்டிருந்தால் நல்லது.
தங்கள் பக்தன், இலக்கியப் பிரியன், திருநெல்வேலி அன்பன்
'ஸ்டேஷன் விட்டு ஸ்டேஷன் தாண்டி வந்த பக்தன், இலக்கியப்பிரியன், திருநெல்வேலி அன்பன்' ஏழு மணிக்கு வந்தார். ஆனால், பாரதியார் வெளிச்சத்தைச் சிறிதாக்கி வைக்கவில்லை; 'மறவர் பாட்டு' என்ற தமது பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தார். அந்தப் பாட்டிலே, "நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு" என்று ஓர் அடி இருக்கிறது. ஏழுமணி அடிக்கிற சமயத்தில், இந்த அடியைப் பாரதியார் பாடிக்கொண்டேயிருந்தார். வந்தவரும் இதைக் கேட்டுக்கொண்டே வந்தார்.
"நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு! சீ, சீ, சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு!" என்று உரக்கப் பாடினார் பாரதியார்.
வந்தவர் நல்ல தேக அமைப்புள்ளவர், தலை மொட்டை; விவேகானந்தரைப் போல, கழுத்துமுதல் கால்வரையில் காவிச்சட்டை. முகத்திலே நேர்த்தியான குங்குமப்பொட்டு.
பாரதியர் பாட்டை நிறுத்தினார். வந்தவர் கும்பிட்டார். "ஆஹா! தர்மம் நாசமாய்ப போகிறதே! கிருஹஸ்தன் நமஸ்காரம் செய்யணும். சந்நியாசி ஆசீர்வாதம் செய்யணும். தலைகீழ்ப் பாடமாய்ச் செய்துவிட்டீர்களே!" என்று அவரைப் பார்த்து பாரதியார் கேலி செய்தார்.
வந்தவர் சிரிக்கவேயில்லை. மடியில் கனம் போலிருக்கிறது. பாரதியாரின் சந்தேகம் ஊர்ஜிதப்பட்டது. "சரி! என்னைப் பார்த்தாய்விட்டது, போய்விட்டு வாருங்கள்" என்றார் பாரதியார். அன்பர் லேசிலே விடுகிற பேர்வழியல்ல. ஹிந்தி, இங்கீலீஷ், தமிழ் மலையாளம் முதலிய பாஷைகளில் ஒன்றுவிடாமல் பேசித் தீர்த்துவிட்டார். பாரதியாருக்கு அடங்காத கோபம்.
"அரவிந்தரை எப்பொழுது பார்க்க முடியும்?" என்றார் அன்பர். "அய்யரைப் பார்த்தாகிவிட்டதோ. இலையோ?" என்று பாரதியார் ஆத்திரத்துடன் கேட்டார். வந்தவருக்கு அப்பொழுதுதான் பாரதியாரின் ஆத்திரமும், சூட்சுமப் பேச்சும், பாட்டும் விளங்கின. வந்தவர் உத்தரவு கேட்டுக்கொண்டு வெளியே போகுமுன், "ஓய்! அர்ஜுன சன்னியாசி! உசிதமாய் வாழும்! உயரமாய் வாழும்! மட்டத்திலே ஆசை வைக்காதேயும்" என்று சொல்லிப் பாரதியார் அவரை வழியனுப்பபினார். |
|
நவரத்ன வியாபாரி
சன்னியாசி வேஷம் மட்டுமா? ஒரு நாள் நவரத்ன வியாபாரி ஒருவர் வந்தார். வியாபாரி வேஷம் அவருக்கு நன்றாகப் பலித்திருந்தது. கற்கள் ஏதேனும் வேண்டுமா?" என்றார் அவர் பாரதியாரிடம். பாரதியார் அவரை ஏற இறங்கப் பார்த்தார். பாரதியரின் சுடர்விழிப் பார்வையைக் கண்டு அவர் ஆச்சர்யமடைந்தார்.
"ஓய்! என்னிடத்தில் கொஞ்சம் நவரத்தினங்களிருக்கின்றன. அவை விலைபோகும்படியாக, உங்கள் சர்க்காரிடம் கொஞ்சம் சிபார்சு செய்யுங்களேன். உம்மிடம் போலீஸ் டயரி இருக்கிறதா?" என்றார் பாரதியார்.
ரத்ன வியாரிக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவருக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. "பெரியவாளுக்கு நமஸ்காரம்" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
சில சமயங்களில், பலாத்காரப் புரட்சியைப்பற்றிப் பாரதியார் என்ன எண்ணிக்கொண்டிருக்கிறார் என்பதை அறியத் தலைப்பாகை, கோட், ஷர்ட் முதலிய அங்கங்களுடன் சில இங்கிலீஷ் படித்த 'வித்வான்கள்' வருவார்கள். இவர்களுள் பெரும்பான்மையோர் இரகசியப் போலீஸ் இலாகாவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். பாரதியாரின் கண்கள் இவர்களின்பேரில் அம்புகளைப்போலப் பாயும்.
ஆனால், வந்தவர்களெல்லோரும் பாரதியாரின் பெருமையை உணராமல் போனதில்லை. சில சமயங்களில் அவர்களுடன் பேசாமல் பாரதியர் பாடிக் கொண்டேயிருப்பர். எந்த வேஷம் போட்டுக்கொண்டாலும், எந்த மனிதனாவது நாட்டை மறக்க முடியுமா? வயிற்றப் பிழைப்பு மனிதனைச் சாறாகப் பிழிந்து சக்கையாக அடித்துவிடுவதில்லை. வயிற்றுப் பிழைப்புக்காரர்களுக்குக்கூடப் பாரதியாரைக் கண்டதும் இயற்கையான மனித சுபாவம் திடீரென்று வந்துவிடும். அந்த நரம்பில் 'கைவைத்து' அழுத்தப் பாரதியாருக்குத் தெரியும்.
(டிசம்பர் 11 அன்று பாரதியாரின் பிறந்தநாள். மேலே உள்ளது வ.ரா. எழுதிய 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து எடுக்கப்பட்டது) |
|
|
More
இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி இசையுதிர்காலம்: சவால் ராஜா! சவால்! இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! அம்மாவின் முடிவு
|
|
|
|
|
|
|