இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி இசையுதிர்காலம்: சவால் ராஜா! சவால்! இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! பாரதியாரும் உளவாளிகளும்
|
|
|
|
|
நவம்பர் மாதத் தென்றலில் எனக்கு மிகப்பிடித்த 'அன்புள்ள சிநேகிதியே' பகுதியில், வாசகர் ஒருவர், தான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், அவருடைய அம்மா "சாதி சனம் என்ன சொல்லும்?" என்று வருத்தப்படுவதாகவும் எழுதியிருந்தார். டாக்டர். சித்ரா அவர்கள் அதற்கு "உங்கள் அம்மாவிடம் விஷயத்தைத் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்" என்பதாக பதில் கூறியிருந்தார்.
இந்த கடிதம் என்னை முப்பத்தி ஒன்பது வருடங்களுக்கு முன் மதுரைக்கு அழைத்து சென்றது.
ஃப்ராங்க் பென்னெட் என்ற ஒரு வெள்ளை அமெரிக்கர் யேல் பல்கலை கழகத்தில் படித்துக் கொண்டிருந்தாலும், முப்பது மைல் தள்ளியிருந்த வெஸ்லியனில் டாக்டர். எஸ். ராமனாதன் என்ற இசைக் கலைஞரிடம் வீணைக் கற்றுக் கொண்டிருந்தார். அப்போது அவர் மகள் கீதாவையும் சந்திக்க நேர்ந்ததது. இசை அந்த இரண்டு உள்ளங்களையும் இணைத்தது. அப்பாவும், பெண்ணும் இந்தியா திரும்பினார்கள். டிசம்பரில் சென்னை இசை விழாவைப் பார்க்கும் ஆசையில் வந்த பென்னெட், அந்தச் சமயம் மதுரையில் வசித்த கீதாவின் பெற்றோரிடமும் பேசலாம் என்று முடிவு செய்தார். ஆனால் "கீதா பிராமணப் பெண். அவர்கள் மார்கழி மாதம் திருமணம் செய்துகொடுக்க மாட்டார்கள். அதனால் தை மாதமான ஜனவரியில் போ" என்று பென்னெட்டின் மதிப்புக்குரிய மிருதங்க குரு திரு. ராம்னாட் ராகவன் சொன்னார். பென்னெட்டோ நவம்பரிலேயே மதுரை வந்துவிட்டார்.
கீதாவின் பெற்றோர் நடுத்தர வர்க்க குடும்பத்தினர். பெரிய குடும்பம். கீதாவின் அக்கா சுகன்யாவிற்குக் கல்யாணம் ஆகிவிட்டது. ஆனால் அவளுக்குக் கீழே ஒரு தம்பி, ஐந்து தங்கைகள். அப்பா எஸ். ராமனாதன் (டாக்டர் எஸ்.ஆர். என்று சுருக்கம்). தொழில் கர்னாடக சங்கீதம். வைதீக குடும்பம். கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாத மதுரையில் குட்ஷெட் தெரு வாசம். எஸ்.ஆரிடம் தான் கீதாவைத் திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதாக பென்னெட் தெரிவித்துவிட்டார். திகைத்துப் போன அவர் "என் மனைவி கௌரியிடம் சொல்ல வேண்டும். அவள் சம்மதித்தால்தான் இந்தத் திருமணம்" என்றார். இது சொல்லி மூன்று வாரத்துக்கு மேல் ஆகிவிட்டது. எஸ்.ஆர். இதை கௌரியிடம் சொல்லவில்லை என்று தெரிய வந்தது. பென்னெட்டுக்குப் பொறுமை இல்லை.
கீதாவின் தம்பி ராஜு அவருக்கு ரொம்ப தோஸ்த். அவன் உதவியோடு ஒரு பெரிய தட்டில் வெற்றிலை, பாக்கு, பழம், குங்குமம், சந்தனம், மதுரை மல்லி, அத்துடன் அமெரிக்காவில் பார்த்துப் பார்த்துத் தேடி வாங்கிய பிங்க் நிறப் புடவை (பிங்க் காதலின் நிறமாம்!), கல்கண்டு என்று எல்லாவற்றையும் வைத்து கீதாவின் அம்மாவின் கையில் அவர்கள் வீட்டுப் பின்புறத்தில் வைத்துக் கொடுத்து காலில் விழுந்து நமஸ்கரித்து "I would like to ask you for Geetha's hand" என்று அமெரிக்கனில் சொன்னார். கீதாவின் அம்மாவுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனாலும் இத்தனை மங்களகரமான பொருட்கள், காலில் விழுந்து நமஸ்கரிக்கும் ஒரு இளம் ஆண்மகன், 'கீதா, ஹேண்ட்' என்று சொல்லும்போது அது என்னவென்று புரிந்துவிட்டது. என்ன பதில் சொல்வது?
உடனடியாக கீதாவை மதுரையிலிருந்து சென்னைக்கு அவளுடைய சகோதரி சுகன்யா வீட்டிற்கு அனுப்பினார்கள். வளவனூர் கிராமத்திலிருந்து பிச்சமூர்த்தி மாமா வந்தார். "இதெல்லாம் நடக்காத விஷயம்" என்று கோபப்பட்டார். திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கையே எள்ளளவும் இல்லை. ஆனாலும் பென்னெட் மிகவும் பொறுமையாகக் காத்திருந்தார். |
|
ஒருநாள் விடியற்காலையில் சென்னைக்கு சுகன்யா வீட்டிற்கு வந்தவர் "உன்னுடைய அம்மா கௌரி சரி என்று சொல்லிவிட்டார். அவரும் நானும் முத்துசாமி நகைக்கடைக்குச் சென்று தங்கத்தில் திருமாங்கல்யம் வாங்கிவிட்டோம். உன்னை இன்றிரவு பாண்டியனில் வரச் சொல்லியிருக்கிறார். சுகன்யாவும், சித்தி சிவகாமி நடராஜனும், நானும் பஸ்ஸில் வந்துவிடுகிறோம். நாளை மறுநாள், திங்களன்று காலையில் திருமணம். அதற்கு ஏற்பாடுகள் செய்து விட்டார்" என்று சொன்னார்.
குட்ஷெட் தெரு வீட்டு ஹாலில் திங்களன்று கண்மூடிக் கண் திறப்பதற்குள் மூன்றே நிமிடங்களில் திருமணம் நடந்து முடிந்தது. பென்னெட் கீதாவின் கழுத்தில் மாலையிட்டு, அவள் கழுத்தில் தாலி கட்டி, மெட்டி அணிவித்து ஒரு இருபது பேர் எதிரில் கீதாவைத் தன் மனைவியாக்கிக் கொண்டார். அதன் பின் வந்த விருந்தாளிகளுக்கு கல்யாண சாப்பாடு. குமாரி. கீதா ராமனாதன் திருமதி. கீதா பென்னெட் ஆன போது அம்மாவிற்கு "யாரைக் கேட்டு இதற்கு ஒப்புக் கொண்டீர்கள்? சாஸ்திர சம்மதமா?" என்றெல்லாம் கேள்விகள் வந்தன. ஆனால் எல்லோருடைய வாயையும் அடைக்கும் வகையாக "என் பெண்ணை பென்னெட் சந்தோஷமாக வைத்திருப்பான். அவளையும் அவளுடைய சங்கீதத்தையும் அவன் பொக்கிஷமாக போஷிப்பான். இது என்னுடைய முடிவு. நான் வேறு யாரையும் கேட்க வேண்டியதில்லை" என்றார் தீர்மானமாக.
சாதி சனத்தைவிடத் தன் மகளின் சந்தோஷத்தை மட்டுமே மனதில் வைத்து தைரியமாக முடிவெடுக்க முடிந்தது என்றால் அது ஒரு அம்மாவால் மட்டுமே முடியும் என்பதை நிரூபித்து விட்டார். அம்மாவின் ஆசையும், ஆசிகளும் வீணாகவில்லை. இன்றுவரை பென்னெட் கீதாவை மிகமிக மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார். அவளுடைய சங்கீதத்தை அருமை பெருமையாக போஷிக்கிறார். அவர்களுடைய பாசத்துக்குரிய ஒரே அன்பு மகன் ஆனந்த் ராமச்சந்திரன் மிக அருமையான இசைக் கலைஞனாக உருவாகியிருக்கிறான். எல்லாவற்றிற்கும் மேலாக கீதாவின் அத்தனை தங்கைகள், தம்பிக்கும் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் திருமணம் ஆகி எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
வரும் ஜனவரி 21, 2014 அன்றைக்கு பென்னெட்டும், நானும் நாற்பதாவது திருமண ஆண்டைக் கொண்டாடுகிறோம். அம்மா வாழ்த்துவாள்!
கீதா பென்னெட், தென்கலிஃபோர்னியா |
|
|
More
இசையுதிர்காலம்: சர்ப்பம், சரபம், சாஸ்திரிகள் இசையுதிர்காலம்: கொள்ளையரைக் கொள்ளை கொண்ட கதாகாலட்சேபம் இசையுதிர்காலம்: இளகவைத்த இசைமணி இசையுதிர்காலம்: சவால் ராஜா! சவால்! இசையுதிர்காலம்: துண்டுக்கும் காரணம் உண்டு! பாரதியாரும் உளவாளிகளும்
|
|
|
|
|
|
|