Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2006 Issue
பதிப்புரை | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | முன்னோடி | தமிழக அரசியல் | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | புதிரா? புரியுமா? | சிறுகதை
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | விளையாட்டு விசயம் | சினிமா சினிமா | Events Calendar
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்நிகர் மாயத்தின் மர்மம்
- கதிரவன் எழில்மன்னன்|நவம்பர் 2006|
Share:
Click Here Enlargeபாகம் 8

முன் கதை:
Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவ மனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீகமாகக் காதலித்தாலும், அவர் தன் கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப் படையாக நெருங்கக் காத்திருக்கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் தொழில்நுட்ப நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்தார்.

நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகையும் அதில் மிக சக்தி வாய்ந்த உணர்வுத் தூண்டலையும் சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர்வதற்காக அந்த சாதனத்தை அணிந்து பாரீஸில் உள்ள லூவ் ம்யூஸியத்துக்கே போய் டாவின்சி ஓவியங்களைப் பார்ப்பது போல் காட்டினர். பிறகு, உணர்வுத் தூண்டல் அனுபவத்தைக் காட்ட ரிச்சர்ட் கிரணுக்குக் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருப்பது போல் காட்டி, எடையின்மை (weightlessness) உணர்வைத் தூண்டி வியப்பளித்தார். ஆனால் அது கிரணுக்குத் தாங்க முடியாத தலைவலி அளித்து அபாயத்துக்குள்ளாக்கிவிட்டது. ரிச்சர்ட் சாதனத்தை உடனே கழற்றி கிரணை ஆசுவாசப் படுத்தினார். அந்த மாதிரி ஏற்கனவே பலமுறை ஆகியிருந்தாலும் ஒரே ஒரு முறை அம்மாதிரி ஆகவில்லை என்று நாகு தெரிவிக்கவே சூர்யா அதை இன்னும் ஆழமாக விசாரிக்க ஆரம்பித்தார்...

முதலில் ஒழுங்காக வேலை செய்து கொண்டிருந்த உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பம், சமீப காலமாக ஒவ்வொரு முறை முக்கியமாக செய்து காட்டும் போதும் தகராறாகிறது; ஆனால் ஜேம்ஸ் என்பவர் ஒரே ஒரு முறை குறுகிய காலம் மட்டுமே செய்து காட்டிய போது தகராறு ஏற்படவில்லை என்று நாகு கூறியதும் ரிச்சர்டே ஆச்சர்யத்துக் குள்ளானார். தானில்லாத போது அப்படி நடந்தது என்று தெரிய வந்ததும் சூர்யா விண்ணப்பித்த படி ஜேம்ஸை அழைத்தார்.

அவர்கள் கூடியிருந்த அறைக்குள் ஜேம்ஸ் நுழைந்ததும் ரிச்சர்ட் அவருக்கு சூர்யா, ஷாலினி, கிரண் மூவரையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த ஆழ்ந்த விஞ்ஞானப் பிரச்சனையை ஒரு துப்பறிவாளரால் எப்படித் தீர்த்து விட முடியும் என்று முதலில் ரிச்சர்ட் சந்தேகப் பட்டதை போலவே ஜேம்ஸும் எண்ணியது அவர் முகத்தில் நன்றாகவே பிரதிபலித்தது.

ஆனால் சூர்யா அடுத்து வீசிய வேட்டு அந்த எண்ணத்தை உடனே தகர்த்தெறிந்துவிட்டது!

ஜேம்ஸின் சந்தேக எண்ணத்தை உடனே உணர்ந்து விட்ட சூர்யா, பிரச்சனையை விரைவில் தீர்க்க வேண்டுமானால் அவரது முழு ஒத்துழைப்பும் கூடிய சீக்கிரம் தேவையாயிருக்கும் என்பதால் உடனேயே அவருக்கு நம்பிக்கை வளர்க்க முடிவு செய்து தன் திறனை வெளிப்படுத்தினார்:

"ஹலோ ஜேம்ஸ்! உங்களை சந்திக்கறதுல ரொம்ப மகிழ்ச்சி. இந்தப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான முக்கிய திறவுகோல் உங்க கிட்டதான் இருக்குன்னு நினைக்கிறேன். ஆனா, பல கால அளவு டெமோ செஞ்சா எந்த விளைவு இருக்குன்னு புள்ளி விவரங்களை குடைஞ்சு நீங்க செஞ்சு கிட்டிருக்கற ஆராய்ச்சி இன்னும் ஒரு முடிவையும் தரலை போலிருக்கே? உள்ள செய்யற சோதனைகள் அஞ்சு நிமிஷ மானாலும் தகராறு செய்யலை,

ஆனா வெளி டெமோக்கள் சில நொடிகளிலிருந்து ஒரு நிமிஷம் கூட ஆகாம கெட்டுப் போயிடுது போலிருக்கே? ஆனா அதுலயும், ஒவ்வொண்ணு ஒவ்வொரு சமயத்துல நடந்திருக்கு... ஒரு பேட்டர்னும் இருக்கறா மாதிரி தெரியலை போலிருக்கு? அடுத்து எந்த கோணத்துல ஆராய்ஞ்சு பார்க்கலாம்னு நினைக்கறீங்க?"

சூர்யா வீசிய கணை ஜேம்ஸ் மட்டுமல்லாமல், நாகுவுக்கும், ரிச்சர்டுக்கும் கூட அளித்த அதிர்ச்சியால் அவர்கள் முகங்கள் போன போக்கு, சூர்யாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட ஷாலினிக்கு பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்க, கிரணுக்கோ அது ஒரு பெரும் சிரிப்புக் காட்சியாகவே தோன்றியது! கிரண் மிகவும் சிரமப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிப்பை அடக்கிக் கொண்டான்.

சூர்யா பட படவென வீசிய கேள்விகளால் அடைந்த பெரும் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாத ஜேம்ஸ், வாய் பிளந்தபடி ஒன்றும் பேச முடியாமல் திணறினார்! சூர்யாவின் திறமையை முதலிலேயே அனுபவபூர்வமாக உணர்ந்திருந்த நாகுவையும், ரிச்சர்டையும் கூட அவரது கேள்விக் கணைகள் வியப்பில் ஆழ்த்திவிட்டன! அவர்களும் ஒருவர் ஒருவரின் முகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றனர்.

ஜேம்ஸ்தான் முதலில் சுதாரித்துக் கொண்டு, "என்ன... எப்படி... உங்களுக்கு எப்படித் தெரியும்? நான் இன்னும் ரிச்சர்டுக்குக் கூட அந்தப் புள்ளி விவர ஆராய்ச்சியைப் பத்திக் காட்டலயே" என்றார். பிறகு அது எப்படித் தெரிந்திருக்கலாம் என்று ஒரு எண்ணம் தோன்றவும் பொங்கிய உஷ்ணத்தோடு ரிச்சர்ட் மேல் பாய்ந்தார்! "ரிச்சர்ட், இது எனக்கு ரொம்ப வருத்தத்தைத் தருது! என் கிட்டக் கூட கேட்காம என் ஆராய்ச்சி ஃபைல்களை இவர் கிட்ட ஏன் காட்டிப் பகிர்ந்துக்கிட்டீங்க? என் கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டிருந்தா நான் நல்லாவே விளக்கியிருப்பேனே. இவர் சொல்றது நூறு சதவிகிதம் சரியாத்தான் இருக்கு. ஆனாலும் இன்னும் விளக்கமா நான் சொல்லியிருப்பேன். இவர் சொல்லாத இன்னும் பல நுணுக்கங்கள் அதுல பதுங்கியிருக்கு..."

ரிச்சர்ட் தடுமாற்றத்துடன் பெரிதாக தலையசைத்து, கையை உயர்த்திக் காட்டி மறுத்தார். "சே, சே, சே! ஜேம்ஸ், கொஞ்சம் இருங்க. நீங்க ரொம்பத் தப்பா புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. நான் உங்க ரிப்போர்ட்டுகளைப் பார்க்கவுமில்லை, சூர்யா கிட்டக் காட்டவுமில்லை. சொல்லப் போனா நீங்க இந்த மாதிரி புள்ளி விவரங்களை அலசிக்கிட்டிருக்கறது கூட சூர்யா இப்ப சொல்ற வரைக்கும் எனக்குத் தெரியாது! ஒரு வேளை நாகு அவர்கிட்ட சொல்லியிருக்கலாமோ?" என்று நாகுவைக் கோபம் கலந்த கேள்விக் குறியுடன் பார்த்தார்.

நாகு உடனே ஆட்சேபித்து மறுத்தார். "ரிச்சர்ட், கொஞ்சம் நில்லுங்க. எனக்கு இதைப் பத்தி துளிக் கூடத் தெரியாது! எனக்கும் கூட ஜேம்ஸோட புள்ளி விவர ஆராய்ச்சி பத்தி இப்பத்தான் முதல் முதல்ல தெரிஞ்சிருக்கு. ஜேம்ஸ் யாருக்கும் தெரிவிக்காமத் தானாவேத்தான் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கார்னு நினைக்கிறேன். ரொம்ப நல்ல, பாராட்ட வேண்டிய முயற்சிதான். ஆனா இது சூர்யாவுக்கு மட்டும் எப்படித் தெரிஞ்சுதுன்னு தான் புரியலை..." என்று இழுத்தவர், திடீரென்று ஓர் எண்ணம் உதிக்கவே வேகத்துடன் கிரண் மேல் பாய்ந்தார்! "கிரண் உன் வேலையா இது?! நீ ஒரு பெரிய கம்ப்யூட்டர் மின்வலை நிபுணன், ஒரு நிமிஷத்துல பாதுகாப்புக்களை உடைச்சு உள்ளே புகுந்துடுவேன்னு சூர்யா சொல்லியிருக்கான் எனக்கு..." என்றார்.
Click Here Enlargeகிரண் சிரித்துக் கொண்டு, இரண்டு கைகளையும் உயர்த்தி உள்ளங்கைகளை விரித்துக் காட்டி, "ஐயோடாப்பா என்னை ஆளைவிடுங்க! இந்த விஷயத்துல நானும் ஒண்ணுமே தெரியாத அப்பாவிதான். இது ஒரு சூர்யா மேஜிக் மட்டுந்தான்! அவர்கிட்டதான் கேக்கணும் எப்படித் தெரிஞ்சுதுன்னு!" என்றான்.

ஷாலினியும் தன் பங்குக்கு ஒன்றொலித்தாள்! "ஆமாம், அடுத்தது என்னை சந்தேகப் பட்டுடப் போறீங்க! நாகு, ரிச்சர்ட் உங்களுக்குத்தான் ஏற்கனவே சூர்யாவின் யூகத்திறனைப் பத்தித் தெரியுமே! இது நிச்சயமா எதையோ வச்சு அவர் கணிச்ச யூகமாத்தான் இருக்கணும்." என்றாள்.

கிரண் தொடர்ந்தான். "சூர்யா சொல்லிடுங்க! இல்லைன்னா அடுத்தது நாம எல்லாம் சேர்ந்து இங்க சுவத்துல bug வச்சுட்டோ ம் இல்லைன்னா vent-ல வீடியோ கேமரா வச்சுப் பாத்துட்டோ ம்னுடப் போறாங்க" என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

சூர்யாவும் முறுவலுடன் விளக்கினார். "ஷாலினி சொன்னது சரிதான். நான் சொன்னது வெறும் யூகந்தான். ஆனா அந்த யூகம் சரிதான்னு ஜேம்ஸோட ரீயாக்ஷன் நிரூபிச்சுடுச்சு!"

ஜேம்ஸ் இன்னும் நம்பிக்கை வராமலிருக்கவே மேலும் பொறுமினார்.

"வெறும் யூகமா, அதெப்படி அவ்வளவு சரியா இருக்க முடியும்? என்னால இன்னும் நம்ப முடியலை."

சூர்யா விளக்கலானார். "ஜேம்ஸ், நீங்க உள்ள நுழைஞ்சவுடனேயே உங்க கையில இருக்கற நோட் பேடைக் கவனிச்சுட்டேன். நீங்க கிரண், ஷாலினிக்கு கை குலுக்கி அறிமுகம் செஞ்சுக்கறச்சே, நான் உங்க அருகிலேயே இருந்தேன். அந்த நோட் பேட்ல எழுதியிருந்தக் குறிப்புக்களையும் கையில வரைஞ்சிருக்கற க்ராஃபையும் கூடப் பார்த்தேன். நான் நோட்டம் விடறதை நீங்க கவனிச்சிருக்கமாட்டீங்க.

நீங்க பல முறை டெமோ செஞ்ச புள்ளிவிவரங்களை ஒரு டேபிள்ளயும் க்ராஃப்லயும் போட்டிருக்கறதைப் பார்த்தேன். வெளியார் டெமோக்களுக்கும் உள்சோதனை களுக்கும் இருக்கற பெரும் வித்தியாசத்தைப் பத்திக் குறிப்பிட்டிருக்கறதையும் பார்த்தேன். உங்க ஆராய்ச்சியின் நோக்கத்தையும் அதுக்குக் கிடைச்சப் புள்ளி விவரப் பலனையும் புரிஞ்சுக் கிட்டு, என் யூகக் கணிப்பு சரியான்னு தெரிஞ்சுக்கத்தான் அப்படி உங்களைக் கேட்டேன். ஆனா நீங்க அதைத் தவறா புரிஞ்சுக் கிட்டு இவ்வளவு பலமா உணர்வீங்கன்னு எதிர் பார்க்கலை. மன்னிச்சுக்குங்க, ஒரு வேளை உங்க நோட் புத்தகத்தை வெளிப்படையா முதல்லயே காட்டிக் கேட்டிருக்கணும் போலிருக்கு..."

ஜேம்ஸ் உடனே ஆறுதலைடந்து தணிந்தார். ஓவென பலமாகவும் சிரித்தார். ரிச்சர்ட், நாகு இருவரும் கூட ஆறுதலுடன் அவர் சிரிப்பில் இணைந்து கொண்டனர்.

ஜேம்ஸ் சூர்யாவின் கையைப் பிடித்து பலமாகக் குலுக்கினார். பிறகு, "வெரி வெல் டன் மிஸ்டர் சூர்யா! பிரமாதம், பிரமாதம். ஒரு வெறும் துப்பறிவாளர் எப்படி எங்கப் பிரச்சனையைத் தீர்க்க முடியும்னு எனக்கு ரொம்பவே அவநம்பிக்கையா இருந்தது வாஸ்தவந்தான். ஆனா உங்க யூகத் திறமையும், தொழில்நுட்பப் புள்ளி விவரத் திறனும் என்னை நம்ப வச்சுடுச்சு! உங்க கணிப்பு 100% சரிதான். வெளுத்து வாங்கிட்டீங்க!" என்றார்.

ரிச்சர்டும் முறுவலுடன் தலையாட்டி ஆமோதித்தார்! "ஆமாம் சூர்யா, என்னை மீண்டும் வியப்பிலாழ்த்திட்டீங்க, எனக்குத் துளிர்விட்டிருந்த நம்பிக்கையையும் உரம் போட்டா மாதிரி வளர்த்துட்டீங்க!"

நாகு பலமாக சூர்யாவின் முதுகில் ஷொட்டு விட்டு, "பிரமாதண்டா சூர்யா, அசத்திட்டே, அமர்க்களந்தான் போ!" என்றார்.

சூர்யா கையால் முதுகை மெல்லத் தேய்த்து விட்டுக் கொண்டு, "சரி உங்க பாராட்டுக் கெல்லாம் ரொம்ப நன்றி, இப்ப இனிமே நடக்க வேண்டியதைக் கவனிக்கலாம்" எனவே, அனைவரும் சிரிப்பை நிறுத்தி விட்டு, மேஜைக்கருகில் வந்து அமர்ந்தனர்.

சூர்யா முதலில் வினாவினார். "ஜேம்ஸ், உங்க புள்ளிவிவரப் படிப் பாத்தா, உள் சோதனைகள் ரொம்ப நேரம் நடந்தாலும் இந்தப் பிரச்சனை வரதில்லைன்னு தெரியுது. ஆனா வெளியாருக்கு டெமோ காட்டறப் பெல்லாம், சில நிமிடங்களிலயே பிரச்சனை வந்துடுது. அதுவும் சில வாரங்களாத்தான் அப்படி. அதுக்குக் காரணம் என்னவா இருக்கும்னு நீங்க நினைக்கறீங்க?"

ஜேம்ஸ் தடுமாறினார். "அது... வந்து... அதான் எனக்கு தலைகால் புரியலை. ஒரே குழப்பமா இருக்கு. அதுனாலதான் அதைப் பத்தி ரிச்சர்டோ ட கலந்தாலோசிக்கலாம்னு எடுத்துக்கிட்டு வந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க அவ்வளவுதான். ரிச்சர்ட் நீங்க என்ன நினைக்கறீங்க?"

ரிச்சர்ட் சில நொடிகள் ஆழ்ந்த யோசனையுடன் மௌனமாகவே இருந்தார். பிறகு ஒரு பெரிய பெருமூச்சுடன் பேசலானார். "இப்ப உடனே எனக்கும் ஒண்ணும் தோணலை.

அந்த சோதனைகள், மற்றும் டெமோவோடக் குறிப்பிட்ட அமைப்புக்களை (configurations) ஆழ்ந்து ஆராய்ஞ்சுப் பாத்தா எதாவது தடயம் கிடைக்கக் கூடும். ஆனா, விஞ்ஞானத்துல இது சகஜந்தான். ஒரு சின்ன மாற்றம் கூட பெரிய விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பிருக்கு. ஒரு ஸிஸ்டத்துல காம்ப்ளெக்ஸிட்டி அதிகமாக அதிகமாக வெவ்வேறு பாதிப்புகள் வரும் வாய்ப்பும் அதிகரிக்குது. நம் மனித உடல் கூட அப்படிப் பட்ட ஒரு காம்ப்ளெக்ஸ் ஸிஸ்டம்தான். நோய்க்கு வர அறிகுறிகளை (symptoms) வச்சு என்ன நோய்னு முதல்ல யூகிச்சு, அப்புறம் ரத்த சோதனை போன்ற ஆழ்ந்த ஆராய்ச்சி வச்சு சரியான நோய் என்ன, அதுக்கு என்ன காரணம்னு கண்டு பிடிக்கறா மாதிரிதான். அப்படியும் கூட சில நோய்களுக்கு என்ன காரணம்னு இன்னும் கண்டு பிடிக்க முடியலை. அதிர்ஷ்ட வசமாவோ துரதிருஷ்டமாவோ, இன்னும் இந்த இயந்திரங்கள் மனுஷ உடல் அளவுக்கு காம்ப்ளெக்ஸா ஆகலை. அதுனால, புள்ளிவிவரங்களையும், அமைப்புக்களையும், ப்ரோக்ராம்களையும் அலசினா பிடிச்சுடலாம். என்ன ஷாலினி, என்ன சொல்றீங்க?!"

ஷாலினியும் ஆமோதித்தாள். "சரிதான் ரிச்சர்ட். மனித உடலுக்கு வர பாதிப்புகளைக் கண்டு பிடிக்கறது இந்த இயந்திர உலகை விட இன்னும் கடினமானதுதான். மேலும், அந்த மருத்துவத் துறை, பல்லாயிரக் கணக்கான வருஷங்கள் அனுபவத்துல தெரிஞ்ச விஷயங்களை அடிப்படையாக் கொண்டது. இந்தத் துறை சில பத்து வருஷ அனுபவந்தானே?!"

ரிச்சர்ட் மெள்ளத் தலையாட்டினார். "சரியாச் சொன்னீங்க ஷாலினி. இதுல இன்னொரு விஷயம் என்னன்னா, இந்த மாதிரி கம்ப்யூட்டரை வச்சு செய்யறப்போ பல ப்ரோக்ராம்கள் ஒரே சமயத்துல ஓடி ஒரே டேட்டாவை பயன்படுத்தி ஒத்துழைக்குது. அதுனால, எதையாவது கொஞ்சம் மாத்திட்டாக் கூட அந்தப் ப்ரோக்ராம்கள் வெவ்வேற சமயங்களில பாக்கறா மாதிரி மாறிடுது, வேற விளைவுகள் ஏற்படுது. அதுனால, உள் சோதனை செய்யறச்சே, அந்தப் பிரச்சனையைக் கண்டு பிடிக்கறத்துக்காக ட்ரேஸ், லாக் (log), எல்லாம் வைக்கறதுனால மாறிடுது, பிரச்சனையும் மறைஞ்சிடலாம். மென்பொருள் துறையில சில பேர் இந்த மாதிரி மறையற பிரச்சனையை "ஹைஸன் பக்" (heisen bug) என்கிற பேர்ல சொல்லுவாங்க! கிரண் ஆர்வத்துடன் குதித்தான்! "ஹைஸன் பக்கா?! அது என்ன?!"

ரிச்சர்ட் முறுவலுடன் விளக்கினார். "அணு விஞ்ஞானியான ஹைஸன்பர்க் (Hesisenberg) என்பவர், எலக்ட்ரான்களைப் பத்தி நிச்சயமின்மைக் கோட்பாடுன்னு (Uncertainty Theorem) ஒண்ணு சொல்லியிருக்கார். அதை சராசரி வார்த்தைகள்ள சொல்லப் போனா, அந்தத் துகள்கள் எந்த வேகத்துல நகருதுன்னு 100% சரியா சொன்னா அது எந்த இடத்துல இருக்குன்னு சரியா கண்டு பிடிக்க முடியாதுன்னு சொல்லலாம். அது மாதிரி, சில மென்பொருள் பிரச்சனைகளைக் கண்டு பிடிக்க முயற்சி பண்ணா, காணாமப் போயிடும்.

அதுனாலதான் அவற்றை தமாஷா ஹைஸன் பக்னு சொல்றாங்க."

கிரண் சிரித்தான். "ரொம்ப நல்லாத்தான் இருக்கு. நான் கூட எலக்ட்ரானிக் வீடியோ விளையாட்டுக்களை ஜாவா-ல எழுதியிருக்கேன். அதுலயும் இந்த மாதிரி ஆகியிருக்கு. ஸோ... நானும் நிறைய ஹைஸன் பக் கண்டுபிடிச்சு நிவர்த்திச்சிருக்கேன். சில சமயம் வேற எதோ மாத்தப் போக அந்த பிரச்சனையே மீண்டும் வராம மறைஞ்சு கூடப் போயிருக்கு!"

ரிச்சர்ட் ஆரவாரித்தார். "ரொம்ப சரியா சொன்னே கிரண். எங்களுக்கும் கூட அந்த மாதிரி முதல்ல ஆயிருக்கு. ஆனா இந்தப் பிரச்சனைதான் ரொம்பவே கஷ்டமாயிருக்கு."

யோசனையில் ஆழ்ந்திருந்த சூர்யா அதோடு விட்டு விடாமல் மீண்டும் அழுத்தினார். "அது சரி, ஆனா, எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அந்த மாதிரி ஹைஸன் பக்-ங்கறது அப்பப்ப சில சமயம் மட்டுந்தானே வரும். இது ஒவ்வொரு வெளி டெமோலயும் வருது, ஒவ்வொரு உள்சோதனையிலும் வரலை. அதை அடிப்படையா வச்சு கண்டு பிடிச்சுட முடியாதா?"

ஜேம்ஸ் மீண்டும் சூர்யாவைப் பாராட்டினார். "ரொம்ப சரியாப் பிடிச்சிட்டீங்க சூர்யா. அது ஒரு நல்ல தடயந்தான். ஆனா, இது வரைக்கும் நான் பார்த்ததுல ஒரு விஷயமும் உடனே தாவி நான் தான் காரணம்னு குதிக்கலை! ஆனா அது மேலுக்கு ஆராய்ஞ்சதுதான். இன்னும் தோண்டிப் பாத்தா எதாவது கிடைக்கும்னு தோணுது.

சூர்யா இன்னும் சற்று யோசித்து விட்டு, "ரிச்சர்ட், மோட்யஷேவ் ரஷ்யாவுக்குத் திரும்பினப்புறமும் கொஞ்ச நாள் இந்தத் தொழில்நுட்பம் சரியாத்தான் வேலை செஞ்சுக்கிட்டிருந்தது. ஆனா சில வாரத்துக்கப்புறம் திடீர்னு தகராறு வர ஆரம்பிச்சுதுன்னு சொன்னீங்க..." என்று இழுத்தார்.

ரிச்சர்ட், "ஆமாம், அதைப் பத்தி என்ன? இன்னும் எதாவது விவரம் வேணுமா?"

சூர்யா யோசனையுடன் மெள்ளத் தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம். அவரோட ஆராய்ச்சி அறையை அப்படியே வச்சிருக்கீங்களா, எல்லாத்தையும் அப்புறப் படுத்தி வேற யாருக்கோ குடுத்திட்டீங்களா?"

ரிச்சர்ட் பதிலளித்தார். "மோட்யஷேவ் இறந்துட்டார்ங்கற செய்தி கொஞ்ச நாள் முன்னாலதான் வந்தது. அதுனால இன்னும் அப்படியேத்தான் இருக்கு. ஏன் கேட்கறீங்க?!"

சூர்யா விளக்கினார். "நான் மோட்ய ஷேவோட அலுவலக அறையை கொஞ்சம் குடைஞ்சுப் பார்க்கணும். இந்தப் பிரச்சனைக்கு அவர்தான் மூலகாரணம்னு நான் நினைக்கறேன். உங்க உணர்வுத் தூண்டல் தொழில் நுட்பத்தை மிகவும் முன்னேற்றியதும் அவர்தான், இந்தப் பிரச்சனை திடீர்னு ஆரம்பிச்சதும் அவர் விலகிப் போனதும்தான். அவர் அறையை ஆராய்ஞ்சுப் பார்த்தா எதாவது துப்புக் கிடைக்கலாம்னு தோணுது."

நாகு பாராட்டினார். "ரொம்ப நல்ல யோசனை சூர்யா. வாங்க போய்ப் பார்க்கலாம்."

கிரண் தன் விளையாட்டுப் புத்தியைக் காட்டினான். "அவர் தன்னோடயே இந்தப் பிரச்சனையைத் தீர்க்கறத்துக்குத் தேவையானத் தடயங்களையும் எடுத்துட்டு மேல போகலைன்னு பிரார்த்திக்கலாம்! இல்லைன்னா அவர் அறையை மட்டுமல்லாம கல்லறையையும் ஆராயணும். நான் வரலைப்பா!"

ஷாலினி அவனைக் கடிந்து கொண்டாள். "சே, கிரண், உனக்கு விவஸ்தையே இல்லை! எதை வச்சு ஜோக் அடிக்கறதுன்னு இல்லாமப் போச்சு. நீயும் உன் morbid humor-உம். கொண்டு போய் அம்மா சொல்றா மாதிரி உடைப்புல போடு!"

கிரண் கேலியாக மன்னிப்புக் கேட்டான். "ஓ ஸாரி ஸிஸ்! அது சரி, உடைப்புன்னா என்ன?! ரொம்ப நாளாக் கேட்கணும்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்!"

சூர்யா அவனை அடக்கினார். "கிரண் இது இப்ப வேண்டாத விவாதம். நடக்க வேண்டிய முக்கிய விஷயத்தைப் பார்க்கலாம், வாங்க மோட்யஷேவ் அறைக்கு."

ரிச்சர்ட் வழி காட்ட, அனைவரும் மோட்யஷேவின் ஆராய்ச்சி அறையைச் சென்றடைந்தனர்.

சூர்யா மோட்யஷேவின் அறையை நோட்டம் விட்டார். அறைக்குள் புயலடித்து ஓய்ந்திருந்தது போல் காட்சியளித்தது! காகிதங்கள் பல ஆங்காங்கு பல குவியல்களில் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. மேஜை மேல் பல புத்தகங்களும் காஃபிக் கோப்பைகளும் பரவிக் கிடந்தன. மேஜைகளின் டிராயர்களிலும் காகிகதங்கள் பிதுங்கி வழிந்தன!

நாகு ஆச்சர்யத்துடன் வினாவினார். "ஹூம்! நான் இங்க வந்ததே கிடையாது! ஒரே களேபரமா இருக்கே?! மோட்யஷேவ் இப்படியா வச்சிருந்தார்? இல்லை அவர் போன பிறகு இந்த மாதிர் அமளி துமளி ஆயிடுச்சா?! அவருக்கென்ன கம்ப்யூட்டர் மேல நம்பிக்கையே இல்லையா என்ன?! எல்லாமே ஒரே காகிதமா இருக்கு? எத்தனை மரத்தைக் கொன்னாரோ தெரியலையே?"

ரிச்சர்ட் முறுவலுடன் விளக்கினார். "Mad scientist-ன்னு சொல்வாங்களே, அது மோட்யஷேவுக்கு மிகவும் பொருந்தும்.! அவர் இருக்கறப்போ இன்னும் களேபரமாத்தான் இருந்தது. அவர் போன பிறகு நாங்க கொஞ்சம் அடுக்கி வச்சிருக்கோம்னுதான் சொல்லலாம்! நீங்க சொல்றா மாதிரி அவருக்கு கம்ப்யூட்டர் மேல கொஞ்சம் சந்தேகந்தான்! 'நானே அதைப் ப்ரோக்ராம் பண்றனே, அதுல என்ன மாதிரி தகராறு எல்லாம் இருக்குன்னு எனக்கும் தெரியும், எனக்கு எல்லாம் ஒரு காகிதப் பிரதி வேணும்' அப்படின்னு அடிக்கடி சொல்லி எடுத்து வச்சுக்குவார். அதான் இப்படி."

சூர்யாவின் கண்களில் மீண்டும் அவருக்கே உரித்தான விசேஷ ஒளி கணப் பொழுதில் தோன்றி மறைந்ததை கிரண் மீண்டும் கவனித்து, பிறகு கேட்பதற்காக மனத்துக்குள் குறித்து வைத்துக் கொண்டான்.

சூர்யா சிறிது யோசித்து விட்டு, "மோட்யஷேவ் எதாவது ஒரு ஆராய்ச்சி நோட் புத்தகம் மாதிரி வச்சிருந்தாரா இல்லை எல்லாமே இப்படி காகிதக் களேபரந்தானா? அதுவும் கம்ப்யூட்டர்ல இல்லாம தனியா எழுதி வச்ச நோட்புக், நாளேடு (diary) எதாவது இருக்கா?" என்றார்.

அதற்கு ரிச்சர்ட் அளித்த விடையும், அதனால் எழுந்த குழப்பமும், அதற்கடுத்து நடந்து விட்ட திடீர் விபரீதமும்... மெய் நிகர் மாயத்தின் மர்மத்தை உச்சக் கட்டத்துக்கு எடுத்துச் சென்று விட்டன.

கதிரவன் எழில்மன்னன்
(தொடரும்)
Share: 
© Copyright 2020 Tamilonline