தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம் தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் கி.வா.ஜவின் சிலேடைகள் வெள்ளிக் கூஜா
|
|
மறக்க முடியாத தீபாவளி |
|
- |நவம்பர் 2013| |
|
|
|
|
|
ஒரு தீபாவளியன்று நடந்த சம்பவம். தீபாவளிக்கு முதல்நாள் ஜவுளிக்கடை சொந்தக்கார நண்பர் ஒருவர் வழக்கம்போல என் தந்தைக்கு வேஷ்டிகள், எனக்கு பாவாடை, சட்டை, என் தாயாருக்குப் புடவை யாவும் இனாமாக அனுப்பி வைத்தார். அன்பிற் சிறந்த சீடர் பலர் எனக்குத் தேவைக்கு மிஞ்சியே பட்டாசு, மத்தாப்பு முதலிய வாண வகைகளும், மற்றும் பூ, வெற்றிலை, பழங்கள் யாவும் கொணர்ந்து தந்தார்கள். அன்று இரவு நாங்கள் குதூகலமாக விளையாடிவிட்டுத் தூங்கப் போய்விட்டோம்.
என் தந்தை மட்டும் ஆழ்ந்த யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். கவிதை எழுத யோசிப்பதானால் அவர் இங்கும் இங்கும் உலவுவார். பிறகு எழுதத் தொடங்கினால் கை சளைக்காமல் எழுதிக் குவிப்பார். அவர் யோசனையுடன் உட்கார்ந்திருப்பதிலிருந்தே அவர் எதையோ நினைத்துக் கவலைப்படுகிறார் என்று அறியலாம்.
நடுநிசி.
இரண்டு நண்பர்கள் வந்து கதவைத் தட்டினார்கள். என் தந்தை கதவைத் திறந்தார். வந்தவர்களில் ஒருவர் ஓரணாவும், இரண்டணாவுமாக மாற்றிய நாணயங்களையும் பணச்சுருள்களையும் என் தந்தையின் பாதத்தில் வைத்து நமஸ்கரித்தார். |
|
என் தந்தை வியப்புடன், "நான் பணம் வேண்டுமென்று யாரிடமும் சொல்லவில்லையே! நீங்கள் எவ்வண்ணம் என் உள்ளக் கருத்தை உணர்ந்து சில்லறை மாற்றிக் கொணர்ந்தீர்கள்?" என்று கேட்டார்.
வந்தவர்கள் பணக்காரர்கள் அல்ல. சாதாரண குடும்பத்தில் பிறந்த துணி நெய்யும் தொழிலாளிகள். அவர்களில் ஒருவர், "சுவாமி. நாங்கள் யாவரும் சாப்பிட்டுப் படுத்து நித்திரை போய் விட்டோம். என் கனவில் மாதா பராசக்தி காளிதேவி தோன்றி, 'அடே உத்திராவதி எழுந்திரு. என் பக்தன் பாரதி நாளைக் காலையில் தன்னைக் காண வரும் ஏவலர், தொழிலாளிகள், நண்பர்களுக்குப் பரிசளிக்கக் காசில்லாமல் நொந்து மனம் வருந்துகிறான். உடனே உன் கையிலுள்ள பணத்தைச் சில்லறையாக மாற்றி எடுத்துக் கொண்டு போய்க் கொடு" என்று சொன்னாள். நான் உடனே எழுந்து என் கையிலிருந்த ரூபாய் பத்துக்கும் காசுக்கடைச் செட்டியாரை எழுப்பிச் சில்லறை மாற்றிக் கொண்டு, தனியே வரப் பயமாக இருந்ததால் என் நண்பனையும் உடனழைத்துக் கொண்டு வந்தேன்" என்றார்.
தமக்குத் தேவையான துணி முதலியன இருந்தும் மறுநாள் காலையில் தம்மைக் காணவரும் வேலையாட்கள், ஏழைகளுக்குக் கொடுக்க ஒரு பைசாகூட இல்லாததை நினைத்து எங்கு, யாரிடம் போய்க் கடன் வாங்கி வருவது என்று என் தந்தை வருத்தத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாராம். பராசக்தி அருளால் அந்தத் தீபாவளி மனக் கவலையின்றிக் கொண்டாடப்பட்டது.
சகுந்தலா பாரதி எழுதிய "என் தந்தை பாரதி" நூலிலிருந்து |
|
|
More
தெரியுமா?: 'பொன்விலங்கு' ரேடியோ நாடகம் தெரியுமா?: 'பொன்னியின் செல்வன்' ஒலிப் புத்தகம் தெரியுமா?: சங்கீத நாடக அகாதமி யுவ விருது: அபிஷேக் ரகுராம் தெரியுமா?: காஞ்சி காமகோடிபீட ஆஸ்தான வித்வானாக மது வெங்கடேஷ் கி.வா.ஜவின் சிலேடைகள் வெள்ளிக் கூஜா
|
|
|
|
|
|
|