|
|
|
|
ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தாலும் பளிச்சென்று தெரிகிற மாதிரி வெங்கடேஷ்வரா என்ஜினீயரிங் காலேஜ் என்று ஆங்கிலத்தில் பித்தளை போர்டு வைத்திருந்தார்கள். கல்லூரியின் முகப்பு பிரம்மாண்டமாக இருந்தது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளை இங்கே படிப்பதை விரும்பத் தூண்டுவதாக இருந்தது அது. சில பெற்றோர்களும்கூட தாங்கள் மாணவர்களாக மாறிவிடுவதற்கு ஆசைப்படுமாறு இருந்தது. கந்தசாமிக்கு நிச்சயமாக இல்லை. பையனைப் படிக்க வைக்கவே பணம் போதுமானதாக இல்லை. அந்த ஆசையை யோசிக்கக்கூட வசதியில்லை.
"அப்ளிகேஷன் எவ்வளவு சார்?" என்றார் கந்தசாமி. கவுன்டர் வழியாக பணம் வாங்குபவரின் வழுக்கைத் தலை மட்டும்தான் தெரிந்தது.
"போர்ட்ல எழுதியிருக்கு பாருங்க. ஆயிரம் ரூபா"
கையில் அவ்வளவு பணம் இல்லாமல் போய் அவமானம் ஏற்பட்டுவிடுமோ என ஒரு கணம் பயந்து போனார். கையில் என்னமோ ஆயிரத்து இருநூறு ரூபாய் இருக்கத்தான் செய்தது. அவசரமாக எடுத்துக் கொடுத்தார்.
"அப்ளிகேஷனுக்கா ஆயிரம் ரூபா?" பதில் வேண்டிய கேள்வியாக ஆரம்பித்து தனக்குத்தானே முனகிக் கொண்டார். தவறாக எதையாவது வாங்கிவிடப் போகிறோம் என்ற தடுமாற்றம் கந்தசாமிக்கு.
"எலக்ட்ரானிக்ஸுக்குத்தானே?" என்று உறுதிப்படுத்திக் கொண்டார்.
"எல்லா சப்ஜெக்டுக்கும் ஒரே அப்ளிகேஷன்தான்."
எங்கே மாற்றி வாங்கிச் சென்று வீணாகிவிடுமோ என்று கடைசி நிமிடத்தில் சுதாரித்துக் கேட்டுவிட்டதில் அவரை அவரே மெச்சிக் கொண்டார்.
அப்ளிகேஷன் இந்த விலையா? அந்தக் காலத்தில் என் மொத்த கல்லூரி படிப்புக்குமே இவ்வளவு ஆகவில்லையே என்று அவர் யாரிடமும் சொல்லுவதில்லை. அந்த மாதிரி பேச்சுக்களை இக்காலப் பிள்ளைகளோ, மனைவிகளோகூட ரசிப்பதில்லை. சொல்லப் போனால் எரிச்சல் ஏற்பட்டு சீறிவிழுகிறார்கள்.
"சார்... அப்ளிகேஷன் வாங்கிறது பெரிசில்ல. இப்பவே சீட்டு புக் பண்ணி வைக்கணும். எலக்ட்ரானிக்ஸ் சீட்டு ரொம்ப கம்மி. ஏற்கெனவே 36 பேரு புக் பண்ணிட்டாங்க. உங்களுக்கு கவர்மன்ட் கோட்டாவுல கிடைக்கும்னு நம்பிக்கை இருந்தா விட்டுடுங்க."
"புக் பண்றதுக்கு எவ்ளோங்க?"
"ஃபிப்டி"
இன்னொரு ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்தார்.
அந்த ஐம்பது ரூபாயை கவுன்டரில் இருந்தவர் கள்ள நோட்டுபோல இப்படியும் அப்படியும் பார்த்துவிட்டு, "அம்பதாயிரம் சார்.." எனப் பட்டென சப்தம் எழுப்பி வெளிப்பக்கமாக வைத்தார்.
எரிச்சலடைந்துவிட்டார் கவுன்டரில் இருந்தவர். கந்தசாமிக்கு ஐம்பது ஆயிரமா என்று இன்னொரு முறை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவருக்கு அது மேலும் எரிச்சல் ஏற்படுத்திவிடும் என்று தோன்றியதால் சற்று தள்ளி வந்து தயங்கி நின்றார். "என்னைக்குள்ள புக் பண்ணனுங்க?" என்றார். விருப்பமிருந்தால் பதில் சொல்லுங்கள் என்ற தொனியில்தான் கேட்டார்.
"36 பேர் பண்ணிட்டாங்கன்னு சொன்னனே?"
அவர் சொல்கிற ஒவ்வொரு தகவலும் மிக முக்கியமானவையாகவும் இரண்டாவது முறை சொல்ல முடியாத தங்க வார்த்தையாகவும் ஒரு கர்வம் இருந்தது. பையன் சேர்ந்தால் இந்தக் கல்லூரியில்தான் சேருவேன் என்று கூறியிருந்தான். மூன்றாவது ஆண்டு முடிப்பதற்குள்ளாகவே வேலை நிச்சயம் என்றான். அவனுடைய நண்பன் ஒருவனின் அண்ணன் இந்தக் கல்லூரியில் படித்து அமெரிக்காவில் வேலையில் சேர்ந்து அங்கு அவன் செலவு போக மீதி ஒரு லட்ச ரூபாயை மாதம் வீட்டுக்கு அனுப்பி வைக்கிறானாம்.
பேங்க்கில் கடைசி கடைசியாக ஒரு 50 ஆயிரம் ரூபாய் இருந்தது. ஆனால் இங்கிருந்து 40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பேங்குக்குப் போய் வருவதற்குள் சீட் காலியாகிவிடுமே? அதுவும் இல்லாமல் இனிமேல் போய் வருவதென்றால் பேங்க் மூடிவிடுவானே? அட இந்த யோசனை இவ்வளவு நேரமாக வராமல் போய்விட்டதே... ஆத்திர அவசரத்துக்குப் பணம் எடுப்பதற்காக ஏடிஎம் கார்டு வாங்கி வைத்திருந்தார் கந்தசாமி. ஆனால் அதை பயன்படுத்துவதற்கான ஆத்திர அவசரம் எதுவும் அவருக்கு ஏற்படதில்லை.
"சார் இத வெச்சி கட்ட முடியுமா?" காசாளர் கார்டை வாங்கிப் பார்த்துவிட்டு, ""அம்பதாயிரம் இருக்கா பாங்க்ல?" என்றார்.
"பீஸ் கட்றதுக்குத்தான் ரெடி பண்ணி வெச்சிருந்தேன்."
"சரி. உங்களுக்கு கவர்ன்மென்ட் கோட்டாவுல இங்க இடம் கிடைச்சுட்டா ஃபீஸ்ல அட்ஜஸ்ட் பண்ணிடுவோம். போதுமா?"
இங்கேயே இடம் கிடைத்துவிட்டால் எல்லாமே திருப்திகரமாக அமைந்துவிடும். சரக்கென்று ரசீதைக் கிழித்துக் கையில் கொடுத்தான்.
கல்லூரி பொட்டல்காட்டில் அமைந்திருந்தது. எப்பாடுபட்டாவது கல்லூரிக்குள் வந்து விழுந்துவிட்டால் அங்கே சகல வசதியும் அனுபவிக்கலாம். மினி தியேட்டர், ஹாஸ்பிடல், ஹோட்டல், நீச்சல்குளம், இன்டெர்நெட் எல்லாம் வைத்திருந்தார்கள். கல்லூரியில் சேருகிறவரை இப்படி இரண்டு பஸ் பிடித்து இரண்டு கிலோ மீட்டர் நடந்துதான் கல்லூரியை அடைய வேண்டியிருக்கும். அதன் பிறகு பிரமாதமான பஸ் உண்டு. வீட்டருகே வந்து கூட்டிச் செல்வார்கள். பஸ்ஸுக்குத் தனி சார்ஜ். கொள்ளைதான். ஆனால் பணம் இருக்கிறவர்களுக்கு சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கிற வசந்தகால தூண்டில் விளையாட்டு.
"என்ஜினீயர் மாப்பிள்ளை. என்னமோ நம்ம சுந்தரும் அப்படியொரு என்ஜினீயர் மாப்பிள்ளை ஆகிவிட்டால் போதும். ஏன் என்ஜினீயர் ஆகிவிட்டாலே போதும்.'
ஒரு தகப்பனாக தனக்கான பொறுப்பை மிகச் சரியான நேரத்தில் மிக கவனமாக நிலைநாட்டிய பெருமை இருந்தது. பையனுக்கு கல்லூரியில் விண்ணப்பம்தான் வாங்குவதற்கு கிளம்பினார். ஆனால் கல்லூரியில் இடமே கிடைக்க எல்லா ஏற்பாடும் முடித்துவிட்டோம் என்ற திருப்தி. "பையன் வந்தா சீட் கிடைச்சுடுச்சுன்னு சொல்லு. இங்க அங்க அல்லாடிக்கிட்டு இருந்தான்" என்று மீனாட்சியிடம் பெருமிதமாகவும் திருப்தியாகவும் கூறினார். "என்னமோ இவ்வளவு செலவு செய்றோம். நல்லா படிச்சா சரி" இது மீனாட்சியின் எதிர்வினை.
மத்தியானம் மூன்று மணிக்கு மேல் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு கொஞ்ச நேரம் அப்படியே கண்ணயர்ந்த நேரத்தில் சுந்தரின் குரல் கேட்டது.
"யாரு வெங்கடேஷ்வரா'ல அப்ளிகேஷன் வாங்கச் சொன்னது?"
ஏதோ பெரிய தவறு நடந்திருப்பது உறைத்து கண்ணைக் கசக்கிக் கொண்டு, ""வெங்கடேஷ்வரா காலேஜ்ல தாம்பா வாங்கினேன்" என்றார் கந்தசாமி.
"அதான் ஏன் அங்க வாங்கினீங்கனுதான் கேக்றேன்."
'ஏன் பையன் காலையில் ஒரு மாதிரியும் மாலையில் ஒரு மாதிரியும் பேசுகிறான்' என்று சந்தேகமாகிவிட்டது.
"நீதானே ராஜா அங்க வாங்கிட்டு வரச் சொன்னே?"
"நான் சொன்னது ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ். வெங்கடேஸ்வரா காலேஜைத் தாண்டி உள்ள போகணும். இது வேஸ்ட் காலேஜ். நான் போகமாட்டேன்."
"சீட் புக் பண்ணணும்னு அம்பதாயிரம் வேற கட்டிட்டம்பா."
அலட்சியமும் திகைப்பும் என்ன அவசரம் என்பதுமாக ஒரு பார்வை பார்த்தான் சுந்தர். "அங்க சேர்றதுக்கு நாலு எருமை மாடு வாங்கி மேய்க்கலாம். போன வருஷம் முழுசும் ஸ்ட்ரைக். மேனேஜ்மண்ட்ல ஏகப்பட்ட ஊழல். இடம் ஆக்ரமிச்சு பில்டிங் கட்டினதுக்காக பின்னாடி நாலு பில்டிங்கை இடிச்சுத் தள்ளிட்டாங்க. லேப் வசதியெல்லாம் அதில போச்சு. என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுட்டு செய்றதுக்கு என்னப்பா?"
"அங்க ஒரே பேர்ல ரெண்டு காலேஜ் இருக்கும்னு எவனுக்குத் தெரியும்பா?" அப்பாவைப் பார்க்க சுந்தருக்கே பாவமாக இருந்தது. "எல்லா காலேஜும் ஒண்ணுதான். அதே புக்குதான். அதே நோட்டுதான். படிக்கிற பையன் எங்க இருந்தாலும் படிச்சுடுவான்" என்று அம்மா இரண்டு பேருக்கும் பொதுவாக ஒரு தீர்வு சொன்னாள்.
"காலேஜே இடிச்சுப் போட்டுட்டு ஸ்ட்ரைக்ல கிடக்குதுங்கிறான். என்னமோ புரியாம பேசறியே..." காரணமில்லாமல் அம்மாவைச் சமையல் கட்டுக்குத் துரத்தினார் அப்பா.
"திருப்பிக் கேட்டா தந்துடுவானா?" நம்பிக்கையே இல்லாமல் பையனிடம் கேட்டார் கந்தசாமி.
"யானை வாய்ல போன கரும்புதான்." சுந்தருக்குத் தன் வேறு வாசல்களை அப்பா அடைத்துவிட்டாரே என்ற இயலாமையும் இனி கேம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்து வெளிநாட்டுக்குப் போவதென்பது முடியாது என்றும் கவலை ஆக்கிரமித்துக் கொண்டது. சட்டையை மறுபடி மாட்டிக்கொண்டு நண்பர்களைப் பார்க்கப் புறப்பட்டான்.
கந்தசாமி கண்ணை மூடித் தியானித்து அருட்பெருஞ்சோதி தனிப் பெரும் கருணை என்று மனதுக்குள் பிரார்த்தித்தார். லூகாஸில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற அன்று நண்பர்கள் டாக்ஸியில் கொண்டு வந்து இறக்கிவிட்டுவிட்டுச் சென்றபோது இதே மாதிரி ஒரு வெறுமையும் ஆறுதல் தேவையும் கந்தசாமிக்கு ஏற்பட்டது.
பயமெனுமோர் கொடும்பாவிப் பயலேநீ யிதுகேள் பற்றறவென் றனைவிடுத்துப் பனிக்கடல்வீழ்ந் தொளிப்பாய்
காலையிலேயே போய் காசாளர் கவுன்டரில் நின்றுவிட்டார் கந்தசாமி. பத்தே காலுக்கு கவுன்டரைத் திறந்த காசாளர், சந்துவழியாகப் பார்த்து நட்பு புன்னகைப் புரிந்தார். |
|
"பையன் வேற காலேஜில சேரணும்னு நினைக்கிறான். புக்கிங்கு கட்டின பணத்தைத் திருப்பித் தந்துட்டீங்கன்னா புண்ணியமா போய்டும்."
அவன் கம்ப்யூட்டர் கடையில் ஆட்டுக் கறி அரை கிலோ கேட்டதுமாதிரி ஒன்றும் புரியாமல் பார்த்தான். "அதெல்லாம் தரமாட்டாங்க. காலைல வந்து வம்பு பண்ணாதீங்க"
"அப்ளிகேஷனுக்குக் கொடுத்த ஆயிரம் ரூபாகூட வேண்டாங்க. எனக்கு வெளியூருக்கு மாத்தலாயிடுச்சுன்னு வெச்சுக்கங்க... நான் எப்படி இங்க சேர்க்கறது."
"தரமாட்டாங்க. உங்கக்கிட்ட கொடுத்த பில்லுலயே போட்டிருக்கு பாருங்க. வாங்கியே தீரணும்னு நினைச்சா ஆபிஸ் ரூம்ல போய் கேட்டுப்பாருங்க" அது தலைவலியைத் திருப்பிவிடும் பாணி.
காரணமில்லாமல் ஏடிஎம் கார்டை எடுத்துப் பார்த்தார். நேற்று ஒரு மிஷினில் வைத்து ஒரு இழுப்பு இழுத்து 50 ஆயிரத்தை எடுத்துக் கொண்டது ஞாபகம் வந்தது. அதே மாதிரி ஒரு இழுப்பு இழுத்து கொடுத்த பணத்தை நம்மிடமே இழுத்துக்கொள்ள முடியுமா என்று யோசித்தார். பேங்கில் அதற்கு வசதி இருக்குமா என்று நம்பிக்கையில்லாத எதிர்பார்ப்பு ஏற்பட்டு அடங்கியது.
அலுவலக அறையில் ஐந்து பெண்களும் மூன்று ஆண்களும் தீவிரமாக கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்தனர். கேட்டால் பதில் சொல்கிற மாதிரி இருந்த ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து விஷயத்தைச் சொன்னார் கந்தசாமி. இந்தமாதிரி விஷயத்தை முதன்முதலாக வாழ்க்கையில் எதிர் கொள்கிற தோரணையில் "நீங்க எங்க போய் முறையிட்டாலும் பணத்தைத் திருப்பித் தரமாட்டாங்க. மேனேஜ்மண்ட் ரூல் ஸார்" என்றாள்.
மற்ற ஏழு பேரும் கந்தசாமியை அதிசயமாகப் பார்த்தனர். அதில் ஒருவர், "சீட் புக்கிங் பொறுத்துதான் நாங்க எவ்ளோ வேகன்ஸி இருக்குனு முடிவு செய்றோம். இப்படி ஒவ்வொருத்தரும் புக் பண்ணிக்கிட்டும் கேன்சல் பண்ணிக்கிட்டும் இருந்தா காலேஜ் ரன் பண்ண முடியுமா? நியாயத்தைச் சொல்லுங்க."
"என் நியாயத்தையும் பாருங்க."
"என்ன நியாயம்? சொல்லுங்க"
"பையன் வேற காலேஜில சேரணும்னு சொல்றான்."
"பசங்களுக்கு நாமதான் எடுத்துச் சொல்லணும்"
"இல்ல சார். அவன் வேற கோர்ஸ் சேரணும்னு நினைக்கிறான். அதான்"
"அதுக்கப்புறம் உங்க இஷ்டம். நேத்து வந்து சீட்டு கேட்பீங்க. இன்னைக்கு மனசு மாறுவீங்க. இது என்ன காலேஜா? கட்பீஸ் கடையா? வேற கலர் மாத்திக்குடுங்கன்னு கேட்கறதுக்கு... அதுகூட சரிதான். வேற டிபார்ட்மெண்ட் மாத்திக்கணும்னாகூட சொல்லுங்க. மேலிடத்தில பேசி மாத்தித் தர்றதுக்கு ஏற்பாடு பண்றேன்."
"ரூபாயைத் திருப்பி தர்றதுக்கு ஏற்பாடு செஞ்சிடுங்க சார்"
"வயசுல பெரியவரா இருக்கீங்க. ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்க மாட்டேங்கிறீங்களே?"
"ஓனர் எங்க இருப்பார்னு சொல்லுங்க? அவர்கிட்ட கேட்டுப் பார்க்கிறேன்."
பொறுமை இழந்தவன் மாதிரி ஒருவன் ஆவேசமாக எழுந்தான். "ஓனர்தானே வேணும்? மெல்போர்ன் போங்க. அங்கதான் இன்னும் பத்து நாளுக்கு இருப்பாரு" என்றான்.
"எங்க இருக்கு மெல்போர்ன்' என்று கேட்க நினைத்தவர், அது பக்கத்து ஊர் பெயர் மாதிரி தெரியாததால் "பத்து நாள் கழிச்சுத்தான் வருவாரா?" என்றார் தன் அடக்க உணர்வை வெளிப்படுத்தும் விதமாக. தன்னைச் சண்டை போட வந்தவராக நினைக்க வேண்டாம் என்பதைத் தன் உடற்பணிவு மூலமாகவும் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். பணத்தோடு வீட்டுக்குப் போய் இந்தப் பிரச்சினையில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். மனரீதியாகவும் அது பெரிய சுதந்திரத்தைத் தரும் என்று நினைத்தார். அவர் கேட்ட கேள்விக்கு யாரும் பதில் சொல்லாதபோதும் "சரிங்க. பத்து நாள் கழிச்சு வந்து பார்க்கிறேன்". யாரும் இதற்கும் செவி சாய்க்கவில்லை.
பதில் சொல்லுவான் போல தெரிந்தவன் வெளியே நின்றிருந்த செக்யூரிட்டி மட்டும்தான்.
"இந்த காலேஜ் ஓனர் யார்னு தெரியுமா உங்களுக்கு?"
செக்யூரிட்டி இந்தப் பக்கம் அந்தப் பக்கம் பார்த்துவிட்டு "மின்னாடி மினிஸ்டரா இருந்தாரே உமாபதி... அவரோட காலேஜுங்க இது."
"அவருடைய வீடு எங்க இருக்குனு சொல்லமுடியுமா?" என்றபோது அதெல்லாம் தெரியாதுப்பா போ போ என்றவனிடம் கந்தசாமி வலிந்து தன்னுடைய பிரச்சினையைச் சொல்லி முடித்தார். ஐம்பதாயிரம் ரூபாய் என்பதன் அர்த்தமும் வலியும் தெரிந்தவனாயிருந்தான் அவன். முகவரியைச் சொன்னான். "பெசாம கால்ல விழுந்திடுங்க. அவனுக்கின்னா அம்பதாயிரம் பிஸ்கோத்து மாரி. நம்ம கஷ்டத்துக்கு மேல ஒரு அம்பதாயிரம் போட்டுகூட தர்லாம். அவ்ளோ ரூபா இருக்கு. மனசு இருக்கணுமே?" என்று ஆறுதலும் உபாயமும் சொன்னான்.
வெயில் உருக்கியது. தார் சாலை, மனிதர்கள், மனசுகள் எல்லாம்தான் உச்சி வெயில் நேரத்தில் உருகின. இரண்டு பஸ் பிடித்து ஜன நெருக்கடியில் கசகசப்பாகி தி. நகர். வந்து சேர்ந்தார். சோர்வாகவும் சற்றுத் தள்ளாட்டமாகவும் இருந்தது. எப்படியும் பணத்தைத் திரும்பப் பெற்றுவிட வேண்டும் என்பதில் தீவிரம் மட்டும் அவருக்கு அதிகமாகிக் கொண்டிருந்தது.
தி. நகரில் வீட்டைக் கண்டுபிடித்து அங்கிருக்கும் செக்யூரிட்டியிடம் மாரடித்து விஷயத்தைச் சொன்னபோது, ஒருவழியாக அங்கிருக்கும் அலுவலகத்தில் ஒருவனைச் சந்திக்க அனுமதி கிடைத்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அவன் காலிலும் ஒருமுறை விழுந்து வைத்தார் கந்தசாமி. "படாத பாடுபட்டு சம்பாரிச்ச பணம்யா. குருவி சேர்க்கிறமாரி சேர்த்து கட்டிட்டன்யா" உணர்ச்சிபூர்வமாக நடித்து பணத்தை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என்றுதான் அப்படிப் பேசினார். ஆனால் தொடர்ந்து அவரால் நடிக்க முடியவில்லை. நிஜமாகவே அழ ஆரம்பித்துவிட்டார். படபடப்பாக இருந்தது. உட்கார வைத்துக் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான்.
"பெரியவரே பணம் திருப்பித் தரணும்னா போர்டு மீட்டிங்ல வெச்சுதான் முடிவு பண்ணுவாங்க. இவர் மட்டுமே ஓனர் கிடையாது. மொத்தம் எட்டு டைரக்டர்ஸ் இருக்காங்க. அத்தனை பேரும் ஒத்துக்கிட்டாதான் பணத்தைத் தரமுடியும் புரிஞ்சுதா" சட்டத்தையும் நியாயத்தையும் கலந்து அவருக்குப் பதில் சொன்னான் அவன்.
"நீங்க மனசு வெச்சா வாங்கித் தந்துடுவீங்க. ஒரு பத்தாயிரம் எடுத்துக்கிட்டு மீதிய குடுத்தாகூட போதுங்க."
"பெரியவரே. அதான் சொல்லிட்டன் இல்ல. லஞ்சம் குடுக்கிறியா எனக்கு?"
"லஞ்சம் இல்லீங்க. டொனேஷனா எடுத்துக்கங்க, காலேஜிக்கு."
"சரி. லெட்டர் எழுதிக் குடுங்க. பில் ஜெராக்ஸ் எடுத்து அட்டாச் பண்ணிடுங்க. ஐயா வெளியூர் போயிருக்காரு வந்தா சொல்றேன்."
பையனை இந்தக் கல்லூரியிலேயே படிடா என்று கட்டாயப்படுத்திச் சொல்லிவிட்டால் என்ன? எதற்கு இந்த ரோதனை? மீனாட்சி சொன்னது மாதிரி படிக்கிற பையன் எந்தக் காலேஜில் படிச்சாலும் மார்க் எடுத்தா வேலைக் கிடைத்துவிடப் போகுது என்று யோசித்துப் பார்த்தார். இப்படிப் பணத்துக்காக அலைகிறவர்களிடம் சரஸ்வதி எப்படி இருப்பாள் என்றும் மறுபடி மனதை மாற்றிக் கொண்டார். தெரு முனையில் ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு மறுபடி அமைச்சர் வீட்டுக்கு வந்தபோது செக்யூரிட்டி நான் கொடுத்துவிடுகிறேன் என்று வாங்கி வைத்துக் கொண்டான்.
மறுபடி எப்ப வந்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளாமல் வந்துவிட்டோமே என்று இருந்தது. உள்ளே போய் மறுபடி கேட்கமுடியாது என அவரும் தீர்மானமாகத் தெரிந்து வைத்திருந்ததால், அந்தக் கேள்வியை செக்யூரிட்டியிடமே கேட்டுக் கொண்டார்.
வீட்டருகே இருக்கும் மந்திரியின் கட்சியைச் சேர்ந்த வட்டச் செயலாளரிடம் ஒரு வார்த்தைச் சொல்லிவிட்டுப் போகலாம் என்று நினைத்தார். ஐந்தாயிரம் கொடுக்கிறேன் என்றால் ஒருவேளை முடித்துத் தருவான். பாதிப் பணம் திருப்பி வந்தால்கூட மீதி நகை நட்டை விற்று அவன் விரும்புகிற காலேஜில் சேர்த்துவிடலாம். பாதிப் பணத்தைத் திருப்பித் தந்தால் போதும் என்று சொல்லிவிடலாம்.
"அப்பா அப்ளிகேஷன் வாங்கின காலேஜிலதான் சேர்ந்திடேம்பா' என்று சுந்தருக்கு நிறையப் பேர் அறிவுரை சொன்னார்கள். "அவன் தலைல எந்த காலேஜ்னு எழுதியிருக்கோ அதுதான் கிடைக்கும்' என்றும் விளக்கங்கள் கிடைத்தன. "பெரியவங்க உனக்குக் கெட்டது செஞ்சுட மாட்டாங்கப்பா. எது செஞ்சாலும் நல்லதுக்காகத்தான் இருக்கும். இவ்வளவு நாள் வளர்த்தவங்களுக்கு உன்னை எந்த காலேஜில சேர்க்கணும்னு தெரியாதா?" என்றார் சுந்தரிடம் மீனாட்சியின் அண்ணன்.
தவறு செய்துவிட்ட மாதிரி அவர் முன்னால் சுந்தர் தலை கவிழ்ந்து அமைதியாக இருந்ததைப் பார்த்தபோது கந்தசாமிக்கு குற்ற உணர்வாக இருந்தது.
தமிழ்மகன் |
|
|
|
|
|
|
|