Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | சாதனையாளர் | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | அஞ்சலி | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சபேசன் காப்பி
- ராஜாஜி|ஆகஸ்டு 2013|
Share:
சபேசன் காப்பி என்றால் ஒரு காலத்தில் ராஜதானி யெல்லாம் பிரசித்தம். வெள்ளைக்காரர்கள் கூட அதைத் தேடி வாங்குவார்கள். நம்மவர்களைப் பற்றியோ சொல்ல வேண்டியதே இல்லை. "கொட்டை வாங்கி எவ்வளவு ஜாக்கிரதையாக வீட்டிலேயே வறுத்துப் பொடி பண்ணினாலும் டப்பாவுக்குள் போட்டு மூடிய சபேசன் காப்பிப் பொடிக்குச் சமானமாகாது" என்று மயிலாப்பூர், தியாகராய நகரிலுள்ள எல்லாப் பெரிய மனுஷாள் வீட்டுப் பெண்டுகளும் சொல்லுவார்கள்.

1922ஆம் வருஷத்தில் சபேசய்யர் காப்பி வியாபாரத்தை ஆரம்பித்தார். இரண்டு வருஷம். கஷ்டமில்லாமல் காலக்ஷேபம் செய்வதே கடினமாக இருந்தது. 1928ஆம் வருஷம் மார்ச்சு மாதத்தில் சுப்புக்குட்டி சபேசய்யரிடம் குமாஸ்தாவாகச் சேர்ந்தான். அதுமுதல் சபேசன் காப்பிக்கு நல்ல அதிர்ஷடம்.

ஆறு மாதத்திற்குள் வியாபாரம் மும்மடங்கு ஆயிற்று. அதன்பின் மளமளவென்று ஏறிற்று. இது சபேசய்யருக்கே வியப்பாக இருந்தது. எல்லாம் சுப்புக்குட்டியின் அதிர்ஷ்டம் என்று, அவனிடத்தில் அவருக்கு அளவு கடந்த அபிமானம். சம்பளம் வருஷத்தில் இரண்டு தடவை உயர்த்தினார். வேண்டாமென்றாலும் அவனுக்கு அளவுக்கு மிஞ்சிச் சௌகரியங்கள் செய்து கொடுத்து வந்தார். சுப்புக்குட்டியின் தங்கைக்குச் செலவு எல்லாம் தாமே செய்து நல்ல இடத்தில் கலியாணம் முடித்து வைத்தார். அவனைத் தம்முடன் ஒரு கூட்டாளி என்றே பாவித்து வந்தார். வெறும் குமாஸ்தாவாக எண்ணவில்லை.

சுப்புக்குட்டியின் தாயார் காப்பிப் பொடி அரைப்பதில் அவனுக்கு ஒரு ரகசியம் சொல்லித் தந்திருந்தாள். அவ்வாறு அரைத்த காப்பிப்பொடியைப் போட்டு இறக்கிய காப்பி மிகு சுவையுடையதாக இருக்கும். சுப்புக்குட்டி சபேசன் கம்பெனியில் குமாஸ்தாவாகச் சோந்த தறுவாயில் ஒருநாள். சபேசய்யர் சுப்புக்குட்டி வீட்டுக் காப்பி சாப்பிட்டார்.

"உங்கள் வீட்டுக் காப்பியைப்போல் நான் எங்கேயும் சாப்பிட்டதே கிடையாது" என்றார்.

"வறுப்பதில் ஏதாவது தனி முறையா அல்லது காப்பிக் கொட்டை உயர்ந்த வகையா? இல்லை. காப்பி வடிப்பதில் சாமர்த்தியம் ஏதேனுமா?" என்றெல்லாம் சபேசய்யர் சுப்புக்குட்டியின் தாயாரைக் கேட்டு விசாரித்தார். அவள் விவரத்தைச் சொல்லாமல், "அந்த ரகசியம் சுப்புக்குட்டிக்குத் தெரியும்" என்றாள்.

"இது நம்ப ஆபீசில் காப்பி அரைக்கும்போது செய்ய முடியுமோ?" என்று கேட்டார். "ஆகா. செய்யலாம்" என்றாள் சுப்புக்குட்டியின் தாயார்.

அதன் பிறகு சபேசய்யரின் வேண்டுகோளின்படி ஆலையில் காப்பிப்பொடி அரைக்கும்போது யாருக்கும் தெரியாதபடி சுப்புக்குட்டி போய்ச் செய்யவேண்டியதைச் செய்வான். ரகசியம் சபேசய்யருக்குக்கூடத் தெரியாது. ஒரு சிறு டப்பாவில் தன் வீட்டிலிருந்து ஏதோ கொண்டுவந்து அரைக்கும் கொட்டையில் சேர்க்கிறான் என்பதுமட்டும் தெரியும். அது என்னவென்று அவர் கேட்கக் கூடாது. இது அவர்களுக்குள் ஏற்பாடு.

வியாபாரம் வெகு வேகமாக வளர்ந்தது. கொள்ளை லாபம். சென்னையில் முதல்தர வியாபரிகளுக்குள் சபேசய்யரும் ஒருவராய்க் கருதப்பட்டார். வியாபாரச் சங்கங்களிலும். பெரிய மனிதர்களுடைய கிளப்புகளிலும் சபேசய்யர் ஒரு மெம்பராக எடுக்கப்பட்டார்.

ரகசியத்தை அறியச் சில சமயம் சபேசய்யர் பிரயத்தனப்பட்டார். ஆனால், சுப்புக்குட்டியிடம் அவன் தாயார் சபதம் வாங்கியிருந்தாள். யாருக்கும், சபேசய்யருக்குக் கூடச் சொல்வதில்லை என்று சத்தியம் செய்திருந்தபடியால் அவன் சொல்லவில்லை; சபேசய்யரும் வற்புறுத்தவில்லை.

1936ஆம் வருஷத்தில் சபேசய்யருக்கு எல்லாச் செலவும் போய் மாதம் இரண்டாயிரம் ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது. சுப்புக்குட்டிக்கு மாதம் இருநூற்றைம்பது ரூபாய் சம்பளம் சபேசய்யருடைய மோட்டார் வண்டியில் சுப்புக்குட்டி வீட்டுக்குப் போவான். சுப்புக்குட்டியிடம் மிக்க அன்பு பாராட்டி வந்த பழைய நண்பர்களுக்கெல்லாம் இப்போது அவன்மேல் பொறாமை ஆரம்பமாயிற்று. இல்லாத குற்றமெல்லாம் அவனிடம் கண்டார்கள். சபேசய்யருக்கும் சுப்புக்குட்டிக்கும் இடையில் விரோதம் உண்டுபண்ணப் பார்த்தார்கள். ஆனால் அது முடியவில்லை. வரவர அவர்களுக்குள் நம்பிக்கையும் பிரியமும் வளர்ந்து கொண்டே போயின.

இவ்வாறு இரண்டு வருஷம் சென்றது. ஒரு நாள் சபேசய்யரும் மர வியாபாரி ஒருவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

"உங்கள் வியாபாரமெல்லாம் நன்றாய்த்தான் நடக்கிறது. ஆனால். உங்கள் மானேஜர் சுப்புகிருஷ்ணய்யர் தனியாக ஒரு காப்பி வியாபாரம் ஆரம்பிக்கப் போகிறாராமே. அது ஏன்?" என்றார் மரவியாபாரி.

"அவ்வாறு பிரஸ்தாபம் ஒன்றுமில்லை. யார் சொன்னார்கள்?" என்று கேட்டார் சபேசய்யர்.

"அவரே சிலரிடம் பேசியிருக்கிறார்" என்றார் மரக்கடை ஜெயராமநாடார்.

"அப்படியொன்றும் காணோமே; இருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாரே!" என்றார் சபேசய்யர்.

"இல்லை. நான் சும்மா சொல்லவில்லை. விசாரித்துப் பாருங்கள்" என்றார் ஜெயராம நாடார்.

பிறகு ஒரு நாள் சுப்புக்குட்டியும் விசுவநாத ராவ் என்ற கந்து வியாபரியும் காப்பி அரைக்கும் யந்திரச் சாமான்களைப் பற்றி விசாரித்துக் கொண்டிருந்ததாக வேறொரு நண்பர் சபேசய்யரிடம் பிரஸ்தாபித்தார். சபேசய்யருக்குச் சந்தேகம் ஊர்ஜிதமாயிற்று. வியாபாரம் இவ்வளவு மும்முரமாக நடந்து வருவதும். தன்னுடைய செல்வாக்கும் அந்தஸ்தும். காப்பிப் பொடியின் ரகசியமும் அவனிடம் தானே இருக்கிறது?

எல்லாமே சுப்புக்குட்டியின் கையில் அல்லவா இருக்கிறது? இதற்கு என்ன செய்கிறது என்று சபேசய்யருக்குக் கவலை அதிகரித்தது. வரவர சுப்புக்குட்டியினிடம் ஓர் அர்த்தமற்ற வெறுப்பும் கோபமும் உண்டாகி. வளர்ந்து கொண்டே போயிற்று. நம் வேலைக்காரர்கள் எல்லோரும் சுப்புக்குட்டியைத்தான் எஜமானனாக மதிக்கிறார்கள். தம்மை மதிக்கவில்லை என்று அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது.
குமாஸ்தாவான சுப்புக்குட்டியிடம் எஜமானருக்கு ஒருவிதப் பொறாமை உண்டாயிற்று.

"என்ன சுப்புக்குட்டி. வேலைக்காரர்களுக்கு ஏதாவது சொல்லிக் கொள்ள வேண்டியதாயிருந்தால் என்னிடம் சொல்வதை விட்டு உன்னிடம் ஏன் பிராது செய்கிறார்கள்? உன் சிபார்சை நான் ஒப்புக்கொள்ள முடியாது." என்றார். ஒரு வேலைக்காரன் விஷயமாக இந்தப் பேச்சு. இப்படியே பல சந்தர்ப்பங்களில் நேரிட்டது.

ஒரு நாள் சுப்புக்குட்டி, "நான் ஒரு மாதம் ஓய்வு எடுத்துக் கொள்ள எண்ணியிருக்கிறேன். அப்புசாமி அய்யர் திருவாரூருக்கு வந்து சிலநாள் இருக்கச் சொல்லி வருகிறார். எனக்கு லீவு கொடுக்க வேண்டும்" என்றான்.

"முடியாது" என்றார் சபேசய்யர்.

இதென்ன இவ்வளவு நாள் என்னிடம் பிரியமாக இருந்தவர் ஒரு காரணமுமின்றி இவ்வளவு கடினமாகவும் வெறுப்பாகவும் இருக்கிறார் என்று சுப்புக்குட்டிக்கு ஒன்றும் விளங்கவில்லை. ஏதோ கெட்ட திசை தன் ஜாதகத்தில் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்து தன் வேலையை மட்டும் வழக்கப்படி செய்து வந்தாலும். மனச் சாந்தியற்றவனாக நாட்களைக் கழித்து வந்தான்.

பிறகு உடம்பில் நோய் கண்டது. மருந்து சாப்பிட்டதில் சொஸ்தமாகவில்லை. கட்டாயம் இரண்டு மாதம் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வைத்தியர்கள் சொன்னார்கள்.

சபேசய்யரைக் கேட்டதற்குக் காப்பிப் பொடியில் செய்து வரும் ரகசியம் சொன்னாலொழிய லீவு கொடுக்க முடியாது என்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டார்.

"ராஜினாமா செய்து விடு. ஏதோ நம்ம அதிர்ஷடம் இவ்வளவு நாள் நடந்தது. நல்ல நாள் வந்த பிறகு தாமே வியாபாரம் சின்னதாக ஆராம்பிக்கலாம். தெய்வம் விட்டபடி ஆகட்டும்." என்று தாயார் பொடியின் ரகசியத்தைச் சபேசய்யருக்குச் சொல்ல வேண்டாம் என்று கண்டிப்பாய்த் தடுத்துவிட்டாள்.

சுப்புக்குட்டியின் ராஜினாமாவைச் சபேசய்யரும் அங்கீகரித்து. அவனை வேலையிருந்தது நீக்கிவிட்டார். கொஞ்ச நாள் வரையில் சபேசய்யரின் வியாபாரம் இதனால் குறையவில்லை. டப்பாவின்மேல் பதியப்பட்ட நடராஜர் படத்தின் கௌரவமும். காப்பிக்கொட்டையின் இயற்கைக் குணமும் பழைய பெயரும் சேர்ந்து வியாபாரத்தை தாங்கியே வந்தது.

"காப்பி என்ன கொஞ்சம் மட்டம் இன்னிக்கு?" என்று யாரேனும் ஒருவர் சொல்லுவார்.

"ஏதோ வடிகட்டும் துணியில் பிசகு. அல்லது டப்பா திறந்து வைத்து வாசனை போய்விட்டிருக்கலாம். அதே சபேசன் காப்பிதான்" என்று வீட்டில் சொல்லுவார்கள்.

ஒரு மாதம் இரண்டு மாதமானபின். "வேண்டுமென்று குமாஸ்தா சுப்புகிருஷ்ணையர் தன் முதலாளிக்கு விரோதமாகத் திண்ணைப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டதனால் காப்பிப்பொடி கெட்டுவிடுமா?" என்று சபேசய்யருடைய நண்பர்கள் பிரசாரம் செய்து வந்தார்கள்.

சிலர் வீட்டிலேயே கொட்டை வறுத்துப் பொடி செய்யவும் ஆரம்பித்து, 'என்னவானாலும் வீட்டில் வறுத்த மாதிரி இருக்குமா?' என்று சொல்லத் தொடங்கினார்கள். மொத்தத்தில் சுப்புக்குட்டி வேலையிலிருந்து நீங்கிய ஐந்தாறு மாதங்களுக்குள் சபேசய்யர் வியாபாரம் குறைந்து விட்டது.

சுப்புக்குட்டியின் நண்பர் விசுவநாத ராவ் சுப்புக் குட்டியைத் தன்கூடச் சேரச் சொன்னார். சேர்ந்து வியாபாரத்தில் பாதி லாபம் சுப்புக்குட்டி எடுத்துக் கொள்ளலாம். எல்லாச் செலவும் தன் பொறுப்பு என்று சொன்னார். சபேசய்யரே தன்னைத் திரும்பக் கூப்பிடுவார் என்று ஓரிரண்டு மாதம் சுப்புக்குட்டி காத்திருந்தான். பிறகு விசுவநாத ராவின் ஏற்பாட்டை ஓப்புக்கொண்டு வேலை துவக்கினான்.

சாதுவாயிருந்த சுப்புக்குட்டிக்கு இப்பொழுது ஒரு புது ஆத்திரம் பிறந்தது. எப்படியாவது சபேசய்யருக்குப் புத்தி கற்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சுப்புக்குட்டியின் மனத்தைப் பிடித்துக் கொண்டது. சபேசன் காப்பிக்குப் போட்டியாக, 'நடேசன் காப்பி' என்று எதுகையாகப் பெயரிட்டு. ரகசியக் கலப்பை ஒன்றுக்கு ஒன்றைரையாகக் கலந்து, அதே நடராஜர் படத்தின் இடது காலை வலது காலாக்கி விசுவநாத ராவ் கம்பெனியின் காப்பிப்பொடி உண்டாக்கப்பட்டது.

சுறுசுறுப்பாக ஏஜெண்டுகள் சேர்ந்தார்கள். வியாபாரம் வேகமாக முன்னேறிற்று. விசுவநாத ராவும் ஏராளமாகச் செய்து வந்தார். அவர் சுப்புக்குட்டிக்கு உற்சாகம் ஊட்டி, சபேசய்யர் பேரில் அவனுக்குள் கோபம் தணியாமலிருக்க எல்லாவிதத்திலும் வேலை செய்து வந்தார்.

பிறகு சபேசய்யர் ஹைக்கோர்ட்டில் வழக்குத் தொடுத்தார். டப்பாக்களின் வடிவம், பெயர், படம் எல்லாம் நம் காப்பிப் பொடி டப்பாக்களின் உருவமே. இதனால் ஜனங்கள் ஏமாந்து தன் வியாபாரம் கெட்டுவிட்டது என்று தடை உத்தரவுக்கும் நஷ்ட ஈடுக்கும் ஹைகோர்ட்டில் வழக்கு ஒரு வருஷம் நடந்தது. முடிவில் சபேசய்யர் ஜெயித்தார். கோர்ட்டில் தீர்ப்புக் கொடுத்த தினம் சபேசய்யருக்குக் கடுஞ்சுரம். தீர்ப்பைப்பற்றிச் சமாசாரம் தெரிந்த சந்தோஷத்தில். படுத்திருந்தவர் எழுந்து மோட்டார் வண்டியில் ஏறி - ஓட்டுகிறவன் அப்போது இருக்கவில்லை - தாமே வக்கீல் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போனார். ஜப்தி நடவடிக்கைகளை உடனே ஆரம்பிக்கச் செய்தார். சிதம்பரம் கோயிலில் பெரிய அபிஷேகம் நடக்கவும் ஏற்பாடு செய்தார்.

சுப்புக்குட்டியின் தாயார். உலகமே கவிழ்ந்து விட்டதாகத் துயரக்கடலில் ஆழ்ந்தாள். "பகவனே. நீதான் இந்த சபேசய்யரைக் கொண்டு போகவேண்டும். என் மகனைக் கெடுத்த அவனை நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈசனே!" என்று தன் இஷ்டதேவதையை வேண்டிக்கொண்டாள்.

வேண்டிக் கொண்டபடியே தீர்ப்பு ஆன எட்டாவது நாள் சபேசய்யர் டாக்டர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக மாரடைத்து இறந்துபோனார். சிதம்பரத்தில் அபிஷேகம் நடக்கவில்லை.

"ஹைகோர்ட்டுத் தீர்ப்பின் உயிர் சபேசய்யர் உயிருடன் அறுந்து போயிற்று. விசுவநாத ராவ் கம்பெனியார் தம்பொடியை எவ்விதக் குந்தகமுமின்றி இனி விற்கலாம்" என்று விசுவநாத ராவின் வக்கீல்கள் வியாபாரச் சட்டத்தை விளக்கிச் சொன்னார்கள். தவிர "டப்பாவின் மேலுள்ள நடராஜர் படத்தை காளிங்க நர்த்தனமாக மாற்றிவிட்டால் ஆட்சேபணை முற்றும் தீர்ந்துவிடும்" என்று வக்கீல்கள் சொன்னார்கள்.

இதைக்கேட்டு "ஐயோ வழக்கு என் பக்கம் தீர்ப்பானபின்னும் வீணாயிற்றே" என்று அலறிற்று சபேசய்யரின் ஆவி.

"அலறிப் பயனில்லை மைந்தா" என்றது திருமூலர் குரல்.

அடப்பண்ணி வைத்தார். அடிசிலை உண்டார்;
மடக்கொடி யாரொடு மத்தணம் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்ததே என்றார்.
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

வக்கீல்கள் சொன்ன அபிப்பிராயம் கேட்ட விசுவநாத ராவுக்கும் சுப்புக்குட்டிக்கும் அளவுகடந்த ஆனந்தம் உண்டாயிற்று. உலகத்தையே மறுபடியும் ஜெயித்ததாக மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால். காப்பிப்பொடி ரகசியம் எப்படியோ வெளியாய் விட்டது.

ஊரெல்லாம் "இந்தச் சபேசன் காப்பிப் பொடி சீக்காய்ப் பொடி கலப்பாமே?" என்று பேச ஆரம்பித்தார்கள். "ஒரு டப்பாவில் கால் பங்கு சீக்காய்ப்பொடி யாமே" என்று சொல்லிக் கொண்டார்கள். பிறகு, 'சபேசன் காப்பி', 'நடேசன் காப்பி' இரண்டுமே ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. டப்பாப் பொடி போட்டுச் செய்த காப்பியைக் குடித்தவர்கள் தேகத்தில் பலவித அசௌகரியங்கள் காண ஆரம்பித்தனர். சிலருக்கு வயிற்றுச் சிக்கல் உண்டாயிற்று. சிலர் பேதியாயிற்று என்றார்கள். சிலர் குடித்தவுடன் வாந்திகூட எடுத்துவிட்டார்கள். இதன் விளைவாகப் பெரிய மனிதர்கள் எல்லோரும் வீட்டிலேயே கொட்டை வறுத்துப் பொடி பண்ண ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில், சுப்புக்குட்டி சேர்த்துவந்தது ஒரு டப்பா காப்பிப் பொடிக்கு ஒரு சிறு தேக்கரண்டி சீக்காய்ப் பொடிதான். இவ்வளவு நாள் நன்றாயிருந்ததென்று குடித்தவர்களுக்கு இப்போது ஏனோ அதைத் தாங்கமுடியவில்லை.

மூளையில் உண்டாகும் எண்ணங்களுக்கு அபார சக்தி உண்டு. இதையும் செய்யும்; இதற்கு மேலேயும் செய்யும்!

ராஜாஜி
Share: 




© Copyright 2020 Tamilonline