|
|
|
|
கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக என் ஆசிரியப் பெருமான் திரு தி. வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்களுடைய நினைவுகளை தொடராக எழுதி வருகிறேன். இத்தொடரில் நான் சொன்னவையெல்லாம் என் ஆசிரியரைப் பற்றியும் ஓரளவு நடிகர், நாடகாசிரியர், சிறுகதாசிரியர் என்ற வகையில் அவரைப் பற்றிய நினைவுகளையும்தான். இவை ஒரு மாணவனின் நினைவுக் குறிப்புகளே தவிர, எத்தனையோ பேருக்குக் கல்வி விளக்கேற்றி வைத்த, கல்விக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காகவும் பேருதவி செய்த ஒரு மனிதனைப் பற்றிய குறிப்புகளன்று. அவரிடம் நான் கற்றதையும் அவர் என்னைச் செதுக்கிய விதத்தையும் மட்டுமே இத் தொடரில் பேசியிருக்கிறேன். இவற்றுள், அவருடைய இதயத்துக்குப் பெரிதும் அணுக்கமாயிருந்த திருவள்ளுவர், கம்பன், பாரதி ஆகிய மூவரும் பெரிய இடத்தைப் பெற்றுள்ளார்கள்.
இந்தக் காரணத்தால்தானோ என்னவோ, இம்மூவரும் என் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத அங்கமாகி விட்டார்கள். ஆசிரியரின் துணையின்றி வாசித்த பாரதி, அவருடைய வழிகாட்டலால், எனக்கு இன்னமும் நெருங்கி என்னைச் செழுமையாக்கினான். அவரில்லாமல் நான் ஒருவேளை கம்பராமாயணம் வாசித்திருக்கக் கூடும். ஆனால், புத்தகம் கிடைக்காத ஒரு காலகட்டத்தில், தன் புத்தக அலமாரியைத் திறந்துவிட்டு, 'எந்தப் பதிப்பை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், முற்றிலும் படிப்பேன் என்ற உறுதி மொழியை மட்டும் தாருங்கள்' என்று அவர் சொன்னதே கம்பராமாயணத்தில் எனக்குள்ள ஊற்றத்துக்கு அவர் இட்ட வித்து. தற்போது பெங்களூருவில் கம்பராமாயண முற்றோதலைத் தொடங்கியிருப்பதையும் அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே கருதுகிறேன். கம்பனைக் கற்றவர்கள் தொடங்கி, தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, பேசினால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடியவர்கள் வரையில் பெரிதும் பங்கேற்கும் பணி இது. பாரதியில் பெரும்பகுதியும், கம்பனில் ஒரு பகுதியும் அவருடைய வழிகாட்டலில் கற்றவைதாம். திருக்குறள் விஷயத்தில், அவரில்லாவிட்டால், நான் முழு சூன்யம். தொடரின் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல ஏதோ 'ரெண்டு மார்க் கேள்விக்காக' மனப்பாடப் பகுதியை மட்டும் கற்ற நான், அவருடைய திருக்குறள் வகுப்புகள் இருந்திராவிட்டால், திருக்குறளின் பெருமையை அறியாதவனாகவே போயிருந்திருக்கக் கூடும்.
அவரைப் பற்றிச் சொல்வதற்கு என்னிடம் இன்னமும் ஏராளமான (இத்தகைய இலக்கியச்) செய்திகள் உள்ளன. விரிக்கின் வளரும். ஆனால் ஒன்று. நான் தமிழிலிக்கியத்தில் என்ன எழுதினாலும், என்னுள் இருந்து பேசுபவர் அவர்தான் என்பதை முற்ற முழுக்க உணர்கிறேன். வள்ளுவர் சொல்வதுபோல, 'செய்யாமல் செய்த உதவிக்கு, வையகமும் வானகமும் ஆற்றல் அரிது'. (இதைச் சொன்னதும் இதற்குப் பொருள் சொல்லவேண்டும் என்ற பேரவா பிறந்துவிட்டது. பிறகொரு நாளில் பேசுவோம்.)
'பேராசிரியர் நினைவுகள்'ஏராளமாக இருந்தாலும், தொடரின் இறுதிப் பகுதியை அடைந்திருக்கிறோம். இருந்தாலும், இனிமேற்கொண்டு நான் என்ன எழுதினாலும், அதற்குள் அவருடைய அணுகுமுறை, ஆய்வு நெறி, ஆய்வில் காட்ட வேண்டிய திறந்த மனப்பாங்கு, தவறுகளை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்ளத் தயாராக இருக்கும் நிலை போன்றவை என்றென்றும் தொடரும்.
தந்தை மகற்காற்றும் நன்றி, அவையத்து முந்தி இருப்பச் செயல்
என்ற வள்ளுவர்,
மகன்தந்தைக்(கு) ஆற்றும் உதவி இவன்தந்தை என்நோற்றான் கொல்லென்னும் சொல்
என்றார். |
|
எனக்கு ஒருமுறை, "மகன்தந்தைக்(கு) ஆற்றிடும் நன்றி இவன்தந்தை என்நோற்றான் கொல்லென்னும் சொல்" என்றுதானே இருக்க வேண்டும். இவரானால், 'உதவி' என்கிறாரே; தந்தைதானே மகனுக்கு உதவுகிறான்; மகன் நன்றியல்லவோ பாராட்ட வேண்டும், தந்தை ஆற்றுவதுதானே உதவி; மகன் நன்றிக் கடன் அல்லவா படுகிறான் என்று தோன்றியது. இதை விளக்கும்போது ஆசிரியர், 'நன்றி என்ற சொல்லின் பொருள் அதுவன்று. ஆங்கிலத்தில் thanks என்றொரு சொல் இருக்கிறது. அந்தச் சொல்லை மொழிபெயர்க்க வேண்டி நேர்ந்த சமயத்தில், 'நன்றி' என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். பிற்பாடு, நன்றி என்றால் தேங்க்ஸ் என்ற பொருளே நிலைத்துவிட்டது என்று விளக்கினார். உண்மையில், thanks என்ற அந்தச் சொல்லுக்குப் பொருளே கிடையாது; அது உணர்ச்சிக் குறிப்பு மட்டுமே. இதை ஆங்கில அகராதிகளில் பார்க்கலாம். Interjection என்று குறித்திருப்பார்கள். பெயர்ச்சொல்லாகக் குறித்திருந்தாலும், An acknowledgment of appreciation என்ற பொருள்தான் அங்கும் தென்படும் (மேற்படிப் பொருள் வரையறை வேர்ட்வெப் அகராதியிலிருந்து எடுக்கப்பட்டது.)
எனில், 'நன்றி' என்ற சொல்லுக்கு என்னதான் பொருள் என்ற கேள்வி எழுகிறது. 'நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா' என்றுதான் ஔவையின் மூதுரையும் பேசுகிறது. ரிஷ்யசிருங்கரை, புத்திர காமேஷ்டி யாகத்துக்காக அழைத்து வந்த சமயத்தில், தசரதனிடம் 'என்னை எதற்காக அழைத்து வந்தாய்? அசுவமேத யாகம் நடத்தக் கருதினாயோ' என்று கேட்க, 'புத்திர காமேட்டி நடத்துவதற்காக' என்று தசரதன் பதில் சொல்ல, பிறகு முதலில் அசுவமேதமும், பின்னர் புத்திர காமேட்டி யாகமும் நடைபெறுகின்றன. 'என்ன கருதி என்னை அழைத்தாய்' என்று கலைக்கோட்டு முனிவன் கேட்கும்போது, 'நன்றிகொள் அரிமகம் நடத்த எண்ணியோ இன்றெனை அழைத்தது? இயம்புவாய் என்றான்' என்கிறார். (பாலகாண்டம், திருவவதாரப் படலம், பாடல் 81), 'நன்றிகொள் அரிமகம்' என்ற தொடரை கவனியுங்கள். அரிமகம் என்பது அசுவமேத யாகத்தைக் குறிக்கும். அப்படியானால், 'நன்றிகொள் அரிமகம்' என்றால்? இங்கும் சரி, ஔவையின் பாட்டில் இருமுறை பயிலும் 'நன்றி'யிலும் சரி தேங்க்ஸ் என்ற பொருள் வரவில்லையே!
இவற்றையெல்லாம் எடுத்துக் காட்டி, பிறகு ஆசிரியர் விளக்கினார். 'நன்றி என்ற சொல்லுக்கு, 'நன்மை' என்பது பொருள். இன்றைய நாளில் ஒருவருக்கு நாம் 'நன்றி'என்று சொல்லும் போது, உண்மையில் தேங்க்ஸ் என்ற (அந்தப் பொருளற்ற) உணர்ச்சிக் குறிப்பைச் சொல்லவில்லை. 'நீங்கள் எனக்கு நல்லதைச் செய்திருக்கிறீர்கள்' என்றே சொல்கிறோம். புரிந்ததா?' என்றார். ஹிந்தியிலும் இதனை 'ஷுக்ரியா' என்று குறிப்பிடுவார்கள். சு-க்ரியா என்பதற்கு நற்செயல் என்று பொருள்.
ஆனால், காலச்செலவில், நாம் 'நன்றி'யின் உண்மையான பொருளை மறந்துவிட்டோம். ('நன்றியையே பலர் மறந்துவிட்டார்கள்' என்று முணுமுணுக்கிறீர்களோ? உங்கள் ஆதங்கத்தில் பொருளில்லாமல் இல்லை.) தேங்க்ஸ் என்று சுலபமாகச் சொல்லிவிடுகிறோமே தவிர, அதற்கு என்ன பொருள் என்று நாம் யாருமே கேட்பதுமில்லை, நினைத்துப் பார்ப்பதுமில்லை!
ஆக, என் ஆசானுக்கு இந்தத் தவணையில் நன்றி செலுத்துகிறேன். நல்லோர் கை தானமெனப் பெருகிற்று என்று கம்பன் பேசுவான் அல்லனா, அதுபோல, அவர் எனக்கு அளித்த சொத்து ('தேடாமல் கிடைத்த சொத்து' என்ற தலைப்புடன்தான் இந்தத் தொடரைத் தொடங்கினேன்.) என் கையிலிருந்து பலர் கைகளுக்குப் பரவ, ஆசிரியப் பிரானின் ஆசியையும், கலைமகளின் கருணையையும் வேண்டுகிறேன்.
இந்தச் சமயத்தில்தான்
உதவி வரைத்தன்று உதவி்; உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து
என்ற குறளும், இதற்கு ஆசிரியர், தன் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மேற்கோள் காட்டி விளக்குவதும் நினைவுக்கு வந்தது. இந்தக் குறளுக்கு அவருடைய விளக்கத்துடன் இத்தொடரை நிறைவு செய்வதே பொருந்தும் என்று நினைக்கிறேன். அடுத்த இதழில் அந்த விளக்கத்தைப் பார்க்கலாம்.
ஹரி கிருஷ்ணன் |
|
|
|
|
|
|
|
|