இருபத்தாறு ஆண்டுகளாகத் தமிழ் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழர் மேம்பாட்டுக்காக வடஅமெரிக்காவில் இயங்கிவரும் அமைப்பு வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA, Federation of Tamil Sangams of North America). இந்த அமைப்பில் ஐம்பதுக்கும் மேலான தமிழ்ச்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. ஆண்டுதோறும் தமிழ் விழாக்களைத் தொடர்ந்து நடத்தி வருகிறது பேரவை. பேரவையின் உறுப்பிய அமைப்பான கனடியத் தமிழர் பேரவையும் இணைந்து இவ்வாண்டு தமிழ்விழாவைச் சிறப்பாக நடத்தவுள்ளன. தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுக்குச் சிறப்புச்செய்யும் விதமாக விழாவை அமைப்பது பேரவையின் மரபாகும். இவ்வாண்டு தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவாகவும், 'யாதும் ஊரே, யாவரும் கேளிர்' என்ற மையக்கருத்தோடு மலர இருக்கிறது பேரவையின் 26வது தமிழ்த் திருவிழா. இது கனடாவின் டொரோண்டோ நகரத்தில் உள்ள சோனி அரங்கத்தில் (Sony Centre for Performing Arts) ஜூலை 5, 6, 7 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.
தமிழ்க்கலை, இசை, இலக்கியம், பண்பாடு, மரபு, இளைஞர்நலன், பொருளாதார மேம்பாடு முதலானவற்றைப் போற்றுமுகமாகப் பல நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இவ்விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில், தமிழருவி மணியன், அரசியலாளர் எம்.மகேந்திரன், கவிஞர் யுகபாரதி, நடிகர்கள் சமுத்திரக்கனி, கும்கிபுகழ் லட்சுமி மேனன் மற்றும்ஓவியா, திரைப்பட இயக்குநர் சசிக்குமார், குணச்சித்திர நகைச்சுவை நடிகர் இளவரசு, நாடக விற்பன்னர் மதுரை முரளிதரன், இயற்கை வாழ்வியல் நிபுணர் ஹீலர் பாஸ்கர், இசைக்கலைஞர் சாருலதாமணி, பாடகர் மனோ, சூப்பர்சிங்கர் கலைஞர்கள் சத்யபிரகாஷ் மற்றும் பிரகதி, விஜய் தொலைக்காட்சியின் 'உங்களில் யார் அடுத்த பிரபு தேவா' புகழ் நந்தா, 'ஜோடி நம்பர் 1' புகழ் பிரேம் கோபால், ரோபோ சங்கர், தெருக்கூத்து ஆராய்ச்சியாளர் பிரெண்டா பெக் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
விழாவில் தமிழருவி மணியன் இலக்கியச் சொற்பொழிவு, 'தமிழர்களின் இன்றைய நிலை' என்னும் தலைப்பில் எம்.மகேந்திரன் உரை, தனிநாயகம் அடிகளார் குறித்த சிறப்பு நிகழ்ச்சி, கவிஞர் யுகபாரதி வழங்கும் கவியரங்கம், நடிகர் இளவரசு தலைமையில் பட்டிமன்றம், கலைமாமணி சாருலதா மணியின்தமிழிசை, 'சிவகாமியின் சபதம்' நாட்டிய நாடகம், 'வேந்தனின் சீற்றம்' நாட்டுப்புறக் கூத்து, 'தீரன் சின்னமலை' வில்லுப்பாட்டு, மனோ, சாருலதாமணி, இதர சூப்பர்சிங்கர் கலைஞர்களுடன் அக்னி குழுவினர் வழங்கும் மெல்லிசை, சிறப்பு நாட்டிய நாடகங்கள், ரோபோ சங்கரின் நகைச்சுவை நிகழ்ச்சி, தமிழ்த்தேனீ போட்டிகள், தமிழிசைப் போட்டி, முன்னாள் மாணவர் கூட்டங்கள், வலைப்பதிவர் உள்ளிட்ட வலைஞர் கூட்டம், தொழில்முனைவோர் கருத்தரங்கம், திருமணத் தகவல் மையம், இலக்கிய இணையமர்வுகள், தொடர் மருத்துவக்கல்வி முகாம், இளையோர் கலந்துரையாடல், தமிழ்ப் பண்பாட்டு ஆளுமைப்போட்டி, பல்லூடக இலக்கிய விநாடி வினா போட்டி உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுடன் உள்ளூர்த் தமிழ்ச்சங்கம் வழங்கும் நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.
விழாவில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவுக்கும், கூடுதல் விபரங்கள் பெறவும்: www.fetna.org |