கலிஃபோர்னியாவில் வந்து ஒரு கால்கட்டு தெளிவு பாட்டி தாத்தா வேணும்!
|
|
|
|
|
"ஏன்னா! சித்த இங்க வாங்களேன்" ஜானகியின் குரல் சமயலறையிலிருந்து ஒலித்தது. கோபாலன் செய்தித்தாளில் மூழ்கியிருந்தார். அவருக்குக் காலையில் காஃபி இல்லாவிட்டால் கூட பரவாயில்லை. பேப்பர் இருக்க வேண்டும். அதைப் பக்கம் பக்கமாக அலசி எடுத்து விடுவார். அதில் செய்தி இருக்கிறதோ இல்லையோ, ஒரு வரி விடாமல் படித்துவிட வேண்டும். ஓரிரு நாட்களில் முக்கால்வாசி விளம்பரங்கள்தான் இருக்கும். ஆனாலும் முணுமுணுத்துக் கொண்டே முக்கால் மணி நேரம் ஆக்கிவிடுவார். 'சே! என்ன இவனுங்களும் டிவி சீரியல் மாதிரி செய்தியவிட விளம்பரம் நிறையப் போட ஆரம்பிச்சுட்டான்களே!'
"ஒங்களத்தான்! நான் ஒத்தி இங்க கரடி மாதிரி கத்திண்டிருக்கேனே! ஒங்க காதுல விழல்லியா?"
கோபாலன் அந்தக் 'கரடி'யை நிமிர்ந்து பார்த்தார். பேப்பரை மடித்து வைத்துவிட்டு எழுந்தார்.
"அப்படி அந்த பேப்பர்ல உங்களுக்கு என்னதான் இருக்குமோ ஒரு வரி விடாம படிக்க! நீங்க எந்த ஆஃபீசுக்கு போகப்போறீங்க? பேப்பர் நாள் பூரா நம்ம ஆத்துலதானே இருக்கப் போறது!"
தான் ஒய்வு பெற்று வீட்டிலிருப்பதை ஜானகி குத்திக் காட்டுகிறாள் என்பது கோபாலனுக்குத் தெரியும். மூன்று வருடங்களாக இந்தப் பாடுதான். பிள்ளை நல்ல உத்தியோகத்தில் இருப்பதால் மறுபடியும் எங்கேயும் சிறிய வேலைக்குக்கூட போகக்கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.
'இவ சீரியல் பாக்கறப்ப நம்ம ஏதாவது குறுக்கப் பேசறமா? இவ எப்ப வராளோ அப்பதானே சாப்பாடு! நாம பேப்பர் படிச்சா மட்டும் இவளுக்குப் பொறுக்காது' கோபாலன் மனதுக்குள் பொருமிக்கொண்டார். "சொல்லு ஜானு! ஏதாவது செய்யணுமா?"
ஜானகிக்கு எதையும் படபடவென்று பேசித்தான் பழக்கம். தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று அடம் பிடிப்பாள். கோபாலனுக்கு அவளைச் சமாளிக்கத் தெரியும். ஆஃபீசில் கற்றுக்கொண்ட பாடம். அவள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டி விடுவார். பத்து நிமிடம் கழித்து பொறுமையாகச் சொன்னால் ஒத்துக் கொள்வாள். "நம்ம தெருக்கோடி முதலியாரம்மா பொண்ணு கமலா இருக்கா பாருங்கோ!"
"எந்த முதலியாரம்மாவ சொல்றே? நம்மாத்து கொலுவுக்கு ஒரு பெரிய பட்டாளத்தையே அழைச்சிண்டு வந்தாளே, அந்த அம்மாவா?"
"இப்போ அந்த அம்மா முக்கியமில்லே. விஷயத்தக் கேளுங்கோ! அவ பொண்ணு நேத்து ராத்திரி ஓடிப் போயிட்டாளாம். ஊரே பேசறது," சொல்லும்போதே ஜானகியின் முகத்தில் கொள்ளை மகிழ்ச்சி. கோபாலன் அவளை நிமிர்ந்து பார்த்தார். "அவாத்துப் பொண்ணு ஓடிப்போனா அதுக்கு நீ ஏண்டி இவ்வளோ சந்தோஷப்படற?"
"அதுக்கில்லண்ணா! அந்தப் பொம்பள ரொம்ப ராங்கிக்காரி. ஊர்லயே அவ பொண்ணப் போல அழகி யாருமே இல்லன்னு எல்லார்கிட்டயும் ஜம்பம் பேசிண்டிருப்பா. சாமியே பாத்து அவ கர்வத்த அடக்கிட்டார் பாருங்கோ!"
கோபாலனுக்கு ஒரு நிமிஷம் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. 'ஏன் ஜானுவுக்கு இந்த கெட்ட புத்தி?'
"ஜானு! யாரையும் அப்படிச் சொல்லாதே! அவ மனசு எவ்ளோ பாடுபடும்னு யோசிச்சிப் பாரு!"
"நீங்க சும்மா இருங்கோ. அந்தப் பொண்ணு ஒரு மாதிரி. ரோட்ல போற வரவாள எல்லாம் ஜன்னல்ல ஒக்காந்துண்டு பாத்துண்டிருப்பா. நம்ம பையன் ஆபீஸ் போறப்ப எல்லாம் அந்தச் சிறுக்கி வாசல்லயே வந்து நிப்பா. இதுக்காகவே அவ ஓடிப்போனது எனக்கு சந்தோஷமா இருக்கு." ஜானகிக்கு இருப்பே கொள்ளவில்லை. யாரிடமாவது இந்த விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டுமே! யார்கிட்ட சொல்றது? அவள் முகத்தில் ஒரு பிரகாசம்.
"சித்த ஆத்தப் பாத்துக்கோங்க. நான் பக்கத்துல மைதிலி ஆத்துக்குப் போயிட்டு வந்துடறேன். கேஸ்காரன் வந்தா அந்த டீப்பா மேல பைசா வெச்சிருக்கேன். அவன் சிலிண்டர் கொண்டு வந்து வெச்சவுடனே நன்னா செக் பண்ணி வாங்கிக்கோங்க. பத்து மணிக்கு சன் டிவி சீரியல்ல அந்த கவிதாவ போலீஸ் பிடிச்சுட்டாளான்னு பாத்து வெய்யுங்கோ. நான் இதோ பத்து நிமிஷத்துல வந்துடறேன்!" சிட்டாகப் பறந்தாள் ஜானகி.
கோபாலனுக்குப் புரிந்து விட்டது. இவள் அந்தத் தெருவுக்கே விஷயத்தைப் பரப்பத்தான் போய்க் கொண்டிருக்கிறாள் என்று. அவருக்குப் பேப்பர் படிக்க நேரம் கிடைத்ததே என்று மகிழ்ச்சி. எல்லாவற்றுக்கும் தலை ஆட்டிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டார். இன்னும் ஒரு மணி நேரத்துக்கு கவலையில்லை.
வெகுநேரம் கழித்து ஜானகி வந்தாள். அவள் முகத்தில் பரிபூரண மகிழ்ச்சி. ஒரு வழியா எல்லாரிடமும் விஷயத்தை சொல்லியாச்சு. இனிமே அந்த முதலியாரம்மா தெருவில தல நிமிர்ந்து நடக்க முடியாது! |
|
"ஏன்னா, கேஸ்காரன் வந்தானா?" இல்லை என்று கோபாலன் தலை அசைத்தார். "அந்தக் கடங்காரன் நாம ஆத்துல இல்லாதப்பதான் வருவான். அப்புறம் அவன் பின்னால நாம சுத்தணும்! நீங்க ஆத்துலதானே இருந்தேள்? அவன் கதவு சாத்தியிருந்தா கூட வீட்ல ஆள் இல்லேன்னு போயிடுவான்". கோபாலன் சற்றுக் கடுப்புடன் நிமிர்ந்து பார்த்தார்.
"சரி! தியாகு போன் பண்ணினானா?"
"ஏண்டி! அவன் நாளைக்கி கார்த்தாலதான் வரப்போறானே!"
"அவன்கிட்டயும் சொன்னாதான் எனக்கு நிம்மதியா இருக்கும்!"
சே! என்ன வக்கிர புத்தி இவளுக்கு! - கோபாலன் பெருமூச்சு விட்டார்.
ஒரு வழியாக அன்று பொழுது ஓடியது. ஜானகிக்கு இரவு முழுதும் சரியாகத் தூக்கமே வரவில்லை. எப்போது பொழுது விடியும் என்று காத்திருந்தாள். விடிகாலை பால்காரன் குரல் கேட்டு ஜானகி விழித்துக்கொண்டாள். "ஏம்பா இவ்வளவு லேட்டு?"
"தினமும் வர்ற நேரத்துல தானேம்மா வந்திருக்கேன். நீங்க நேரத்தப் பாக்கலேன்னா நானா பொறுப்பு?"
"சரி, சரி! காலங்காத்தால வம்பு வளக்காதே. எக்ஸ்ட்ரா பாக்கெட் இருக்கா?"
"நீ நேத்தே சொல்லி இருக்கணும். இப்போ நான் எங்க போறது?" சொல்லிக்கொண்டே பக்கத்து வீட்டுக்குப் போய்விட்டான்.
பால் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு சமயலறைக்குப் போனவள் பாக்கெட்டைக் கத்தரிக்கப் போகும்போது காலிங் பெல் அடித்தது. ஜானகி முகமெல்லாம் மலர வாசலுக்கு ஓடினாள். கோபாலனும் எழுந்து கொண்டார். ஜானகி கதவைத் திறந்தாள்.
"ஏன்னா! இங்கே வந்து பாருங்களேன்!" கத்திக்கொண்டே கீழே மயங்கிச் சாய்ந்துவிட்டாள் ஜானகி. கோபாலன் வெளியே ஓடி வந்தார்.
அங்கே வாசலில் அவர் மகன் தியாகுவும் அந்த முதலியார் பெண்ணும் மாலையும் கழுத்துமாக நின்று கொண்டிருந்தனர்.
ஆர். சந்திரசேகரன், லண்டன் |
|
|
More
கலிஃபோர்னியாவில் வந்து ஒரு கால்கட்டு தெளிவு பாட்டி தாத்தா வேணும்!
|
|
|
|
|
|
|