Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
November 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நூல் அறிமுகம் | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மருந்து மரமென்ன மாய மரமா?
- ஹரி கிருஷ்ணன்|நவம்பர் 2012||(1 Comment)
Share:
பரோபகாரிகளை மூன்றுவிதமாகப் பிரித்தார் வள்ளுவர். முதல்வகை ஊருணி, ஊருக்கு நீரைக் கொடுத்து, தன் பாதுகாப்பை உறுதி செய்துகொள்கிறது. இரண்டாவது வகை, பயன் மரமோ பழத்தைக் கொடுத்துத் தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறது. பார்த்தீனியம் வாடி உலர்ந்தால், பூச்சிபொட்டு தாக்கினால் யார் கவலைப்படப் போகிறார்கள்? அதுவே ஒரு மாமரம் என்றால்? வளரும் வரையில் அடிக்கொரு முறை மருந்தடிப்பு என்ன, வேலி என்ன, ஆடு மாடு அண்டாமல் பாதுகாவல் என்ன, பழுக்கத் தொடங்கிவிட்டால் தோட்டக்காரன் என்ன.... தடபுடலாக கவனித்துக் கொள்கிறோம் அல்லவா? ஆக, பயன்மரம் தன்னையும் பாதுகாத்துக்கொண்டு, தன் குலம் தழைக்கவும் ஒரு மறைமுக ஏற்பாட்டைச் செய்துகொள்கிறது.

சமூகத்தின் பேரில் உண்மையான அக்கறையோடு கொடுப்பவர்கள்தாம் ஊருணி வகையினரும், பயன்மர வகையினரும். அதே சமயத்தில், ஒருசிறு ஓரத்தில், தனக்கும் ஒரு பாதுகாப்பைச் சமூகத்தினின்றும் பெறும் ஏற்பாட்டை உள்ளடக்கியே இவர்களுடைய சமூகநலப் பணிகள் அமையும். 'எங்கியோ இடிக்குதே' அப்படின்னு தோணுதோ? ஒருவேளை இந்தக் குறளைப் பற்றி நினைக்கிறீர்களோ?

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது.

உதவி செய்பவர்கள் பயன்தூக்காமல் செய்யவேண்டும் என்றல்லவா இந்தக் குறள் வலியுறுத்துகிறது? ஊருணியும் பயன்மரமுமாக நிற்பவர்கள் ஏதோ ஒரு மறைமுக வழியிலாவது பயன்தூக்கித்தானே செய்கிறார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா? இந்தக் குறள் செய்ந்நன்றி அறிதல் அதிகாரத்தில் உள்ளது. தனக்குப் பிறர் செய்த நன்றியை உணர்வதாகிய தன்மையைச் சொல்கிறது. வாங்கிக் கொள்ளும் கைக்கு வகுக்கப்பட்ட இலக்கணத்தை, கொடுக்கின்ற கையோடு ஒட்டவைக்கக் கூடாது. இது ஒன்று. 'செய்நன்றி' என்பதன் பரப்பு 'ஒப்புரவு'என்பதன் பரப்பைக் காட்டிலும் பெரியது. ஒப்புரவும் செய்நன்றிதான். ஆனால் ஒப்புரவே செய்நன்றி ஆகிவிடாது. செய்ந்நன்றிக்குள் இன்னும் பல ரகம், பல தினுசுகள் உண்டு.

வள்ளுவர் வாக்கில் எப்போதும் இரண்டு எதிரெதிர் துருவங்களுக்கான இலக்கணங்கள் சுழன்றபடி இருக்கும். 'செய்தானுக்குப்'பொருந்துவது 'செய்யப்பட்டானுக்குப்' பொருந்தாது. இந்த எதிரெதிர் துருவங்களைப் பற்றி, பின்னொரு சமயம் பேசுவோம். இப்போது சொல்ல வருவதெல்லாம், ஒப்புரவில், பயன்தூக்கிய ஒப்புரவும் உண்டோ என்று குழப்பிக்கொள்ள வேண்டாம். சில சமயங்களில் ஒன்றையொன்று தொட்டுச் சென்றாலும், இரண்டும் வேறுவேறுதாம். ஒப்புரவுக்குத் திரும்புவோம்.

மிக, மிகப் பெரும்பாலும் பொதுநலம் நோக்கியதாக இருக்கும் அதே சமயத்தில், தன்னுடைய 'ஒத்த புரவைப்' பெறுகின்ற சமூகத்தில், தானும் ஓர் அங்கம்தான்; தன்னையும் உள்ளடக்கிய சமூகத்தைதான் நாம் ஒத்ததாகக் கருதிப் புரக்கிறோம் என்று ஊருணி வகையினரும் பயன்மர வகையினரும் கருதினால், அதில் என்ன கேடு? அவரால் பயன்பெறும் சமூகத்தில் அவரும் ஓர் அங்கம்தானே? அவர் சமூகத்துக்குச் செய்யும் நன்மையின் ஒருசிறு, மிகச்சிறு பகுதி அவரையோ அல்லது அவரையும் அவர் குலத்தையுமோ காக்கும் என்றால் என்ன நஷ்டம்? சொல்லப் போனால், ஊருணி நீர் கெட்டுப் போகாமல் இருக்கும்வரையில்தான் ஊருக்குப் பயன். பயன்மரத்தைப் பூச்சிபொட்டு தாக்கி அது அழிந்தால், அதனிடமிருந்து சமூகம் என்ன பயனைப் பெற முடியும்?

எனவே, இந்த இருவகை ஒப்புரவாளர்களையும் சமூகம் சார்ந்திருக்கிறது; இவர்கள் சமூகத்தைச் சார்ந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் சார்ந்து, சிறிய அளவு, நோகாத அளவு பயனைப் பெற்றுக்கொண்டு மிகப் பெரிய அளவில் சமூகத்துக்கு நன்மையைத் திரும்பச் செய்பவர்களும் போற்றத் தக்கவர்களே. அதனால்தான், 'பேரறிவாளன்' என்றும் 'நயனுடையான்' என்றும் வள்ளுவர் இந்த இரண்டு பிரிவினரையும் பகுத்தார். தனித்தனி அடையாளப் பெயர்களைக் கொடுத்தார். பேரறிவாளன், நயனுடையான் என்று உள்ளம் நெகிழ்ந்து போற்றினாலும், அவருடைய நமட்டுச் சிரிப்பு, தாடிக்குள் பதுங்கிக் கொள்கிறது. 'இப்படிச் சொல்லும்போது அவருடைய கண்களில் குறும்பு கூத்தாடியிருந்திருக்குமா' என்று நான் வியப்பதுண்டு. உண்மையாகவும், உளமாரவும்தான் வாழ்த்துகிறார் ஆனால் உள்ளே, மிக உள்ளே... ஏதோ ஒரு புன்னகை மின்னுகிறதே, அதற்கு என்ன பொருளாக இருக்கலாம் என்று சிந்தித்துத் திகைத்ததும் உண்டு.

இப்போது, மூன்றாவது வகை ஒப்புரவாளரைக் காட்டுகிறார் வள்ளுவர்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். (217)
'பிணி மருந்தாகித் தேடுவார்க்கு மறைதல் இல்லா மரத்தை ஒக்கும்' என்று மணக்குடவரும்; 'எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத மரத்தை ஒக்கும்' என்று பரிமேலழகரும் உரை காண்கிறார்கள். உரைகளின் அளவில் பார்த்தால், 'இது ஏதோ மூலிகைச் செடி அல்லது மூலிகை மரத்தைக் குறிக்கிறது போலும்' என்றுதான் தோன்றும். 'எந்த வகையான பயனையும் சமூகத்திலிருந்து திரும்ப எதிர்பார்க்காத--வளரும் பருவத்தில் சமூகத்தின் பாதுகாப்பு இருந்திருந்தால், பயன் மேலும் சிறக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை--தன்னுடைய ஒவ்வொரு உறுப்பையும் சமூகத்தின் ஏதாவது ஒரு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொடுத்துவிடும் மரம் என்று கொஞ்சம் சமனப்படுத்திக் கொண்டால், நம்மைச் சுற்றிலும் ஏராளமான 'மருந்து மரங்கள்' இறைந்து கிடப்பதைக் காணலாம். அனிச்சப்பூ, அசுணமா என்பனவற்றைப் போல, இலக்கியங்களில் மட்டுமே காணப்படும், உலகத்தில் எங்கேயும் தட்டுப்படாத வகை மரம் போலிருக்கிறது என்ற எண்ணம் நீங்கும். 'மருந்து' என்ற சொல்லை வள்ளுவர் medicine என்ற பொருளி்ல் மட்டும் ஆளவில்லை. அமிழ்தம் என்ற பொருளிலும் ஆண்டிருக்கிறார். 'சாவா மருந்தெனினும்' குறள் ஒரு சான்று. இப்போது, இந்த மரத்தினின்று, நோயையும், நோயைத் தீர்க்கும் மருந்தாகி நிற்கும் தன்மையையும் பிரித்துவிடுவோம். 'பிணி' என்பது, இதுவரையில்--in the absence of this particular part of the tree--தீர்க்கப்படாத தேவைகளையும்; 'மருந்து'என்பது, இந்த மரம், அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் தன்மையையும் குறிப்பதாகக் கொள்ள ஏது உண்டு. இப்படிச் சுருக்கிக் கொள்வதால், 'ஏதோ ஒரு மாயா உலகத்து மரம்' என்ன பிரமையிலிருந்து விடுபட்டு, நம்மைச் சுற்றிய உலகு நெடுகிலும் மருந்து மரங்கள் நிறைந்து கிடப்பதைக் காணலாம். வள்ளுவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதை உணர, முதலில் மருந்துமரம் என்ற தகுதிக்கு எதுவெல்லாம் வரும் என்று வரையறுத்துக் கொள்வது உதவும்.

அதாவது, இந்த மரத்தின் ஒவ்வொரு உறுப்பும் சமூகத்துக்குப் பயன்படும். எதுவும் வீணாகப் போகாது. இது ஆரம்பகட்ட வளர்ச்சிக்கு மட்டுமே சமூகத்தைச் சார்ந்திருக்கும். அப்படியில்லாமல், இயற்கையின் துணைகொண்டு தானாகவே தன்னைப் பேணிக்கொண்டு வளரும் மரங்களும் இவற்றில் உண்டு. இவை சமூகத்துக்குச் செய்யும் நன்மை மிகப் பல. சமூகத்திலிருந்து இவற்றுக்குக் கைம்மாறாகத் திரும்ப வருபவை மிகச் சில; சொற்பம்; அற்பத்திலும் அற்பம். இப்படிப்பட்ட மரங்கள் உலகில் உள்ளனவா?

ஏன் இல்லை! உதாரணத்துக்குத் தென்னையை எடுத்துக் கொள்வோம். அதன் ஓலை, கூரை வேய்வதிலிருந்து, மனிதனின் இறுதி யாத்திரைக்கான பாடை வேய்வது வரையில் பயன்படுகிறது; காய்களின் பயனோ ஏராளமானது. எண்ணெய் உட்பட, காய்களிலிருந்து நாம் பெறும் பயன்களை எண்ணிப் பார்த்துதான் அறிந்துகொள்ள வேண்டும்; பாளை பயன்படுகின்றது; கீற்றுகளுக்கு இடையில் படர்ந்திருக்கும் பன்னாடையும் பயன்படுகிறது. அந்த நாளில் அதுதான் இயற்கையான வடிகட்டி. Natural filter. (சாறை வழிய விட்டுவிட்டு, சக்கையை மட்டும் நிறுத்திக் கொள்ளும் தன்மையால் அத்தகையவர்களை இப்படி ஒரு பெயரால் அழைக்கிறோம். அந்த வசவால், இந்தப் பயன் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை!) காய்களைப் பயன்படுத்திவிட்டு, அதைச் சூழ்ந்திருக்கும் நாரை மட்டும் விடுகிறோமா என்ன! அது கயிறாகிறது, நார்ப் படுக்கையாகக்கூட ஆகிறது, தேர் வடத்திலிருந்து, கிணற்றில் நீர் சேந்தும் கயிற்றிலிருந்து, கித்தான் பை வரை பற்பல உருவங்களை இந்த நார் எடுக்கிறது. மரம் சாய்ந்துவிட்டால் அதன் தண்டுப் பகுதி, சிற்றோடையின் குறுக்கே நடை பாலமாக, வீட்டுத் தூணாக--எத்தனை வகைகளில் இந்தப் பகுதி பயன்படுகிறது!

ஆக, இதன் ஒரு பகுதியும் வீணாகவில்லை அல்லவா? பனையும் இதைப் போன்றதுதானே? தென்னையையாவது தோப்பாகப் பராமரித்து வளர்க்கும் வழக்கம் உண்டு. பனை, தன் வளர்ச்சிக்கு முழுக்க முழுக்க இயற்கையை அல்லவா சார்ந்திருக்கிறது! இவற்றைப் போலத்தான் வாழையும். வாழைப்பூ, காய், பழம் எல்லாவற்றையும் வெட்டித் திருத்தி சமைத்து உணவு படைக்க வாழை இலை. வாழை இலை உள்ளிட்ட எதையும் கட்டாகக் கட்டித் தர வாழை நார். பூவைத் தொடுப்பதிலிருந்து, பூவேலை செய்யப்பட்ட அழகிய பைகள் வரையில் வாழை நாரிலிருந்து உருவாகின்றன. வாழைத்தண்டு? அது வீணாயிற்றா! அருமையான ருசியான சத்தான அவியலையும் பொறியலையும் கூட்டையும் செய்துவிடுகிறோமல்லவா? போகட்டும். தென்னை, பனையிலாவது, வேர் பயன்படுவதில்லை. வாழையோ, தன் இனத்தைத் தானே உருவாக்கிக் கொள்கிறது. விதையில்லாத ஒரே பழம் வாழைப்பழம் மட்டும்தான். (நான், நாமாக இயற்கையை மாற்றித் திருத்தி உருவாக்கிக் கொண்ட ஸீட்லெஸ் பழங்களைப் பற்றிப் பேசவில்லை. தன் இயற்கையில், தானே விதை என்று ஒன்றை உள்ளே--அல்லது முந்திரியைப் போல வெளியே--வைத்துத் தராத ஒரே மரமல்லவா வாழை!)

என் இலையைத் தருகிறேன்; பூவைத் தருகிறேன்; காயைத் தருகிறேன்; கனியைத் தருகிறேன்; நாரைத் தருகிறேன்; தண்டைத் தருகிறேன்; என் குலத்தை நீ ஒன்றும் பாதுகாக்கத் தேவையில்லை; நானே என் குலத்தை உருவாக்கிக் கொள்கிறேன் என்று, தன் வேரிலிருந்து தானே ஒரு பட்டாளம் கன்றுகளைப் படைத்துக் கொள்கிறதல்லவா வாழை! 'வாழையடி வாழையாக வந்த திருக்கூட்டம்' என்று சொல்லிச் சொல்லி, அதன் பொருளின் கூர்மையையே மறந்தும் இழந்தும் விட்டோம்.

இப்படி, சிரித்துக் கொண்டே, எந்தப் பலனையும் எதிர்பார்க்காமல், தன்னை முற்றிலும் சமூகத்தின் நலனுக்காக அழித்துக் கொள்பவனையும், தன் இனம் அழியாமல் தொடர்ந்தால்தான் சமூகத்துக்குப் பலன் தொடர்ந்து கிடைக்கும் என்பதால், தான் அழியும் போதிலேயே தன் குலத்தைத் தானே படைத்துக்கொள்ளும் ஆற்றல் உள்ளவனாயும் இருப்பவனைப் பார்த்தார் வள்ளுவர். 'பெருந்தகையான்' என்று அவனை அழைக்கும்போதே, சம்மணமிட்டு அமர்ந்து, சுவடியில் எழுதிக் கொண்டிருந்தவர், தன்னையும் அறியாமல் சுவடியைக் கீழே வைத்துவிட்டு, எழுந்து நின்று கரம்கூப்பி வணங்கியபடி 'பெருந்தகையான்' என்று சொல்லும் சித்திரம் மனத்தில் விரிகிறதல்லவா!

மேம்போக்காகப் பார்த்தால் மூன்று குறட்பாக்களிலும் அப்படியொன்றும் அதிகப் பொருள் வேறுபாடில்லை என்றுதானே தோன்றியது? அந்த உவமைகளை விரிக்கப் புகுந்ததனால்தானே இவ்வளவு பெரிய பலன் நமக்குக் கிட்டியது? அதனால்தான் சொல்கிறேன்--திருத்தம்... என் ஆசிரியர் சொன்னதைச் சொல்கிறேன்--மற்ற கவிஞர்களுடைய உவமைகளைப் போன்றதன்று வள்ளுவ உவமை. ஒவ்வொரு குறள் உவமையையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரிக்கலாம். Stretching it beyond limits is impossible, for there is no limit of stretch!

தொடர்வோம்...

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline