|
|
|
|
அழகாபுரி நாட்டு மன்னன் அமரசிம்மனுக்கு வாரிசு இல்லை. எவ்வாறு அடுத்த அரசனைத் தேர்ந்தெடுப்பது என்று யோசித்து அவன் ஒரு முடிவுக்கு வந்தான். வீரமும், ஆற்றலும், அறிவும் கூடிய முப்பது இளைஞர்களைத் தேர்ந்தெடுத்த அவன், அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தான். "என் அன்புக்குரிய இளைஞர்களே, உங்களிடம் நான் ஒரு விதையைத் தருவேன். அதை கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து நீங்கள் வளர்க்க வேண்டும். யாருடைய செடி மூன்று மாதத்தில் மிகப் பெரிதாக வளர்ந்திருக்கிறதோ அவர்களே இந்த நாட்டை அடுத்து ஆளப்போகும் அரசனாக முடிசூட்டப்படுவார்கள்" என்று தெரிவித்தான். இளைஞர்களும் மன்னனை வணங்கி விதைகளை வாங்கிச் சென்றார்கள். அவர்களின் மந்திரி மகன் மதிவாணனும் ஒருவன்.
மதிவாணன் விதையை ஒரு மண் தொட்டியில் இட்டு கண்ணும் கருத்துமாய் கவனித்து வந்தான். தினமும் காலையில் நீர் ஊற்றுவான். விதை முளைத்திருக்கிறதா என்று ஆவலோடு பார்ப்பான். நாட்கள் கடந்தன, ஆனால் விதை முளைக்கவில்லை.
இப்படி மூன்று மாதங்கள் கடந்தன. மன்னன் அறிவித்த அந்த நாளும் வந்தது. வருத்தத்துடன் செடி முளைக்காத அந்த மண் தொட்டியை எடுத்துக்கொண்டு சென்றான் மதிவாணன். பிற இளைஞர்களும் அங்கே வந்திருந்தனர். அவர்களுடைய மண் தொட்டிகளில் செடிகள் பூத்துக் குலுங்கின. இவனது செடி முளைக்காத மண் தொட்டியைப் பார்த்துச் சிலர் கேலி செய்தனர். |
|
மன்னன் வந்ததும் எல்லா இளைஞர்களும் அவனை வணங்கி தங்கள் தங்கள் தொட்டியை அவன் முன் வைத்தனர். ஒவ்வொரு செடியாகப் பார்த்துக் கொண்டே வந்த மன்னன், எதுவுமே முளைக்காத வெற்று மண் தொட்டியைக் கண்டதும் அப்படியே நின்றான். மதிவாணனைப் பார்த்து, "ஏன் உன் தொட்டியில் மட்டும் எதுவுமே முளைக்கவில்லை?" என்று கேட்டார்.
"எனக்குத் தெரியவில்லை அரசே. நான் அதை விதைத்து மிகவும் கவனத்தோடுதான் பராமரித்தேன். ஆனாலும் அது முளைக்கவில்லை. காரணம் தெரியவில்லை" என்றான்.
அதைக் கேட்டு, "காரணம் எனக்குத் தெரியும்" என்ற மன்னன், "இளைஞர்களே! உங்களிடம் வீரம், இளமை, அழகு, அறிவு எல்லாம் இருக்கிறது. ஆனால் அரசனுக்கு இவை மட்டும் போதாது. நேர்மை மிக முக்கியம். அது உங்களிடம் இருக்கிறதா என்று பரிசோதிக்க நினைத்தேன். நன்கு வறுத்த, முளைக்கவே வாய்ப்பில்லாத விதைகளை உங்களுக்குக் கொடுத்தேன். எங்கே முளைக்காத தொட்டியைக் கொண்டு சென்றால் நமக்குப் பதவி கிடைக்காதோ என்ணத்தில், வேறு விதைகளை ஊன்றி, செடியாக்கி இங்கே கொண்டு வந்திருக்கிறீர்கள். ஆனால் மதிவாணனோ செடி இல்லாத காலித் தொட்டியில் நேர்மையையே பயிராக்கி இங்கே கொண்டு வந்துள்ளான். அவனே இந்த நாட்டை ஆளும் தகுதி பெற்றவன்" என்று அறிவித்தார்.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|