மிருத்திகா செந்தில்: கிடார் சாதனை
|
|
FeTNA வெள்ளி விழா |
|
- பழமைபேசி|ஆகஸ்டு 2012| |
|
|
|
|
|
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) கிட்டத்தட்ட நாற்பது தமிழ்ச் சங்கங்களை உள்ளடக்கிய, 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் அமைப்பாகும். ஜூலை நான்காம் நாளில் வரும் விடுதலை நாள் விழா விடுமுறையை ஒட்டி ஆண்டுதோறும் பேரவை அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு தனது இருபத்து ஐந்தாவது ஆண்டு விழாவை, பேரவையின் வெள்ளி விழாவாகவும், முனைவர் மு. வரதராசனார் ஆண்டு விழாவாகவும் பால்டிமோர் நகரில் உள்ள மேயர்யாஃப் சிம்ஃபனி இசையரங்கத்தில் ஜூலை 5ம் நாள் மாலை தொடங்கி, 9ம் நாள்வரை கொண்டாடியது.
'தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!' எனும் பேரவையின் மையக்கருத்தை ஒட்டி, சொற்பொழிவு, மாணவர்க்கான கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, விழா மலர்க் கட்டுரைகள் போன்றவை இடம்பெற்றன. இவ்விழாவைப் பேரவையுடன் இணைந்து வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் நடத்தியது. முதல் நாள், வியாழக்கிழமை மாலை தமிழிசை விழா நடத்தப்பட்டது. இதில், அடிப்படைப் பாடல், தமிழ்ப் பாடல், சேர்ந்திசைப் பாடல் என மூன்று பிரிவுகளில் பாடல்கள் இடம்பெற்றன. நிகழ்ச்சியைத் தேவகி செல்வன், மலர்செல்வன், பொற்செழியன் ஒருங்கிணைத்திருந்தனர். அடுத்து வந்த 'விருந்தினர் மாலை' நிகழ்ச்சியில் கொடையாளர்களும், விருந்தினர்களான தோழர் நல்லகண்ணு, மலேசியாவின் பினாங்கு மாகாணத் துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன், 'வீரத்தாய் வேலுநாச்சியார்' நாட்டிய நாடக இயக்குநர் ஸ்ரீராம் சர்மா, 'வேலுநாச்சியார்' மணிமேகலை, சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி, திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலா பால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஜூலை 6ம் நாள் காலையில் மங்கள இசை, நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்து விளக்கேற்றுதல் ஆகியவற்றுடன் வெள்ளி விழா துவங்கியது. பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் முறையே தலைமையுரை, வரவேற்புரை ஆற்றினர். வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் நாட்டிய நிகழ்ச்சி முதலில் வந்தது. தொடர்ந்து, நூற்றாண்டு விழா நாயகர் மு. வரதராசனார் அவர்களைப் பற்றி, அவர்தம் அரிய நிழல்படங்களோடு விரித்துரைத்தார் மறைமலை இலக்குவனார். அடுத்து வந்த பனைநிலத் தமிழ்ச்சங்கத்தினரின் நகைச்சுவை நாடகம் பார்வையாளரிடையே கலகலப்பூட்டியது.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் தலைமையில் 'இதயங்கள் இயங்கட்டும்' என்னும் தலைப்பிலான கவியரங்கத்தில், கவிஞர்கள் புகாரி, சிகாகோ பாசுகரன், புவனா நந்தகுமார், இளமுருகன், சுந்தரமூர்த்தி, கரு. மாணிக்கவாசகம் ஆகியோர் பங்களித்தனர். கார்த்திகேயன் தெய்வீகராசன் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியைத் தோழர் நல்லகண்ணு வெகுவாகப் பாராட்டினார்.
நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரெண்டா பெக் அவர்களின் அனுபவவுரை, அரசி நகரத் தமிழ்ச் சங்கத்தின் சிலம்பாட்டம், அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச்சங்கத்தின் வீணையிசை ஆகியவை இடம்பெற்றன. எழுபது கவனகர் முனைவர் கலை.செழியனும், அவர்தம் தந்தையார் கலைச் செல்வமும் இணைந்து நடத்திய கவனகக்கலை நிகழ்ச்சி பெருத்த வரவேற்பையும் பாராட்டுதலையும் அள்ளிச் சென்றது. நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார நாட்டியம், தமிழகத்தில் தாய்த்தமிழ்ப் பள்ளிகள் குறித்த உரை, வாழ்த்துரையாகக் கல்வியாளர் முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் உரை, அமெரிக்க தமிழ்க் கல்விக் கழகம் பற்றிய உரை ஆகியவற்றைத் தொடர்ந்து இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார் தமிழிசைக் கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன்.
பேரவையின் முன்னாள் தலைவர்கள், தமிழ் தொழில் முனைவோர் ஆகியோர் சிறப்பிக்கப்பட்டனர். தொடர்ந்து, 'தமிழரின் மனித உரிமைகள் பேணல்' குறித்துப் பேசினார் பினாங்கு துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி. அதைத் தொடர்ந்து கனடியத் தமிழர் பேரவையின் நாட்டிய நிகழ்ச்சி வந்தது. வெள்ளி விழா மலர் வெளியீட்டை மலராசிரியரும் பதிவருமான பழமைபேசி தொகுத்தளிக்க, எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட, மறைமலை இலக்குவனார், கலை.செழியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். |
|
|
பெருத்த ஆரவாரத்துக்கிடையே 'வாழும் கலை' நிறுவனர் ஸ்ரீஸ்ரீ இரவிசங்கர்ஜி வழங்கிய சிறப்புரை கவனத்தை ஈர்த்தது. சேலம் நியூஸ் இதழியலாளர் டிம் கிங், போனி கிங் முதலானோர் உரையாற்றினர். சிரிப்பலைகளைத் தோற்றுவித்தார் பகடிக் கலைஞர் மதுரை முத்து. முதல்நாளை நிறைவு செய்ய இடம்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி, 'வீரத்தாய் வேலுநாச்சியார்' நாட்டிய நாடகம். வீரத்தின் விளைநிலமாம் சிவகங்கைச் சீமையை மீட்டெடுத்த வீரத்தாய் கூரிய வாளொடு தோன்றினார். தயாரிப்பாளர் வைகோவின் வாழ்த்துரையோடு துவங்கியது நாடகம். வேலுநாச்சியாராகத் தோன்றிய மணிமேகலை சர்மா, குயிலாகத் தோன்றிய சின்னத்திரைக் கலைஞர் பிரியதர்ஷினி, பெரியமருது பாண்டியர் ஓஏகே தேவர், சின்னமருது யுவராஜ், அய்தரலி மயிலாடுதுறை சிவா ஆகியோரின் நடிப்பாற்றல் பாராட்டப்பட்டது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில், கவிஞர் இலந்தை இராமசாமியின் கொத்தமங்கலம் சுப்பு நூற்றாண்டுக் கவிதை, முனைவர் சவரிமுத்துவின் தனிநாயகம் அடிகளார் குறித்த சொல்வீச்சு, போஸ்டன் தமிழ்ச்சங்கத்தின் குறுங்கதைகள், நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கத்தின் 'வீரம்' நாட்டியம், கரோலைனா தமிழ்ச்சங்கத்தின் பட்டிமன்றம் ஆகியவை இடம்பெற்றன. மாணவர்களுக்கான தமிழ்ப் பன்முகத்திறன் (jeopardy) போட்டி ஒரு பல்லூடக நிகழ்ச்சியாக அமைந்தது. நிகழ்ச்சியை கவனகர் கலை.செழியன் திறம்பட நடத்தினார். வாசிங்டன் தமிழ்ச் சங்கத்தின் தமிழிசைப் பாடலுக்கான நாட்டியத்தைத் தொடர்ந்து தமிழ்த்தேனீப் போட்டிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இப்போட்டிகளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, திருக்குறள் போட்டி, பன்முகத்திறன் போட்டி முதலானவை இடம் பெற்றிருந்தன. இராமசாமி சோமசுந்தரம், பொற்செழியன் இராமசாமி, இளங்கோ சின்னசாமி, பூங்கோதை ஆகியோர் இவற்றை நடத்தியிருந்தனர். முதல்நிலைப் பிரிவில் இடம்பெற்ற அனைத்துப் போட்டிகளிலும் தென்மத்திய தமிழ்ச்சங்க மாணவி ஸ்ரீநிதி மணிவாசகம் முதல் பரிசைப் பெற்றார்.
நாஞ்சில் பீற்றரின் நெறியாள்கையில் நடந்த இலக்கிய விநாடி வினா, ஓர் பல்லூடக நிகழ்ச்சி. தமிழச்சி தங்கபாண்டியன், மறைமலை இலக்குவனார், கலை.செழியன் ஆகியோர் நடுவராகப் பணியாற்றினர். வட கரோலைனா தமிழ்ச் சங்கத்தின் நாட்டுப்புற நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. நியூயார்க் தமிழ்ச்சங்கத்தின் இசை நாட்டியம், வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கத்தின் காவியத் தலைவிகள் நாட்டியம், அமெரிக்கத் தமிழ் இளையோர் அமைப்பின் களி நடன நிகழ்ச்சியைத் தொடர்ந்து இடம்பெற்றது சிவகார்த்திகேயனின் 'நேற்று இன்று நாளை' என்னும் தலைப்பிலான விவாதமேடை. டெலவேர் பெருநிலத் தமிழ்ச்சங்கத்தின் காட்டுத்திருவிழா நடனம், வித்யா வந்தனா சகோதரிகள் பாடல் நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், வட அமெரிக்கத் தமிழ் இளையோருக்கான 'தமிழன்–தமிழச்சி' போட்டிகள் நடைபெற்றன. முடிவில், யாழினி பொற்செழியன், வசந்த் குப்புசாமி ஆகியோர் வாகை சூடினர். கதைகளின் மூலம் எப்படியெல்லாம் புரிதலைக் கொண்டு வரலாமென்பதை வெகு யதார்த்தமாகப் பேசி வந்திருந்தோரைக் கவர்ந்தார் எஸ்.ராமகிருஷ்ணன். திரைப்படக் கலைஞர்கள் அமலா பால், பரத், சிவகார்த்திகேயன் ஆகியோருடனான கலந்துரையாடலைத் தொகுத்தளித்தார் பிரியதர்ஷினி.
2012-2014ம் ஆண்டுக்கான செயற்குழுவை மா. சிவானந்தம் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து பேசிய தோழர் நல்லகண்ணு, இந்திய விடுதலைப் போராட்ட அனுபவங்கள் முதலான பலவற்றைச் சுவையாக நினைவுகூர்ந்து வெள்ளி விழாவுக்குச் சிறப்புச் சேர்த்தார். அப்போதுதான் விமான நிலையத்திலிருந்து நேரடியாக மேடைக்கு வந்து பெருத்த ஆரவாரத்தை ஏற்படுத்திய இந்திய ஆட்சிப் பணியாளர் சகாயம், தெளிதமிழில் தூய்மையான வாழ்வு பற்றிப் பேசி மனதைக் கொள்ளை கொண்டார்.
ஐங்கரன் குழுவினர் நடத்திய மெல்லிசையில், 'சின்னக்குயில்' சித்ரா அழகாகப் பாடினார். அவரோடு உள்ளூர்க் கலைஞர் அனிதா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பாடினர். இடையிடையே மதுரை முத்து தோன்றிப் பேசினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருதை, அட்சயா அறக்கட்டளை கிருஷ்ணனுக்கு நல்லகண்ணு வழங்கினார். செனட்டர், ஆளுநர் அலுவலகத்தினர், மாநகராட்சித் தலைவர், மாகாண ஆட்சித் துணைச் செயலர் எனப் பலரும் வந்திருந்து வாழ்த்துரையாற்றினர். இணையரங்குகளில், தொடர் மருத்துவக் கல்வி முகாம், முன்னாள் பல்கலைக்கழக மாணவர் சந்திப்பு, நாட்டாரியல் கருத்தரங்கம், தொழில் முனைவோர் சந்திப்பு, இளையோர் சந்திப்பு, திருமணத் தகவல் தொடர்பு சந்திப்பு எனப் பலவும் இடம் பெற்றிருந்தன. பேரவை ஆண்டு விழாவுக்கு மறுநாள், வாசிங்டன் வட்டார இலக்கிய ஆய்வுக்கூட்டத்தின் சிறப்பு இலக்கியக் கூட்டம் மலர்செல்வன் ஒருங்கிணைப்பில் நடந்தது. அதில் சொல்லின் செல்வி உமையாள் முத்து, மறைமலை இலக்குவனார், எஸ்.ராமகிருஷ்ணன், தமிழச்சி தங்கபாண்டியன், இ.ஆ.ப. சகாயம், அரிமா மார்ட்டின், கவனகர் கலை.செழியன், டி.கே.எஸ். கலைவாணன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். அடுத்த ஆண்டு பேரவை ஆண்டு விழா கனடாவில் உள்ள டொரண்டோவில் நடக்க உள்ளது.
பதிவர் பழமைபேசி |
மேலும் படங்களுக்கு |
|
More
மிருத்திகா செந்தில்: கிடார் சாதனை
|
|
|
|
|
|
|
|