Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
சிறுகதை
பிராயச்சித்தம்
பெண்குலத்தின் வெற்றியடி
- நித்யா பாலாஜி|ஏப்ரல் 2012|
Share:
சரசுவின் திருமண அழைப்பிதழை மின்னஞ்சலில் பார்த்த மீராவுக்கு, கண்டிப்பாய் இந்தமுறை இந்தியா சென்று வந்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியபோதே, மறந்திருந்த சில சந்தோஷ தருணங்கள் கண்முன்னே விரிந்தன. இரவு உணவுக்குப் பின்னான அம்மா, அப்பாவுடன் அரட்டை, சாப்பிட்ட பின்பும் கைகளில் மணக்கும் அம்மாவின் சமையல், கையில் வற்றல்குழம்பு சாதத்தை உருட்டித் தரும் பாட்டி, பக்கத்துக்கு வீட்டு மாமியின் கலர் கோலம் என நினைவுகளின் சந்தோஷத்தில், மெல்லிய புன்னகையுடன் அமர்த்து இருந்தவளை, தருணின் கேள்வி நினைவுலகுக்கு மீட்டு வந்தது. "அவ்வளவு மகிழ்ச்சியான செய்தியா மீரா?" புன்னகையுடன் அவன் பக்கம் திரும்பியவள் "சரசுவுக்குக் கல்யாணம். நாம் இந்தியா போகப் போறோம்" குரலில் அதிக உற்சாகம்.

"ஹே, என்ன விளையாடறயா? இப்போ ஆபிஸில் இருக்கற சூழ்நிலையில் என்னால ஒருநாள் கூட லீவ் எடுக்க முடியாது. நீ மட்டும் போயிட்டு வரியா?" கேள்வியாய் நோக்கியவனிடம் "ஹ்ம்ம். சரி.... எனக்குக் கண்டிப்பா இந்தியா போகணும். அப்பா, அம்மாவைப் பார்த்தும் வருஷம் ஆச்சு, சரசுவும் நான் போனா ரொம்பவே சந்தோஷப்படுவாள்."

"ஓகே, அப்போ உனக்கு இப்பவே டிக்கெட் புக் பண்ணிடறேன். சந்தோஷம் தானே?" அவன் முடிக்கும் முன்பு, அவன் கைகளை பற்றி, தன்னுடைய நன்றியை வெளிப்படுத்தியவளை, மென்மையாய் அணைத்துக் கொண்டான்.

விமானத்தில் ஏறி அமர்ந்தவள் மனதைச் சரசுவே ஆக்கிரமித்து இருந்தாள். பாவாடை சட்டையில் தன்னையே அக்கா, அக்கா என்று சுற்றிவந்த சரசுவுக்குத் திருமணம்! பத்து வருடங்கள் முன்பு மீராவும், அவள் தோழிகளும் சேர்ந்து எழுத்தறிவு, ஆரோக்கியம், சுற்றுப்புற தூய்மை ஆகியவற்றைக் கற்பிக்க, அவர்கள் கல்லூரி தத்து எடுத்து இருந்த மிராளூர் கிராமத்தில் ஒரு மாதம் முகாமிட்டு இருந்தனர். மிராளூரின் மகிழம்பூ மணமும், வேப்பமரக் காற்றும் நேற்றுதான் அனுபவித்தது போலத் தோன்றியது. ஓ! நினைக்க நினைக்கத் தெவிட்டாத நினைவுகள்! எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், என்றும் நினைவில் நிற்கும் அந்த முகாம்! அப்போது அறிமுகம் ஆனவள்தான் சரசு.

படிப்பில் ஆர்வம் கொண்ட சரசு, வீட்டின் பொருளாதார சூழ்நிலை காரணமாய் பத்தாம் வகுப்போடு தன் படிப்பு முடிந்து விடுமோ என்று கலங்கியபோது, மீராதான் ஆறுதல் கூறி, பள்ளிப் படிப்பு முடியும்வரை ஆகும் செலவை ஏற்றுக் கொண்டாள். கல்லூரியில் கணினி சார்ந்த படிப்புப் படிக்க சரசு விரும்பிய போது மீரா, வங்கியில் தலைமைப் பொறுப்பில் இருந்த சித்தப்பா மூலம் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்தாள். அதனாலேயே சரசுவிற்கு மீராமேல் ஒரு தனிப்பட்ட அன்பும் மரியாதையும். நல்ல சம்பளத்தில் தேடி வந்த வேலையை விடுத்து, தன்னுடைய கிராமத்தில் சொந்தமாய்க் கணினிப் பயிலகம் வைத்து அங்குள்ள ஏழை மாணவ, மாணவிகளுக்கு இலவசமாய்க் கணினி கற்றுக் கொடுப்பதுடன் தன்னுடைய வருவாய்க்கு தான் பயின்ற கல்லூரி மூலம் ப்ராஜெக்ட் எடுத்து செய்து வந்தாள். மீராவிற்கு, சரசுவைப் பற்றி எப்பொழுது நினைத்தாலும் மனதை சந்தோஷம் ஆக்கிரமிக்கும்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வரும் மகளுக்காக அம்மா அன்று மதிய விருந்தை அமர்களப்படுத்தி இருந்தாள். தனக்காக உடல்நிலை சரியில்லாத அம்மா எடுத்துக் கொண்ட சிரத்தை மீராவிற்கு கண்ணீரை வரவழைத்தது. "எனக்கு ஒரு வத்தக் குழம்பும், சுட்ட அப்பளமும் இருந்தாலே போதுமே. ஏன் இவ்ளோ சிரமபடணும்?" அம்மா பதில் சொல்லும் முன், அப்பா சொன்னார் "அவளுக்கு ஒன்றும் பெரிதாய் சிரமம் இல்லைமா. லக்ஷ்மிதான் உதவிக்கு இருக்காளே" மீரா தன்னுடைய தாயை கேள்வியாய் நோக்க, "லக்ஷ்மி, அக்கா உன்னைப் பார்கணுமாம்" அம்மாவின் குரலுக்கு சமையலறையில் இருந்து வந்த பெண்ணைக் கண்டவுடன் சற்றே அதிர்ந்தாள் மீரா.

லக்ஷ்மி, சரசுவின் சித்தப்பா மகள். சரசுவுக்குப் படிப்பில் இருந்த ஆர்வம், லக்ஷ்மிக்குக் கிடையாது. அவள் தந்தைக்கும் அவள் படிப்பதைக் காட்டிலும், கார்மென்ட் கம்பெனிக்குச் சென்று சம்பாதித்துக் கொடுத்தால், அவர் பெற்றுப் போட்டிருந்த மற்றப் பிள்ளைகளின் கால் வயிறோ, அரை வயிறோ நிறையும் என்ற எண்ணம். மீரா, சரசுவுடன் சேர்த்து லக்ஷ்மியையும் படிக்க வைக்க எவ்வளவோ போராடியும், லக்ஷ்மி படிக்கத் தயாராக இல்லை. கார்மென்ட் கம்பெனியில் வாராவாரம் கிடைக்கப் போகும் சம்பளத்தைக் காட்டிலும், படிப்பு முக்கியமாய்ப் படவில்லை.

வேலைக்கு போனவள், காதலில் விழுந்தாள். வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் முடித்து போனவள் பற்றி ஒரு தகவலும் இல்லை என்று சரசு பலநாள் வருத்தப்பட்டது உண்டு. மீராவுக்கு லக்ஷ்மி பற்றிய நினைவுகள் மறந்த நிலையில், இதோ அவள் எதிரே வந்து நிற்கிறாள், கணவனை இழந்து!

"அக்கா, நல்லா இருக்கீங்களா?" கேட்ட லக்ஷ்மிக்கு "ஹ்ம்ம்.." ஒற்றை ஒலியில் பதில் சொன்ன மீரா தன் தாயிடம் திரும்பினாள் "ஏன் அம்மா, லக்ஷ்மி பற்றி என்னிடம் நீங்கள் சொல்லவே இல்லை?" அதற்கு லக்ஷ்மி பதில் சொன்னாள் "அம்மாவிடம் கோபபடாதீர்கள் அக்கா. நான்தான் உங்களுக்கும், சரசுவுக்கும் தெரிவிக்க வேண்டாம் என்று சொன்னேன். என் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டது தெரிந்தால், சரசுவால் திருமண நேரத்தில் சந்தோஷமாய் இருக்க முடியாது."

அம்மா தொடர்ந்தாள் “பாவம்டி மீரா லக்ஷ்மி... நல்லவனு நினைத்து அவன்கூடப் போய் படாதபாடு பட்டு இருக்கா. குடிகாரப் பய, குடிச்சிட்டு நடுரோட்டில் நடந்து போய் இருக்கான், லாரிக்காரன் அடிச்சிட்டு போய்ட்டான். இவ வீட்டு வேலை பார்த்த வீடுகளில் எல்லாம் இவ வெற்று நெற்றியோட காலையிலேயே போய் நின்னா ஒண்ணும் விளங்க மாட்டேங்குது அப்படின்னு சொல்லி இனி வரவேணாம் என்று விட்டார்களாம். சே, என்ன மனிதர்களோ!" பெருமூச்சு ஒன்றை வெளியேற்றிய அம்மா தொடர்ந்தார் "பழைய கார்மென்ட் கம்பெனியிலும் வேலை காலி இல்லன்னு சொல்லி இருக்கானுங்க. இவ தனியா இருக்கறத தெரிஞ்சுகிட்ட சில ரௌடி பசங்க வேற வம்பு பண்ணி இருக்காங்க. பயந்து போய் வாழ வழி இல்லைன்னு விஷம் குடிச்ச இவளை பக்கத்துக்கு வீட்டுகாரங்க காப்பாத்தி, ஊருக்குப் போய் பொழச்சுக்கோ அப்படின்னு அனுப்பி இருக்காங்க. பெத்தவங்ககிட்ட போகப் பயந்துகிட்டு நம்ம வீட்டு வாசலில் வந்து நின்னா. முதலில் எனக்கு அடையாளம் தெரியலை. அடையாளம் புரிஞ்சப்போ கலர் கலராய் ரிப்பன், வளையல் எல்லாம் போட்டுக்கிட்டு துடுக்கா வளைய வரும் லக்ஷ்மியான்னு ஆகிடுச்சு."
வருத்தத்துடன் அம்மா சொல்லி முடிக்க, முதலில் பரிதாபமாய் இருந்தாலும், லக்ஷ்மி மேல் கோபம் வந்தது மீராவிற்கு. படி, படி என்று அடித்துக்கொண்ட போது, அதை காதிலேயே போட்டுக் கொள்ளவில்லையே. படிப்பு ஒரு பெண்ணுக்கு எந்த அளவுக்குப் பொருளாதாரம் மற்று சமூகப் பாதுகாப்பை அளிக்கும் என்பதை இந்தப் பெண் அன்று புரிந்து கொள்ளவே இல்லையே! மீரா மேற்கொண்டு பேசும் முன், லக்ஷ்மியே பேசினாள் "அக்கா, நீங்க அன்னைக்கு படிக்க சொன்னப்ப அது இந்த மண்டையில் ஏறவே இல்லை. இவ்வளவு அடிபட்ட பின்புதான் எனக்கு நீங்க சொன்னதன் அர்த்தம் புரியுது!" கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.

இது கோபப்படும் நேரம் இல்லை என்பது மீராவுக்குப் புரிந்தது. இவள் வாழ ஏதேனும் வழி செய்தே ஆக வேண்டும் என்ற உறுதி மனதில் வந்தது.

மறுநாள், லக்ஷ்மியுடன் சென்று வங்கியில் சித்தப்பாவைச் சந்தித்து, லக்ஷ்மி சுயதொழில் செய்ய வங்கிக் கடன் பெற உதவுமாறு வேண்டி வந்தாள். அதன்பின், மீராவே ஒரு சிறிய இடத்தை வாடகைக்குப் பிடித்து, இரண்டு தையல் இயந்திரங்கள் வாங்கிப் போட்டு, ஒரு பெண்ணையும் லக்ஷ்மியின் உதவிக்கு அமர்த்தினாள். வங்கியில் கடனுக்கு விண்ணப்பித்து இருப்பதை லக்ஷ்மி சுட்டிக்காட்ட, அதைக் கடையை விரிவுபடுத்த உபயோகித்துக் கொள்ளுமாறு மீரா அறிவுரை சொன்னாள்.

லக்ஷ்மி விஷயமாய் அலைந்ததில், சரசுவிடம் அமெரிக்காவில் இருந்து வந்த பிறகு தொடர்பு கொள்ளவே இல்லை என்பதை உணர்ந்த மீரா, சரசுவைக் காண மிராளுருக்கு அன்றே செல்வது என்று முடிவு செய்தாள். மீரா சென்ற நேரம், மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து கொண்டிருந்தாள் சரசு. பொறுமையாய், மாணவர்களுக்கு நன்கு புரியும்படி விளக்கிக் கொண்டிருந்த சரசுவை கண்டவளுக்கு, தான் என்றோ விதைத்த சரசு என்ற நல்விதை இன்று விருட்சமாய் நின்று பயன் தருவது எண்ணி மனதுள் மகிழ்ச்சி பெருக்கெடுத்தது.

வகுப்பை முடித்துவிட்டு வந்த சரசு, லக்ஷ்மி, மீரா வீட்டில் இருப்பது அறிந்து, அவளை உடனே பார்க்க வேண்டும் என்று பரபரத்தாள். லக்ஷ்மியின் தற்கொலை முயற்சியைப் பற்றி மீரா வருத்தத்துடன் சொல்லக் கேட்டவள், ஒரு நிமிடம் அதிர்ந்தாலும், சமாளித்து, "லக்ஷ்மி போன்ற பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நாம் ஏதேனும் செய்ய வேண்டும் அக்கா" என்று உறுதியான குரலில் சொல்ல, மீராவின் மனதில் சில திட்டங்கள் விரியத் தொடங்கின. இருவரும் அது குறித்து நெடுநேரம் பேசினர். மீராவுடன் வந்த சரசுவைக் கண்ட லக்ஷ்மி திகைத்தாள். "ஏன் லக்ஷ்மி, இப்படி பண்ணின? உனக்கு நாங்க எல்லாம் எப்போவுமே வேண்டாமா?" உடைந்த குரலில் சரசு கேட்க, அதற்குமேல் தன்னை கட்டுப்படுத்த தெரியாத லக்ஷ்மி பாய்ந்து சென்று சரசுவைக் கட்டிப்பிடித்து கண்ணீர் வடித்தாள்.

லக்ஷ்மியை சமாதானப்படுத்தி, மனதுக்கு ஆறுதலாய் இருக்கும் என்று சொல்லித் தன்னுடன் அழைத்துச் சென்றாள் சரசு. இனி சரசு, லக்ஷ்மியை சரியாய் வழிநடத்திச் செல்வாள் என்ற எண்ணமே, நிம்மதி பெருமூச்சுப் ஒன்றை மீராவிடம் இருந்து வெளியேற்றியது!

மீராவிடம் இருந்து அழைப்பு வர, எடுத்த தருண் “என்ன மீரா, என்னை சுத்தமா மறந்துவிட்டாய் போல? ஒரு வாரமாய் உன்னைத் தொடர்பு கொள்ளவே முடியவில்லை. நீயும் அழைக்கவில்லை. வீட்டிற்குப் பண்ணினால், நீ ஏதோ கிராமத்திற்கும், வங்கிக்கும் அலைவதாய் மாமா சொன்னார்கள்" அவன் பேசிக்கொண்டே செல்ல, மீரா, லக்ஷ்மி பற்றியும் அவள்போலவே பாதிப்புக்கு உள்ளான பெண்களுக்குத் தானும், சரசுவும் சேர்ந்து அடிப்படைக் கணினிப் பாடம், வங்கிக் கடன் பெற்று சுயதொழில் செய்ய வழிகாட்டுதல், ஷேர் மார்கெட் பற்றிய அறிமுக வகுப்புகள், பணம் சேமிக்கும் வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வு போன்றவற்றை கற்பிக்க முடிவு செய்துள்ளதைத் தருணிடம் கூறினாள்.

"அப்படி என்றால், நீ எப்பொழுது இங்கு திரும்பி வருவாய்?" அவனின் குரலில் கேள்வி தொக்கி நிற்க "தருண், மன்னித்து விடுங்கள். உங்களிடம் கலந்து பேசாமல், நானே தன்னிச்சையாய் முடிவு எடுத்துவிட்டேன். இனி ஒருபோதும் அமெரிக்கா திரும்ப போவதில்லை. இங்கு நம் கிராமங்களில் பெண்கள் பலர், சாதாரண அடிப்படைக் கல்வி கூட இல்லாமல், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வழி தெரியாமல், தங்கள் வாழ்கையையே முடித்துக் கொள்ளும் அவலத்தைப் பார்க்கும்போது, மனம் பதறுகிறது. நம்மைப் போன்ற படித்தவர்கள், நம் சகமனிதர்களைப் பற்றி கவலைபடாமல், வெளிநாட்டில் நன்றாகச் சம்பாதித்து, வசதியாய் வாழ்கிறோம். சரசு போன்ற ஒரு சிலரே தன்னலமின்றி தொண்டு செய்கிறார்கள். எனக்கேகூட சரசு சொல்லாவிட்டால் இவையெல்லாம் செய்ய வேண்டும் என்று தோன்றியே இருக்காது! கல்லூரிக் காலங்களில் நாங்கள் கல்வி அறிவு பற்றிய முகாம் நடத்திய கிராமங்களில் கூட பெரிதாய் முன்னேற்றம் இல்லை. சரசுவின் வருங்காலக் கணவர் ஒரு கல்லூரி விரிவுரையாளர், அவரும் எங்கள் திட்டத்தில் பங்கேற்கிறார்," மீரா சொல்லி முடிக்க, தருண் பதில் ஏதும் சொல்லாமல் அழைப்பைத் துண்டித்தது மீராவிற்கு வருத்தத்தைத் தந்தது.

சரசுவின் திருமண வேலையில் இருந்த மீராவுக்கு, தருண் கொஞ்ச நாளாய்த் தன்னை அழைக்கவே இல்லை என்பது உறுத்தியது. தானே அழைத்தால் என்ன என்று தோன்ற, போனை கையில் எடுக்கும் முன்பு அதுவே அழைத்தது. எடுத்தவள் அது தருணின் அழைப்பு என்று உணர்ந்தவளாய் "தருண், உங்களுக்கு என்மேல கோபமா?" தழுதழுத்த குரலில் கேட்க, அது அவனை ஏதோ செய்தது.

"ரிலாக்ஸ் டார்லிங்! நீ உன் இஷ்டத்துக்கு இங்க வரலை என்று சொல்லிட்ட. யோசித்து பார்த்தால், நான்மட்டும் இங்க இருந்து என்ன பண்ணறது. அதான், நானும் இந்தியாவிலேயே வேற வேலைக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். எல்லாத்தையும் முடிச்சிட்டு உனக்கு ப்ளெசன்ட் சர்ப்ரைஸ் தரலாம் என்றுதான் உனக்கு போன் கூட பண்ணலை. ஆனா இவ்ளோ வருஷம் இங்க வாழ்ந்தாச்சு இல்லையா, உடனே எல்லாத்தையும் அப்படி அப்படியே விட்டுட்டு ஓடிவர முடியலை. எப்படியும் சில மாசத்துல நானும் அங்கேயே வந்துவிடுவேன். இப்போதைக்கு ஒரு பத்து நாள் லீவில் வரலாம் என்று இருக்கேன். நானும் உனக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய போறேன். நம் நண்பர்கள் சிலரும் நமக்கு உதவுவார்கள். அப்புறம், லக்ஷ்மிக்கு தொழில் அமைத்துக் கொடுத்துவிட்டோமே என்று இப்படியே தனியே விட்டுவிடாதீர்கள், அவளிடம் மறுமணம் பற்றிப் பேசுங்கள்..." தருண் பேசிக்கொண்டே இருக்க, தன் சமூகப் பணிக்கு உறுதுணையாய் நிற்கும் காதல் கணவன் சொல்வதை கண்கள் இமைக்கவும் மறந்து கேட்டுக் கொண்டிருந்தாள் மீரா.

கணவனை இழந்த பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்று மிராளூரிலும் அதைச்சுற்றி உள்ள மற்றைய கிராமப் பகுதிகளிலும் உள்ள பெண்களின் பட்டியலை லக்ஷ்மி தயார் செய்துதர, அவர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்துத் தங்கள் திட்டம்பற்றி விளக்கினர் சரசுவும், மீராவும். சிலர் தயங்கினாலும் பலர் ஆர்வத்துடன், வாழ்க்கையில் முன்னேறத் துடிப்பதைக் கண்ட மீராவுக்கு, இன்னும் தங்கள் திட்டங்களை விரிவுபடுத்தி மேலும் பெண்கள் பயனடையுமாறு செய்ய வேண்டும் என்ற எண்ணம் துளிர்த்தது.

நாட்களை வீணாக்காமல், தங்கள் திட்டத்தின் முதல் பகுதியாய் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான வகுப்பை தொடங்கிய சரசுவின் பயிலகத்துக்குள் நுழைந்த மீராவின் காதுகளில், சரசு தன்னுடைய கணீர் குரலில் சொல்லி கொண்டிருந்தது கேட்டது. "அருந்தமிழ் போற்று, பிறமொழி பழகு, கணிப்பொறி கல்." என்றோ தான் முன்னர் உருவாக்கிய புதிய ஆத்திசூடியை, மறக்காமல் பிறருக்கும் சொல்லும் சரசுவைப் பெருமை பொங்கப் பார்த்தாள் மீரா! பயிலகத்தின் மற்றொரு பகுதியில், லக்ஷ்மி பெண்கள் சிலருக்கு தையல் வகுப்பு எடுப்பது தெரிந்தது. மனதுள், முண்டாசுக் கவிஞனின் கம்பீரக்குரல் ஒலித்தது.

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வார்

மீராவின் நெஞ்சை இனந்தெரியாத மகிழ்வு நிறைத்தது!

நித்யா பாலாஜி,
நியூ ஜெர்சி
More

பிராயச்சித்தம்
Share: 




© Copyright 2020 Tamilonline