|
|
|
|
குழந்தைகளே, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? இதோ, இந்தக் கதையக் கேளுங்க...
ஒரு ஊரில் பணக்கார வியாபாரி ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். ரொம்பத் திமிர் கொண்டவன். பணக்காரர்களோடு மட்டுமே பழகுவான். அவர்களைத் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பான். ஆனால் ஏழைகளைக் கண்டாலே பிடிக்காது. அவர்கள் தன் வீட்டுக்குள் வரக்கூடாது என்பதற்காகப் பெரிய இரும்பு வேலி அமைத்து, அதற்குக் காவலன் ஒருவனையும் நியமித்திருந்தான்.
ஒருநாள் காவலன் ஏதோ வேலையாக வெளியே போயிருந்தான். அப்போது தலையில் விறகுக் கட்டைச் சுமந்துகொண்டு ஒரு விறகு வியாபாரி அந்தத் தெரு வழியாக வந்தான். பணக்காரனின் வீட்டைப் பார்த்தவன், அங்கே நிச்சயம் வியாபாரம் நடக்கும் என எண்ணி உள்ளே நுழைந்தான். "ஐயா... ஐயா!" என்று குரல் கொடுத்தான்.
வீட்டினுள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பணக்காரன் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். விறகுக் கட்டோடு ஏழை ஒருவன் நிற்பதைப் பார்த்ததும் அவனுக்கு ஆத்திரம் வந்தது. கொல்லைப் புறத்துக்குப் போய் அங்கே கட்டியிருந்த நாயை அவிழ்த்து விட்டான். அது ஓடிவந்து விறகு விற்பவன்மீது பாய்ந்தது. "காப்பாத்துங்க... என்னைக் காப்பாத்துங்க!" என்று அலறியவாறே விறகுக்கட்டைப் போட்டுவிட்டு வெளியே ஓடினான் அவன். அதைப் பார்த்துச் சந்தோஷமாக மீசையை முறுக்கிக் கொண்டான் பணக்காரன்.
சில வாரங்கள் கடந்தன. ஒருநாள் அதிகாலை. பக்கத்து ஊர்ச் சந்தையில் வியாபாரம் செய்வதற்காக தன் குதிரை வண்டியில் புறப்பட்டுப் போனான் வியாபாரி. அன்று அவனுக்கு நல்ல வியாபாரம். அவன் கொண்டு வந்திருந்த சரக்குகள் அனைத்தும் விற்றுப் போயின. நல்ல லாபம் கிடைத்த மகிழ்ச்சியோடு பணம் அனைத்தையும் எடுத்து மூட்டையாகக் கட்டிக்கொண்டு தனது ஊருக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தான் அவன்.
இரவு வேளையில் அடர்ந்த காட்டு வழியில் குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டிருந்தான் வண்டியோட்டி. அப்போது திடீரென ஓவென்ற கூச்சலோடு மரத்தின் மேலிருந்து கீழே குதித்தனர் சில கொள்ளையர்கள். வண்டியோட்டியை அடித்து விரட்டிவிட்டு, உள்ளே இருந்த வியாபாரியின் பணப்பையைப் பறித்துக் கொண்டதுடன் அவனையும் நையப் புடைத்தனர். குதிரை வண்டியைச் சேதப்படுத்திவிட்டு குதிரையைப் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர். |
|
குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்த பணக்கார வியாபாரி "காப்பாற்றுங்கள், யாராவது என்னைக் காப்பாற்றுங்கள்" என்று அரற்றிக் கொண்டிருந்தான். வியாபாரிக்குத் தெரிந்த சிலர் அந்த வழியாகச் சென்றனர். அவர்கள், அவனோடு அவனது வீட்டில் விருந்துண்டவர்களும் கூட. ஆனால் கொள்ளையர்கள் எங்கிருந்தாவது வந்து தங்களையும் தாக்குவார்களோ என்று பயந்து, வேகமாகப் போய்விட்டனர். நண்பர்களால் புறக்கணிக்கப்பட்ட வியாபாரி கண்ணீர் விட்டபடியே "தண்ணீர்... தண்ணீர்..." என அரற்றிக் கொண்டிருந்தான்.
அப்போது அந்த வழியாக, நாயை விட்டுத் துரத்தி அடிக்கப்பட்ட ஏழை வியாபாரி வந்தான். அவன் தலையில் ஒரு சிறிய விறகுக் கட்டு இருந்தது. "தண்ணீர்... தண்ணீர்" என்ற குரலைக் கேட்டதும் தனது சுமையைக் கீழே போட்டுவிட்டு குரல் வந்த திசையை நோக்கிச் சென்றான். பணக்கார வியாபாரி தாகத்தாலும் வலியாலும் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், அருகிலிருந்த சுனையிலிருந்து தண்ணீர் எடுத்து வந்தான். அதை வியாபாரிக்குப் புகட்டினான். அவனது காயங்களைத் துடைத்தான். மெல்ல விசிறி அவன் களைப்பையும், பயத்தையும் போக்கினான்.
சிறிது நேரத்தில் எழுந்து நின்ற பணக்கார வியாபாரி, "அப்பா... நீ மட்டும் சமயத்துக்கு வந்து எனக்கு உதவியிருக்காவிட்டால் நான் இறந்தே போயிருப்பேன். நான் அன்று உன்னை என் நாயை விட்டுத் துரத்தியவன் என்று தெரிந்தும்கூட என் உயிரைக் காத்த உனக்கு மிக்க நன்றி. நீ மிகவும் பெருந்தன்மையானவன். உண்மையில் நீதான் பெரிய பணக்காரன்" என்றான் கண்ணீருடன்.
அதற்கு அந்த ஏழை வியாபாரி, "ஐயா, இதில் நன்றி கூற என்ன இருக்கிறது? ஆபத்தில் உள்ளவர்களுக்கு உதவுவது ஒருவரது கடமைதானே! இதில் ஏழை என்ன, பணக்காரன் என்ன, எல்லோருக்கும் உயிர் என்பது ஒன்றுதானே! உங்களுக்குச் செல்வச் செழிப்பில் உயிரின் மதிப்பு தெரியவில்லை. ஆனால் எனக்கு அப்படி அல்ல" என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றான்.
சுப்புத்தாத்தா |
|
|
|
|
|
|
|