|
|
|
|
தமிழ் நாடு அறக்கட்டளையின் 37வது வருடாந்திர மாநாடு 2012 மே 25 முதல் 28ம் தேதிவரை (மெமோரியல் வார இறுதி) ஹூஸ்டனில் நடைபெற இருக்கிறது. இதில், தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் டல்லாஸ், சான் அன்டானியோ, ஆஸ்டின் நகரத் தமிழ் அமைப்புகளும் மாநாட்டுப் பணிகளில் பங்கேற்பது சிறப்பம்சமாகும். இந்த மாநாடு எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி அறிய, செய்தி, விளம்பரப் பொறுப்பாளர் பாலா பாலச்சந்திரன் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அதில் பெறப்பட்ட தகவல்கள்:
கேள்வி: சென்ற வருட மாநாட்டிற்குப் பின் தமிழ் நாடு அறக்கட்டளையின் சாதனைகள் என்று எதைக் குறிப்பிடுவீர்கள் டாக்டர் பத்மினி ரங்கநாதன்: தமிழக கிராமப் புறங்களில் பள்ளி குழந்தைகள் படிப்பை பாதியில் நிறுத்தி விடுவதை தடுப்பதற்கான திட்டம் ஒன்றை, தமிழகத் தொண்டு நிறுவனமான 'களஞ்சியம்' அமைப்புடன் கைகோர்த்து, செயல்படுத்தியுள்ளோம். சமீபத்திய தமிழக பயணத்தின் போது, சிவகங்கை மாவட்டத்திலும் வேதாரண்யத்திலும் இந்தப் பணிகள் நன்கு நடைபெறுவதை உறுதிப்படுத்திக் கொண்டேன்.
கேள்வி: இந்தச் செயல் திட்டம் உள்ளூர் மக்களிடம் எந்த அளவு வரவேற்புப் பெற்றிருக்கிறது? பத்மினி: மதுரவாயில் தாலுகாவில் எமது திட்டம் அமலில் உள்ள ஊர்களில், 2011ல் பள்ளிப் படிப்பை நிறுத்துபவர்கள் எண்ணிக்கை 36 சதவீதமாகக் குறைந்துள்ளது 1999ம் ஆண்டு இது 70 சதவீதமாக இருந்தது.
கேள்வி: தற்போது அதிக கவனத்துடன் செயல்படுத்தப்படும் ஒன்றிரண்டு திட்டங்களை பற்றி கூற முடியுமா? பத்மினி: முன்பு கூறியது தவிர, பத்தாவது, பன்னிரண்டாவது மாணவர்களுக்கு மென்திறன் (soft skills) பயிற்சி அளிக்கும் திட்டம்; பின்னர், பள்ளி மாணவர்களுக்குக் கணினிக் கல்வித்திட்டம் ஆகியவற்றைச் சொல்லலாம். இவற்றில் பயிற்சியாளர்களுக்கு உதவித்தொகை கொடுத்து வகுப்புகள், 2 நாள் கருத்தரங்கங்களை அறக்கட்டளை நடத்துகிறது
கேள்வி: அறக்கட்டளையின் வருடாந்திர மாநாட்டின் மூலம், வெவ்வேறு திட்டங்களுக்கான நிதித் தேவையில் எத்தனை சதவீதம் பெறப்படுகிறது? பத்மினி: மாநாடு மூலம் வசூலிக்கப்படும் நிதிதான் பெரிய நிதி ஆதாரம். வேறு நிகழ்ச்சிகள் கிடையாது. ஹூஸ்டன் மாநாட்டின் மூலம் ஐம்பதாயிரம் டாலர் நிதி திரட்ட இலக்கு வைத்திருக்கிறோம்.
கேள்வி: மாநாடு நடைபெறாத ஆண்டுகளில்? பத்மினி: தனி நபர் அல்லது ஒரு குழுவாக அறக்கட்டளையின் சார்பில் திட்டங்களைக் கையிலெடுத்துச் செய்யலாம். அவர்கள் அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினர்களாக இருக்கவேண்டும். அறக்கட்டளை நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும். திட்டம் தமிழ் நாட்டின் ஊரகப் பகுதிகளில் நிறைவேறுமாறு இருக்க வேண்டும்
கேள்வி: நிதித் தட்டுப்பாடு காரணமாக ஏதேனும் திட்டம் நிறைவேற்ற முடியாமல் தடைபட்டதுண்டா? பத்மினி: எமது சென்னை அலுவலகத்திற்குப் புதிய திட்டங்கள் கேட்டு நிறைய விண்ணப்பங்கள் வருகின்றன. ஆனால் சிலவற்றை மட்டுமே நிறைவேற்ற முடிகிறது
கேள்வி: வரப்போகும் மாநாட்டின் சிறப்பம்சம் என்ன? ராஜன் ராதாகிருஷ்ணன்: தமிழ்த் திரையுலகிலும் சின்னத்திரையிலும் முத்திரை பதித்திருக்கும் சுகாசினி மணிரத்னம் 'ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்று சிறப்புரையாற்ற, SP முத்துராமன் தன் கலையுலக அனுபவங்களைப் பகிர, பேரா. ஞானசம்பந்தம், பர்வீன் சுல்தானா இவர்களின் வழக்காடு மன்றங்களிலும் கருத்து மேடைகளிலும் தமிழ் அலை வீச, உமையாள் முத்து காவியத்தாயின் இளையமகன் பற்றிப் பறைசாற்ற, பின்னணிப் பாடகர்கள் ஹரிசரண், சைந்தவி ஆகியோர் இசைக்க, ராகுல் நம்பியார் ஏன் இந்த கொலவெறி என்று போர் தொடுக்க, திகட்டாத அனுபவங்களை அளிக்க உள்ளோம். தமிழ் மண்ணின் வாசம் மாறாமல் நமது நாட்டுப்புற இசையைப் புஷ்பவனம் குப்புசாமி-அனிதா தம்பதிகள் வழங்குவார்கள்.
சாம் கண்ணப்பன்: சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஸ்டேட் டிபார்ட்மெண்டின் (Counsel India Affairs) திரு. ராஜதுரை கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். |
|
|
கேள்வி: இந்த மாநாட்டின் வெற்றியை எப்படி தீர்மானிக்க உள்ளீர்கள் டாக்டர் அப்பன்: தமிழ் நாட்டில் உள்ள ஊரகப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்கும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த மாநாட்டின் வெற்றி, இங்கு திரட்டப்படும் நிதி ஆதாரத்தை வைத்தே தீர்மானிக்கப் படும். இதுவரை நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் (Steering Committee Members) மட்டுமே 200 ஆயிரம் டாலர்கள் நிதியுதவிக்கு உறுதியளித்துள்ளார்கள். தவிர City Of Arts Alliance அமைப்பு 15,000 டாலரை பாரதி கலை மன்றம் மூலமாக நன்கொடையாகக் கொடுத்துள்ளார்கள். ராஜன் ராதாகிருஷ்ணன்: புதிய அம்சமாக TNF Idol என்ற நட்சத்திரப் போட்டியை மாநாட்டில் அறிமுகப்படுத்துகிறோம். இறுதிச் சுற்றுப் போட்டி ஹூஸ்டனில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் தலைமையில் நடைபெறும். வெற்றி பெற்றவர்களுக்கு 2012 TNF ஐடல் பட்டம் சூட்டப்படும்.
கேள்வி: கோடை விடுமுறைக்குத் தமிழகம் செல்பவர்கள் தன்னார்வத் தொண்டு செய்ய விரும்பினால் யாரைத் தொடர்பு கொள்ள வேண்டும்? சாம் கண்ணப்பன்: அறக்கட்டளையின் சென்னைப் பிரிவின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் மன்மத் தேவி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
மேலதிக தகவல்களுக்கு: www.tnfconvention.org
உரையாடல்: டாக்டர் பாலா பாலச்சந்திரன் தமிழில்: தினகர், பிளேனோ, டெக்சாஸ்
சாதனையாளர் விருது பெறும் கருமுத்து கண்ணன் கருமுத்து T. கண்ணன் அவர்கள் தமிழ்நாடு அறக்கட்டளையின் 37வது தேசிய மாநாட்டில் சாதனையாளர் விருது பெறுகிறார். அவர் தமிழ் நாட்டின் திட்டக்குழு உறுப்பினராக உள்ளார். தியாகராஜர் ஆடைக்குழுமத்தின் தலைவர். தற்சமயம் மதுரை அருள்மிகு மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் ஆலயத்தின் தக்கார் பொறுப்பு வகிக்கிறார். பிரபல கல்வி மற்றும் தொழில் அமைப்புக்களில் உயர்பதவியில் உள்ளார். இந்தூரிலுள்ள IIM கல்விக்கூடத்தின் நிர்வாகக் குழுவிலும், திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ளார். மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி மற்றும் தியாகராஜர் கலைக் கல்லூரியின் முன்னாள் தலைவர் மற்றும் தாளாளர் ஆவார். மேலும் இவர் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (CII) தென்னிந்தியக் கிளையின் தலைவர், தமிழ்நாடு உயர்கல்விக் குழு உறுப்பினர், பருத்தியாடை ஏற்றுமதிக் கழகம் (மும்பை), தென்னிந்திய மில்களின் கூட்டமைப்பு அகியவற்றின் தலைவர் ஆகிய பொறுப்புகள் வகித்துள்ளார். |
|
|
|
|
|
|
|