பாறைக்குள் பாசம் அன்பும் அருளும்
|
|
|
|
|
நாளாந்தம் பழகும் சில நண்பர்கள், உறவினர்களிடமிருந்து சிலவேளைகளில் சொல்லாமல் கொள்ளாமல் தொலைபேசி அழைப்புகள் நின்றுவிடுவதுண்டு. எங்காவது வெளிநாட்டுக்குப் பயணம் செய்வதற்காகவோ அல்லது தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் பேசும் தருணங்களாகவோ அல்லது இன்னும் ஏதாவது பூடகமான விஷயங்களாகவோ அவை அமையலாம். சில பொழுதுகளில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டு ஒன்றுமே நடவாதது போல முன்வந்து நிற்பார்கள்.
அப்படித்தான் ஒருநாள் இராசலிங்கமும் அவர் மனைவி சுலோசனாவும் திடீரென்று, நினையாப் பிரகாரமாக சிறீதரனின் வீட்டிற்கு தரிசனம் கொடுத்தார்கள். சிறீதரனின் மனைவி பவானி முகத்தை 'உம்'மென்று வைத்துக் கொண்டு அவர்களை வரவேற்றாள்.
"கனகாலமா வரேல்லைத்தானே! அதுதான் சும்மா ஒருக்கா வந்திட்டுப் போவம் எண்டு" என்று 'சும்மா'வைச் சற்று அழுத்திச் சொன்னான் இராசலிங்கம். தொடர்ந்து, "அப்பிடியெண்டில்லை. இனி ஈஸ்ரேண் சபேப்பிலையிருந்து வெஸ்டேர்ண் சபேப்பிற்கு வாறதுக்கு பத்துப் பதினைஞ்சு டொலர் பெற்றோலுமெல்லே செலவாகுது," காசைக் காரணம் காட்டினாள் சுலோசனா.
"நாங்கள் நினைச்சோம்... உங்களிலை ஆரோ ஒருத்தருக்கு வேலை பறிபோட்டுதோ எண்டு" உதட்டுக்குள் சிரித்தாள் பவானி.
அதன் பிறகு கோபம் நீக்கி சம்பிரதாயமான உரையாடல், சுகம் விசாரிப்பு, தேநீர் விருந்துபசாரம். மேற்கொண்டு நேரம் நகராத வேளையில் சுலோசனா இராசலிங்கத்தைப் பார்த்து கண்ணை வெட்டினாள். இராசலிங்கம் உதட்டுக்குள் சிரிப்பொன்றைத் தவழவிட்டார். ஏதோவொன்றை முடிச்சவிழ்க்கும் முஸ்தீபில் செருமினார்.
"உங்களுக்கொரு சேர்ப்பிறைஸ் விஷயமொண்டு சொல்லவேணும். மவுன்ற் டண்டினோங்கிலை (Mount Dandenong) நாங்கள் ஒரு புது வீடொன்று கட்டி இருக்கிறம்" சுப்பர்மார்க்கெட்டில் அரிசி சீனி வாங்கியது போலச் சொன்னார் இராசலிங்கம். "எங்களுக்கும் காத்துவாக்கில உந்த விஷயம் கசிந்தது" என்றாள் ஆச்சரியப்படாமல் பவானி.
"இஞ்சாருங்கோ! நாங்கள் காதும் காதும் வச்சமாதிரித்தானே கட்டினனாங்கள். என்ன மாதிரி இவைக்கு" சொல்லி முடிப்பதற்குள், "தண்ணிக்கு அடியிலை 'காஸ்' விட்டாலும் மேலுக்கு வரத்தானே செய்யும்" என்றாள் பவானி.
"அதில்லை. எங்களுக்கு ஒண்டைச் சொல்லிப் போட்டு செய்தால் பெரும்பாலும் சரிவாறேல்லை. அதுதான் உங்களுக்கும் சொல்லேல்லை. தயவு செய்து குறை நினைச்சுப் போடாதையுங்கோ."
"மலையிலை அந்தரத்திலை நிக்கிற மாதிரி கட்டியிருக்கிறியள் எண்டு கேள்விப்பட்டோம்" பவானி சொல்ல சுலோசனா பூரித்துப் போனாள்.
"அதிலை ஒரு சங்கதி இருக்கு பவானி. போன வருஷம் குவீன்ஸ்லண்டிலை (Queensland) நடந்த வெள்ளைப் பெருக்கிலை எங்கடை அண்ணையின்ரை வீட்டை வெள்ளம் அள்ளிக்கொண்டு போட்டுது. லட்சங்களைக் கொட்டிச் சிந்தி ஆற்றோரமா வியூ பாத்துக் கட்டின வீடு அது. அப்படியொரு அனர்த்தம் எங்களுக்கும் வரப்படாதெண்டுதான் மலையிலை கட்டியிருக்கிறம்."
"நாங்களும் ஒரு புது வீடு வாங்கியிருக்கிறம்" சிறீதரன் கொடுத்த திடீர் அதிர்ச்சியில் முகம் கறுத்து உறைந்து போனார்கள் இராசலிங்கமும் சுலோசனாவும்.
"எவ்வளவுக்கு வாங்கினியள்?" என்று பாய்ந்தாள் சுலோசனா.
"நீங்கள் எவ்வளவுக்கு கட்டினதெண்டு முதலிலை சொல்லுங்கோ" விடவில்லை பவானி.
"ஆறு."
"எங்கடை எட்டு."
"அப்பாடா!" பெருமூச்சு விட்டாள் சுலோசனா.
அடுத்த கேள்விக்கணையைத் தொடுப்பதற்கு முன் இராசலிங்கத்தைப் பார்த்து திரும்பவும் கண் சிமிட்டினாள் சுலோசனா. இங்கே ஒவ்வொரு கண் அசைவிற்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கின்றது. அது அது அவரவர்க்குத்தான் விளங்கும். "நீங்கள் எங்கை வாங்கியிருக்கிறியள்?"
"இதே இடத்திலைதான். நம்பர் 18. த குளோஸ். ஆனா அதை இப்ப நாங்கள் வாடகைக்கு விட்டிருக்கிறம். அந்தப் பெரிய வீட்டிலை நாங்கள் குந்தியிருக்க விசரா எங்களுக்கு. நல்ல கொழுத்த பிஸ்னஸ் ஆளாப் பாத்து குடுத்திட்டம். அவர் எங்கடை மோட்கேஜ்ஜைக் கட்டிக் கொண்டிருக்கிறார்."
"என்ன ஒரு சத்தத்தையும் காணேல்லை" சிறீதரன் இராசலிங்கத்தைப் பார்த்துக் கேட்டான். அந்த நேரத்தில் அவர்கள் சொன்ன முகவரியை வாகாகச் சுருட்டி மூளைக்குள் பதிய வைத்துக் கொண்டிருந்தான் இராசலிங்கம். பின்னர் அவசர அவசரமாக சிறீதரனின் வீட்டிலிருந்து விடைபெற்றுக் கொண்டார்கள். நேரே அந்த முகவரியை நோக்கிக் கார் பறந்தது. |
|
அது அழகானதொரு மான்சன் ஹவுஸ் (Mansion House). முன்னே ஆளளவு உயரத்திற்கு தண்ணீர்க்குடத்தை ஏந்தியபடி நிர்வாணக் கோலத்தில் அழகான ஒரு பெண் சிலை. சரிந்த குடத்திலிருந்து தண்ணீர் சலசலத்தோடியது. அழகான லாண்ட்ஸ்கேபிங் (landscaping). இரவில் மின்னி அழகு காட்டுவதற்காக தங்களைத் தயார் செய்து கொண்டிருக்கும் சோலர் விளக்குகள் (Solar lights). இரத்தினக்கற்கள் போல பளபளத்து நிறப்பிரிக்கை காட்டும் குறுணிக் கற்கள்.
வேகத்தைக் குறைத்துக் காரை நிறுத்துவதற்கிடையில் கதவைத் திறந்து விழுந்து காலில் அடிபட்டுக் கொண்டாள் சுலோசனா. "இஞ்சை ஐஞ்சு கராஜ் இருக்கு!" என்று கத்தியபடியே உள்ளே ஓடினாள். சுலோசனாவின் சத்தத்தைக் கேட்டு ஜன்னலிற்குள்ளால் ஒரு ரீன் ஏஜ் பெண் எட்டிப் பார்த்தாள்.
"பிள்ளையள் மூண்டு, அவையள் ரண்டு. ஐஞ்சு பேருக்கு ஐஞ்சு கராஜ்" என்று முணுமுணுத்தான் இராசலிங்கம். திரும்பவும் கார் நிற்கும் இடத்திற்கு பதகளிப்பட்டு வந்து சேர்ந்தாள் சுலோசனா. "கமராவைத் தாருங்கோ படம் எடுக்க வேணும். நீங்களும் இருக்கிறியளே....! ஒரு ஓட்டை வீட்டைக் கட்டித் தந்துபோட்டு... இருங்கோ சளுக்கப் பணிய உதிலை." கமராவை வாங்கிக் கொண்ட சுலோசனா மரம் செடி கொடி என அங்கிருந்த எல்லாவற்றையும் படம் பிடித்தாள். சுலோசனாவின் குணம் அறிந்து ஒடுங்கிப் போயிருந்த இராசலிங்கம் காரை விட்டு இறங்கவில்லை.
வீட்டிற்குள்ளிருந்து தொந்தி முதலிலும் உருவம் பின்னருமாக புஸ்புஸ் என்று இரைந்தபடி ஒரு மனிதர் வெளியே வந்தார். "Who are you? What are you doing here?"
என்ரை ஃபிரண்டின்ரை வீட்டிலை றென்றுக்கு இருந்து கொண்டு என்னை ஆரெண்டு கேட்கிறான் - தமிழில் கறுவிக் கொண்டாள் சுலோசனா.
"I am Bavani's friend. Do you know Bavani? Bavani is Sri's wife, Owner of this house!" என்றாள் சுலோசனா.
"What nonsense you are talking..." கத்தத் தொடங்கினான் அவன். பிரச்சனை உச்சத்திற்குப் போவது கண்ட இராசலிங்கம் காரை விட்டு இறங்கினான். "Sorry... Extremely sorry" என்று அந்த மனிதனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். சுலோசனாவை இழுத்துக் கொண்டு காருக்குள் ஏறினான்.
"சுலோ உனக்கொண்டு புரிய வேணும். உம்முடைய ஃபிரண்டின்ரை வீடெண்டாலும், ஆர் வீட்டிலை றென்றுக்கு இருக்கினமோ அவைதான் வீட்டுக்கு பொறுப்பு. சிறீ நினைச்சாக்கூடி தன்ரை வீட்டை உடனடியாக வந்து பார்க்க முடியாது. இதுதான் அவுஸ்திரேலியாச் சட்டம். வீட்டைப் பாக்கிறதெண்டா, 24 மணித்தியால நேர அவகாசம் அவைக்குக் குடுக்க வேணும்."
அவர்கள் அந்த இடத்தை விட்டு அவசரமாக வெளியேறினார்கள். ஐந்து கிலோ மீட்டர்கள் தூரம் ஓடியிருக்கமாட்டார்கள், ஒரு பொலிஸ் கார் அவர்களைப் பின் தொடர்ந்தது.
"பின்னாலை ஒரு பொலிஸ்காரன் எங்களைத் தொடர்ந்து வாறான்" என்றாள் சுலோசனா.
"நான் ஐம்பது ஓடவேண்டிய இடத்திலை ஐம்பதிலை ஓடுறன், அறுபது ஓடவேண்டிய இடத்திலை அறுபதிலை போறன். பிறகேன் உவனுக்குப் பயப்பிட வேணும்?"
பொலிஸ்காரன் சமிஞ்சை விளக்கைப் போடுவதும் பின்னர் சைரன் அடிப்பதுமாக அவர்களைக் கலைத்தான். இராசலிங்கம் எதுவுமே நடவாததுபோல தொடர்ந்தும் நிதானமாக காரைச் செலுத்திக் கொண்டிருந்தான். மேலும் இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த விளையாட்டுத் தொடர்ந்தது.
பொறுமையிழந்த பொலிஸ்காரன் வேகத்தை அதிகரித்து ஒரு வெட்டு வெட்டித் தனது காரை அவர்களின் கார் முன்பாக நிறுத்தினான். அதற்குள் இன்னுமொரு பொலிஸ்காரன் ஒளிந்து இருந்தான். இராசலிங்கம் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டுக் காரை நிறுத்தினான். இராசலிங்கத்தை காரை விட்டு இறங்க வேண்டாமென்று சுலோசனா கண்டிஷன் போட்டாள். இராசலிங்கம் லைசென்சை எடுத்து பொலிஸ்காரனிடம் நீட்டினான். அவன் அதை வாங்கி அதிலுள்ள படத்தையும் இராசலிங்கத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தான்.
"நீங்கள் சற்று நேரத்திற்கு முன்னர் ஒரு வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளீர்கள். அங்கு படம் எடுத்துள்ளீர்கள். உங்களைக் களவெடுக்கும் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகப் படுகின்றோம்" என்றான் பொலிஸ்காரன்.
"அது எங்களது நண்பனின் வீடு. வேண்டுமென்றால் அவர்களைக் கேட்டுப் பாருங்கள்" - இராசலிங்கம்.
"அப்படியில்லை... அது அங்கு குடியிருப்பவர்களின் சொந்த வீடு" - பொலிஸ்காரன்.
"இந்தாருங்கள் எனது நண்பனின் ரெலிபோன் நம்பர்" பொலிஸ்காரனிடம் ரெலிபோன் நம்பரைக் கொடுத்தான் இராசலிங்கம்.
பொலிஸ்காரன் தனது மொபைல்போனை எடுத்தான். "ஸ்பீக்கரில் போடுகின்றேன். அமைதியாகக் கேளுங்கள்" என்று சொல்லிக் கொண்டே சிறீதரனுடன் தொடர்பு கொண்டான். சிறீதரன் அது தனது வீடில்லை என்று சொல்லத் தொடங்கியதும் சுலோசனா "பொய் சொல்லுகின்றார்கள்... பொய்... நம்பாதீர்கள்" என்று கத்தத் தொடங்கினாள். பொலிஸ்காரன் தனது ரெலிபோனை இராசலிங்கத்திடம் கொடுத்து சிறீதரனிடம் கதைக்கச் சொன்னான். "நாங்கள் உங்களுக்கு சும்மா பகிடிக்காகச் சொன்னனாங்கள். நீங்களும் சும்மா குழந்தைப்பிள்ளை மாதிரி நம்பி விட்டீர்கள். ஏன் இப்ப என்ன நடந்து விட்டது?" என்று வடிவேலு பாணியில் சொன்னான் சிறீதரன்.
பொலிஸ்காரன் ரெலிபோனை வைப்பதற்குள் சுலோசனா முந்திக் கொண்டாள், "அதுதானே பாத்தன். உவங்களாவது வீடு வாங்கிறதாவது! முதலிலை இருக்கிற வீட்டின்ரை ஜன்னல் கதவுகளை திறந்து மூடப் பழகவேணும். வீடு கிடக்கிற கிடை."
பொலிஸ்காரன் அவர்களிடமிருந்த கமராவை வாங்கி மெமறிக் கார்டை(memory card) எடுத்துக் கொண்டான். "நாளைக்கு சண்சைன் பொலிஸ் ஸ்ரேசனுக்கு நீங்கள் இருவரும் வந்துவிட்டுப் போங்கள்" என்றான்.
"உவன் இன்னுமொரு பதினைஞ்சு டொலருக்கு எனக்கு அழிவு வைக்கப் போறான்" என்றாள் சுலோசனா.
"சுலோ... அவன் பொலிஸ்காரன் இல்லையப்பா! என்னை, உனக்கு ஆரெண்டு அடையாளம் காட்டின தெய்வம்!!" என்றான் இராசலிங்கம்.
சுதாகர் செல்லதுரை, விக்டோரியா, ஆஸ்திரேலியா |
|
|
More
பாறைக்குள் பாசம் அன்பும் அருளும்
|
|
|
|
|
|
|