Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சாதனையாளர் | சமயம் | சிரிக்க சிரிக்க | கவிதைப் பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | குறுநாவல் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம் | பொது | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
தூய தண்ணீரின் தவிப்பு! (பாகம்-7)
- கதிரவன் எழில்மன்னன்|ஜனவரி 2012|
Share:
இதுவரை: ஷாலினியின் சக ஆராய்ச்சியாளர் ஒருவர் தன் சகோதரி பணிபுரியும் தூய தண்ணீர் தொழில்நுட்ப நிறுவனம் பெரும் ஆபத்திலிருப்பதாகச் சொல்லவே, ஷாலினி அவருக்கு சூர்யாவைப் பற்றிக் கூறுகிறாள். அவரை அறிமுகம் செய்யுமாறு அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். ஷாலினி தூய தண்ணீரின் முக்கியத்துவத்தைப் பற்றி சூர்யாவுக்கும் கிரணுக்கும் எடுத்துக் கூறி இந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறு விண்ணப்பிக்கிறாள். சூர்யாவும் கிரண், ஷாலினி இருவருடன் அக்வாமரீன் என்னும் அந்நிறுவனத்துக்குச் சென்று அங்கு சந்தித்த யாவ்னா என்ற இளம்பெண்ணை, அவளுடைய ஓட்டப் பயிற்சி, வரவேற்பறையின் கலையமைப்பு ஆகிவற்றைக் கூர்ந்து கவனித்து, கணித்து தன் திறனில் நம்பிக்கை பெறச் செய்கிறார். பிறகு யாவ்னா மூவரையும் ஆராய்ச்சிக் கூடத்துக்கு அழைத்துச் சென்று பலதரப்பட்ட உப்பகற்றல் நுட்ப சாதனங்களைப்பற்றி விவரிக்கிறாள். ஆவியாக்கல் (distillation), எதிர்ச் சவ்வூடு பரவல் (reverse osmosis) போன்ற எளிதான பழைய நுட்பங்களைப் பற்றிக் கூறிவிட்டு புதுநுட்பங்களைப் பற்றி விவரிக்க ஆரம்பிக்கையில் நிறுவனர் தாமஸ் மார்ஷ் வந்துவிடவே, அவரை யாவ்னா அறிமுகப்படுத்தவும் தாமஸின் குடும்பத்தைப் பற்றி சூர்யா யூகித்து கூறவும் தாமஸ் "என் மேலேயே உளவு வேலையா" என ஆத்திரப்படவும், அப்படி இல்லை என சூர்யா மேற்கொண்டு யூகங்களை விவரிக்க ஆரம்பிக்கவும்....

*****


சூர்யாவின் யூக சக்தியை நம்பாமல், மிக ஆத்திரமாக விளக்கம் கேட்ட தாமஸ், தன் கழுத்துச் சங்கிலியில் தொங்கிய லாக்கெட்டின் மூடி சற்றே தளர்ந்திருப்பதால் திறந்து மூடிக் கொண்டிருந்ததைக் கணப்பொழுதுக்குள்ளேயே சூர்யா கவனித்துவிட்டு அதை வைத்து மேலும் கணித்திருக்கிறார் எனபதை உணர்ந்து, தணியாத கோபத்துடன் ஆனால் வளரும் ஆர்வத்துடன் மேற்கொண்டு விளக்குமாறு தூண்டவே சூர்யா தொடர்ந்து விளக்கலானார்.

"உங்க லாக்கெட் திறந்து மூடறப்போ, அதுல மூன்று முகச்சித்திரங்கள் தெரிஞ்சுது. ஒண்ணு, உங்க வயதளவுள்ள ஒரு பெண்மணி; மீதி ரெண்டு ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும். அந்த காக்கேஷியன் இனப்பெண்மணி உங்க மனைவியா இருக்கணும்னு யூகிச்சேன். அந்த சிறுவனும் சிறுமியும் உங்க ரெண்டு பேர் ஜாடையும் இல்லை. அது மட்டுமில்லை, அவங்க உங்க இனமும் இல்லை; கிழக்காசியர்களாக இருப்பதையும் கவனிச்சு, அவங்க உங்க சொந்தக் குழந்தைகளாக இருக்காது, வளர்ப்பு மக்களாக இருக்கணும்னு கணிச்சேன்."

மற்றெல்லோரும் வெளிப்படையாக உணரும்படியாகவே கோபம் தணிந்த தாமஸ், மிக்க ஆச்சரியத்துடன் சூர்யாவின் யூகத் திறனைக் கைதட்டிப் பாராட்டினார். "ஆஹா! சில நொடிகளுக்குள்ளேயே இத்தனையையும் கவனிச்சு அவ்வளவு சரியான யூகங்களைக் கணிச்சுட்டீங்களே, பிரமாதம்! சரி, ஆனா, நான் வியட்நாம் போரில பணி புரிஞ்சேங்கறதையும் அங்கதான் என் குழந்தைகளைத் தத்து எடுத்துக்கிட்டேன்னும் எப்படி? அதைப்பத்தி சொல்லுங்க பார்க்கலாம்!"

சூர்யா விளக்கினார். "உங்க மேல்கோட்டோட மார்பின் ஒரு பக்க மடிப்பு மேல அமெரிக்கக் கொடிப் பதக்கத்தோட சேத்து, நீங்க ஒரு வியட்நாம் போர் வீரருக்கான சிறிய அறிகுறிப் பதக்கம் குத்தி வச்சிருக்கீங்க. என்னோட வேலை செஞ்ச நண்பர் ஒருத்தர் அதேபோலப் போட்டிருந்தது எனக்கு நினைவுக்கு வந்துச்சு. அது மட்டுமல்லாம, கை குலுக்கறச்சே லேசா கோட் கை மேல போகறப்போ உங்க கைல குண்டு வெடிச்சுப் பட்ட தழும்புகள் இருக்கறதையும் கவனிச்சேன். அதுனாலதான் உங்க தேசபக்தி பத்தியும் வியட்நாம் போர் பத்தியும் சொன்னேன். அது மட்டுமில்லை..."

தாமஸ் உற்சாகத்தோடு "இதுவே பிரமாதமா இருக்கே, இன்னும் வேற இருக்கா! சொல்லுங்க" என்று ஊக்குவித்ததும் சூர்யா சற்று மூச்சு வாங்கிக்கொண்டு தொடர்ந்தார்.

"உங்க லாக்கெட் ஒரு பக்கத்துல மூணு படம் இருக்கறதைப் பார்த்தேன். ஆனா மூடியோட உள்பக்கத்துல, வியட்நாம் கொடி இருக்கறதையும் கவனிச்சேன். அமெரிக்க தேசபக்தரான நீங்க பழைய எதிரியோட கொடியோட உலாத்துவானேன்--அதுவும் உங்க மார்புமேலேயே! அது உங்க குழந்தைகளோட பிறப்பு தேசத்தைக் குறிப்பதாகத்தான் இருக்கும்னு யூகிச்சேன். அதுனாலதான் குழந்தைகளை வியட்நாம்லிருந்து தத்து எடுத்ததாகவும் குறிப்பிட்டேன்." என்று கூறி முடித்தார்.

சூர்யா விளக்கத்தை முடித்ததும், யாவ்னா பலமாகக் கைதட்டி "வாவ்! பிரமாதம் சூர்யா, என்னைப்பத்திக் கணிச்சதைவிட இது இன்னும் ரொம்பவே ப்ரில்லியண்ட்டா இருக்கு!" என்று பாராட்டினாள். மார்ஷும் பலத்த கரகோஷம் செய்து சிலாகித்தார். "ஆஹா, ஆஹா, ஆஹா! உங்க அறிவுக் கூர்மையை நான் பாராட்டறேன் சூர்யா. நான் ஒரு விஞ்ஞானி, நான்தான் அறிவாளி, என்னைவிட யார் திறமையா சிந்திக்க முடியும்னு நான் அகம்பாவமா இருந்தேன். அதைத் தகர்த்துட்டீங்க. உங்க திறனுக்கு என் மனமார்ந்த வணக்கம்! இப்ப நான் சொல்றேன்: எங்க பிரச்சனையை உங்க கைகளில் ஒப்படைச்சுட்டா நிச்சயமா அதன் மூலகாரணத்தைக் கண்டுபிடிச்சு நிவர்த்திச்சிடுவீங்கங்கற பூரண நம்பிக்கை எனக்கு வந்தாச்சு! யாவ்னா, சூர்யாவுக்கு எந்தெந்த விவரங்களோ என்னென்ன வசதிகளோ, எது தேவையானாலும் பூர்த்தி செய்யறதுதான் பிரச்சனை தீரற வரைக்கும் உன் மொத்தப் பொறுப்பும். அதுக்கு இடையூறா எதுவோ யாரோ இருந்தாலும், எதாவது கூடத் தேவைப்பட்டாலும் உடனே என் செல்பேசிக்கு கூப்பிடு இல்லைன்னா டெக்ஸ்ட் செய்தி அனுப்பிடு. நான் எங்க இருந்தாலும், இருபத்து நாலு மணி நேரத்துக்கும் உடனே கவனிக்கிறேன்!"

கிரண் ஷாலினியிடம் மெல்லிய குரலில் பொறுமினான். "என்ன ஷால், இது எப்படி இருக்கு! பாத்தியா ராட்சஸன் ரொம்பவே உருகறார், கவனமா இருந்துக்கோ. தேகம் இருக்கற சைஸூக்கு மொத்தமா உருகிட்டாருன்னா, நாம எல்லாம் முழுகிட வேண்டியதுதான்." ஷாலினியும், கிரண் கூறியதைக் கேட்டு அருகிலிருந்த யாவ்னாவும் அடக்க முடியாமல் களுக் என்று சிரித்துவிடவே, தாமஸ் அவர்களை கேள்விக்குறியாகப் பார்த்தார்.
ஷாலினி சமாளித்தாள். "அது ஒண்ணுமில்ல தாமஸ். இவன் ஏதொ தன் ஐஃபோன்ல சம்பந்தமில்லாத விஷயத்தைப் பத்திப் படிச்சுட்டு ஜோக் அடிக்கறான் அவ்வளவுதான். ஏய் கிரண், இதைப் பத்தி நாம அப்புறம் பேசிக்கலாம் இப்ப இந்த விஷயம் எவ்வளவு முக்கியமானது. தாமஸ் யாவ்னாவுக்கு முக்கியமான இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துக்கிட்டு இருக்காரில்லே. கவனம் திருப்பாம சீரியஸா கேளு!" என்று கிரண் கைமீது ஒரு தட்டுத் தட்டி அடக்கினாள்.

தாமஸ் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு உறுமினார். "ஹூம்! இந்தக் காலத்து இளசுங்களே இப்படித்தான். எல்லாமே விளையாட்டா இருக்கு. சரி போகட்டும்," என்று தணிந்துவிட்டு, "யாவ்னா நான் இங்கே உள்ள நுழையறச்சே எதோ சொல்லிக்கிட்டிருந்தயே, நான் அதை இடைமறிச்சுட்டேன் போலிருக்கு. மேல சொல்லு" என்றார்.

யாவ்னா பலமாகத் தலையசைத்து மறுத்தாள். "இடைமறிக்கறதா! சே சே! அப்படியில்லை. நான் ஆரம்பிச்ச விஷயத்தை விளக்க உங்களைவிட பொருத்தமான நபர் கிடைக்காது. ஏற்கனவே தூயநீர் உற்பத்தித் துறையின் அடிப்படை நுட்பங்களான ஆவியாக்கல், பின்வடித்தல் பத்தியும், மேலும் LTTD மற்றும் சக்தியுடன் சேர்த்து உற்பத்தி எல்லாத்தையும் பத்திச் சொல்லிட்டேன். அப்புறம் சமீபகால நுட்ப முன்னேற்றங்கள் இந்தக் கூடத்தில என்ன சேகரித்து நிலைநாட்டியிருக்கோம், வேற என்ன இருக்கு, மேலும் நாம என்ன ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்கோம்னு கேட்டாங்க அதைப் பத்தித்தான் சொல்ல ஆரம்பிச்சேன். அதை நீங்கதான் சொல்லணும். ப்ளீஸ் சொல்லுங்க. பிரமாதமா ஊக்கபூர்வமா விளக்குவீங்களே, எனக்கே நீங்க சொல்லி மீண்டும் கேட்க ஆவலாயிருக்கு."

தாமஸும், பெருமிதத்தோடு மார்பு விம்மச் சிலிர்த்துக் கொண்டு "சரி எனக்கு மிக விருப்பமான விஷயத்தைப் பத்தி விவரிக்கறது தேன் மாதிரின்னா இனிக்கும். அதுக்கென்ன கூலி, தூண்டுதல் வேணுமா என்ன? தாராளமா சொல்றேன், வாங்க" என்று ஆராய்ச்சிக் கூடத்தின் இன்னொரு பக்கத்துக்கு எல்லோரையும் அழைத்துச் சென்றார். நடந்துகொண்டே புதிய நுட்பங்களைப் பற்றி விவரிக்கலானார்.

"வெகு காலமாகவே, புதினமான உப்பகற்றல் நுட்பங்கள் ஆராயப்பட்டுத்தான் வருகின்றன. அவைகளில் சில நல்ல பலன் தந்து வழிமுறைக்கும் வந்துள்ளன, வேறு சில சரிப்பட்டு வரவில்லை. ஆராய்ச்சியில் இது சகஜந்தானே? ஒரு நிறுவனம், யாவ்னா ஏற்கனவே குறிப்பிட்ட எதிர்ச் சவ்வூடு பரவல் முறையை மாற்றி முன் சவ்வூடு பரவல் (forward osmosis) நுட்பம் வகுத்துள்ளது. அதைப் பயன்படுத்திச் சில தூயநீர் நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன."

சூர்யா ஆர்வமாக வினாவினார். "முன் சவ்வூடு பரவலா! கேள்விப்பட்டதே இல்லையே!"

தாமஸ் ஆமோதித்தார். "கேள்விப்பட்டிருக்க அவ்வளவு வாய்ப்பில்லை. அது பின்சவ்வூடு முறை அளவுக்கு அன்றாடப் பயன்பாட்டுக்கு சரிப்பட்டு வராததால் அவ்வளவாக இன்னும் பெரிதளவில் வரவில்லை. வருங்காலத்தில் வருவதற்கு வாய்ப்புள்ளது."

கிரண் தன் கைக்கணினியில் குறித்துக் கொண்டு, "இன்னும் என்ன நுட்பங்கள் சொல்லுங்க, மூலதன வாய்ப்பிருக்கான்னு பாக்கணும்" என்றான்.

தாமஸ் சிரித்துக் கொண்டே, "இந்த வால் ஸ்ட்ரீட் வகையறாக்களே இப்படித்தான். எல்லாமே நிதி வழிதானா? வாழ்க்கைப் பலன் பத்தியும் கொஞ்சம் பாருங்களேன். சரி சொல்றேன்" என்று தொடர்ந்து விவரித்தார்.

"அடுத்து நான் சொல்லப் போறதுக்கு மூலதன வாய்ப்பு உடனே இருக்கான்னு தெரியலை. ஆனா வருங்காலத்துல நிச்சயம் வரும்னு நினைக்கிறேன். அமெரிக்க அரசாங்கம் ஆராய்ச்சிக்காக சில நிறுவனங்களுக்கு ஆரம்ப நிதி அளிச்சு, சூர்ய வெப்பத்தையும் ஒளியையும் வச்சு மட்டும் தூய நீர் உற்பத்தி செய்வதை அன்றாடப் பயனுக்கான வழிமுறைக்கு எப்படிக் கொண்டு வறதுங்கற முயற்சிகளை ஊக்குவிச்சிட்டிருக்காங்க. எங்க நிறுவனமும், எங்க தனிநுட்பம் மட்டுமில்லாம இந்த மாதிரி முயற்சிகளிலும் பங்கேத்துக்கிட்டிருக்கு. எங்க நுட்பத்தைப் பத்தி அப்புறம் சொல்றேன்..."

கிரண் இடைமறித்து ஆரவாரித்தான், "வாரே வாவ்! சுத்த சக்தியை வச்சே தூயநீர் உற்பத்தி செய்யறது ஒரே பந்துல ரெண்டு ஸிக்ஸர் அடிச்சுட்டா மாதிரி இருக்கே! பிரமாதந்தான்."

தாமஸ் முறுவலித்து தலைதாழ்த்திப் பாராட்டை ஏற்றுக் கொண்டார். "ஸிக்ஸர்! க்ரிக்கெட்? எனக்கு நல்லாவே தெரியும். ஆனா நான் பேஸ்பால் வழியில ரெண்டு ஹோம் ரன்னுன்னே வச்சுக்கறேன். நல்ல உவமையாயிருக்கு - என் சொற்பொழிவுகளுக்கும் நல்லாப் பயன்படும்."

ஷாலினியும் வியப்புடன் வினாவினாள். "நீங்க சொல்ற புது நுட்பங்கள் ரொம்பவே வியக்கத் தக்கதாத்தான் இருக்கு தாமஸ். தூயநீர் உற்பத்திக்குப் புது நுட்பங்கள் இந்த மாதிரி இன்னும் வேறு இருக்கா? உங்க நிறுவனத்தின் நுட்பத்தைப் பத்தியும் கேட்க ஆவலா இருக்கு."

மேற்கொண்டு தாமஸ் விவரித்த புது நுட்பங்கள் மிக மிக சுவாரஸ்யமாக இருந்தன. மேலும் தாமஸின் நிறுவனமான அக்வாமரீன் உருவாக்கிய தூய தண்ணீர் நுட்பத்தைப் பற்றி அவர் கூறியது பிரமிப்பை அளிப்பதாகவே இருந்தது.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline