|
தென்றல் பேசுகிறது... |
|
- |டிசம்பர் 2011| |
|
|
|
|
|
ஒரு மொழி பிறந்து, வளர்ந்து, புழங்குமிடத்திலிருந்து தொலைதூரத்தில் உள்ளதொரு நாட்டில் செழித்து வளர்வது அரிது. ஆங்கிலம், ஃபிரெஞ்சு, ஸ்பானிஷ் இன்ன பிற மொழிகள் அப்படிச் செழித்திருந்தால் அதற்குக் காரணம் அம்மொழி பேசியோர் வேறு நாடுகளுக்கு ஆதிக்க சக்தியாகச் சென்றதுதான். ஆனால், இன்று தமிழ் அமெரிக்காவில் மெல்ல வேர்விடத் தொடங்குவதை நாம் காண்கிறோம். பல தமிழ் அமைப்புகளும் இதற்குக் காரணமாக அமைகின்றன. ஜார்ஜியா மாநிலத்தின் கல்விக் கூடங்களில் தமிழைப் பாடமாக எடுத்துப் பயில்வதற்கான அங்கீகாரம் (accredition) கிடைத்துள்ளது. இது ஒரு மைல்கல் என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல, தென்றல் தனது பன்னிரண்டாவது ஆண்டில் காலடி எடுத்து வைப்பது, எமக்கு மட்டுமின்றி, அமெரிக்கத் தமிழர் அனைவருக்குமே ஒரு பொன்னான தருணம்தான். அத்தகைய சிறப்பான தருணத்தில், பன்னிரண்டாவது ஆண்டின் முதல் இதழில் சிறுகதைப் போட்டி முடிவுகள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத் தக்கது.
அமெரிக்காவெங்கிலும் வசிக்கும் பலர் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தென்றலுக்குப் படைப்புகளை அனுப்புகிறார்கள், தமது பகுதியில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி எழுதி அனுப்புகிறார்கள், தென்றல் இதழ்களைத் தமது பகுதியில் உள்ள கடைகளுக்குக் கொண்டு சேர்க்கிறார்கள். ஏன், சேகரித்து வைத்து இந்தியாவுக்குக் கூடக் கொண்டு போய்த் தமக்கு வேண்டியவர்களுக்குத் தருகிறார்கள். தென்றல் அவர்களுக்குப் பெருமிதம், அதில் எமக்குப் பெருமை. இத்தகைய ஆர்வலர்களும், வாசகர்களும், விளம்பரதாரர்களுமே தென்றலின் முதுகெலும்பு, இயக்குசக்தி. மிகப்பெரிய பொருளாதாரத் தொய்வு ஏற்பட்ட காலத்திலும் தென்றல் புதிய பகுதிகளை எட்டுகிற விரிவாக்க முயற்சியை நிறுத்தவே இல்லை. முன்னெப்போதுமில்லாத எண்ணிக்கையில் இன்றைய தென்றல் தமிழரைச் சென்றடைகிறது. லாப நோக்கில்லாமல் எல்லைகளை விரித்துக் கொண்டே போவதால்தான் தென்றல் அமெரிக்கத் தமிழ்க் குடும்பத்தின் அங்கமாக இன்று உணரப்படுகிறது.
தென்றலை ஆதரிக்கும் விளம்பரதாரர்களுக்கும் வாசகர்களுக்கும் பிற தன்னார்வலர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி. உங்கள் பகுதிக்குத் தென்றல் வரவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் எமக்கு எழுதுங்கள்; உங்கள் பகுதி கடைக்காரர்களை எம்மோடு தொடர்புகொள்ளச் செய்யுங்கள். நாம் ஒரு சமுதாயமாக, கைகோத்து முன்னேறுவோம்.
*****
தென்றல் சிறுகதை ஒவ்வொன்றுமே முத்திரை பதிப்பதுதான் என்றாலும் இந்தப் போட்டியில் பரிசு பெற்றவையும், பதிப்புக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளவையும் அற்புதமான படைப்புகள் என்பது எமது கணிப்பு. உலகின் பல பகுதிகளிலிருந்து போட்டியில் படைப்பாளிகள் கலந்து கொண்டதும், அமெரிக்காவுக்கு வெளியேயும் பரிசுகள் தரப்படுவதும் ஒரு புதிய ஊக்கத்தை நமக்கும் அவர்களுக்கும் தருகிறது. புத்தாக்கத்துக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு மொழியே வளர்ச்சி அடையும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால் செய்திக் கட்டுரைகளிலேயே பக்கங்களை நிரப்பிவிடும் இதழ்களே அதிகமாக இருக்கும் இந்தக் காலத்தில் ஒவ்வொரு வாசகனின் படைப்புக் கனவையும் நனவாக்கி, அவனது கற்பனைக் கேணிக்குக் கண்மாயாக இருப்பதை தென்றல் கௌரவமாகக் கருதுகிறது. "பற, பற! மேலே, மேலே, மேலே!" என்று சிறகடித்து மேலெழும்பச் சொன்ன பாட்டுக்கொரு புலவன் பாரதியின் பிறந்த நாள் வரும் இந்த மாதத்தில் இத்தகைய சேவை செய்யக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறோம்.
***** |
|
தமிழின் முக்கியப் படைப்பாளியாகக் கருதப்படுபவர் எஸ். ராமகிருஷ்ணன். அவருடனான நேர்காணலின் முதல் பகுதி இந்த இதழுக்குச் சிறப்புச் சேர்க்கிறது. இந்தியப் புராண இதிகாசங்களை மட்டுமின்றி உலகின் பாரம்பரியக் கதைகளைப் பத்து வயதுக்குட்பட்டோருக்கு விளையாட்டாகக் கொண்டு செல்லும் நோக்கத்தோடு தொடங்கிய www.TheFungle.com பற்றிய சிறப்புக் கட்டுரை, குறுக்கெழுத்துப் புதிர், மிக விரும்பி வாசிக்கப்படும் 'அன்புள்ள சிநேகிதியே' என்று எல்லா தென்றலுக்கேயுரிய அம்சங்களுடனும் இந்த 12ம் ஆண்டின் முதல் இதழ் உங்களை வந்தடைகிறது. எல்லாவற்றைப் பற்றியும் உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதுங்கள். காத்திருக்கிறோம்.
வாசகர்களுக்குக் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
டிசம்பர் 2011 |
|
|
|
|
|
|
|