தெரியுமா?: சாக்லேட் கிருஷ்ணா - 400வது ஷோ தெரியுமா?: உப்புமாவுக்கு ஒரு லட்சம் டாலர்!
|
|
|
|
எப்பவும் சிரிப்புச் சத்தம் ஒரு வீட்டுல மட்டும் எப்பப் பார்த்தாலும் கணவன்-மனைவி சிரிப்புச் சத்தம்தான் கேட்டதாம். அந்தத் தெருவே பொறாமைப்பட்டு போய் அவங்ககிட்ட கேட்டுது.
அதுக்கு புருஷன்காரன் சொன்னானாம், "எனக்குக் கோபம் வந்தா நா அவ மேல ஒரு டப்பாவை வீசுவேன். மண்டையில விழுந்துச்சுன்னா நான் சிரிப்பேன். குறி தவறிடுச்சுன்னா அவ சிரிப்பா. அதுமாதிரி அவ என்மேல ஏதாவது வீசுவா. சரியா விழுந்துச்சுன்னா அவ சிரிப்பா. குறி தவறிடுச்சுன்னா நான் சிரிப்பேன். அதுனாலதான் எப்பவும் சிரிப்புச் சத்தமாக் கேட்குது."
*****
அடுத்தது உனக்குத்தான் அவர் ஒரு பெரியவர். கல்யாண வீடுகளுக்குப் போவார். அங்க உள்ள மணமாகாத கன்னிப் பெண்களோட கன்னத்தைக் கிள்ளி, "அடுத்தது உனக்குத்தான்; அடுத்தது உனக்குத்தான்" அப்படின்னு சொல்லிக்கிட்டே இருப்பார். அவரோட இம்சையைத் தாங்கவே முடியலை. ஆனா அவர் வயசாளிங்கறதுனால யாராலையும் எதுவும் சொல்ல முடியலை. கொஞ்சநாள் போச்சு. அந்த வயசாளியோட அண்ணன் திடீர்னு காலமாயிட்டாரு. துக்கம் விசாரிக்க வந்தவங்க எல்லாம், இந்தப் பெரியவர் கன்னத்தைத் தடவி, "அடுத்தது உனக்குத்தான்; அடுத்தது உனக்குத்தான்"னு சொல்லிட்டுப் போனாங்க.
*****
நீயா? அவனா? ஒருத்தன் தெருவுல போயிட்டிருந்தான். அப்போ எதுத்த மாதிரி இன்னொருத்தன் வந்தான். வந்தவன் அவனைப் பார்த்து சந்தேகத்தோட, "டேய், போன வாரம் செத்துப் போனது நீயா இல்லை உங்க அண்ணனா?"ன்னு கேட்டான்.
இவன் அதுக்கு, "இரு. எங்க வீட்ல போய் கேட்டுட்டு வந்து சொல்றேன்"னான். இப்படியும் சிலபேரு நாட்டுல நடமாடிக்கிட்டுதான் இருக்காங்க.
*****
பையன் பேரு என்ன? ஒரு வீட்ல பையனை அப்பா திட்டிட்டு இருந்தார். அப்போன்னு பார்த்து சென்சஸ் எடுக்க வந்துட்டாங்க. 'பையன் பேரு என்னங்க?'ன்னு அந்த அதிகாரி கேட்டதும் கோபத்துல இருந்த அப்பா, 'அவன் பேரு சனியன்'னார்.
சமையல்கட்டுல இருந்து ஒரு சத்தம் வந்துச்சு, 'உங்க பேரைக் கேட்கலைங்க... நம்ம பையன் பேரைக் கேட்கிறாரு'ன்னு.
'நான்சென்ஸ்'னு திட்டிட்டுப் போயிட்டாரு அந்த சென்சஸ் அதிகாரி.
*****
காசு மிச்சம் நான் எங்க ஊர்ல ஒரு புது பஸ்ல உட்கார்ந்துகிட்டிருந்தேன். ஒரு பெரியவர் அதுல ஏறினார். பார்க்க ரொம்ப ஏழை மாதிரித் தெரிஞ்சார். "முன்னால ஒரு பஸ் நிக்குது பாருங்க... அதுல போனீங்கன்னா, ரெண்டு ரூபாதான். இதுல எட்டு ரூபா. அதனால அந்த பஸ்ல போய் ஏறிக்கங்க"ன்னேன்.
அவரு கண்டுக்கலை.
"அதுல போனீங்கன்னா ஆறு ரூபா உங்களுக்கு மிச்சமாகுமே"ன்னேன்.
நின்னு பார்த்து என்னை முறைச்சுட்டு அவர் சொன்னார், "அதெல்லாம் டிக்கெட் எடுக்கிறவன் பிரச்னையா!"
***** |
|
ரொம்ப நீளம்... அப்ளிகேஷனை நிரப்பிட்டு இருந்தான் ஒரு பையன். "அப்பா, மதர் டங்னு போட்டிருக்கு. என்ன எழுதணும்?"னு கேட்டான்.
உடனே அவரு, "ரொம்ப நீளம்னு எழுது"ன்னார். அவர் மனைவி ரொம்பப் பேசுவாங்கிற கோபம் அவருக்கு.
*****
பையத் தாங்க ஒரு மதுரைக்காரர் சென்னைக்குப் போனார். பஸ்ஸில மீதி சில்லறைக்கு "அண்ணே பையத் தாங்க"ன்னார். மதுரைக்காரர் பேசிய தமிழைப் புரியாமல் நடத்துனர் பயந்து போய்ட்டார், "என்னடா 50 பைசா சில்லறைக்கு இந்த ஆள் 500 ரூபாய் பையைக் கேட்கிறானேன்னு. மதுரைக்காரர் சொன்ன "பையத் தாங்க"ங்கறதுக்கு "மெதுவாக் குடுங்க"ன்னு அர்த்தம்.
*****
சிரிப்போ சிரிப்பு ஒரு ஊர்ல பட்டிமன்றம் பேசப் போயிருந்தேன். முன்னால பத்துப் பதினஞ்சு பொம்பளைங்க உட்கார்ந்துட்டு இருந்தாங்க. நான் பேசினதைப் பார்த்துச் சிரிச்சாங்க.
உடனே ஒரு கிழவி எந்திருச்சு, "ஐயா பேசிட்டு இருக்காக... பொம்பளைக ஏன் இப்படி வெட்கமில்லாமச் சிரிக்கீங்க?"ன்னு தடை போட்டிருச்சு.
என் பேச்சுக்குத்தான் அவங்க சிரிக்கிறாங்கன்னு சொல்லி, அந்தக் கிழவிக்குப் புரியவைக்க நான் பட்டபாடு பெரும்பாடு.
*****
யார் முட்டாள்? ஒரு வீட்டுல அக்காவுக்கும் தம்பிக்கும் சண்டை. 'போடா நீதான் முட்டாள்!', 'போடி நீதான் முட்டாள்!'னு மாறி மாறித் திட்டிக்கிட்டிருந்தாங்க.
பேப்பர் படிச்சுட்டு இருந்த அப்பா அதைக் கேட்டுட்டு, 'நான் ஒருத்தன் இங்க இருக்கிறதை மறந்துடாதீங்க'ன்னாராம்.
*****
அந்த நாற்காலி!
ஒரு கிராமத்தில் பட்டிமன்றம் போனோம். இரண்டு அணியினருக்கும் பெஞ்சு போட்டு இருந்தாங்க. நடுவரான எனக்குப் போட அந்த ஊருல யாரு வீட்டுலயும் நாற்காலி இல்ல. என்ன பண்றதுன்னு ரொம்ப யோசிச்சு, ஒரு நாற்காலியைக் கொண்டுவந்து போட்டாங்க. பார்த்ததுமே தெரிஞ்சது சுடுகாட்டுக்குப் பொணம் தூக்கிட்டுப் போற நாற்காலி அதுன்னு. எத்தனை பேரைப் பார்த்ததோன்னு பயந்து நடுங்கிட்டேன். ரெண்டு பக்கமும் கை வெச்சு உட்காரவே தோணல. விறைச்சுப் போயி உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு ஒருத்தர் ரெண்டு பத்தியை கொளுத்தி, வாழைப்பழத்துல குத்தி எடுத்துட்டு வந்து என் முன்னாடி வெச்சார். பிணக்கோலம் பொருத்தமாதான் இருக்குன்னு நெனச்சேன். நாற்காலியை மறந்துட்டு ஜோக் சொல்வேன். அடுத்த நிமிஷமே அது ஞாபகம் வந்திரும். ஆனாலும் பட்டி மன்றம் சுவையாத்தான் போச்சு.
ஒரு மணி நேரம் கழிச்சு ஒரு ஆள் ஓடி வந்து, 'அப்பத்தா செத்துப்போயிட்டா!'ன்னு என் சேரைப் புடுங்கின காட்சியைத்தான் இன்னிக்கும் மறக்கமுடியலை. விட்டுதுடா சனின்னு நின்னுட்டே தீர்ப்புச் சொல்லிட்டு, அந்த ஊரைத் திரும்பிப் பார்க்காம வந்துட்டேன்.
*****
சுப்புத் தாத்தா சொல்லாத சிங்கக் கதை! ஒரு பேச்சாளர் காட்டுவழியாப் போயிட்டிருந்தார். அப்போ சிங்கத்துகிட்ட மாட்டிக்கிட்டார். சிங்கம் அவரைத் தின்னப் போறதாச் சொல்லி மிரட்டிச்சு. அவரும் பதறிப்போய், "ஐயோ.. நான் ஒரு பேச்சாளன். நான் பேசறதுக்காக ரொம்ப பேரு காத்திருப்பாங்க. எல்லா ஏற்பாடும் கெட்டுப் போயிடுமே"ன்னு புலம்பினார்.
"அப்படின்னா உன் பேச்சால என்னை மயக்கு பார்க்கலாம்" அப்படின்னது சிங்கம்.
இவர் உடனே, "பெரியோர்களோ, தாய்மார்களே, கரடிகளே, சிங்கங்களே"ன்னு ஆரம்பிச்சு ஒரு பத்து நிமிஷம் பேசினார்.
கேட்டுக்கிட்டே இருந்த சிங்கம் திடீர்னு மயக்கம் போட்டு விழுந்திருச்சி.
பேச்சாளர் "அப்பாடா தப்பிச்சோம்"னு சொல்லிக் கிட்டே ஓடிப்போனார்.
அவர் அந்தப் பக்கம் போனதும் எழுந்திருச்ச சிங்கம், "நல்லவேளை மயக்கம் போட்ட மாதிரி நடிச்சேன். இல்லன்னா இவன் என்னை பேசியே கொன்னிருப்பான்"னு சொல்லிட்டே காட்டுக்குள்ள ஓடிப் போச்சு.
*****
பயங்கர சிரிப்பு சிரிக்கவே சிரிக்காத ஒரு ஆள் திடீர்னு சாகறப்போ பயங்கரமா சிரிக்க ஆரம்பிச்சானாம். எல்லோரும் பயந்துபோய் என்ன ஏதுன்னு விசாரிச்சாங்களாம். அதுக்கு அவன் சொன்னானாம், நான் பலபேர் கிட்ட கடன் வாங்கினேன். ஒருத்தருக்கும் திருப்பிக் கொடுக்கலை. இப்போ சாகப் போறேன். அந்த சந்தோஷத்துல சிரிக்குறேன்னானாம்.
கு. ஞானசம்பந்தன்
இந்த இதழின் வெவ்வேறு பக்கங்களில் வெளியாகியுள்ள நகைச்சுவைத் துணுக்குகள் கு. ஞானசம்பந்தன் அவர்களின் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டவை. |
|
|
More
தெரியுமா?: சாக்லேட் கிருஷ்ணா - 400வது ஷோ தெரியுமா?: உப்புமாவுக்கு ஒரு லட்சம் டாலர்!
|
|
|
|
|
|
|